காந்தியம் தீண்டாத மக்களுக்குக் கேடு (பகுதி – 2)

யந்திர சாதனங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதனால்தான் காந்தியார் சர்க்காவை (இராட்டை) போற்றிப் புகழ்கிறார்; கைநெசவையும் கைநூற்பையும் வலியுறுத்துவதும் இந்த எதிர்ப்புக்குள்ள சான்றே ஆகும். அவர் இயந்திர சாதனங்களை இவ்வாறு எதிர்ப்பதும், சர்க்காவை நேசிப்பதும் தற்செயலானவை அல்ல, இது தத்துவம் தொடர்பானதாகும். காந்தியார் 1925 ஜனவரி 8ஆம் நாள் நடைபெற்ற கத்தியவார் அரசியல் மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்துகையில், இந்தத் தத்துவத்தை விளக்கியுரைப்பதற்கான தனி வாய்ப்பாக அதைப் பயன்படுத்திக் கொண்டார். காந்தியார் கூறியது இதுதான்:

“எல்லையின்றிப் பல்கிப் பெருகிச் செல்லும் உயிரற்ற இயந்திரங்களை வழிபட்டு நாடுகளுக்குச் சலித்துப் போய்விட்டது. ஈடிணையற்ற உயிர் வாழும் இயந்திரங்களை அதாவது நமது உடலை நாமே அழித்துக் கொண்டிருக்கிறோம்; அவற்றைத் துருப்பிடிக்க விடுவதன் மூலமும் அவற்றுக்குப் பதிலாக உயிரற்ற இயந்திர சாதனங்களை நுழைக்க முயலுவதன் மூலமும் இவ்வாறு அழித்துக் கொண்டிருக்கிறோம்; உடல் முழுமையாக வேலை வாங்கப்படவும் பயன்படுத்தப்படவும் வேண்டும் என்பது கடவுளின் விதி. நாம் அதனைக் கண்டு கொள்ளாமலிருக்கத் துணிகிறோம். ராட்டையானது சரீர யக்ஞத்தின் – உடலுழைப்பின் – புனிதச் சின்னமாகும். இந்தத் தியாகத்தைச் செய்யாமல் உணவு உண்பவர் உணவைத் திருடுபவர் ஆவார். இந்தத் தியாகத்தைக் கைவிட்டதன் மூலம் நாம் நாட்டிற்குத் துரோகிகளாகி விட்டோம்; செல்வக் கடவுளின் முகத்தில் கதவை அறைத்து மூடி விட்டோம்.”

இந்து ஸ்வராஜ் (இந்திய தன்னாட்சி) என்ற காந்தியாரின் சிறு நூலை வாசித்துள்ள எவரும் காந்தியார் நவீன நாகரிகத்தை எதிர்ப்பதை அறிந்துக் கொள்ளலாம். இந்த நூல் 1908ல் முதல் முறையாக வெளியிடப்பெற்றது. ஆனால் அதன் பிறகும் அவரது கருத்தியலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை . 1921இல் காந்தியார் எழுதியதாவது:(3)

“இந்தச் சிறு நூல் நவீன நாகரிகத்தை கடுமையாகக் கண்டிப்பதாகும். இது 1908இல் எழுதப்பட்டது. இன்று முன்னெப்போதைக் காட்டிலும் எனது பற்றுறுதி ஆழமடைந்துள்ளது. இந்தியா நவீன நாகரிகத்தை உதறும் என்றால் அதனால் அது ஆதாயமே அடைய முடியும் என்று நான் கருதுகிறேன். காந்தியாரின் கருத்துப்படி: (4)

“மேற்கத்திய நாகரிகம் சைத்தான் படைத்ததாகும்.

காந்தியாரின் இரண்டாவது இலட்சியம் வர்க்கப் போரை ஒழித்துக் கட்டுவதாகும்; வேலைக்கு அமர்த்துபவர்களும் வேலை செய்பவர்களுக்கும் இடையிலான, நிலவுடமையாளர்களுக்கும் குத்தகையாளர்களுக்கும் இடையிலான உறவு முறையில் காணப்படும் வர்க்கப் போராட்டத்தையும் கூட ஒழித்துக் கட்டுவதாகும். வேலைக்கு அமர்த்துவர்களுக்கும் வேலை செய்பவர்களுக்கும் இடையிலான உறவு முறை குறித்து காந்தியாரின் கருத்துக்கள் 1921 ஜூன் 8 தேதிய நவஜீவன் ஏட்டில் வெளிவந்த ஒரு கட்டுரையில் அவரால் விவரிக்கப்பட்டன; இந்தக் கட்டுரையிலிருந்து பின்வரும் பகுதி எடுத்துத் தரப்படுகிறது:

காந்தியின் நவஜீவன் ஏடு.

“இந்தியாவிற்கு முன்னால் இரு பாதைகள் திறந்துள்ளன; வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற மேற்கத்தியக் கோட்பாட்டை நுழைக்கலாம்; அல்லது உண்மைதான் வெற்றி பெறும். உண்மைக்கு விபத்து எதுவும் நேரிடாது, வலுத்தவர்கள் – இளைத்தவர்கள் இரு சாராருக்கும் நீதி பெற உரிமை உண்டு என்ற கிழக்கத்திய கோட்பாட்டை தூக்கிப் பிடிக்கலாம். முதலில் இந்த இரண்டிலொன்றைத் தேர்தெடுக்க வேண்டியது தொழிலாளர் வர்க்கம்தான். தொழிலாளர்கள் வன்முறை வழியில் கூலியுயர்வு பெற வேண்டுமா? அது சாத்தியம் என்றாலும் கூட, அவர்களின் கோரிக்கைகள் எவ்ளவுதான் நியாயமானவை என்றாலும் வன்முறை போன்ற எதையும் அவர்கள் நாட முடியாது. உரிமைகளை அடைவதற்காக வன்முறையைப் பயன்படுத்துவது சுலபமான வழியாகத் தோன்றலாம். ஆனால் நீண்டக் காலப் பார்வையில் அது முட்களடர்ந்த பாதை என்று தெரிந்து விடுகிறது. வாளெடுத்து வாழ்கிறவர்கள் வாளினாலேயே மடிவார்கள். நீச்சல்காரரே நீரில் மூழ்கி இறப்பதுண்டு. ஐரோப்பாவைப் பாருங்கள், அங்கு யாருமே மகிழ்ச்சியுடன் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால் யாருக்குமே மன நிறைவு இல்லை. தொழிலாளி முதலாளியை நம்புவதில்லை; முதலாளிக்குத் தொழிலாளியிடம் நம்பிக்கையில்லை. இருவருமே ஒருவிதமான வேகமும் வலிமையும் பெற்றுள்ளார்கள். ஆனால் காளை மாடுகளுக்கும் கூட இந்தத் தன்மைகள் உண்டு. அவர்கள் கடைசி முடிவு வரை போராடுகிறார்கள். இயக்கம் அனைத்துமே முன்னேற்றமாகாது. ஐரோப்பிய மக்கள் முன்னேறி வருகிறார்கள் என்று நம்புவதற்கு நம்மிடம் காரணமேதுமில்லை. அவர்களிடம் செல்வம் இருப்பது அறவியல் அல்லது அகவியல் பண்புகள் ஏதும் இருப்பதற்கு சான்றாகாது.

படிக்க:
யார் இந்த காந்தி ? தந்தை பெரியார்
வரலாறு : பிர்லாவின் கரம்தான் காந்தியின் ஊடக அறம் !

“அப்படியானால் நாம் என்ன செய்வது? பம்பாயில் தொழிலாளர்கள் அருமையான நிலை எடுத்திருக்கிறார்கள். நான் எல்லா விவரங்களையும் அறியக் கூடிய நிலையில் இல்லை. ஆனால் என்னால் பார்க்க முடிந்த வரை, அவர்கள் இன்னும் சிறந்த வழியில் போராட முடியும். ஆலை அதிபர் முழுக்க முழுக்கத் தவறு செய்திருக்கலாம். பொதுவாகச் சொன்னால், மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையிலான போராட்டத்தில் முதலாளிகள் பல சந்தர்ப்பங்களில் தவறாக நிலை எடுக்கிறார்கள். ஆனால் உழைப்பானது தன் வலிமையை முழுமையாக உணரும் நிலை ஏற்படும் போது, மூலதனத்தைக் காட்டிலும் கொடுங்கோன்மையானதாக அதனால் மாற முடியும் என்பதை நானறிவேன். உழைப்பானது ஆலை அதிபர்களின் அளவுக்கு மதிநுட்பம் வாய்ந்ததாய் இருக்க வேண்டுமானால் உழைப்பு விதிக்கும் நிபந்தனைகளை ஏற்று ஆலை அதிபர்கள் இயங்க வேண்டியிருக்கும். ஆனால் ஒரு நாளும் உழைப்பு அந்த மதிநுட்பத்தை அடைய முடியாது என்பது தெளிவாய்த் தெரிகிறது. அப்படி அது அடையுமானால், உழைப்பு உழைப்பாக இல்லாமற் போய், அதுவே ஆண்டையாகி விடுகிறது. முதலாளிகள் பணம் தரும் வலிமையைக் கொண்டு மட்டும் போராடவில்லை. அவர்களிடம் மதி நுட்பமும் சாமர்த்தியமும் இருக்கவே செய்கின்றன.

தொழிலாளர்களின் போராட்டங்களை எப்போதும் தனது கட்டுக்குள் கொண்டுவரவே விழைந்தார் காந்தி. அகமதாபாத் டெக்ஸ்டைல் தொழிலாளர்களின் போராட்டத்தில் (1917-20) காந்தி.

“நம்முள் இருக்கும் கேள்வி இதுதான்: தொழிலாளர்கள் அவர்கள் இருக்கக் கூடிய நிலையில் குறிப்பிட்ட உணர்வு நிலையை வளர்த்துக் கொள்ளும் போது, அவர்களது பாதை எதுவாக இருக்க வேண்டும்? தொழிலாளர்கள் தங்களது எண்ணிக்கையையோ, மிருக வலிமையையோ, அதாவது வன்முறையையோ நம்புவார்களானால் அது தற்கொலையாகவே இருக்கும். இப்படிச் செய்வதன் மூலம் அவர்கள் நாட்டிலுள்ள தொழில்களுக்கு ஊறு செய்வார்கள். மறுபுறம், அவர்கள் தூய்மையான நீதியின் அடிப்படையில் நிலை எடுப்பார்களானால் அதை அடைவதற்காகத் தாங்களே துன்புறுவார்களானால், அவர்கள் எப்போதுமே வெற்றி பெறுவார்கள் என்பது மட்டுமல்ல, தங்கள் அதிபர்களைச் சீர்த்திருத்தம் செய்து, தொழில்களை வளர்ப்பார்கள்; அதிபர், ஆட்கள் ஆகிய இரு சாராரும் ஒரே குடும்பத்தின் உறுப்பினர்களாகத் திகழ்வார்கள்.”

பிறிதொரு சந்தர்ப்பத்தில் இதே பொருள் குறித்து காந்தியார் சொன்னார்: (5)

“முன்பும் இப்படித்தான் இருந்தது. இந்தியாவின் வரலாறு மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையே கசப்பற்ற உறவுகளின் வரலாறு அல்ல.”

தொழிலாளர்கள் தங்களது பொருளாதார நிலைமையை மேம்படுத்திக் கொள்வதற்கு வேலைநிறுத்தம் என்னும் கருவியைப் பயன்படுத்துவது குறித்து காந்தியாரின் கருத்துகள் முக்கியமாய்க் குறிப்பிடத்தக்கவை. காந்தியார் சொல்கிறார்: (6)

“ஆகவே வெற்றிகரமாகப் பெரிய பெரிய வேலைநிறுத்தங்களைக் கையாண்டவன் என்ற முறையில், வேலை நிறுத்தத் தலைவர்கள் அனைவரின் வழிகாட்டுதலுக்காகவும். இவ்வேட்டில் ஏற்கெனவே கூறப்பட்ட பின்வரும் கோட்பாடுகளை மீண்டும் எடுத்துரைக்கிறேன்:

1) உண்மையான மனக்குறை இல்லாமல் வேலைநிறுத்தம் கூடாது.

2) சம்பந்தப்பட்ட ஆட்கள் தங்கள் சேமிப்பைக் கொண்டே தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இயலாதென்றால் அல்லது சிக்கெடுத்தல், நூற்றல், நெசவு செய்தல் போன்ற ஏதாவது தற்காலிக வேலையில் ஈடுபடுவதன் மூலம் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாதென்றால் வேலைநிறுத்தம் செய்யக் கூடாது. வேலைநிறுத்தம் செய்பவர்கள் ஒருபோதும் பொதுமக்களிடமிருந்து வரும் நன்கொடைகளையோ வேறு தர்மத்தையோ நம்பியிருக்கக் கூடாது.

3) வேலைநிறுத்தம் செய்கிறவர்கள் மாறவே மாறாத குறைந்தபட்சக் கோரிக்கை ஒன்றை நிர்ணயம் செய்ய வேண்டும்; வேலை நிறுத்தம் தொடங்குவதற்கு முன்னதாக அதனை அறிவித்து விட வேண்டும்.

தொழிலாளர்கள் தங்களது எண்ணிக்கையையோ, மிருக வலிமையையோ, அதாவது வன்முறையையோ நம்புவார்களானால் அது தற்கொலையாகவே இருக்கும். இப்படிச் செய்வதன் மூலம் அவர்கள் நாட்டிலுள்ள தொழில்களுக்கு ஊறு செய்வார்கள். (- காந்தி.)

“மனக்குறை நியாயமானதாக இருந்த போதிலும், வேலைநிறுத்தம் செய்கிறவர்கள் காலவரம்பின்றித் தாக்குப் பிடிக்க முடிந்தாலும், அவர்களின் இடத்துக்கு வேலை செய்ய வருவதற்கு வேறு தொழிலாளர்கள் இருப்பார்களானால் வேலைநிறுத்தம் தோற்று விடக் கூடும். ஆகவே புத்திசாலியான ஒருவர் தமது இடத்தை வேறொருவரைக் கொண்டு நிரப்பி விட முடியும் என்று கருதினால் கூலி உயர்வுக்காகவோ வேறு வசதிக்காகவோ வேலை நிறுத்தம் செய்ய மாட்டார்கள். ஆனால் பரோபகாரியான அல்லது தேகப்பற்றுடைய ஒருவர் தமது அண்டை வீட்டுக்காரர் படும் இன்னலுக்காக வருந்தி அதில் தம்மையும் இனைத்துக் கொள்ள விரும்பினால், வேண்டலை விட வழங்கல் கூடுதலாய் இருந்தாலும் வேலைநிறுத்தம் செய்வார். நான் விவரித்தது போன்ற குடியியல் வேலைநிறுத்தத்தில் மிரட்டலின் வடிவிலோ கலகம் செய்யத் தூண்டுவதன் வடிவிலோ வேறு வழியிலோ வன்முறைக்கு இடமே கிடையாது என்பதைக் கூறத் தேவையில்லை… என்னால் ஆலோசனைகளாகத் தெரிவிக்கப்பட்டுள்ள உரைகற்களை வைத்துப் பார்த்தால், வேலைநிறுத்தக்காரர்கள் தங்களுக்கு உதவியாகக் காங்கிரசிடமிருந்தோ வேறு எந்தப் பொது அமைப்பிடமிருந்தோ நிதி கேட்டு விண்ணப்பிக்கவோ நிதி பெறவோ அவர்களின் நண்பர்கள் அவர்களுக்கு ஒருபோதும் ஆலோசனை கூறியிருக்க முடியாது என்பது தெளிவாய்த் தெரிகிறது. வேலைநிறுத்தக்காரர்கள்பால் காட்டப்படும் பரிவின் மதிப்பு அவர்கள் நிதியுதவி பெறுகிற அல்லது ஏற்றுக் கொள்கிற அளவுக்குக் குறைந்து போகிறது. பரிவு காட்டிச் செய்யப்படும் வேலைநிறுத்தத்தின் சிறப்பு பரிவு காட்டுகிறவர்கள் அடையும் சங்கடத்திலும் இழப்பிலும்தான் அடங்கியுள்ளது.

படிக்க:
‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை ! – மின்னூல்
அகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்

நிலவுடைமையாளர்களுக்கும் குத்தகையாளர்களுக்குமான உறவுமுறை பற்றிய காந்தியாரின் கருத்துக்கள் – நிலவுடைமையாளர்களை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்த ஐக்கிய மாகாணக் குத்தகையாளர்களுக்கான கட்டளைகளின் வடிவில்-1921 மே 18 நாளிட்ட யங் இந்தியாவில் அவரால் எடுத்துரைக்கப்பட்டன.(7) காந்தியார் சொன்னார்.

காந்தியார் சொத்துடைய வர்க்கத்தைக் காயப்படுத்த விரும்பவில்லை. அவர்களுக்கெதிரான ஒரு பிரசாரத்தையும் கூட அவர் எதிர்க்கிறார். பொருளாதாரச் சமத்துவத்தின் பால் அவருக்கு எவ்வித ஆர்வமும் இல்லை, சொத்துடைய வர்க்கத்தைக் குறிப்பிடுகையில், காந்தியார் பொன் முட்டையிடும் கோழியை நான் அழிக்க விரும்பவில்லை என்று சமீபகாலத்தில்தான் சொன்னார்.

“ஐக்கிய மாகாண அரசு ஒழுங்கின் எல்லைகளைக் கடந்து மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது என்றும் அதேபோது, கிசான்களும் தங்களுக்குப் புதிதாய்க் கிடைத்த வலிமையைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிவில்லை என்பதில் ஐயமில்லை. அநேக ஜமீன்தார்களில், அவர்கள் எல்லை கடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. சட்டத்தை கையிலெடுத்திருப்பதாகவும், தங்கள் விருப்பம் போல் செய்யாதவர்கள் மீது பொறுமையிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் சமூகப் புறக்கணிப்பைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள், அதனை ஒரு வன்முறைக் கருவியாக மாற்றி வருகிறார்கள். அவர்கள் சில இடங்களில் தங்கள் ஜமீன்தார்களுக்கு நீர் வழங்கலையும் நாவிதர் பணியையும், இதர ஊதியப் பணிகளையும் நிறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது; அவர்களுக்குச் செலுத்த வேண்டிய குத்தகையைக் கூட நிறுத்தி வைத்திருப்பதாக தெரிகிறது. கிசான் இயக்கமானது ஒத்துழையாமையிலிருந்து விலக்கம் பெற்றுள்ளது; ஆனால் அது ஒத்துழையாமை இயக்கத்துக்கு பிறழ்ந்து இருப்பது, அதைச் சாராமல் இருப்பது. உரிய நேரம் வரும் போது அரசுக்கு வரி செலுத்த வேண்டாம் என்று கூற நாம் தயங்க மாட்டோம் என்றும் அதேபோது, ஜமீன்தார்களுக்குக் குத்தகை கிடைக்காமல் செய்ய முயல்வது பற்றி ஒத்துழையாமையின் எந்தக் கட்டத்திலும் எண்ணிப் பார்க்கவில்லை. கிசான் இயக்கமானது கிசான்களின் தகு நிலையை மேம்படுத்துவது, ஜமீன்தார்களுக்கும் அவர்களுக்குமிடையிலான உறவுகளை சீர்படுத்துவது என்ற அளவோடு நிறுத்தப்பட வேண்டும். ஜமீன்தாரர்களுடனான உடன்படிக்கை எழுதப்பட்டதென்றாலும் சரி, வழக்காற்றிலிருந்து அறியப்படுவதென்றாலும் சரி, அந்த உடன்படிக்கையின் வரை முறைகளை நேர்மையாகக் கடைப்பிடிக்குமாறு கிசான்களுக்கு ஆலோசனை கூறப்பட வேண்டும். ஒரு வழக்காறு அல்லது எழுத்து மூலமான ஒப்பந்தம் மோசமானதாய் இருக்குமிடத்து, வன்முறையைக் கொண்டோ ஜமீன்தார்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்காமலோ இவர்கள் அதனை அகற்ற முயலக் கூடாது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஜமீன்தார்களிடம் நட்புடன் விவாதிக்க வேண்டும் தீர்வு காண்பதற்கு முயற்சி செய்யப்பட வேண்டும்.”

காந்தியார் சொத்துடைய வர்க்கத்தைக் காயப்படுத்த விரும்பவில்லை. அவர்களுக்கெதிரான ஒரு பிரசாரத்தையும் கூட அவர் எதிர்க்கிறார். பொருளாதாரச் சமத்துவத்தின் பால் அவருக்கு எவ்வித ஆர்வமும் இல்லை, சொத்துடைய வர்க்கத்தைக் குறிப்பிடுகையில், காந்தியார் பொன் முட்டையிடும் கோழியை நான் அழிக்க விரும்பவில்லை என்று சமீபகாலத்தில்தான் சொன்னார். உடைமையாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான பணக்காரர்களுக்கும் ஏழைக்கும் இடையிலான, நிலவுடைமையாளர்களுக்கும் குத்தகையாளர்களுக்கும் இடையிலான, வேலைக்கு அமர்த்துபவர்களுக்கும் வேலை செய்பவர்களுக்கும் இடையிலான பொருளாதாரப் பிணக்கிற்கு அவர் சொல்லும் தீர்வு மிகவும் எளிமையானது. உடைமையாளர்கள் தமது சொத்தினைப் பறி கொடுக்கத் தேவையில்லை. அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஏழைகளுக்கான அறங்காவலர்களாக தங்களை அறிவித்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். அறக்கட்டளையானது ஒரு தார்மிகக் கட்டுப்பாட்டை மட்டும் நிறைவேற்றுகிற தன்னார்வ அமைப்பாக இருக்க வேண்டும் என்பது உண்மைதான்.

தொடரும்
காங்கிரசும் காந்தியும் தீண்டாத மக்களுக்கு செய்ததென்ன
– டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்

நூலில், அத்தியாயம் – 11 பக்கம்: 327 முதல் 332 வரை.

அடிக்குறிப்புகள்:
(3) யங் இந்தியா 1921 ஜனவரி 26.
(4) தர்ம மாந்தன், பக்கம் 65.
(5) யங் இண்டியா, 1922 பிப்ரவரி 23.
(6) யங் இண்டியா, 1921 ஆகஸ்ட் 11. ( மூலத்தில் அழுத்தம் தரப்படவில்லை )
(7) கிசான் என்பது குத்தகையாளரையும் ஜமீன்தார் என்பது நிலவுடமையாளரையும் குறிக்கும். ( மூலத்தில் அழுத்தம் தரப்படவில்லை )

முந்தைய பகுதி:
பகுதி – 1: காந்தியம் என்பது என்ன ? பாபா சாகேப் அம்பேத்கர்

புத்தகக் குறிப்பு:

 • காங்கிரசும் காந்தியும் தீண்டாத மக்களுக்கு செய்ததென்ன
  – டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்
 • மகராஷ்டிர அரசின் கல்வித்துறை 1991-ல் வெளியிட்ட ஆங்கில பதிப்பின் தமிழாக்கம்
 • பக்கம்: 461 + 30
 • முதல் பதிப்பு: 24, செப்டம்பர் 1998
 • வெளியீடு,
  தலித் சாகித்ய அகாதமி,
  சென்னை – 600 073.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க