நன்றி : கார்ட்டூன் மூவ்மெண்ட்

காந்தியம் தீண்டாத மக்களுக்குக் கேடு (பகுதி – 3)

III

பொருளாதார இயல் பற்றிய காந்தியப் பகுப்பாய்வில் புதிதாக எதாவது உண்டா? காந்தியத்தின் பொருளாதார இயல் பழுதற்றதா? சாதாரண மனிதனுக்கு, வறுமை மிஞ்சித் தாழ்வுற்றவனுக்கு காந்திய வழிதரும் நம்பிக்கை என்ன? இன்னும் சிறந்த வாழ்க்கை, மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை, பண்பாடு, சுதந்திர வாழ்க்கை, வறுமையிலிருந்தான சுதந்திரம் மட்டுமல்ல, தம் ஆற்றல்களைக் கொண்டு அடையக்கூடிய முழு உயர்வைச் சென்று அடைவதற்கான அதை நோக்கி வளர்வதற்கான சுதந்திரமும் கூட காந்தீயத்தால் அவருக்கு உறுதிசெய்யப்படுகிறதா?

பொருளாதாரத் தீமைகள் தொடர்பான காந்திய ஆய்வானது இயந்திர சாதனங்களையும் அவற்றின் அடிப்படையிலான நாகரிகத்தையும் இந்தத் தீமைகளுக்குக் காரணமாகக் குறிப்பிடுகிறது என்ற அளவில், அதில் புதுமையானது எதுவுமில்லை. இயந்திர சாதனங்களும் நவீன நாகரீகமும் ஒப்பளவில் ஒரு சிலரது கையில் மேலாண்மையும் கட்டுப்பாடும் குவியப் பயன்படுகின்றன, வங்கி மற்றும் கடன் – செலாவணியின் துணை கொண்டு எல்லா மூலப் பொருட்களையும் தொழிற்சாலைகளையும் ஆலைகளையும் மிகச் சிலரது கைக்கு எளிதில் மாற்றிவிடுகின்றன. இந்த ஆலைகளில் கோடிக்கணக்கானவர்கள் அவர்களது குடிசையிலிருந்து ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் இருக்கும் பெருந்தொழில்களுக்கு முட்டுக் கொடுப்பதற்காக இரத்தம் சொட்ட கசக்கிப் பிழியப்படுகிறார்கள்.

இயந்திர சாதனங்களும் நவீன நாகரிகமும் போரினால் ஏற்படும் காயங்களைக் காட்டிலும் அதிகமான அளவில் மரணங்களையும் உறுப்புச் சிதைவுகளையும் ஊனங்களையும் தோற்றுவிக்கின்றன. புகையும் கூச்சலும் அழுக்கும் மாசடைந்த காற்றும் சூரிய ஒளி போதாமையும் வெளிப்புற வாழ்க்கையும் சேரிகளும் விபச்சாரமும் இயற்கைக்கு மாறான வாழ்வும் கொண்டிருக்கிற இந்த நகரங்கள்தான் நேரடியாகவும் சுற்றடியாகவும் நோய்க்கும் உடல்நலச் சீர்கேட்டுக்கும் காரணம் – இந்த வாதங்கள் எல்லாம் தேய்ந்து போன பழையவாதங்கள். இவற்றில் புதிதாக எதுவுமில்லை. ரூசோ, ரஸ்கின், டால்ஸ்டாய் மற்றும் அவர்களது மரபில் வந்தவர்களின் கருத்துக்களைத்தான் காந்தியம் திருப்பிச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

காந்தியமாகச் சேர்ந்தமையும் கருத்துகள் கற்றுக்குட்டித் தனமானவை என்பதற்கு மேல் ஒன்றுமில்லை. இயற்கைக்கு, மிருக வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்வதாகும் காந்தியம். ஒரே ஒரு சிறப்பு அந்தக் கருத்துகளின் எளிமைதான். இந்த எளிய கருத்துகளால் எளியவர்கள் ஏராளமாய் இருப்பதால், இந்தக் கருத்துக்கள் மடிவதில்லை; எப்போதுமே அவற்றை எடுத்துச் சொல்வதற்கு யாராவது ஒரு பாமரன் இருப்பான். ஆனால் மனிதர்களின் நடைமுறை உள்ளுணர்வுகள் – இவை தவறாகிப் போவது அரிதே – அவற்றைப் பயனற்றவை எனக் கண்டுள்ளன; முன்னேற்றத்தைத் தேடிச் செல்லுகிற சமுதாயம் அவற்றை நிராகரிப்பதே நன்றெனக் கருதியுள்ளது.

காந்தியத்தின் பொருளாதார இயல் கடைத்தேற வழியில்லை என்னுமளவுக்குப் பித்தலாட்டத்தனமானதாகும். இயந்திர சாதனங்களும் நவீன நாகரிகமும் பல தீமைகளைத் தோற்றுவிக்கின்றன என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்தக் தீமைகள் அவற்றுக்கு எதிரான வாதம் அல்ல. ஏனென்றால் இந்தத் தீமைகளுக்கு இயந்திர சாதனங்களும் நவீன நாகரிகமும் காரணமல்ல. தனிச் சொத்தையும் சொந்த ஆதாயம் தேடுவதையும் முழுமுதலாய்ப் புனிதம் கொண்டவை ஆக்கியுள்ள அநீதியான சமூக அமைப்பே காரணம். இயந்திர சாதனமும் நாகரிகமும் ஒவ்வொருவருக்கும் நன்மை பயக்கவில்லை என்றால் இயந்திர சாதனத்தையும் நாகரிகத்தையும் ஒதுக்கித் தள்ளி விடுவது அல்ல பரிகாரம்; இந்த நன்மைகள் ஒரு சிலரால் அபகரித்துக் கொள்ளப்படாமல் அனைவருக்கும் போய்ச் சேரும் விதத்தில் சமூக அமைப்பை மாற்றியமைப்பதே பரிகாரம்.

படிக்க:
யார் இந்த காந்தி ? தந்தை பெரியார்
வரலாறு : 1946 மும்பை கடற்படை எழுச்சியைக் காட்டிக் கொடுத்த காந்தி – காங்கிரசு

காந்தியத்தில் சாதாரண மனிதனின் வருங்காலத்துக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை. அது மனிதனை ஒரு பிராணியாகக் கருதுகிறது. அதற்கு, மேல் ஒன்றுமில்லை. ஊட்டம், மறு இன விருத்தி போன்றவற்றில் பிராணிகளின் அமைப்பையும் பணிகளையும் மனிதன் பகிர்ந்து கொள்வது மெய்தான். ஆனால் இவை மனிதனின் பணிகள் மட்டுமே என்று வேறுபடுத்திச் சொல்லக் கூடிய மானுடப் பணி என்பது பகுத்தறிவாகும்; பிரபஞ்சத்தின் வனப்புகளைக் கண்ணுறுவதும் அவற்றோடு உறவாடுவதும் அவை குறித்து ஆழ்ந்து சிந்திப்பதும் அவற்றைப் பயில்வதும் கண்டுபிடிப்பதும் மனிதனுக்குச் சாத்தியமாகச் செய்வதே பகுத்தறிவின் நோக்கமாகும்; இவ்விதம் மனிதனின் வாழ்க்கையை வளப்படுத்துவதும், அவனது வாழ்க்கையிலிருக்கும் பிராணிக் கூறுகளைக் கட்டுப்படுத்துவதும் அதன் நோக்கமாகும்.

இயந்திர சாதனத்தையும் நவீன நாகரிகத்தையும் கண்டிப்பவன் அவற்றின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளவில்லை, மனித சமுதாயம் அடைய முயற்சி செய்ய வேண்டிய இறுதி நோக்கத்தைப் புரிந்து கொள்ளவில்லை, அவ்வளவுதான்.

இந்த முறையில்தான் உயிர் வாழ்வனவற்றின் அமைவுத் திட்டத்தில் மனிதன் மிகவுயர்ந்த இடத்தை வகிக்கிறான். இது உண்மை என்றால் இதிலிருந்து பெறப்படும் முடிவு என்ன? ஒரு மிருக வாழ்க்கையின் இறுதிக் குறிக்கோள் அவனுடைய பெளதிக வேட்கைகள் நிறைவு செய்யப்படும் போது அடையப்பட்டு விடுகிறது என்னும் அதே போது, மனித வாழ்க்கையின் இறுதிக் குறிக்கோள் அவன் தன் மனத்தை முழுமையாகப் பக்குவப்படுத்தாவிட்டால் அப்படிப் பக்குவப் படுத்தும் வரை அடைந்திட முடிவதில்லை. சுருங்கச் சொல்லின், மனிதனிடமிருந்து மிருகத்தை வேறுபடுத்திக் காட்டுவது பண்பாடாகும். பண்பாடு என்பது மனிதனுக்கு இன்றியமையாதது, மிருகத்துக்கு இயலாதது. இந்நிலையில் மனித சமுதாயத்தின் நோக்கம் ஒவ்வொருவரும் பண்பட்ட வாழ்க்கை வாழ்வதற்கு உதவி புரிவதாய் இருக்க வேண்டும்; இதன் பொருள் வெறும் உடல் தேவைகளை மட்டும் நிறைவு செய்வதற்கு மாறாக மனத்தைப் பண்படுத்துதல் ஆகும். இது எவ்வாறு நிகழ முடியும்?

காலனி ஆட்சியின் கீழ் கூலித் தொழிலாளர்கள்.

சமுதாயத்திற்கும் சரி, தனி மனிதனுக்கும் சரி, வெற்று வாழ்க்கைக்கும் உருப்படியான வாழ்க்கைக்கும் எப்போதுமே இடைவெளி இருக்கிறது. ஒருவர் உருப்படியாக வாழ வேண்டுமானால் முதலில் அவர் வாழ்ந்தாக வேண்டும். வெற்று வாழ்க்கைக்காக, பிழைப்பு தேடுவதற்காக செலவிடப்படும் நேரமும் ஆற்றலும் தனிச் சிறப்பான விதத்தில் மானுட இயல்புக்குரிய செயற்பாடுகளுக்குக் கிடைக்கக் கூடியதிலிருந்து திருப்பி விடப்படுகிறது; இந்தச் செயற்பாடுகள் சேர்ந்துதான் பண்பாட்டு வாழ்க்கை ஆகின்றன. அப்படியானால் பண்பாட்டு வாழ்க்கையை எவ்வாறு சாத்தியமாக்க முடியும்? போதுமான ஓய்வு இல்லா விட்டால் அது சாத்தியமில்லை. ஏனென்றால் ஒய்வு நேரம் இருக்கும் போதுதான் ஒருவன் பண்பாட்டு வாழ்க்கைக்குத் தன்னை அர்பணித்துக் கொள்ளத் தடையில்லாது போகிறது. மனித சமுதாயம் சந்திக்க வேண்டிய பிரச்சினைகளுக்கெல்லாம் பிரச்சினையாக இருப்பது ஒவ்வொரு தனியாளுக்கும் எவ்வாறு ஒய்வு கிடைக்கச் செய்வது என்பதே.

ஓய்வு என்றால் என்ன? ஓய்வு என்பது வாழ்க்கையின் உள்ளார்ந்த தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கு அவசியமான உழைப்பையும் முயற்சியையும் குறைத்துக் கொள்வதை குறிக்கும். எவ்வாறு ஓய்வு கிடைக்க செய்வது? மனித தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கு சரக்குகளை உற்பத்தி செய்யத் தேவைப்படும் உழைப்பு குறையும்படி செய்வதற்கான சில சாதனங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் ஓய்வே சாத்தியமில்லை. இத்தகைய உழைப்பை எதனால் குறைக்க முடியும்? இயந்திரம் மனிதனின் இடத்தை எடுத்துக் கொள்ளும் போதுதான் குறைக்க முடியும்.

ஓய்வைத் தோற்றுவிப்பதற்கு வேறு வழியே இல்லை. இயந்திர சாதனமும் நவீன நாகரிகமும் மனிதன் மிருக வாழ்க்கையிலிருந்து விடுபடுவதற்கும் அவனுக்கு ஓய்வு கிடைக்கச் செய்வதற்கும், பண்பாட்டு வாழ்க்கையைச் சாத்தியமாக்குவதற்கும் இன்றியமையாதவை ஆகும். இயந்திர சாதனத்தையும் நவீன நாகரிகத்தையும் கண்டிப்பவன் அவற்றின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளவில்லை, மனித சமுதாயம் அடைய முயற்சி செய்ய வேண்டிய இறுதி நோக்கத்தைப் புரிந்து கொள்ளவில்லை, அவ்வளவுதான்.

காந்தியத்தில் சாதாரண மனிதன் அற்பக் கூலிக்காக ஓயாமல் பாடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும், மிருக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்க வேண்டும்.

காந்தியமானது ஜனநாயகத்தைத் தன் இலட்சியமாக ஏற்றுக் கொள்ளாத ஒரு சமுதாயத்துக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். ஜனநாயத்தில் நம்பிக்கை வைக்காத ஒரு சமுதாயத்தில் இயந்திர சாதனம் குறித்தும் இதன் அடிப்படையிலான நாகரிகம் குறித்தும் அலட்சியமாய் இருக்கலாம். ஆனால் ஒரு ஜனநாயக சமுதாயத்தில் அப்படியிருக்க முடியாது. ஒரு சிலர் ஓய்வும் பண்பாடுமான வாழ்க்கையை அனுபவிக்கும் போதே மிகப் பலர் மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்து வாழும் நிலை குறித்து ஜனநாயத்தில் நம்பிக்கை வைக்காத ஒரு சமுதாயம் மனநிறைவு கொண்டுவிடலாம். ஆனால் ஒரு சமுதாயம் ஜனநாயக சமுதாயம் அதன் குடிமக்களில் ஒவ்வொருவருக்கும் ஓய்வும் பண்பாடுமான வாழ்க்கைக்கு உறுதியளித்தாக வேண்டும். மேற்கண்ட பகுப்பாய்வு சரியானால், ஒரு ஜனநாயக சமுதாயத்தின் முழக்கம் இயந்திர சாதனம், மேலும் இயந்திர சாதனம், நாகரிகம், மேலும் நாகரிகம் என்பதாகத்தான் இருக்க வேண்டும். காந்தியத்தில் சாதாரண மனிதன் அற்பக் கூலிக்காக ஓயாமல் பாடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும், மிருக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்க வேண்டும். சுருங்கச் சொல்லின் காந்தியமானது இயற்கையிடம் மீண்டும் திரும்பிச் செல்வோம் என்ற முழக்கத்தை கொண்டிருப்பதால், பரந்துபட்ட பெருந்திரளான மக்களைப் பொறுத்தவரை மீண்டும் ஆடையற்ற நிலைக்கு, மீண்டும் வறுமைக்கு, மீண்டும் இல்லாமைக்கு மீண்டும் அறியாமைக்குத் திரும்பிச் செல்வதைக் குறிப்பதாகும்.

படிக்க:
கீழடி : மண்ணிட்டு மூடப் பார்க்கிறது பார்ப்பன பாஜக அரசு
சென்னை மாநகராட்சி : சுடுகாடு முதல் சுகாதாரம் வரை தனியார்மயம் !

வாழ்க்கையைத் தனித்தனிப் பகுதிகளாகப் பிரிப்பதும் சமூதாயத்தை தனித் தனி வகுப்புகளாகப் பிரிப்பதும் அறவே அழிந்து போகாமல் இருக்கலாம். சமூக, பொருளாதார மாற்றங்கள் பலவும் நடைபெற்றிருந்த போதிலும், சட்ட வழிப்பட்ட பண்ணையடிமை முறை, சட்ட வழிப்பட்ட அடிமை முறை ஆகியவை ஒழிக்கப்பட்டு விட்ட போதிலும், ஜனநாயகம் என்ற கருத்து பரவி நூல்கள், செய்தி ஏடுகள், பிரயாணம், பள்ளிகளிலும் தொழிற்சாலைகளிலுமான உறவாடல் ஆகியவற்றின் மூலமாக ஜனநாயகம் என்னும் கருத்து பரவி விஞ்ஞானம் மூலமாக விரிவடைந்து பொதுக் கல்வி பரவலாகி இருந்த போதிலும், ஒரு கற்றறிந்த வர்க்கமாகவும் அறியாத வர்க்கமாகவும், ஓய்வு அனுபவிக்கும் வர்க்கமாகவும், உழைக்கும் வர்க்கமாகவும் சமுதாயத்தில் போதுமான பிளவு இருந்து கொண்டே இருக்கும்.

ஆனால் காந்தியம் கருத்தளவிலான வர்க்க வேற்றுமைகளோடு மட்டும் மனநிறைவு கொள்ளவில்லை. காந்தியம் வர்க்கக் கட்டமைப்பை வலியுறுத்துகிறது. அது சமுதாயத்தின் வர்க்கக் கட்டமைப்பையும், மேலும் வருமானக் கட்டமைப்பையும் புனிதமானவையாக மதிக்கிறது; இவற்றின் விளைவாகப் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலும் உயர்ந்தவர்களுக்கும் தாழ்ந்தவர்களுக்கும் இடையிலும், உடைமையாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலும் ஏற்படும் வேறுபாடுகளை சமுதாய அமைப்பின் நிரந்தரப் பகுதிகளாக அது கருதுகிறது. சமூக விளைவுகளின் கண்ணோட்டத்தில் இதைக் காட்டிலும் நச்சுத்தனமானது வேறு எதுவும் இருக்க முடியாது. மனோதத்துவ அளவில், வர்க்கக் கட்டமைப்பானது இரு வர்க்கங்களுக்குமே ஊறு பயக்கக் கூடிய தாக்கங்களை இயங்கச் செய்கிறது. உரிமை பெற்ற வர்க்கமும் அடிமைப்பட்ட வர்க்கமும் சந்திக்கக்கூடிய பொதுவான தளம் எதுவுமில்லை. ஊடு பரவல் எதுவுமில்லை. வாழ்க்கையின் நம்பிக்கைகளையும் அனுபவங்களையும் கொடுத்துப் பெறும் பரிமாற்றம் எதுவுமில்லை.

அடிமைப்பட்ட வர்க்கத்துக்கு இந்தப் பிரிவினையால் ஏற்படும் சமூக, அறிவியல் தீமைகள் உண்மையானவை, கண்கூடானவை என்பதில் சந்தேகமில்லை. அது அவர்களை அடிமைகளாகப் பயிற்றுவிக்கிறது, அடிமை மனநிலையிலிருந்து வரக் கூடிய மனப்பான்மை அனைத்தையும் தோற்றுவிக்கிறது. ஆனால் உரிமை பெற்ற வர்க்கத்தை பாதிக்கும் தீமைகள் முக்கியத்துவத்தில் குறைந்தவையாகவும், அவ்வளவு வெளிப்படையான விதத்தில் தெரியாதவையாகவும் இருந்த போதிலும் அதே போல் உண்மையானவை. வர்க்கக் கட்டமைப்பைத் தொடர்ந்து எற்படும் ஒதுக்களும் ஒதுங்களும் உரிமை பெற்ற வர்க்கங்களிடையே ஒரு கும்பலுக்குரிய சமூக விரோத உணர்வைத் தோற்றுவிக்கிறது. அது “தனக்கென்றமைந்த” நலன்கள் இருப்பதாகத் கருதுகிறது; ஒவ்வொருவருக்கெதிராகவும் அரசின் நலன்களுக்குக்கெதிராகவும் கூட தன் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதே அதற்கு தலையாய நோக்கமாகிறது. அது அவர்களது பண்பாட்டை மலடாக்குகிறது, அவர்களது கலையை டாம்பீகமாக்குகிறது, அவர்களது செல்வத்தை வெளிச்சம் போட்டுக் காட்டச் செய்கிறது. அவர்களின் பழக்க வழக்கம் எளிதில் நிறைவு காண முடியாததாகிறது.

காந்தியமானது தர்மகர்த்தா முறை என்ற கருத்தை சர்வரோக நிவாரணியாக முன்மொழிகிறது… வேறு யாராவது இப்படியொரு கருத்தை முன்மொழிந்திருந்தால், அவரை அற்ப முட்டாள் என்று எள்ளி நகையாடியிருப்பார்கள்; வாழ்க்கையின் கடினமான மெய்நடப்புகளை அறியாதவர் என்றும் அடிமைப்பட்ட வர்க்கங்களை ஏமாற்றுகிற அற்பர் என்றும் கூறியிருப்பார்கள்.

நடைமுறையளவில் சொல்வதானால் ஒரு வர்க்கக் கட்டமைப்பில் ஒரு பக்கத்தில் கொடுங்கோன்மையும் தற்பெருமையும் அகந்தையும் கர்வமும் பேராசையும் சுயநலமும் காணப்படுகின்றன. மறு பக்கத்தில் அச்சமும் வறுமையும் இழிவும் காணப்படுகின்றன. சுதந்திரமும் தற்சார்பும் சுயேச்சைத் தன்மையும் கண்ணியமும் தன்மானமும் பறிபோன நிலை காணப்படுகிறது. ஒரு ஜனநாயக சமுதாயம் இத்தகைய விளைவுகள் குறித்து அலட்சியமாய் இருக்க முடியாது. ஆனால் காந்தியம் இந்த விளைவுகளைப் பற்றிச் சிறிதும் கவலைப்படவில்லை. காந்தியம் வர்க்க வேற்றுமைகளோடு மட்டும் மனநிறைவு கொள்ளவில்லை என்று கூறினால் போதாது. காந்தியம் ஒரு வர்க்கக் கட்டமைப்பில் நம்பிக்கை வைத்துள்ளது என்று கூறினால் போதாது. காந்தியம் அதற்கு மேலும் பலவற்றைக் குறிக்கிறது. காந்தியம் விரும்புவது வாடி வதங்கிய, களைத்துச் சோர்ந்த. நலிந்து மெலிந்த வர்க்கக் கட்டமைப்பை அல்ல – வெறும் உணர்ச்சி நிலையாக, வெறும் எலும்புக் கூடாக இருக்கும் வர்க்கக் கட்டமைப்பை அல்ல. வர்க்கக் கட்டமைப்பு ஓர் உயிர்ப்பான பற்றுறுதியாகச் செயல்பட வேண்டுமென அது விரும்புகிறது. இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை, ஏனென்றால் காந்தியத்தின் பார்வையில் வர்க்கக் கட்டமைப்பு என்பது வெறும் தற்செயல் அல்ல. அது காந்தியத்தின் அதிகார பூர்வக் கோட்பாடாகும்.

காந்தியமானது தர்மகர்த்தா முறை என்ற கருத்தை சர்வரோக நிவாரணியாக முன்மொழிகிறது; இந்த முறையின்படி பணம் படைத்த வர்க்கங்கள் தங்கள் உடைமைகளை ஏழை எளியவர்களுக்கான அறப்பொறுப்பில் வைத்துக் கொண்டிருக்குமாம். இந்தக் கருத்துதான் காந்தியத்தின் மிகவும் கேலிக்குரிய பகுதியாகும். இது பற்றி ஒருவரால் சொல்ல முடிந்ததெல்லாம், வேறு யாராவது இப்படியொரு கருத்தை முன்மொழிந்திருந்தால், அவரை அற்ப முட்டாள் என்று எள்ளி நகையாடியிருப்பார்கள்; வாழ்க்கையின் கடினமான மெய்நடப்புகளை அறியாதவர் என்றும் அடிமைப்பட்ட வர்க்கங்களை ஏமாற்றுகிற அற்பர் என்றும் கூறியிருப்பார்கள். சொத்து படைத்த வர்க்கங்களுக்கு-தணியாத மோக வெறியாலும் அடங்காத அகத்தையாலும் இந்த உலகத்தைக் கோடானுக்கோடி உழைக்கும் மக்களுக்குக் கண்ணீர் கடலாக மாற்றியிருக்கிற, எப்போதும் இப்படியே செய்யப் போகிற இவ்வர்க்கங்களுக்கு – சற்றே அறநெறிக் கவசம் அணிவிப்பது அவற்றைத் திருத்தி ஒழுங்குபடுத்தும், வர்க்கக் கட்டமைப்பு அடிமை வர்க்கங்கள் மீது அவற்றுக்குத் தருகிற பேரதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தும் ஆசையை அடக்கிக் கொள்ளுமாறு செய்யும் என்று சொல்லி அடிமைப்பட்டவர்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர் என்று ஏளனம் செய்திருப்பார்கள்.

தொடரும்
காங்கிரசும் காந்தியும் தீண்டாத மக்களுக்கு செய்ததென்ன
– டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்

நூலில், அத்தியாயம் – 11 பக்கம்: 327 முதல் 332 வரை.

முந்தைய பகுதி:
பகுதி – 1: காந்தியம் என்பது என்ன ? பாபா சாகேப் அம்பேத்கர்
பகுதி – 2: தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யக்கூடாது என்றார் காந்தி

புத்தகக் குறிப்பு:

 • காங்கிரசும் காந்தியும் தீண்டாத மக்களுக்கு செய்ததென்ன
  – டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்
 • மகராஷ்டிர அரசின் கல்வித்துறை 1991-ல் வெளியிட்ட ஆங்கில பதிப்பின் தமிழாக்கம்
 • பக்கம்: 461 + 30
 • முதல் பதிப்பு: 24, செப்டம்பர் 1998
 • வெளியீடு,
  தலித் சாகித்ய அகாதமி,
  சென்னை – 600 073.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க