” நடனத்திற்குப் பின் ” – டால்ஸ்டாயின் புகழ்பெற்ற சிறுகதை!

7

முன்னுரை:

எதனால் காதல் வயப்படுகிறோம் என்பதற்கு ஆழமான காரணங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எதனால் காதலை துறக்கிறோம் என்பதற்கு ஆழமான காரணங்கள் இருந்தாக வேண்டும். புறத் தோற்றம் காதலிப்பதற்கும், அகக் கட்டமைப்பு காதலின் பிரிவுக்கும் காரணமாக இருக்கிறது என்பதை இங்கு ஒரு தேர்ந்த திரைப்பட இயக்குநர் போல டால்ஸ்டாய் படம் பிடித்துக் காட்டுகிறார்.

மனிதர்களின் வாழ்வில் தற்செயலாக நடக்கும் சம்பவங்களே அவர்களது வாழ்வில் தீர்மானகரமான பாத்திரத்தை ஏற்படுத்துவதாக இக்கதையில் வரும் கதை சொல்லி கூறுகிறான். இதையே எழுத்தாளர் ஜெயமோகனும் பலமுறை சலிப்பூட்டும் விதத்தில் சுற்றி வரும் சொல்லாடல்கள் மூலம் கூறியிருக்கிறார்.

ஆனால் வாழ்வில் வரும் தற்செயலான சம்பவங்கள் நம் அகத்தில் சுற்றுப்புறச்சூழலினால் அல்லது அவரவருக்கு கிடைத்திருக்கும் சமூக சூழலின் மதிப்பீடுகளின்படிதான் பாதிப்பு ஏற்படுத்துமே அன்றி அவை முற்றிலும் தற்செயலானதல்ல. அதாவது அதன் நிகழ்வு மற்றுமே தற்செயலாக இருக்குமே அன்றி அதன் விளைவு நீடித்து வரும் சமூக மதிப்பீடுகளோடு தொடர்பு உடையவை.

ஒரு மனிதனின் வாழ்வில் அவனது வர்க்கம், சமூக சூழ்நிலை என்னென்ன விதத்தில் பாத்திரம் ஆற்றுகிறது, காதல், காதலின் சர்வலோக அன்பு மயத்தின் காரணம், என்று இந்தக் கதை முக்கியமான சில விசயங்களை அலசுகிறது.

கதையின் ஆரம்பத்தில் கதை சொல்லி எதன் பொருட்டு இந்தக் கதையை சொல்ல வந்தானோ அதை மறுத்தே கதையின் முடிவு இருக்கிறது. இதை உங்களால் கண்டு பிடிக்க முடியுமென்றால் நீங்கள் மார்க்சியத்தின் முதல் பாடத்தை கற்றுக் கொண்டவராகிறீர்கள் என்பதோடு ஜெயமோகன் போன்ற இலக்கியவாதிகளையும் புரிந்து கொள்ளும் சக்தியை வரித்துக் கொண்டவராவீர்கள். முயன்று பாருங்களேன்!

– வினவு

_______________________________________

ப்படியானால் நீங்கள் சொல்லுகிறீர்கள், நல்லது எது, கெட்டது எது என்று தானாகவே புரிந்துகொள்ள மனிதனால் முடியாது, எல்லாம் சுற்றுச் சார்பைப் பற்றிய விஷயம், மனிதன் சுற்றுச் சார்புக்கே வசப்பட்டவன் என்று. ஆனால் நானோ, எல்லாம் தற்செயலைச் சார்ந்த விஷயம் என்று கருதுகிறேன். என்னைப் பற்றியே சொல்கிறேன், கேளுங்கள்….”

தனி மனிதனைச் செவ்வைப்படுத்துவதற்கு மக்கள் வாழ்ந்துவரும் நிலைமைகளை மாற்றுவது இன்றியமையாதது என்பது பற்றி எங்களுக்குள் நடந்த உரையாடலின் முடிவில், எல்லோராலும் மதிக்கப்படும் இவான் வஸீல்யெவிச் இவ்வாறு கூறினார்.  நல்லது எது, கெட்டது எது என்று தானாகவே புரிந்துகொள்ளது இயலாது என உண்மையில் யாருமே சொல்லவில்லைதான், ஆயினும் உரையாடலினால் தூண்டிவிடப்படும் தமது சொந்த எண்ணங்களுக்கு விடையளிப்பதும், இந்த எண்ணங்களின் தொடர்பாகத் தன் வாழ்க்கை நிகழ்ச்சி எதையாவது விவரிப்பதும் இவான் வஸீல்யெவிச்சின் வழக்கம். அடிக்கடி தம் கதையில் ஒரேயடியாக ஈடுபட்டுப்போய், அதைச் சொல்ல வந்த காரணம் என்ன என்பதையே மறந்து விடுவார், அதிலும் விசேஷமாக அவர் உளமாரவும் உண்மையுடனும் பேசியபடியால்.

இப்போதும் அவர் அவ்வாறே செய்தார்.

”என்னைப் பற்றியே சொல்கிறேன். என் வாழ்க்கை முழுவதும் இன்னொரு வகையில் இன்றி, இந்த வகையில் உருவாகியிருப்பது சுற்றுச்சார்பினால் அல்ல, முற்றிலும் வேறொன்றினால் தான்” என்றார்.

”எதனால்?” என்று கேட்டோம்.

”அது நீண்ட கதை. உங்களுக்குப் புரிய வேண்டுமானால் நிறையச் சொல்ல நேரும்.”

”சொல்லுங்களேன்.”

இவான் வஸீல்யெவிச் சற்று யோசித்துவிட்டுத் தலையை ஆட்டினார்.

”ஆம், ஒரே இரவில், அல்லது அதிகாலையில் நடந்த நிகழ்ச்சியால் என் வாழ்க்கை முழுவதுமே மாறிவிட்டது” என்றார்.

”ஏன்? என்ன நடந்தது?”

”நடந்தது என்ன வென்றால், அப்போது நான் ஆழ்ந்த காதல் கொண்டிருந்தேன். முன்பும் பல தடவை நான் காதலித்தது உண்டுதான், இருந்தாலும் இம்முறை ஒரு போதுமில்லாத அளவு ஆழ்ந்த காதல் கொண்டு விட்டேன். என்றைக்கோ நடந்துபோன சேதி. அவளுடைய பெண்களுக்கு எப்போதோ கலியாணாமாகிவிட்டது. அவள் பெயர் ப…. ஆம், வாரெனிகா ப….” (இங்கே இவான் வஸீல்யெவிச் அவளுடைய குலப்பெயரைக் கூறினார்.)

”ஐம்பது வயதிலே கூட அவள் குறிப்பிடத்தக்க அழகியாகத் திகழ்ந்தாள். இளமையில், பதினெட்டாண்டுப் பருவத்திலோ, உயரமும், ஒடிசலும், ஒயிலும், பெருமிதமும் – ஆம், பெருமிதமும் – இலங்க, மோகனாங்கியாக விளங்கினாள். தலையைச் சற்றே பின்னுக்குச் சாய்த்தவாறு, எப்போதும் உடம்பை நேராகவே வைத்திருப்பாள் – குனியவே இயலாதவள் போல; ஒரே ஒடிசலாக, எலும்புந் தோலுமாகப் போல, இருந்த போதிலும், இந்த வழக்கமும், எழிலும் உயரமும் சேர்ந்து அவளுக்கு ராஜகம்பீரமான தோற்றப் பொலிவை அளித்தன. கனிவும் எப்போதும் மகிழ்ச்சிப் பெருக்கும் கொண்ட மென்முறுவல், கவர்ச்சியும் ஒளியும் சுடரும் விழிகள், இனிமையும் இளமையும் மிளிரும் தன்மை, இவையெல்லாம் இல்லாவிட்டால, இந்த ராஜகம்பீரம் அவளை அணுகவொட்டாதபடி பிறரை வெருட்டியிருக்கும்.”

”அடேயப்பா, எப்படிப் பிரமாதமாக வருணிக்கிறார் இவான் வஸீல்யெவிச்!”

”அட நான் என்னதான் பிரமாதமாக வருணித்தாலும், அவள் உண்மையில் இருந்தபடியே நீங்கள் புரிந்து கொள்ளும்படி வருணிப்பது இயலாது. ஆனால் முக்கிய விஷயம் அதுவல்ல. நான் சொல்ல வந்த நிகழ்ச்சிகள் ஆயிரத்து எண்ணூற்று நாற்பது – ஐம்பது ஆண்டுகளில் நடந்தன. அப்போது நான் பிராந்தியப் பல்கலைக் கழகம் ஒன்றில் மாணவனாயிருந்தேன். நல்லதோ கெட்டதோ, அறியேன், ஆனால் அந்தக் காலத்தில் எங்கள் பல்கலைக் கழகத்தில் எத்தகைய தத்துவ ஆராய்ச்சி வட்டங்களோ, எவ்விதமான சித்தாந்தப் பேச்சுக்களோ கிடையா; நாங்கள் வெறுமே இளைஞர்களாயிருந்தோம்; இளைஞரின் இயல்புக்கேற்ப, படிப்பதும் உல்லாசமாயிருப்பதுமாக வாழ்ந்தோம்.

நான் மிகுந்த களிப்பும் உற்சாகப் பெருக்கும் கொண்ட இளைஞன், அதோடு பணக்காரன். என்னிடம் துடியான குதிரையிருந்தது. சீமான்கள் வீட்டுப் பெண்களை அழைத்துக்கொண்டு ஸ்லேட்ஜில் சவாரி செய்வேன் (ஸ்கேட் செய்வது அப்போது மோஸ்தருக்கு வரவில்லை); நண்பர்களோடு குடியும் கேளிக்கையுமாகக் களிப்பேன் (அந்தக் காலத்திலே நாங்கள் ஷாம்பெயின் தவிர வேறு ஒன்றும் பருகுவதில்லை; பணமில்லாவிட்டால் ஒன்றுமே குடிக்க மாட்டோம், ஆனால் இப்போது போல வோத்கா குடித்ததே கிடையாது). எல்லாவற்றையும் விட எனக்கு உவப்பானவை விருந்துகளும் நடனங்களுமே. நான் நன்றாக நடனம் செய்வேன், தோற்றத்திலும் அப்படி விகாரமானவன் அல்ல.”

”ஓகோகோ, ரொம்பத்தானே சங்கோசம் பாராட்ட வேண்டாம்” என்றாள் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒரு பெண். ”உங்களுடைய ‘டாகரோடைப்’ போட்டோவைத்தான் நாங்களெல்லோரும் பார்த்திருக்கிறோமே. விகாரமானவர் அல்ல என்று சொன்னால் போதாது. நீங்கள் அழகராயிருந்தீர்கள், ஆமாம்” எனக் கூறினாள்.

”அழகனென்றால் அழகன் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் முக்கியமான விஷயம் அதுவல்ல. நான் மிக ஆழ்ந்த காதல் கொண்டிருந்த அந்தச் சமயத்தில், ‘ஷ்ரோவ்டைட்’ விழாவின் கடைசி நாளன்று குபெர்னியத் தலைமைப் பிரபு அளித்த நடன விருந்தில் கலந்து கொண்டேன். அந்த மனிதர் நல்லியல்புள்ள முதியவர், செல்வந்தர், விருந்துபசாரம் செய்வதில் விருப்பமுள்ளவர். அவரைப் போலவே இனிய சுபாவமுள்ள அவர் மனைவி, செம்பழுப்பு மகமல்கவுனும் வைர முடியணியும் இலங்க அவரருகே நின்று விருந்தினரை வரவேற்றாள். கொழுத்து வெளிறிய அவளது மூப்புற்ற கழுத்தும் தோள்களும் – பேரரசி எலிஸவெத்தா பெத்ரோவ்னாவின் படங்களில் காண்பது போல – திறந்திருந்தன.

நடன விருந்து பிரமாதம்: ஹால் நேர்த்தியாயிருந்தது; இசைப் பிரியரான ஒரு நிலப்பிரபுவின் பண்ணையடிமைகளாயிருந்த, அக்காலத்தில் புகழ் பெற்ற வாத்தியக்காரர்கள் வந்திருந்தார்கள்; உணவு வகைகள் ஏராளம்; ஷாம்பைன் கடலாகப் பொங்கிப் பெருகியது. நான் ஷாம்பெயினில் மோகங்கொண்டவனாயினும், மதுவின்றியே காதல் போதை ஏறியிருந்த படியால், குடிக்கவில்லை. ஆனால் கால்கள் தளர்ந்து தொய்யும்வரை நடனமாட மட்டும் செய்தேன். குவாட்ரில், வால்ட்ஸ்,போல்க்கா என்று எல்லா வகை நடனங்களும் ஆடினேன், அவற்றிலும் முடிந்தவரையில் வாரெனிகாவுடனேயே ஆடினேன் என்று சொல்லத் தேவையேயில்லை.

அவள் வெள்ளை உடையும், ரோஜா நிற இடைக்கச்சும், ஆட்டுக்குட்டித் தோலால் செய்த வெள்ளைக் கையுறைகளும் (இவை அவளது மெல்லிய, கூர்ந்த முழங்கை வரை எட்டியும் எட்டாமலுமிருந்தன), வெண்பட்டு ஸ்லிப்பர்களும் அணிந்திருந்தாள். மஸூர்க்கா நடனத்தில்தான் அனீஸிமவ் என்ற பாழாய்ப் போகின்ற எஞ்சினீயர் ஒருவன் அவளை என்னிடமிருந்து பறித்துக்கொண்டான் – அதன்பின் இன்றளவும் அவனை என்னால் மன்னிக்க முடியவில்லை. அவள் ஆட்ட மண்டபத்தில் அடிவைத்ததுமே அவன் அவளை நடன ஜோடியாக இருக்கும்படி வேண்டிக் கொண்டுவிட்டான்; நானோ, கையுறைகளை எடுத்து வருவதற்காக நாவிதன் கடைக்குப் போனவன், காலந்தாழ்த்துவிட்டேன்.

ஆக மஸூர்க்கா நடனம் அவளுடன் ஆடமால், முன்பு நான் ஓரளவு மோகங் கொண்டிருந்த ஜெர்மானியப் பெண் ஒருத்தியுடன் ஆடினேன். ஆனால் அன்று மாலை அந்தப் பெண்ணிடம் மிக அசட்டையாயிருந்திருப்பேன் என நினைக்கிறேன். நான் அவளோடு பேசவோ, அவளைப் பார்க்கவோ இல்லை. நான் கண்ணாரப் பருகியதெல்லாம், வெள்ளை உடையும் ரோஜா நிற இடைக்கச்சும் அணிந்து, உயரமும் ஒடிசலுமாக இலகிய நங்கையின் வடிவம், ஒளிர்வும் செம்மையும் படர்ந்து, கன்னங்களில் சுழியிட்டிருந்த அவளது வதனம், கனிவும் இனிமையும் பளிச்சிட்ட அவளது கண்கள் இவற்றை மட்டுமே. நான் ஒருவனேயல்ல, எல்லோருமே அவளைக் கண்டு வியந்தார்கள். ஆண்களும், பெண்களுங் கூட, அவள் அவர்களை மங்க அடித்துவிட்டபோதிலும், பார்த்து மகிழ்ந்தர்கள். அவளை வியக்காமலிருக்க முடியவில்லை ஒருவராலும்.

”சட்டப்படி சொல்வதானால் மஸூர்க்கா நடனத்தில் நான் அவளுடைய இணை அல்லதான், ஆயனும் உண்மையில் அநேகமாக நேரம் முழுவதும் நான் அவளுடனேயே ஆடினேன். அவள் கொஞ்சங்கூடத் தயக்கமில்லாமல் ஹாலின் ஒரு கோடியிலிருந்து நேரே என் அருகே ஆடி வருவாள்; நான் அழைப்புக்காகக் காத்திராமல் பாய்ந்து அவளிடம் செல்வேன்; தனது விருப்பத்தை நான் உய்த்துணர்ந்து கொண்டதற்காக அவள் புன்னகையால் எனக்கு நன்றி தெரிவிப்பாள்.

நடனம் ஆடியவாறே நாங்கள் அவளருகே இட்டுச் செல்லப்பட்டு, அவள் எனது தன்மையை ஊகித்துக் கொள்ளத் தவறி, மற்றோருவன் பக்கம் கரத்தை நீட்டி விடும் போது, மெல்லிய தோள்களைக் குலுக்கி, என்னைத் திரும்பிப் பார்த்து, வருத்தமும் தேறுதலும் தோன்ற முறுவலிப்பாள். மஸூர்க்கா ஆட்டப் பாங்கு சுழன்றாடும் வால்ட்ஸ் நடனமாக மாற்றப்பட்டதும், நான் நெடுநேரம் அவளுடன் வால்ட்ஸ் ஆடுவேன், அவளோ மூச்சு இரைக்க இள நகை அரும்பி, “Encore”(“Encore” என்ற பிரெஞ்சுச் சொல் ‘இன்னும்’ என்பது அதன் பொருள்) என மொழிவாள். அவ்வளவுதான், உடல் கனத்தையே உணராதவனாக நான் மேலும் மேலும் சுழன்றாடிக்கொண்டே போவேன்.”

”உணராமலாவது ஒன்றாவது, நன்றாய்ச் சொன்னீர்களே. அவளை இடையுற அணைத்துக் கொண்டு நடனமாடிய போது, சொந்த உடலை மட்டுமல்ல, அவளுடைய மேனியையுங்கூடத் தான் நன்கு உணர்ந்திருப்பீர்கள்” என்றான் ஒரு விருந்தாளி.

இவான் வஸீல்யெவிச் சட்டென முகம் சிவப்பேற, சீற்றம் பொங்க அநேகமாகக் கத்தினார்:

”ஆமாம், இதுதான் உங்கள், இந்தக் காலத்து வாலிபர்களின், நோக்கு. உடம்பைத் தவிர வேறு எதுவுமே உங்கள் கண்களுக்குப் படுவதில்லை. எங்கள் காலத்திலே இப்படிக் கிடையாது. நான் எவ்வளவுக் கெவ்வளவு ஆழ்ந்த காதல் கொண்டிருந்தேனோ, காதலி எனக்கு அவ்வளவுக் கவ்வளவு உடலற்றவளாகத் தோன்றினாள். இந்தக் காலத்திலே நீங்கள் என்னடா வென்றால், கால்களையும் கணுக்கால்களையும், இன்னும் எதெதை யெல்லாமோ பார்வையிடுகிறீர்கள், காதலித்த பெண்ணை ஆடையற்றவளாக்குறீர்கள்; என்க்கோ, Alphonse Karr* – (*அல்பான்ஸ் கார் என்ற பிரெஞ்சு எழுத்தாளர்.) அருமையான எழுத்தாளர் அவர் – சொன்னது போல, என் காதலின் இலக்கு மீது எப்போதும் வெண்கல உடை திகழ்ந்தது. ஆடையைக் களைவதற்குப் பதிலாக நாங்கள் நிர்வாணத்தை மூடி மறைக்கவே முயன்றோம் – நோவாவின் நற்புதல்வன் செய்தது போன்று. ஊம், இதெல்லாம் உங்களுக்குப் புரியாது…”

”அட அவன் கிடக்கிறான், விடுங்கள். அப்புறம் என்ன நடந்தது?” என்று எங்களில் ஒருவன் கேட்டான்.

”ஆயிற்றா. இப்படியாக நான் பெரும்பாலும் அவளுடனேயே நடனமாடினேன், நேரம் கழிவதையே உணராமல். வாத்தியக்காரர்கள் ஒரேயடியாக களைத்துப் போய் – நடன நிகழ்ச்சி முடிவில் இப்படி ஏற்படுவது சகஜந்தானே – மஸூர்க்கா ஆட்ட இசையையே விடாமல் இசைத்துக் கொண்டிருந்தார்கள்; அம்மாமாரும் அப்பாமாரும் இரவு போஜனத்தை எதிர்பார்த்துச் சீட்டாட்ட மேஜைகளை விட்டு அகலத் தொடங்கினார்கள்; எடுப்பாட்கள் எதெதையோ கொண்டு வருவதும் வைப்பதுமாக ஓடிச் சாடிக் கொண்டிருந்தார்கள். இரவு மணி மூன்றாவதற்கிருந்தது. இறுதிக் கணங்களைப் பயன்படுத்துவது அவசியமாயிற்று. நான் இன்னோரு முறை அவளை ஆட்டத்திற்கு அழைத்தேன். நாங்கள் நூறாவது தடவையாக ஹாலின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்கு ஆடிச் சென்றோம்.

” ‘இரவு உண்டிக்குப் பின்பு குவாட்ரில் ஆட்டத்தில் நான்தானே உங்கள் ஜோடி?’ என், அவளை இருக்கைக்குக் கொண்டு அமர்த்துகையில் கேட்டேன். ” ‘கட்டாயமாக, என்னை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போய்விடாவிட்டால்’ என்றாள் அவள், புன்முறுவலுடன்.

” ‘அதற்கு விடமாட்டேன்’ என நான் சொன்னேன்.

” ‘என் விசிறியைக் கொடுங்களேன், சற்றே’ என்றாள்.

”சாதாரண வெண்ணிறகு விசிறியை அவள் பக்கம் நீட்டியவாறே, ‘திருப்பிக் கொடுப்பதற்கு வருத்தமாயிருக்கிறது’ என்றேன். ” ‘அப்படியானால் இந்தாருங்கள், நீங்கள் வருந்தாதிருப்பதற்காக.’ இவ்வாறு கூறி, விசிறியிலிருந்து ஓர் இறகைப் பிய்த்து எனக்குத் தந்தாள்.

”இறகை வாங்கிக்கொண்ட எனக்கு, பேருவகையையும் நன்றியையும் பார்வையினால் மட்டுமே வெளியிட முடிந்தது. நான் மகிழ்வும் மனநிறைவும் மட்டும் கொண்டிருக்கவில்லை, இன்பமுற்றிருந்தேன், பேரானந்தத்தில் திளைத்தேன், நல்லுணர்ச்சி வயப்பட்டிருந்தேன். நான் நானாகவே இல்லை, நிலவுலகைச் சேராத, தீமையே அறியாத, நன்மை மட்டுமே புரியத் திறன் கொண்ட, வேறு ஏதோ ஜீவனாகிவிட்டேன். இறகைக் கையுறைக்குள் மறைத்துக் கொண்டு, அவளை விட்டு அகல மாட்டாதவனாய் அங்கேயே நின்றேன்.

”வெள்ளித் தோள் சின்னங்கள் இலங்க, வீட்டு எஜமானியுடனும் வேறு சில பெண்டிருடனும் கதவருகே நின்று கொண்டிருந்த உயரமும் கம்பீரத் தோற்றமும் வாய்ந்த கர்னல் ஒருவரை வாரெனிகா சுட்டிக் காட்டி, ‘அதோ பாருங்கள், அப்பாவை நடனமாடச் சொல்லுகிறார்கள்’ என்றாள்.

” ‘வாரெனிகா, இப்படி வாருங்கள் சற்றே’ என்று கூவியழைத்தாள் வைர முடியணியும் பேரரசி எலிஸவெத்தா போன்ற தோள்களுமாக இலகிய வீட்டெஜமானி.

”வாரெனிகா கதவுப பக்கம் போனாள், நான் அவள் பின் சென்றேன்.

” ‘உங்கள் தந்தையாரை உங்களுடன் நடனமாடச் சொல்லுங்களேன் சற்றே, Ma chere*’ (”ma chere” என்ற பிரெஞ்சுச் சொல். ‘என் அன்பே’ என்று பொருள் படுவது.) என வாரெனிகாவிடம் கூறிவிட்டு, ‘ஊம், ப்யோத்ர்வ்ளாதிஸ்லாவிச், தயவு செய்து ஆடுங்கள்!’ என்று கர்னலிடம் சொன்னாள் வீட்டெஜெமானி.

”வாரெனிகாவின் தகப்பனார் மிகுந்த அழகர்.  மிடுக்கான  தோற்றமும், உயரமும், நிகுநிகுப்பும் கொண்ட முதியவர். செக்கச்சிவந்த முகம், முதலாவது நிக்கொலாய் போல முறுக்கிவிடப்பட்ட நரை மீசை, மீசையைத் தொட்டுக் கொண்டிருந்த கிருதா, பொருத்துக்கு மேல் முன்பக்கமாக வாரிவிடப்பட்ட கேசம். புதல்வியனது போலவே கனிவும் மகிழ்வும் ததும்பும் இளநகை அவர் கண்களிலும் உதடுகள் மீதும் ஒளிர்ந்தது. இராணுவ தோரணையில் முன்துருத்திய, அதிக ஆடம்பரமின்றிப் பதக்கங்களால் அலங்கரிக்கப்பட்ட அகன்ற மார்பும், வரிய தோள்களும், நீண்ட, வடிவான கார்களுமாக அவர் மிக நல்ல உடற்கட்டு வாய்ந்திருந்தார். பழவ்கால மாதிரியான, நிக்கொலாய் பாணியைச் சேர்ந்த இராணுவ அதிகாரி அவர்.

”நாங்கள் கதவருகே வந்த சமயம் கர்னல் நடனமாடுவதையே தாம் மறந்து விட்டதாகக் கூறி ஆட மறுத்தார். ஆயினும் முறுவலித்து, கையை இடப்புறம் கொண்டுபோய், உடைவாளை உறையிலிருந்து உருவி, தொண்டு செய்யத் தயாராகக் காத்திருந்த ஓர் இளைஞனிடம் அதைக் கொடுத்துவிட்டு, வலக்கையில் ‘ஸ்வீட்’ கையுறையை மாட்டிக்கொண்டு, ‘எல்லாம் சட்டப் பிரகாரம் இருக்கவேண்டும்’ என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு, புதல்வியின் கையைப் பற்றியவாறு கால்வாசி திரும்பி, தாளவாய்ப்பை எதிர்பார்த்து நின்றார்.

”மஸூர்க்கா நடன இசை தொடங்கியதுமே அவர் ஒரு காலை விரைவுடன் தரையில் டக்கென வைத்து, மற்றொரு காலை வீசியாட்டி முன் சென்றார். பின்பு அவரது உயரமான கனத்த உருவம் இக்கணம் மெதுவாகவும் ஒயிலுடனும், மறுகணம் ஓசையுடனும் விரைவுடனும் பாதங்களைத் தரைமீதும் ஒன்றோடொன்றும் அடித்தவாறு ஹாலைச் சுற்றிவந்தது. வாரெனிகாவின் எழில் வடிவம், கவனிக்க முடியாதபடி, தக்க தருணத்தில் அடிகளை அகற்றியும் குறுக்கியும் வைத்தவாறு, தனது சின்னஞ்சிறு பட்டுப்பாதங்கள் அவரது பாதங்களுடன் இணையும் வகையில் அவரருகே ஒய்யாரமாக நீந்திச் சென்றது. இந்த ஜோடியின் ஒவ்வோர் அசைவையும் ஹாலில் இருந்தவர்கள் யாவரும் உற்று நோக்கிக் கொண்டிருந்த்தார்கள்.

நானோ, வியப்பும் பாராட்டும் மட்டுமின்றி, பேரின்பமும் கனிவும் பெருக்கிட அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். கர்னலின் பூட்சுகளைக் கண்டு எனக்கு விசேஷ உளநெகிழ்ச்சி உண்டாயிற்று. அவை கன்றுக்குட்டித் தோலால் செய்த நல்ல ஜோடுகள்தாம், மோஸ்தர்படி நுனிப்புறம் கூராயில்லாமல் சப்பையானவை. பட்டாளச் செம்மான்தான் அவற்றைத் தைத்துக் கொடுத்திருக்க வேண்டும் என்பது தெளிவாய்ப புலப்பட்டது. ‘பெண்ணுக்கு நல்லுடை அணிவித்து அவளை நாலு இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே இவர் மோஸ்தர்படி அமைந்த ஜோடுகளை வாங்காமல் சாதாரண பூட்சுகளைப் போட்டுக்கொள்கிறார்’ என எண்ணினேன். அந்தச் சப்பை நுனி பூட்சுகள் என் நெஞ்சை ஒரேயடியாக உருக்கி விட்டன.

ஒரு காலத்தில் அவர் நேர்த்தியாக நடனமாடியிருக்க வேண்டும் என்பது துலக்கமாகத் தெரிந்தது. இப்போதோ, உடல் கனத்துப் போய்விட்டது, அவர் ஆடமுயன்ற  விரைவும் அழகும் வாய்ந்த ஜதிவரிசைகளுக்கெல்லாம் ஏற்றவாறு கால்களில் போதிய லாகவம் இல்லை. இருந்த போதிலும் ஒயிலாக இரண்டு சுற்று வந்தார். பின்பு அவர் கால்களைத் துடியாக அகற்றி, மறுபடி டக்கென ஒன்று சேர்த்து, ஒரு முழங்காலை – சற்று கனமாகவேதான் என்றாலும் – தரையில் ஊன்றி அமர, அவள் அவர் முழங்காலுக்கடியில் சிக்கிக்கொண்ட ஆடை நுனியைப் புன்முறுவலுடன் விடுவித்துக் கொண்டு ஒயிலாக அவரைச் சுற்றி வரவே, எல்லோரும் பலத்த கரகோஷம் செய்தார்கள். ஓரளவு சிரமத்துடன் அவர் கால்களை நிமிர்த்தி எழுந்து, மென்மையும் கனிவும் ததும்பப் புதல்வியின் காதுகளைப் பற்றி அவளுடைய நெற்றியில் முத்தமிட்டுவிட்டு, நான்தான் அவளது நடன ஜோடி போலும் என்று எண்ணி அவளை என் அருகே அழைத்து வந்தார். அவளது இணை நான் அல்ல என விளக்கினேன்.

”அவரோ, பரிவுடன் முறுவலித்து, வாளை உறையில் செருகியவாறே, ‘அதற்கென்ன, பரவாயில்லை. இப்போது நீங்கள் அவளுடன் சேர்ந்துகொள்ளுங்கள்’ என்றார். ”புட்டியிலிருந்து வெளிப்படும் முதல் துளியைத் தொடர்ந்து பெரிய பெருக்கு குபுகுபு வென்று கொட்டுவது போல, வாரெனிகா மீது எனக்கு உண்டான காதல் என் உள்ளத்தில் மறைந்திருந்த அன்பு செய்யும் திறனையெல்லாம் கட்டவிழ்த்து விட்டது. அந்தக் கணத்திலே நான் உலகம் முழுவதையும் காதலால் தழுவிக் கொண்டேன். வைர முடியணி பூண்ட வீட்டெஜமானி, அவள் கணவன், அவளது விருந்தாளிகள், அவளுடைய பணியாட்கள், எல்லோர் மீதும், என் மேல் காட்டமாயிருந்த எஞ்சினீயர் அனீஸிமவினிடம் கூட, அன்பு கொண்டேன். சாதாரண பூட்சுகள் அணிந்து, அவளைப் போலவே கனிந்த புன்னகையுடன் இலகிய அவளது தந்தையின் பாலோ, அப்போது எனக்குள் மகிழ்பொங்கும் மெல்லுணர்வு ஊற்றெடுத்தது.

”மஸூர்க்கா நடனம் முடிந்தது. வீட்டுக்காரர்கள் விருந்தினர்களை இரவு உண்டி உண்பதற்கு அழைத்தார்கள். கர்னல், தாம் மறுநாள் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டி யிருப்பதாகக்கூறி, வீட்டுக்காரர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். எங்கே அவர் வாரெனிகாவையும் அழைத்துக்கொண்டு போய்விடுவாரோ என்று அஞ்சினேன். ஆனால் அவள் தன் தாயுடன் தங்கிவிட்டாள்.

”உண்ட பின்பு, அவளுடன் ஏற்கனவே பேசிவைத்துக் கொண்டபடி குவாட்ரில் நடனம் ஆடினேன். எல்லையற்ற இன்பத்தில் திளைத்துக் கொண்டிருந்தேனாயினும், எனது இன்பம் நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டே போயிற்று. காதலைப் பற்றி நாங்கள் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவள் என்னைக் காதலிக்கிறாளா என்று நான் அவளையோ என்னையேதானோ கேட்கவில்லை. நான் அவளைக் காதலிக்கிறேன் என்பதே எனக்குப் போதுமானதாயிருந்தது. ஏதாவது எனது இன்பத்தைக் குலைத்து விடக்கூடாதே என்று மட்டுமே அஞ்சினேன்.

”வீட்டுக்கு வந்து, மேல்கோட்டைக் களைந்து விட்டு, உறங்கலாம் என்று எண்ணியவன், அது முற்றிலும் இயலாத காரியம் என்பதைக் கண்டேன். அவளது விசிறியிலிருந்து எடுக்கப்பட்ட இறகும், அவள் தாயாரையும் அவளையும் நான் கைலாகு கொடுத்து வண்டியில் அமர்த்தி பின், விடை பெற்றுக்கொள்ளும் போது அவள் அளித்த கையுறையும் என்கையில் இருந்தன. அவற்றை நோக்கினேன். அப்போது விழிகளை மூடாமலே அவளை என் எதிரே கண்டேன்: நடனங்களுக்கிடையே இரண்டு ஆடவரில் ஒருவனைத் தேர்ந்தெடுக்கையில், எனது தன்மையை ஊகித்துக்கொண்டு, ‘கர்வமோ? ஊம்?’ என்று இனிய குரலில் மொழிந்தவாறே மகிழ்வுடன் என் புறம் கையை நீட்டிய சமயத்திலிருந்த அவளது தோற்றம் ஒரு கணம் தென்படும்; மறுகணம், இரவுச் சாப்பாட்டின் போது ஷாம்பெயின் பருகியபடியே கிளாசும் கையுமாகக் கனிந்த பார்வையுடன் அவள் என்னை நோக்கிய காட்சி தோன்றும். எல்லாவற்றையும் விட எனக்குக் கவர்ச்சி அளித்தது, தனது தந்தையுடன் ஒயிலாக இணைந்தாடியவாறு நடனம் புரிந்து கொண்டே, அவர் மீதும் தன் மீதும் கர்வமும் உவகையும் பெருக்கெடுக்க, வியந்து நோக்கும் பார்வையாளர்களை அவள் கடைக்கணித்த ஒய்யாரந்தான். என்னையுமறியாமலே அவர்கள் இருவரும் என் உள்ளத்தில் கனிவும் பரிவும் வாய்ந்த உணர்ச்சியில் ஒன்றாகிவிட்டார்கள்.

”எனது காலஞ்சென்ற சகோதரனும் நானும் அப்போது தனியாக வாழ்ந்து வந்தோம். சகோதரனுக்கு ஜனங்களுடன் பழகுவதில் விருப்பம் கிடையாது. நடனத்துக்கோ அவன் போவதே இல்லை. இப்போது தான் அவன் ‘காண்டிடேட்டு’ பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தான், மிகமிக ஒழுங்கான வாழ்க்கை நடத்தி வந்தான். அவன் உறங்கிக் கொண்டிருந்தான். தலையணையில் புதைந்து, போர்வையால் பாதி மூடப்பட்டிருந்த அவனது தலையைப் பார்த்ததும் எனக்கு அன்பு கனிந்த வருத்தம் உண்டாயிற்று – நான் அனுபவிக்கும் இன்பத்தை அவன் அறியவுமில்லை, பகிர்ந்து கொள்ளவுமில்லையே என்ற வருத்தம்.

எங்களது பண்ணையடிமைப் பணியாள் பித்ரூஷ்க்கா மெழுகுவத்தி விளக்கும் கையுமாக என்னிடம் வந்து உடைமாற்றிக் கொள்வதில் எனக்கு உதவ விரும்பினான். ஆனால் நான் அவனைப் போகச் சொல்லி விட்டேன். அவனது தூங்கிவழிந்த முகமும் கலைந்த முடியும் என் உள்ளத்தை உருக்கி விட்டன. ஓசைப்படாமலிருப்பதற்காக நுனிக்காலால் நடந்து என் அறைக்குப் போய்ப் படுக்கைமீது உட்கார்ந்தேன். ஊஹும், மகிழ்ச்சிப் பெருக்கில் எனக்குத் தூக்கம் வருவதாயில்லை. கதகதப் பூட்டப்பட்ட அறைக்குள் எனக்கு ஒரே வெப்பமாயிருந்தது. உடுப்பைக் கழற்றாமலே சத்தமின்றி ஹாலுக்குச் சென்று, மேல் கோட்டைப் போட்டுக்கொண்டு வாயிற்கதவைத் திறந்து, தெருவுக்குப் போய் விட்டேன்.

”நடனம் முடிந்து நான் வெளிவந்த போது அநேகமாக ஐந்து மணி. அதன் பின் வீடு திரும்பி, வீட்டிலே உட்கார்ந்திருந்ததில் இன்னும் இரண்டு மணி நேரம் கழிந்திருந்தது. ஆகவே, நான் தெருவுக்கு வந்தபோது வெளிச்ச மாகிவிட்டது. ‘ஷ்ரோவ்டைட்’ விழாக்காலத்துக் கேற்ற பருவ நிலை: மூடுபனி அடர்ந்திருந்தது; தெருக்களில் ஈர வெண்பனி உருகிக் கொண்டிருந்தது; எல்லக் கூரைகளிலிருந்தும் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. அந்த நாட்களிலே வாரெனிகாவின் குடும்பத்தார் நகர எல்லைக்கு வெளியே, பெரிய வயலின் ஓரத்திலிருந்த வீட்டில் வசித்து வந்தார்கள். வயலின் ஒரு கோடியில் உலாவு திடலும் மறு கோடியில் பெண்கள் பள்ளியும் இருந்தன. வெறிச்சோடிக் கிடந்த எங்கள் சந்தைக் கடந்து நான் பெரிய தெருவுக்கு வந்தேன்.

அங்கே கால்நடையாகச் செல்பவர்களும், ஸ்லேட்ஜ்களில் விறகேற்றிக் கொண்டு வரும் வண்டிக்காரர்களும் எதிர்ப்பட்டார்கள். ஸ்லேட்ஜ்களின் அடிச் சட்டங்கள் நடைபாதைவரை வெண்பனியைச் செதுக்கிக் கொண்டு போயின. என் கண்களுக்கு எல்லாமே – வார்னிஷ் அடித்த நுகங்களுக்கு அடியில் ஈரத் தலைகளை லயத்துடன் அசைத்தாட்டிச் சென்ற குதிரைகள், மரவுரிப் பாய்களைத் தோள்கள் மேல் போர்த்து, பிரம்மாண்டமான பூட்சுகள் அணிந்து, ஸ்லேட்ஜ்களுக்கு அருகாக நளுக்குப் பனிச் சேற்றில் சளப்சளப்பென்று நடந்து சென்ற வண்டிக்காரர்கள், தெருவின் இரு மருங்கிலும் மூடுபனியில் மிக உயரமாகத் தென்பட்ட வீடுகள் –எல்லாமே வெகு இனியவையாகவும், பொருள் பொதிந்தவையாகவும் இருந்தன.

”அவர்கள் வீடு இருந்த வயலை அடைந்ததும், உலாவு திடல்பக்கத்துக் கோடியில் பெரியதும் கரியதுமாக எதையோ கண்டேன், குழலும் டமாரமும் ஒலிக்கக் கேட்டேன். எனது இதயம் இவ்வளவு நேரமும் இசைத்துக் கொண்டுதான் இருந்தது; அவ்வப்போது மஸூர்க்கா நடன இசை என் காதுகளில் ஒலிக்கும். ஆனால் இது ஏதோ வேறு, கொடிய, கெட்ட இசை.

” ‘என்ன அது?’ என்று எண்ணிய நான் வயல் நடுவே சென்றிருந்த சறுக்கு வண்டித் தடத்தோடு நடந்து, ஒலிகள் வந்த திக்கை நோக்கிப் போனேன். ஒரு நூறடி நடந்ததும் பனி மூட்டத்திற்கிடையே எத்தனையோ மனிதர்களின் கரிய வடிவங்கள் எனக்குத் தென்பட்டன. படைவீரர்களாயிருக்க வேண்டும். ‘ஆமாம், கவாத்து பழகுகிறார்கள்’ என்று நினைத்து, எண்ணெய்க் கறை படிந்த ஏப்ரனும் கோட்டுமாக ஏதோ மூட்டையைச் சுமந்து சென்று கொண்டிருந்த கருமான் ஒருவனுடன் மேலே நடந்து அவர்களை அணுகினேன். கறுப்புக் கோட்டுகள் அணிந்த படைவீரர்கள், துப்பாக்கிகளைக் கால்களுக்கருகே நாட்டியவாறு இரண்டு வரிசைகளில் எதிரும் புதிருமாக அசையாமல் நின்றார்கள். அவர்களுக்குப் பின்னே நின்ற குழலூதுபவனும் டமாரம் அடிக்கும் பையனும் வேதனை தரும் கர்ண கடூரமான மெட்டை மறுபடி மறுபடி ஒலித்துக் கொண்டிருந்தார்கள்.

” ‘என்ன செய்கிறார்கள் இவர்கள்?’ என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்த கருமனை வினவினேன்.

”இரட்டை வரிசையின் மறு கோடியை உறுத்து நோக்கியபடியே, ‘தப்பியோடப் பார்த்த தாத்தார் ஒருவனை இழுத்து வருகிறார்கள்’ என்று முறைப்புடன் பதிலளித்தான் கருமான்.

”நானும் அதே திக்கில் பார்வையைச் செலுத்தியவன், இரு வரிசைகளுக்கும் நடுவே, பயங்கரமான ஏதோ ஒன்று என் பக்கமாக வந்து கொண்டிருக்கக் கண்டேன். என்னை நெருங்கிக் கொண்டிருந்தவன் இருமருகிலும் இரண்டு சிப்பாய்கள் பிடித்துக் கொண்டிருந்த துப்பாக்கியுடன் சேர்த்துக் கட்டப்பட்டு, இடுப்புக்கு மேல் வெற்றுடம்பாயிருந்த ஒரு மனிதன். இராணுவ மேல்கோட்டும் தொப்பியும் அணிந்த உயரமான அதிகாரி அவனருகே வந்து கொண்டிருந்தான். அதிகாரியின் உருவம் எனக்கு அறிமுகமானதாகப் பட்டது.

கைதி, இரு புறமிருந்தும் மாறி மாறிப் பொழிந்த அடிகளைப் பட்டுக் கொண்டு, உடம்பெல்லாம் துடிதுடித்து நெளிய, உருகும் வெண் பனியில் பாதங்கள் சளப்பிட, ஒரு கணம் பின்னே சாய்வதும் மறுகணம் முன்னே குனிவதுமாக என் பக்கம் நெருங்கினான். துப்பாக்கியைப் பிடித்திருந்த சிப்பாய்கள் அவன் பின்னே சாயும் போது இழுத்து முன்னுக்குத் தள்ளுவதும் முன் சரியும் போது அவன் விழுந்து விடாதபடிச் சுண்டி இழுப்பதுமாயிருந்தார்கள். உயரமான அதிகாரி பின் தங்கிவிடாமல் உறுதியாக எட்டு வைத்து அவனைத் தொடர்ந்து வந்தான். செக்கச் சிவந்த முகமும், நரை மீசையும் கிருதாவுமாக விளங்கிய அந்த அதிகாரி வாரெனிகாவின் தந்தையே தான்.

”ஒவ்வோர் அடி விழும்போதும் கைதி வேதனையால் சுளித்த முகத்தை அடி வந்த பக்கமாக வியப்புற்றவன் போலத் திருப்பி, வெண் பல்வரிசைகள் தெரியக் காட்டி, ஏதோ ஒரே மாதிரியான வார்த்தைகளைத் திருப்பித்திருப்பிச் சொன்னான். அவன் எனக்கு மிக அருகே நெருங்கிய பின்புதான் அந்தச் சொற்கள் என் செவிக்கு எட்டின. அவன் பேசவில்லை, ‘அண்ணன்மாரே, கொஞ்சம் இரக்கங் காட்டுங்கள். அண்ணன்மாரே, கொஞ்சம் இரக்கங் காட்டுங்கள்’ என்று தேம்பினான். ஆனால் அண்ணன்மார் இரக்கங் காட்ட வில்லை. அவர்கள் எனக்கு நேர் எதிராக வந்ததும், ஒரு சிப்பாய் தீர்மானத்துடன் முன்னே அடியெடுத்து வைத்து, பிரம்பை ஓங்கி ‘உஷ்’ ஷென்று  இரையும் படி முழுவலிமையுடன் தாத்தாரின் முதுகில் சொடேரென விளாறியதைக் கண்டேன். தாத்தார் முகங் குப்புறச் சரிந்தான், ஆனால் துப்பாக்கியைப் பிடித்திருந்த சிப்பாய்கள் அவனைச் சுண்டி இழுத்து நேராக்கி விட்டார்கள்.

பின்பு மறு பக்கத்திலிருந்து அதே போன்ற அடி, பிறகு இப்புறமிருந்து, பின் அப்புறமிருந்து… கர்னல் ஒரு கணம் தனது பாதங்களைப் பார்ப்பதும், மறு கணம் கைதியை நோக்குவதும், ஆழ்ந்து மூச்சு இழுத்து விடுவதும், கன்னங்களைக் காற்றால் உப்பிக் கொண்டு, குவிந்த உதடுகள் வழியே மெதுவாகக் காற்றை ஊதுவதுமாக, தாத்தாரின் அருகே நடந்து வந்தான். அவர்கள் நான் நின்ற இடத்தைக் கடந்து செல்கையில், படைவீரர் வரிசையின் இடை வழியே கைதியின் முதுகு சட்டேன என் பார்வையில் பட்டு மறைந்தது. கம்பி கம்பியாகத் தழும்பிட்டு, சொதசொதத்து, செக்கச் செவெலென்று, இனங்கண்டு கொள்ள முடியாததாயிருந்த அந்தப் பயங்கரம், மனித உடலின் அங்கம் என்று நம்பவே எனக்கு இயலவில்லை.

” ‘ஐயோ ஆண்டவனே!’ என முணுமுணுத்தான் என் பக்கத்தில் நின்ற கருமான்.

”அவர்கள் மேலே நடந்தார்கள். இடறிவிழுந்து தள்ளாடித் தவித்துத் துடித்துக் கொண்டிருந்த மனிதன் மீது இரு புறமிருந்தும் அடிகள் முன்போலவே விழுந்த வண்ணமாயிருந்தன, முன்போலவே டமாரம் ஒலித்தது, குழல் இசைத்தது, கர்னலின் வாட்டசாட்டமான, மிடுக்கான உருவம், கைதியின் அருகே முன் போலவே உறுதியாக அடிவைத்து  நடந்தது. திடீரெனக் கர்னல் நின்று, ஒரு சிப்பாயை விரைந்து நெருங்கினான்.

” ‘குறி தவறுகிறதோ? இதோ காட்டுகிறேன் உனக்கு! ஊம்? இனிமேல் தவறுவாயா? தவறுவாயா குறி? ஊம்?’ என்று அவன் இரைந்ததைக் கேட்டேன்.

”அந்தப் பக்கம் நோக்கியவன், ‘ஸ்வீட்’ கையுறையணிந்த கர்னலின் வலிய கரம் சிறுகூடான, நோஞ்சல் சிப்பாயின் முகத்தைப் புடைக்கக் கண்டேன் – அந்த மனிதன் தாத்தாரின் வழன்று சிவந்த முதுகில் போதிய உரத்துடன் பிரம்பால் அடிக்கவில்லை என்பதற்காக.

” ‘புதுப் பிரம்புகள் வரட்டும்!’ என்று கூவினான் கர்னல். இப்படிச் சொல்லிவிட்டுத் திரும்பியவன் என்னைப் பார்த்துவிட்டான். என்னை அடையாளந் தெரிந்துகொள்ளாதது போலப பாவனை செய்து, குரூரமும் சினமும் பீரிட முகத்தைச் சுளித்து, சட்டெனத் திரும்பிவிட்டான். எனக்கு ஒரேயடியாக ஏற்பட்ட வெட்கத்தில், ஏதோ அவமானகரமான இழிசெயல் புரிந்து விட்டவன் போன்று, எங்கே பார்ப்பது என்று தெரியாமல், தலை கவிழ்ந்து விரைவாக வீட்டைப் பார்க்க நடந்தேன். டமாரத்தின் அதிரலும், குழலின் கீச்சொல்லியும், ‘அண்ணன்மாரே, கொஞ்சம் இரக்கங் காட்டுங்கள்’ என்ற சொற்களும், கர்னலின் தன்னம்பிக்கை நிறைந்த கோபக் குரல், ‘இனிமேல் தவறுவாயா? தவறுவாயா குறி? ஊம்?’ என்று இரைவதும் ஒன்று மாற்றி ஒன்றாக வழி நெடுகிலும் என் காதில் கேட்டுக் கொண்டிருந்தன.

இவற்றால் எனது நெஞ்சில் உடல் வலி போன்ற, குமட்டலுண்டாக்கும் வேதனை ஏற்படவே, நான் பலதடவை நின்று நின்று போக வேண்டியதாயிற்று. நான் கண்ட காட்சி என்னுள் நிறைத்திருந்த ஆபாசமெல்லாம் இதோ, இதோ வாந்தியாக வெளிவந்துவிடப் போகிறது எனப் பட்டது. எப்படி வீடு சேர்ந்தேனோ, கட்டிலில் படுத்தேனோ, அறியேன். ஆனால் தூக்கம் வர ஆரம்பித்ததுமே எல்லா நிகழ்ச்சிகளும் மீண்டும் தோற்றமளித்தன, செவியில் ஒலித்தன. நான் துள்ளியெழுந்தேன்.

” ‘எனக்குத் தெரியாதது எதுவோ அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பது தெளிவு’ எனக் கர்னலைப் பற்றி எண்ணமிட்டேன். ‘அவருக்குத் தெரிந்திருப்பது எனக்குத் தெரிந்திருந்தால் நான் கண்டதைப் புரிந்து கொண்டிருப்பேன், அது எனக்குத் துன்பமளித்திருக்காது’ என்று நினைத்தேன். ஆனால் எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தும், கர்னல் அறிந்திருப்பது என்ன என்பதை என்னால விளங்கிக் கொள்ள முடியவில்லை. மாலையில் தான் எனக்கு உறக்கம் பிடித்தது – அதுவும் ஒரு நண்பன் வீட்டுக்குப் போய் முழு போதையேறும் வரை குடித்த பின்பே.

”நான் கண்டது ஏதோ கெட்ட விஷயம் என்று நான் அப்போது முடிவு செய்ததாக நினைக்கிறீர்களோ? கிடையவே கிடையாது. ‘இதெல்லாம் இவ்வளவு நிச்சயத்துடன் செய்யப்பட்டு, அவசியமான தென்று எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப் படுகிறது என்றால், எனக்குத் தெரியாத ஏதோ ஒன்று அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று ஆகிறது’ – இவ்வாறு எண்ணி, அது என்ன விஷயம் என அறிந்து கொள்ள முயன்றும் என்னால் இதை அப்போதும் சரி, அப்புறமும் சரி, தெரிந்து கொள்ளவே முடியவில்லை. அதற்கு முன் இராணுவத்தில் சேர்ந்து பணிபுரியத் தீர்மானித்திருந்தேன். ஆனால், இந்த விஷயத்தைத் தெரிந்து கொள்ளாமல் இராணுவத்தில் சேர என்னால் முடியவில்லை. இராணுவத்தில் பணி புரியாதது மட்டுமல்ல, எங்குமே பணி புரியவில்லை. விளைவாக, நீங்கள் காண்பது போலவே, ஒன்றுக்கும் உதவாதவனாகிவிட்டேன்.”

”ஓகோகோ, நீங்கள் எப்படி ஒன்றுக்கும் உதவாதவராகி விட்டீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். நீங்கள் மட்டும் இல்லாவிட்டால் எத்தனையோ பெயர் ஒன்றுக்கும் உதவாதவர்கள் ஆகியிருப்பார்கள் என்று சொல்லுங்கள். அதுதான் உண்மை” என்றான் எங்களில் ஒருவன்.

”இதுதான் அடிமுட்டாள் பேச்சு” என்று உண்மையான சள்ளையுடன் சொன்னார் இவான் வஸீல்யெவிச்.

”கிடக்கட்டும். காதல் என்ன ஆயிற்று?” என்று கேட்டோம்.

”காதலா? அந்த நாள் முதல் காதல் கொஞ்சங் கொஞ்சமாகத் தேய்ந்து போய்விட்டது. வழக்கமாகச் செய்வது போல அவள் முகமெல்லாம் புன்னகை ஒளிர, சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் போது, வயலில் கண்ட கர்னலின் தோற்றம் அக்கணமே எனக்கு நினைவுக்கு வந்துவிடும். அவ்வளவுதான், அசட்டுப் பிசட்டென்று சங்கடமாயிருக்கும் எனக்கு. வர வர, அவளைப் பார்ப்பதையே நிறுத்தி விட்டேன். காதல் மங்கி மாய்ந்து போயிற்று. அதுதான் சொல்கிறேன், இந்த மாதிரிச் சம்பவங்கள் நிகழ்கின்றன, இவற்றினாலேயே மனிதனின் வாழ்க்கை மாறி விடுகிறது, நடத்தப்படுகிறது என்று. நீங்கள் என்னடா வென்றால் சுற்றுச் சார்பு என்கிறீர்கள்.” இவ்வாறு கூறி முடித்தார் இவான் வஸீல்யெவிச்.

______________________________________________________________________________

லியோ டால்ஸ்டாய் ( லேவ் தல்ஸ்தோய்)

லகப் புகழ்பெற்ற எழுத்தாளர். போரும் சமாதானமும், அன்னா  கரேனினா, மறு உயிரிப்பு முதலிய நாவல்கள் புகழ் பெற்றவை. “நடனத்திற்கு பின்” என்ற கதை (1903) அவரது இறுதி காலப் படைப்புக்களில் ஒன்று

_______________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

7 மறுமொழிகள்

 1. // ஆனால் வாழ்வில் வரும் தற்செயலான சம்பவங்கள் நம் அகத்தில் சுற்றுப்புறச்சூழலினால் அல்லது அவரவருக்கு கிடைத்திருக்கும் சமூக சூழலின் மதிப்பீடுகளின்படிதான் பாதிப்பு ஏற்படுத்துமே அன்றி அவை முற்றிலும் தற்செயலானதல்ல. அதாவது அதன் நிகழ்வு மற்றுமே தற்செயலாக இருக்குமே அன்றி அதன் விளைவு நீடித்து வரும் சமூக மதிப்பீடுகளோடு தொடர்பு உடையவை. //

  கதை சொல்லி இவான் வஸீல்யெவிச்சும் செல்வந்தர், சம்பவம் நடந்த காலத்தில் குஷால் பேர்வழியாகத்தான் இருந்திருக்கிறார். சமூகச் சூழலைப் பொருத்தவரை, கதாநாயகி வாரெனிக்காவும்,அவள் தந்தை கர்னலும், கதை சொல்லி இவானும் மேட்டுக்குடி கலாசாரத்தில் வாழ்ந்து வளர்ந்தவர்கள் என்றாலும், இவானும் கர்னலும் வெவ்வேறு மனப்பாங்கு கொண்டிருப்பதேன்? மாறுபடும் உளப்பாங்கு மகளுக்கும் தந்தைக்கும் இருந்திருக்க வாய்ப்புள்ளதை இவான் சிந்திக்காமல், பழகிப் பார்க்காமல், அவளை கைகழுவக் காரணம் என்ன? அவளுடைய ’குலமே’ அப்படித்தான் என்ற முடிவுக்கு வந்துவிட்டாரா? கனவான் இவானின் முடிவுக்குக் காரணம் அவரது சொந்த மதிப்பீடுகளும், தயக்கங்களும் காரணமாகத் தோன்றுகிறது. ஏனெனில் அவர் கற்றதில் எந்த சித்தாந்தங்களும் கொள்கைகளும் இருக்கவில்லையென்று அவரே கூறியிருக்கிறார். மேட்டுக்குடி சமூகச் சூழலும், சித்தாந்த/கொள்கைச் சார்பும இல்லாத மனமும் கொண்ட அவர் சிந்தனை மட்டும் மென்மையானதாக எப்படி அவருடைய சமூகத்தால் வடித்தெடுக்கப்பட்டிருக்க முடியும்?

  கதையைத்தான் விமர்சிக்கிறேன், மற்றபடி சமூகச் சூழலின் வலிமையான தாக்கம் சிந்தனையிலும், உள்ளப்பாங்கிலும் கட்டாயம் இருக்கும், ஆனால் அதையும் மீறி மனிதனின் உளக்கண் திறக்கும் வாய்ப்புகளும் இருக்கக் கூடும் என எண்ணுகிறேன். ஜெயமோகனின் கூறும் அகப்பார்வைக்கும் இதற்கும் தொடர்பிருக்கலாமோ எனத் தெரியவில்லை.!

 2. ஒரு கடுமையான சம்பவம் நிச்சயமாக ஒரு மனிதனின் சிந்தனை போக்கை மாற்றும் வலிமை கொண்டதுதான். ஒரு மனநல மருத்துவர் சிறு வயதில் இருந்து நடந்த எல்லா முக்கிய நிகழ்வுகளையும் கவனமாக கேட்டறிந்த பின் தானே நோயின் மற்றும் நோயாளியின் தன்மையை அறிகிறார்.ஒருவன் லஞ்சம் வாங்கினால் குறுக்கு வழியில் பணம் சேர்த்தால் ஈனத்தனமான தொழில் செய்து பணம் ஈட்டினால் பக்கத்து பக்கத்தில் பலரும் முதலில் பதறினாலும் பின்பு அதே பாதையில் பயணிப்பதை பார்க்கிறோமே.ஒரு சினிமாவிலோ சீரியலிலோ ஒரு பெண் பேசும் வசனம் பல பெண்களை வீட்டில் பேச வைத்து விடுகிறதே.சித்தார்த்தன் துன்பத்தின் வலியை பார்த்தால் புத்தன் ஆவான் சராசரி மனிதன் பார்த்தால் நித்யானந்தா ஆவான்.

 3. தூரத்தில் வரும் பிகரை பார்த்து ஜொள் விட்டு அவள் அருகில் கடந்து பொகும் பொழுட்கு அவர்கள் விடும் ஆங்கிலம் கலந்த பீட்டரை கேக்கும் போது மனதுள் தோன்றும் அவள் கிடக்குறா ! அன்று மனம் சொல்வது தன் இந்த கதை! சரி தானே

  ஆனால் சற்றே அழகான பெண்கள் காணும் போட்கு சப்ப பிகர் என்றும் அவர்களுக்குள் இருக்கும் சில யதார்த்த பண்புகள் உருவாக்கும் உணர்வுகள் தான் உண்மையானவை! அங்கு மட்டுமே உண்மையான காதல்நிலைக்க முடியும் நீ யோக்கியவனாஇ இருந்தால் !

 4. இந்த கதையை எஸ்.ராமகிருஷ்ணன் மிக மோசமான கதை என்று ஒரு மேடையில் சொன்னார்.எஸ்.ராமகிருஷ்ணனை விட நீர் பெரிய ஆளோ?

  • எஸ். ராமகிருஷ்ணன் பெரிய ஆள் தான், ஆம் அவர் மிகப் பெரிய அற்பவாத எழுத்தாளர்.

 5. […] டால்ஸ்டாயின் ‘நடனத்திற்குப் பிறகு’ என்ற சிறுகதையை இங்கே குறிப்பிடுவது பொருந்தும். நடன விருந்தொன்றில் ஒரு பெண்ணைப் பார்க்கின்ற இளைஞன் ஒருவன் அவளுடைய அழகால் பெரிதும் கவரப்படுகிறான். அவளையும் அவளது தந்தையும் அறிமுகப்படுத்திக் கொள்கிறான். அன்றிரவு அவனுக்கு உறக்கம் வராத இரவாகக் கழிகிறது. மறுநாள் காலை அவளைப் பற்றிய நினைவுடனேயே கடைவீதியில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு அப்பாவி இளைஞனை கதறக்கதற ரத்தம் சொட்டச் சொட்ட ராணுவ அதிகாரியொருவன் அடித்து இழுத்துச் செல்வதைக் காண்கிறான். நெருங்கிச் சென்று பார்த்தால், அது அவன் மனங்கவர்ந்த மங்கையின் தந்தை! ஏனோ தெரியவில்லை. அவள் மீது அவன் கொண்ட காதல் கலைந்தே விடுகிறது. […]

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க