புதிதாக இலக்கியம் கற்றுக்கொள்ளும் முனைப்பில் இருக்கும் நண்பர்கள் பலர், புத்தகக் கண்காட்சியில் எதை வாங்குவது என்றுத் தெரியாமலும், ஏமாந்து விடக்கூடாது என்ற முனைப்பிலும் மூத்த எழுத்தாளர்களின் முக்கியமான இலக்கிய நூல்களின் பட்டியல்களை ஆங்காங்கே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
என்னிடமும் கேட்கிறார்கள். நானும், நான் படித்த புதுமைப்பித்தனில் தொடங்கி ஜெயமோகன் வரையும் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தொடர்ந்து அவர்களுக்கு பரிந்துரை செய்தும் வருகிறேன். ஆனாலும் ஒவ்வொரு முறையும் இந்தப் பரிந்துரைகளைச் செய்யும்போதும் ஒரேயொரு கேள்வி மட்டும் எப்போதும் எழும்.
“இலக்கியம் கற்றுக்கொள்ள இது மட்டும் போதுமா?”
அப்படியே இந்தக் கேள்வி எழத் தொடங்கும்போது தோழர் பிளக்ஹானவ் அவர்களின் இந்த மேற்கோளும் கூடவே தொற்றிக்கொண்டு வந்துவிடும்.
“கலைஞர்களும் கலைப் படைப்புகளில் ஆழ்ந்த அக்கறைக் கொண்டோரும், அவர்களைச் சுற்றிலுமுள்ள சமுதாயச் சூழலிடம் தீர்வுகாண முடியுமென்ற நம்பிக்கைக்கு இடமின்றி அதனுடன் பிணக்கு கொள்ளும்போது, கலை கலைக்காவே என்ற போக்குடையவர்களாக மாறுகின்றனர்”
படிக்க :
இதயத்தை ஈரமாக்குவது இலக்கியமா? அரசியலா?
சுயமோகன்: ஊட்டி இலக்கியச் சந்திப்பு குறித்து…
அவர் கூறியதை கொஞ்சம் விரிவுபடுத்தினால், அவர்கள் கலை கலைக்காக என்ற போக்குடையவர்களாக மட்டுமல்ல, கலை இலக்கியம் யாவும் மக்களுக்காக என்ற கோட்பாட்டின் எதிரிகளாவும் இருக்கின்றனர் என்பதையும் நாம் காணமுடியும்.
இங்கேயும் அப்படி பலர் இருங்கிறார்கள். அவர்களின் பெயர்களைச் சொல்வது இந்தப் பதிவின் நோக்கமல்ல. இந்த இடத்தில் நீங்கள், ஆளும் வர்கத்தின் ஒடுக்குமுறையின்கீழ் ஒவ்வொருமுறையும் மக்கள் தாங்க முடியாத அளவிற்கு சித்ரவதைக்கு ஆளாகும்போதும் எந்த எழுத்தாளர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தாலே போதுமானது.
இப்படிச் சொல்வதால், அவர்களை நாம் தெருவில் இறங்கிப் போராடவோ, சிறைக்கு செல்லவோ, வழக்குகளை வாங்கவோ கட்டாயப்படுத்தவில்லை. குறைந்தபட்சம் அவரவர் கதைகளில் அதை நேர்மையாக தொடர்ந்து பிரதிபலிக்கவாவது செய்திருக்கிறார்களா? பின் இவர்களை படிக்கும் நாம் மட்டும் எவ்வாறு மக்களின்பால் அக்கறை கொண்டவர்களாக இருப்போம் இல்லையா? படிப்படியாக நாமும் அவர்களைப்போலே மாறிப்போய்விடுவோம்தானே..? ஆபத்து என்பது அதுதான்.
இதைப்பற்றி பலமுறை நாம் பேசிவிட்டோம் என்பதால், இப்போது புதுமைப்பித்தன், மண்ட்டோ என்ற வெறும் இருவரை மட்டும் உதாரணத்திற்கு எடுத்துகொள்வோம்.
புதுமைப்பித்தனைப் படியுங்கள். அவர் கதைகளில் அந்தக் காலத்தில் உருவான அதிகார வர்க்கம் இருக்கும். எரியும் பனிக்காடு நாவல் பேசும் துயரத்தை துன்பக்கேனியில் அவர் முன்னெடுத்திருப்பார். பொன்னகரம், ஒப்பந்தம் போன்ற கதைகளில் அந்த காலத்தில் யாரும் கேட்க முடியாத விஷயங்கள் கேள்விகுள்ளாக்கப்பட்டிருக்கும். அப்படியே இன்னொருவரான மண்ட்டோ பக்கம் வாருங்கள். அவரைப்பற்றி சொல்ல வேண்டுமா என்ன? பிரிவினையில் மதவாதம் தின்று செரித்த மனித இறைச்சியின் கழிவையல்லவா நம் முகத்தில் விடாமல் தூக்கி வீசுகிறார்!
ஆனால் அந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி. அரசியலின் பெயரால் இதுபோன்ற துயரங்கள் நடக்கும்போதும், மனிதக் கழிவுகளை அவர்கள் வீசி எரியும்போதும்… அதைத் துடைக்கக்கூட தகுதியில்லாதவர்களும், திராணியில்லாதவர்களும், வக்கில்லாதவர்களும்தான்…
சமூகத்தில் எந்த மாதிரியான அசாதாரண சூழல் நிலவினாலும், அதன் சமகாலத்தை பேசக்கூடாது என்றும், மக்கள் பிரச்சனையை பேசும் படைப்புகள், முக்கியமாக கம்யூனிசம் பேசும் படைப்புகள் அனைத்தும் பிரச்சார இலக்கியங்கள் என்றும், எழுத்தாளனுக்கு சமூகப் பொறுப்பு அவசியமில்லை; அவன் தனித்துவமானவன் என்றும், கலை கலைக்காகவே என்றும் பேசிக்கொண்டு, மதவாத பாசிச அரசியல் கருத்துக்களோடும், போலி அறங்களோடும், அரசிற்கு, அதிகாரத்திற்கு கொஞ்சமும் வலிக்காத கதைகளாக எழுதிக் குவித்துக் கொண்டிருந்தார்கள்; குவிக்கிறார்கள்.
இதற்கு மாறாக, “இலக்கியப் படைப்பு என்பது உழைக்கும் மக்களின் ஒரு ஆயுதமாக இருக்க வேண்டும்” என்று நாம் சொன்னாலோ, இப்படிப்பட்ட நூல்களைப் புறக்கணித்தாலோ… “மக்களுக்கு அறிவு கிடையாது. வாசகன் கேள்வி கேட்கக்கூடாது. இவர்கள் முட்டாள்கள். இலக்கியத்தின் ஆழத்தை உணராதவர்கள்” என்று நம்மீது பழிபோட்டு நம் குற்ற உணர்ச்சியையே தூண்டுவார்கள்.
அதேநேரம் இப்படி இலக்கியத் தூய்மைவாதம் பேசும் இவர்களின் பின்புலம் என்பது வெறும் இலக்கியத்தை மட்டுமா சார்ந்து இருக்கிறது…? அவர்களின் எழுத்துக்களும் பாசிசம், மதவாதம், பின்நவீனத்துவம், அடையாள அரசியல் போன்ற கழிசடை அரசியல்களை மையமாகக் கொண்டுதானே இயங்குகிறது? ஏதோ ஒரு வகையில் இந்தப் புரிதல் இருப்பதினால்தான் நண்பர்கள் இலக்கிய நூல்களின் பரிந்துரைகள் கேட்கும்போது எனக்கு எப்போதும் அந்தக் கேள்வி எழுகிறது.
படிக்க :
நூல் அறிமுகம் : லெனின் மார்க்சை எவ்வாறு பயின்றார் ?
மார்க்ஸ் – எங்கெல்ஸ் : இணைபிரியா இரட்டையர்கள் !
இந்த இடத்தில்தான், இலக்கியம் என்பதை கலகம் செய்யத் துணிந்து விட்டவனின் ஆயுதம் என்று மக்சிம் கார்க்கி சொன்னதையும், ஒரு இலக்கியப் படைப்பு என்பது வரலாற்று சக்கரத்தை ஒருபோதும் பின்நோக்கி இழுக்கக்கூடாது, அது அதிகாரத்திற்கு எந்த நிலையிலும் துணை போகக்கூடாது, இலக்கியம் என்பது எப்போதும் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒன்று கிடையாது; அப்படி போதிப்பவர்களை எள்ளி நகையாட வேண்டும் என்பதையும் முற்று முழுவதுமாக ஏற்கிறேன்.
அந்த வகையில்…
1. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
2. கூலியுழைப்பும் மூலதனமும் – மார்க்ஸ்
3. குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் – எங்கெல்ஸ்
4. அரசும் புரட்சியும் – லெனின்
5. மார்க்சியம், தேசிய இனப் பிரச்சனை மற்றும் மொழியியல் (கட்டுரைகள்) – ஸ்டாலின்
6. முரண்பாடு பற்றி – மாவோ
என இந்த ஆறு நூல்களையும்… தொடக்க நிலையில் உள்ள ஒருவர் மக்களையும், சமூகத்தையும், இலக்கியத்தையும், அரசியலையும் புரிந்துகொள்ள கண்டிப்பாக பயில வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை, எனக்கு மாபெரும் இலக்கிய நூல்கள் என்பது இந்த ஐவர் எழுதிய அனைத்து நூல்களும்தான். இவற்றுக்கு பின்தான் மற்ற அனைத்தும்.
முகநூலில் : பாவெல் சக்தி

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க