சென்னையின் அதிகாலை விடியலில் எங்கு பார்த்தாலும் குப்பைகள் நிறைந்திருக்கும். அவை அனைத்தும் நம் வீட்டுக்குப்பைகள் என்பதை மறந்து அவ்வழியாக கடந்து செல்லும்பொழுது மூக்கைப் பொத்திக்கொண்டு நகர்வோம். அவசர வேலையாக செல்லும்பொழுது ட்ராபிக்கில் மாட்டிக்கொண்டு தவிக்கும் அவஸ்தையைவிட குப்பை வண்டிகளை கடக்கும்போது அவஸ்தையாக உணருவோம். இவற்றையெல்லாம் ஒரு நிமிட நேரத்திற்கே நாகரிக மனிதர்களாகிய நம்மால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. ஆனால் தினந்தோறும் அந்த குப்பைகளோடு வாழும் மனிதர்களைப் பற்றி நாம் ஒருகணமும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம்.

ஒரு மனிதனை பற்றி நாம் எவ்வாறு மதிப்பிடுகிறோம் என்பதிலிருந்துதான் அவர்களை உதாசினப்படுத்துவதும், அவர்கள் பிரச்சனைக்கு முகம் கொடுப்பதும் இருக்கும் என்பது இந்த சமூகம் கட்டமைத்திருக்கும் பொதுப்புத்தி. அதனால்தான் துப்புரவுத் தொழிலாளியின் பிரச்சனைகளை நாம் கண்டுகொள்ள மறுக்கிறோம்.

சென்னையில் துப்புரவு தொழிலாளிகள் போராட்டம், உண்ணாவிரதம் என அன்றாடம் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவை எல்லாம் நமக்கு கடந்து போகும் செய்திகளாகவும், பத்திரிக்கைகளுக்கு பெட்டி செய்தியாகின்றன.  ஆனால் ஒருநாள் சென்னை குப்பை மேடாக மாறினால் அது தலைப்புச் செய்தியாகிவிடுகிறது.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை.

துப்புரவு தொழிலாளர்களின் உரிமை மறுக்கப்படுவது, அவர்களுக்கான ஊதியம், பணிப்பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு மூன்றாம்தர குடிமக்களாக நடத்தப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் துப்புரவு உள்ளிட்ட பல்வேறு பணிகளை தனியாருக்கு கொடுக்கும் முடிவை  மாநகராட்சி நிர்வாகம் எடுத்து அதை அமல்படுத்தவும் உள்ளது. இந்த தொழிலாளர் விரோத, மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்து மாநகராட்சியின் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து தனியார்மய எதிர்ப்பு கூட்டமைப்பை ஏற்படுத்தி போராடி வருகின்றன.

இந்த மாநகராட்சியின் தனியார்மய மோசடி பற்றி சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் சீனுவாசலு கூறியது. “சென்னை மாநகராட்சி கடந்த  2009-ல் அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டு கடந்த 2011-ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதற்கு முன்பிருந்தே இந்த மாநகராட்சி 350 வருடங்களுக்கு மேலாக சென்னை வாழ் மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வந்தது. இதனை இந்தியாவின் மிகப்பழமையான மாநகராட்சி என்றும் சொல்கிறார்கள். அப்பேற்பட்ட பெருமை வாய்ந்த இந்த மாநகராட்சியின் பல்வேறு துறைகளைத்தான் இப்பொழுது தனியாருக்கு கொடுக்க முடிவு செய்து டெண்டர் அறிவித்து இருக்கிறார்கள்.

சென்னை மாநகராட்சி விரிவாக்கதிற்கு முன்பு 10 மண்டலங்கள், 150 டிவிசன்களாக இருந்தது. பெருநகர மாநகராட்சியாக விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு 15 மண்டலங்களாகவும் 200 டிவிசன்களாகவும் உருவாக்கினார்கள். மொத்தம் 426 ச.கி.மீ பரப்பளவு  மாநகராட்சியில் உள்ளது. இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருக்கிறார்கள். நான்காயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன.

இதில் பல்வேறு துறைகள் இருந்தாலும் பிரதானமாக 7 துறைகள் உள்ளன. சாலை, பூங்கா, மின்சாரம், சுகாதாரம், இயந்திர பொறியியல் துறை, திடக்கழிவு மேலாண்மைத் துறை உள்ளிட்டவையாகும்.  இதன் கீழ் பல்வேறு துணை துறைகள் இயங்கி வருகின்றன. இதில் சாலை, பூங்கா, மலேரியா ஒழிப்புத் துறை உள்ளிட்டவையெல்லாம் ஏற்கனவே தனியாருக்கு கொடுத்து விட்டனர். முதலில் ஒரு குறிப்பிட்ட பணியை மட்டும்தான் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுத்து வந்தனர். இப்போது, அனைத்து பணிகளையும் தனியாருக்கு கொடுத்துவிட்டனர்.

மாநகராட்சியில் மிக முக்கியமானது திடக்கழிவு மேலாண்மைத்துறைதான். இதுதான் மாநகராட்சியின் உயிர்நாடியாக விளங்கி வருகிறது. அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் வேலை செய்யக்கூடிய துறை இந்த திடக்கழிவு மேலாண்மைத்துறை. தற்பொழுது பல்வேறு முறைகேடுகள் நடந்தேறி வருவது மட்டுமல்லாமல் இத்துறையையே மொத்தமாக தனியாருக்கு கொடுக்கவும் துணிந்துவிட்டார்கள்.

1996-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி எல்லா துறைகளையும் தனியார்மயமாக்க வேண்டும் என்ற அடிப்படையில் உலக அளவிலான ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் சிங்கப்பூரின் ஓனிக்ஸ் என்ற நிறுவனத்துக்கு பழைய 6,8,10 ஆகிய மண்டலங்களை 7 ஆண்டு துப்புரவு பணி – குப்பை அள்ளுவது, வாகனப் பராமரிப்பு, உதிரி பாகங்கள் வாங்குவது  உள்ளிட்ட அனைத்தும் பணிகளும் குத்தகைக்கு விடப்பட்டது. (இந்த ஓனிக்ஸ் நிறுவனம் கனிமொழியின் கணவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது)

அதனுடைய குத்தகைக் காலம் முடிவடைந்த பிறகு 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் “நீல் மெட்டல் பனால்கா” என்ற கம்பெனிக்கு 7 ஆண்டு குத்தகைக்கு விட்டார்கள். 6,8,10 ஆகிய மண்டலங்களுடன்  மண்டலம் 3-யும் சேர்த்து கொடுத்தார்கள்.  மீதி ஆறு மண்டலங்கள் மட்டுமே மாநகராட்சி வசம் இருந்தது. இதனுடைய குத்தகை 2011 டிசம்பருடன் முடிவடைந்து விட்டது. இந்த நீல் மெட்டல் பனால்காவும் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டிய ஒரு நிறுவனம்தான். இந்நிறுவனத்திற்கு ஒரு டன் குப்பைக்கு ரூ.642 கொடுக்கப்பட்டது.

படிக்க:
சென்னையை சுத்தம் செய்யும் தொழிலாளிகளின் துயரம் !
ரிப்பன் மாளிகையில் துப்புரவு தொழிலாளர் போராட்டம் !

அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சியில் பெருநகர சென்னை மாநகராட்சியாக விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு மண்டலம் 9,10,13 ஆகிய மண்டலங்களை 2012-ம் ஆண்டு ராம்கி என்விரோ இந்துஸ்தான் லிமிடெட் என்ற  தனியார் நிறுவனம் டெண்டர் எடுத்தது. அந்நிறுவனம் நீல் மெட்டல் பனால்காவின் ஒப்பந்த தொழிலாளர்கள் 2000 பேரையும் சேர்த்து 4000 தொழிலாளிகளைக் கொண்டு துப்புரவு பணிகளை மேற்கொண்டன.

3 ஆயிரம் பெரிய குப்பைத்தொட்டிகள், 2500 சிறிய குப்பைத்தொட்டிகள்,  1500 மூன்று சக்கரவாகனங்கள், 678 காம்பெக்ட் லாரிகள், மேலும் கிரீன்வேஸ் வண்டிகள், அவசர ஊர்திகளையும் இந்நிறுவனம் பயன்படுத்த உள்ளதாக அப்பொழுது தெரிவித்தார்கள். அதெல்லாம் இப்பொழுது எந்த நிலையில் உள்ளது என்றே தெரியவில்லை.

ரிப்பன் மாளிகை முன்பாக போராடும் துப்புறவுத் தொழிலாளர்கள்.

இந்த ராம்கி நிறுவனம் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம், இ.எஸ்.ஐ., பி.எப் என்று அரசினுடைய சட்ட சலுகை எதையும் தொழிலாளர்களுக்கு கொடுக்காமல் பல்லாயிரக்கணக்கான ரூபாய் கொள்ளையடித்துள்ளது; கொழுத்து வருகிறது என்பது தினந்தோறும் பத்திரிக்கைகளில் அம்பலமாகி வருகிறது.

உதாரணமாக, சென்னை முழுவதும் நாளொன்றுக்கு 5000 டன் திடக்கழிவுகள் மேலாண்மை துறையால் களையப்படுகிறது. ராம்கியிடம் உள்ள 9,10,13 ஆகிய மண்டலங்களில் மட்டும் மூன்று டன் குப்பை எடுப்பதாக சொல்கிறது. மீதி இருக்கும் 12 மண்டலத்தில் இரண்டு டன் குப்பை மட்டுமே எடுப்பதாக  இந்திய எக்ஸ்பிரஸ் மற்றும் இந்து பத்திரிகைகள்  செய்தி வெளியிட்டிருந்தன.

ஒரு டன் குப்பை 1,886 ரூபாய் 2017 காலாண்டில் கொடுக்கப்பட்டது. ஆக மூன்று டன்னுக்கு கணக்கிட்டு கொள்ளவும். இந்த ராம்கி நிறுவனம் குப்பையை டன் கணக்கில் எடுப்பதில் தான் முன்னிலை வகிக்கிறது. தெருவை பெருக்குவது இல்லை. சுத்தமாக வைத்திருப்பது இல்லை. இவர்கள் வி.வி.ஐ.பி. போன்ற முக்கியஸ்தர்கள் ஏரியாவில் மட்டும்  வேலை செய்கிறார்கள். இந்த மூன்று  மண்டலங்களில் VVIP வாழும் பகுதிகளுக்கு நீங்கள் சென்று பார்த்தால் தெரியும்.  முக்கியமாக வாகனங்களை முறையாக பராமரிப்பது இல்லை. அதற்காக ஒதுக்கப்படும் தொகை என்ன ஆகிறது என்றே தெரியவில்லை.

திடக்கழிவு மேலாண்மைத்துறையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக மாநராட்சியின் தணிக்கை குழுவும் தெரியப்படுத்தியுள்ளது. மேலும் பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இவை எதையும் கார்ப்பரேசன் கண்டுகொள்வதே இல்லை.

சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் சீனுவாசலு

மாநகராட்சியில் நடக்கும் இந்த பல்வேறு முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் 2016-லிருந்தே மொத்த மாநகராட்சியையும் தனியாருக்கு கொடுக்கும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த அடிப்படையில்தான்  தொழிலாளிக்கு முறையாக கொடுக்க வேண்டிய சம்பளம் கொடுப்பதில்லை. 2017 டிசம்பர் மாதம் ரிப்பன் மாளிகையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தினோம். அதற்கு முன்னதாக 2017, அக்டோபர் 11-ம் தேதி ஜி.ஓ (டி2) எண். 62 எனப்படும் குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் அரசாணையை தொழிலாளர் துறை ஆணையம் மூலம் பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தொழிலாளிக்கு ரூ.602.25 கொடுக்க வேண்டும். ஆனால் இவர்கள் வெறும் 362 ரூபாய் மட்டுமே கொடுக்கிறார்கள்.

இந்த ஊதியம் என்பது ஆண்டுக்கு ஒரு முறை மாநகராட்சி ஆணையர் அறிவிக்கும்  ஊதியம்தான்.  மேலும் பணிப்பாதுகாப்பு உபகரணங்கள் எதுவுமே கொடுப்பதில்லை. அதனை எல்லாம் தொழிலாளியே தன் சொந்த செலவில் வாங்கி கொள்ள வேண்டும்.  இது போக தினந்தோறும் வேலை வேண்டுமானால் மாதம் ரூ.1500 – ரூ.3000 வரை மேலே உள்ளவர்களுக்கு இலஞ்சம் கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால்தான் குறைந்தபட்சம் 26 நாள் வேலை கிடைக்கும். இதுதான் மாநகராட்சி மற்றும் தொழிலாளியின் நிலை.

இந்த நிலையில் அனைத்து துறையையும் தனியாருக்கு விடுவதற்கு கடந்த 8-ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் ஒரு டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டெண்டரில் பங்கேற்க பத்து கோடி டெபாசிட் தொகையும் மூன்று லட்சம் உள்நுழைவு கட்டணமும் கட்ட வேண்டும் என்று அறிவிப்பு வந்துள்ளது.

1,2,3,7, ஆகிய மணடலங்களுக்கு 2922 நாட்கள் அதாவது எட்டு வருடம் இரண்டு நாட்களுக்கு 744 கோடியே 25 லட்சம் செலவிடப்போவதாகவும்,  அதேபோல 11,12,14,15 ஆகிய மண்டலங்களுக்கு எட்டு வருடத்திற்கு ரூ.801 கோடியே 25 லட்சம் செலவிடப்போவதாகவும்  பத்திரிக்கை வாயிலாக தெரியவந்துள்ளது. மொத்தமாக ரூ. 1500 கோடிக்கு மேல் தனியாரிடம் ஒப்படைக்கும் வேலையை விரைவாக செய்து வருகிறது அரசு.

மின்துறை – சாலை – பூங்கா என அனைத்தும் ஏற்கனவே தனியாரிடம் ஒப்படைத்து தொழிலாளிகளுக்கு ரூ.160, 200, 300 கூலி கொடுத்து அத்துக்கூலிக்கு சுரண்டி வருகிறது. மலேரியா – காலரா என்று நோய் தாக்கும் காலங்களில்  3 மாதம், 6 மாதம் என்று தற்காலிகமாக வேலைக்கு ஆட்களை வைத்துக் கொண்டு சுரண்டுவது, இயந்திர பொறியியல் துறை, வாகனத்துறைகளில் எல்லாம் ஒப்பந்த தொழிலாளர்களை நியமித்து அவர்களையும் சுரண்டுவது ஒருபுறம்.

மற்றொருபுறம் குப்பைகளை கிரீன் தொட்டிக்குள்  அடைக்கும் திட்டம், மக்கும் குப்பை – மக்காத குப்பை, விரிவடைந்த சாலை திட்டம், ஸ்டாம் வாட்டர் திட்டம் என பல புதிய புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி அனைத்தும் தோல்வியில் முடிந்து விட்டது.

அதேபோல திருவி.க. நகர் பூங்கா, செனாய் நகர் பூங்கா புதுப்பித்தல் என்கிற பெயரில் பல கோடி இழப்பு எற்படுத்தினார்கள். தெருக்களில் சோடியம் விளக்கை அகற்றிவிட்டு  எல்.இ.டி. விளக்காக மாற்றும் திட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள்.  இதன் மூலம் வேலை இழப்புதான் ஏற்படும். மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை எரியும்படி ஆட்டோமேட்டிக் திட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். இதற்கு ஆள் போட்டு பார்த்துக்கொள்ளத் தேவையே இல்லை.

சுடுகாடுகளை பாரமரிப்பது மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவது தொடர்பான பணியையும் தனியாருக்கு கொடுத்துவிட்டனர். சுகாதாரத் துறையிலும் இதே நிலைமைதான். ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஓராண்டு ஒப்பந்தம் அடிப்படையில் தனியாருக்கு கொடுத்து விடுகின்றனர். அங்கு பணிபுரியும் ஊழியருக்கு சம்பளம், அதன் பராமரிப்பு செலவு என்று அனைத்து செலவுகளையும் அந்த ஒப்பந்தம் எடுத்தவர்களிடமே ஒப்படைத்து விடுவது என்று இருக்கிறது.

மழைக்காலத்தில் தேங்கும் தண்ணீரை இறைப்பதற்கு கூட ஆளும் கட்சியினரிடம் டெண்டர் விடுவது, சென்னை ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் கேபிள் ஒயர்  எல்லாம் சாலைக்கு அடியிலேயே போடுவதாக சொல்லி டெண்டர் மோசடி. எந்த ஒரு திட்டத்தையும் சிறப்பு திட்டமாக உயர்த்தி நிதியை அதிகரித்து கொள்ளையைடிப்பது என்பது தொடர்கதையாகி வருகிறது.

இவர்கள் மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் தீவிரமாக இருக்கிறார்கள். தூய்மை இந்தியா, ஸ்மார்ட் சிட்டி என்ற இத்திட்டம் மூலம் சென்னையை ஒரு முன்னுதாரணமாக ஆக்கப் போகிறார்களாம். இதுபோன்ற திட்டத்தை ஹைதராபாத்- நாசிக் போன்ற இடத்தில் அமல்படுத்தி இருக்கிறார்கள். அங்கே சென்று நாங்கள் பார்வையிட்டிருக்கிறோம். அங்கே குப்பையை கிலோ கணக்கில்தான் எடுக்கிறார்கள். அதைத்தான் கடந்த ஒரு வருடமாக திருவொற்றியூரில் சோதனைமுறையில் செயல்படுத்திப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னையில் இருக்கும் மால்களில் வரும் குப்பைகளை டன் கணக்கில் எடுக்கிறார்கள். அந்த குப்பைகளை எடுக்க பணம் வாங்கிக்கொள்கிறது ராம்கி நிறுவனம். இப்பொழுது சென்னை மாநகராட்சியே 9 பிளாட்டுக்கு மேலே உள்ள இடங்களில் குப்பைகளை எடுக்க பணம் கட்ட வேண்டும் என நோட்டீசு கொடுத்திருக்கிறது. அனைத்தையும் தனியாரின் கொள்ளைக்காக திறந்து விட்டிருக்கிறது.

இந்த டெண்டர்களில் அனைத்தும் பகாசூர கம்பெனிகள்தான் பங்கேற்க முடியும். 40 சதம் ஷேர் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் இதற்குள்ளேயே வர முடியும். யாரோ ஒருவன் 10-10 க்கு ரூமில் அமர்ந்து கொண்டு இந்த டெண்டரை மட்டும் பெறுகிறான். அவன் யாரென்று கூட நமக்குத் தெரியாது. அவனை பார்க்கக் கூட முடியாது. ஆனால் அவனிடம் வேலை செய்வோம். அவனுக்கு டன் கணக்கில் குப்பை கிடைத்தாலே போதும். அந்த அளவிற்கு குப்பைகளில் பணம் கொட்டிக் கிடக்கிறது.

சில இடங்களில் எப்படி தெருக்களை சுத்தம் செய்கிறார்கள் என்றால் ஹைதராபாத்தில் இருந்து குடும்பத்துடன் ஆட்களை கொண்டு வந்து ஒரு ஏரியாவை ஒதுக்கி கொடுக்கிறார்கள். அங்கு இருப்பவர்களிடம் காசு கேட்க கூடாது. அங்கு இருக்கும் குப்பைகளை பொறுக்கி அதில் கிடைக்கும் பிளாஸ்டிக் பொருட்களை விற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு மாதம் 6000 சம்பளம். ரேசன் அரிசி வாங்கி கொடுத்து விடுவார்கள். தெருவில் சமைத்து சாப்பிட்டு வாழ்க்கை நடத்திக் கொள்ள வேண்டும். இப்படி ஒரு கொத்தடிமை முறையை இந்நிறுவனங்கள் புகுத்தி வருகின்றன.

படிக்க:
ஸ்வச் பாரத் : வெறும் வாய்ச்சவடாலும் அவமானப்படுத்துதலுமே – காணொளி !
சினிமாவிற்கு 10 கோடி – துப்புரவுத் தொழிலாளிக்கு ரூ 330

சிங்கார சென்னை என்று சொல்லிக்கொண்டு சென்னையின் குடிசை வாழ் மக்களையும், தெருவோரங்களில் வசிக்கும்  மக்களையும் நகர்ப்புறங்களுக்கு அப்பால் விரட்டி குடிசை இல்லாத நகரமாக காட்ட முயற்சிக்கிறார்களோ, அதுபோல இந்தத் தொழிலில் ஈடுபடும் ஆதி திராவிட- ஆதி ஆந்திரர்களையும் அழிக்கப் பார்க்கிறார்கள்.

சென்னையின் பல இடங்களில், தெருக்களில் மலம் கழிக்கிறார்கள். அதனை எல்லாம் அகற்றுவது இந்த தொழிலாளர்கள் தான். இவர்களுக்கு ஸ்கேவஞ்சர்- ஸ்வீப்பர் என்று ஆங்கிலப் பெயர்களை வைத்து கையால் மலம் அள்ளும் தொழிலாளி என்ற கேட்டகிரியிலும் கொண்டு வராமல், நிரந்தர தொழிலாளியாகவும் கொண்டு வராமல் தினக்கூலியாக சுரண்டி வருகிறது. இத்தொழிலாளர்கள் மீது நவீனத் தீண்டாமையை கடைபிடித்து வருகிறார்கள்.

சொற்ப கூலிக்கு வேலை செய்யும் துப்புறவுத் தொழிலாளிகளின் குடியிருப்புக்கள். (திருப்பூர்)

ஒரு குடும்பத்தில் இருந்து கணவன் – மனைவி இரண்டு பேரும் அதிகாலையே துப்புரவு வேலைக்கு வந்து விடுவதால் இவர்களின் குழந்தைகள் மீது எந்த கண்காணிப்பும் இருப்பதில்லை. அந்த பிள்ளைகள் என்ன ஆனார்கள், சாப்பிட்டார்களா? இலையா? பள்ளிகூடம் போகிறார்களா? இல்லையா? என்பது கூட தெரியாது. இப்படிபட்ட சூழலில் பிள்ளைகளின் எதிர்காலமும் இந்த தொழிலை நோக்கியே தள்ளப்படுகிறது என்பது கொடுமையிலும் கொடுமை.

இங்கு வேலை செய்யும் தொழிலாளி ஐம்பத்தி நாலு ரூபாய் கூலி வாங்குவதில் இருந்து வேலை செய்து வருகிறான்.  இந்த தொழிலாளிகள்தான் ஒரு நாளைக்கு 500 மீட்டர் பெருக்க வேண்டும். 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தை பெருக்க குறைந்த பட்சம் 30,000 தொழிலாளர்கள் தேவை. ஆனால் மிகக் குறைந்த ஆட்களைக் கொண்டு,  மொத்த சென்னையையும் சுத்தப்படுத்துவது என்பது கொடூரமான மனித உழைப்புச் சுரண்டல் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

இதனை எதிர்த்து தான் தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம். அனைத்து துறைகளையும் தனியாரிடம் ஒப்படைத்து விட்டு தொழிலாளர்களை அத்துக் கூலிக்கு வைத்து உழைப்பை சுரண்ட திட்டமிட்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இனி குப்பை கொடுக்கும் மக்களிடமிருந்தும் பணத்தை சுரண்டவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இது வெறும் துப்புரவு தொழிலாளியின் பிரச்சினை மட்டும் இல்லை. தினந்தோறும் சென்னைக்கு வந்து போவதாக சொல்லப்படும் ஒன்றரை கோடி மக்களின் சுகாதார நலன் சார்ந்த பிரச்சினை என்றுதான் நாங்கள் பார்க்கிறோம். அதனை காப்பாற்ற இடைவிடாமல் போராட்டத்தைத் தொடருவோம்” என்றார்.

அ.தி.மு.க. என்ற கொள்ளைக் கும்பலும், தனியார்மயமும் இணைந்து உருவாக்கி இருக்கும் மிகப்பெரிய இமாலய சாதனை ஊழல்… லஞ்சம்.. கொள்ளை… உழைப்புச் சுரண்டல்.  இனியும் அமைதி காத்தால் சந்தி சிரித்து விடும் என்று சென்னை உயர்நீதி மன்றமும் மாநகராட்சியின் ஊழலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

ஹைகோர்ட்டாவது… ம!$?ராவது என்று சொன்ன எச்ச ராஜாவையே கண்டு கொள்ளாத நீதிமன்றம்தான் இந்த தனியார்மய கொள்ளையர்களை தண்டிக்கப்போகிறதா என்ன?

சமூக ரீதியான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் மட்டுமில்லாமல், தனியார்மய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் துப்புரவு தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு இணைந்து போராடினால் மட்டுமே இந்த ஒடுக்குமுறையிலிருந்து அவர்களை விடுவிக்க முடியும். நமது சுகாதாரத்தையும் பாதுகாத்துக் கொள்ள முடியும் !

வினவு களச் செய்தியாளர்

குறிப்பு: சமீப காலமாக, “காலியிடத்தில் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்ற பதாகையை காலியிடத்தில் பார்த்திருப்போம். அவை நகரத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இல்லை. இனி வரும் காலத்தில் குப்பையை தனியாரிடம் கொடுக்க வேண்டும். அதோடு சேர்த்து அதற்கான பணத்தையும் கொடுக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் வீட்டுக் குப்பை வாங்கப்பட மாட்டாது. நீங்கள் காலியிடத்திலும் தூக்கி வீச முடியாது”. அதற்கான ஒரு முன்னோட்டம்தான் என்பதை புரிந்து கொள்ளவும்.

2 மறுமொழிகள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க