சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணிகள் அனைத்தையும் தனியாருக்குக் கொடுக்க முடிவெடுத்துள்ளது மாநகராட்சி நிர்வாகம். இதனைக் கண்டித்து இன்று முதல் (27.11.2018) வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருக்கின்றனர் துப்புரவுத் தொழிலாளர்கள்.

சென்னை மாநகராட்சியில் உள்ள திடக்கழிவு மேலாண்மைத்துறையில் துப்புரவுப் பணியை மண்டலம் 3,6,8,9,10,13 ஆகியவற்றை ராம்கி  என்விரோ இந்துஸ்தான் லிமிடெட் என்ற தனியார் கொள்ளை நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மீதமிருக்கும் எட்டு மண்டலங்களையும் தனியாருக்கு விடுவதற்கான டெண்டரை கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி வெளியிட்டது.  இந்த எட்டு மண்டலங்களுக்கும் சுமார் 8 வருடம் இரண்டு நாட்கள், அதாவது 2922 நாட்களுக்கு  ரூ.1546 கோடி வரை ஒதுக்கீடு செய்துள்ளது. சுருக்கமாக சொன்னால் தனியாருக்கு கொடுக்க வழிவகை செய்திருக்கிறது.

சென்னை மாகராட்சியில் மட்டுமல்ல நாடெங்கிலும் பல மாநகராட்சிகளை ‘குத்தகைக்கு’ எடுத்திருக்கிறது, ராம்கி என்விரோ.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 30 தொழிற்சங்கங்கள் இணைந்து  ஆகஸ்ட் 26-ம் தேதி ரிப்பன் மாளிகை முற்றுகைப் போராட்டமும்,  செப்டம்பமர் 11-ம் தேதி கோட்டை முற்றுகைப் போராட்டமும் நடத்தினர். அதனைத் தொடர்ந்து உள்ளாட்சித்துறை செயலருடன் நடந்த பேச்சு வார்த்தையில் தனியாருக்கு கொடுப்பதை கைவிடுவதாக அறிவித்ததால் தொழிலாளர்களும் போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைத்தனர்.

இருந்தாலும் ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா? தனியாருக்கு டெண்டர் விடுவதை கொல்லைப்புறமாக அமல்படுத்தும் முயற்சியை எடுத்து வந்துள்ளது மாநகராட்சி.

அதாவது, இந்த எட்டு மண்டலங்களிலும் துப்புரவு பணியை மேற்பார்வை செய்யவும், கண்காணிக்கவும் ஒரு அமைப்பைத் தேர்ந்தெடுக்க தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி நிறுவனம் மூலம் கடந்த மாதம் 26-ம் தேதி டெண்டர் கோரியுள்ளது. இந்த அறிவிப்பு தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் சீனுவாசலு, “மாநகராட்சியின் இந்த செயல் தொடர்ந்து தொழிலாளர்களை மன உளைச்சலுக்கு  ஆளாக்குகிறது. ஒவ்வொரு முறையும் போராட்டத்தின் போது வாக்குறுதியை கொடுத்து விட்டு அதனை மீறுகிறது. இந்த அலட்சியப் போக்கை கண்டித்தும், தொழிலாளர்கள் விரோத நடவடிக்கையை கைவிடக் கோரியும் கடந்த 12-ம் தேதி  மாநகராட்சி துணை ஆணையரிடம் மனு அளித்தோம். அவரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. தொடர்ந்து துணை முதல்வர் பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினோம். அவரோ “பார்க்கலாம்” என்ற ஒரு வார்த்தையில் முடித்துக் கொண்டார்.  பிறகு  ஆணையரையும், முதல்வரையும் சந்திக்க முயற்சித்தோம். தேதி கிடைக்கவில்லை.

வேறுவழியில்லாமல் 16-ம் தேதி நிர்வாகிகள் மட்டும் முதல்வர் வீட்டுக்கு சென்றோம்.  அப்பொழுது முதல்வர் இல்லை. அவருடைய உதவியாளர் மட்டுமே இருந்தார். அவரிடம் கேட்டதற்கு, “முதல்வரை சந்திக்க முடியாது. அவர் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார்” என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்.

உண்மையில் எனக்கு இந்த அதிகாரிகளை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இவர்கள் அனைவரும் தனியார்மயத்திற்கு ஆதரவானவர்கள் என்பது தெரியும்.  இருப்பினும் கூட்டமைப்பைச் சார்ந்த தொழிலாளர்கள் கேட்டுக் கொண்டதால் அவர்களை சந்திக்க ஒத்துக்கொண்டு சென்றோம். ஆனால் அதிகாரிகளின் நடவடிக்கை தொழிலாளர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையின்மையை தோற்றுவித்திருக்கிறது இதனை தொழிலாளர்கள் நடைமுறையில் உணர்ந்திருக்கிறார்கள். உணர்த்தியிருக்கிறார்கள்.

எவ்வளவுதான் அலைய முடியும்..? எல்லா முயற்சிகளையும் எடுத்துப் பார்த்து விட்டோம். வேறு வழி இல்லாமல் கடந்த 20-ம் தேதி மண்டல ஆர்ப்பாட்டமும், 22-ம் தேதி ரிப்பன் மாளிகையில் உண்ணாவிரதமும் இருந்தோம். ஆனால் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட பாதிப்பேரை போலீசு கைது செய்து விட்டது. கைது செய்தவர்களை விடுவிக்கக்கோரி வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

படிக்க:
சென்னை மாநகராட்சி : சுடுகாடு முதல் சுகாதாரம் வரை தனியார்மயம் !
கஜா புயல் : தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்புமிக்க உழைப்பு

அப்பொழுது சுகாதாரத்துறை துணை ஆணையர் பேச்சு வார்த்தைக்கு அழைத்து பேசினார். அப்பொழுதும் எங்கள் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சரி நீங்கள் ஆணையரையாவது பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றோம். அதனடிப்படையில் இரண்டு நாள்  அவகாசம் கேட்டு 24-ம் தேதி சனிக்கிழமை ஆணையரை சந்திக்க ஏற்பாடு செய்தனர்.

ஆணையரோ, “அரசாங்கம் ஒரு முடிவு எடுத்து விட்டது. அதில் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. தயவு செய்து தொழிற்சங்கம் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என்றார். சரி நீங்கள் சொல்வது இருக்கட்டும், ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியில் இருந்து நீக்க மாட்டோம் என்பதற்காவது உத்தரவாதம் தாருங்கள் என்றோம். அதற்கு அவர் ஒன்றும் பேசவில்லை.

ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டத்தில் தொழிலாளர்கள். (கோப்புப் படம்)

சம்பள உயர்வு, பதவி உயர்வு எதுவும் வேண்டாம். இருக்கும் வேலைக்கு உத்திரவாதம், பணிப்பாதுகாப்பு கோரும் அளவிற்கு நாங்கள் வந்துவிட்டோம். ஆனால் இதற்கும் நிர்வாகம் சம்மதிக்கவில்லை. தனியாரிடம் போனால் ஒப்பந்த தொழிலாளர்கள் ,9000-க்கும் மேற்பட்டோர் வேலையில் நீடிப்பார்கள் என்று சொல்ல முடியாது.  வேறு என்ன செய்ய முடியும்? இதுவரை இந்த அரசு எந்த விதத்திலும் எங்களுக்கு ஆதரவான நடவடிக்கையை எடுக்கவில்லை என்பதால் நாளை முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தை நடத்த உள்ளோம்.

அரசியல் கட்சிகளின் ஆதரவு எந்த அளவில் இருக்கிறது.. இது குறித்து எந்த கட்சியும் உங்களுக்கு ஆதரவாக ஒரு அறிக்கை கூட விடவில்லையே?

உண்மைதான். அதனால்தான் எங்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் கடந்த மாதம் 28- ம் தேதி கலந்து ஆலோசித்து அனைத்து கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்பது என்று முடிவெடுத்து அனைவரையும் பார்த்தோம். அவர்களும் ஆதரவு தருவதாகச் சொன்னார்கள். ஆனால் தி.மு.க.வை மட்டும் சந்திக்கவில்லை. அவர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பில் இருந்து விலகி விட்டார்கள்.

காரணம் என்னவென்று கேட்டோம். “அடுத்த ஆட்சி தி.மு.க. தான். அதனால் கொஞ்சம்  நெளிவு சுளிவோடு நடந்து கொள்ளுங்கள்” என்று அதிகாரி சொல்வதாக சொல்கிறார்கள். ஆனால் அதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. வேறு ஏதோ காரணம் இருப்பதாக நினைக்கிறோம். அது என்னவென்று தெரியவில்லை.

அடுத்த ஆட்சி தி.மு.க.தான். நாங்கள் வந்தால் பார்த்துகொள்வோம் என்றீர்களே, ஆனால் 3 மண்டலம் தனியாருக்கு விட்டு விட்டார்களே அதற்கு என்ன சொல்ல போகிறீர்கள் என்று கேட்டால்., எந்தப் பதிலும் இல்லை.

இவர்கள் கூட்டமைப்பிற்கு வரும்போதே ஆர்வமில்லாமல்தான் வந்தார்கள். இருப்பினும் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தோம். இருந்தும் அவர்கள் விலகியது ஏன் என்று தெரியவிலை. அ.தி.மு.க. செய்ய வேண்டியதை தி.மு.க. செய்கிறது. கூட்டமைப்பில் இருந்து அ.தி.மு.க. தொழிற்சங்கம் விலகாமல் போராட்டத்தில் இருந்து வருவது ஆச்சர்யமளிக்கிறது.

தொழிலாளர்களின் மனநிலை எப்படி இருக்கிறது?

தொழிலாளர்கள் மனம் தளர்ந்து விடக்கூடாது என்று அனைத்து முயற்சியையும் எடுத்து வருகிறோம். அவர்களும் 80% வரை உறுதியாக இருக்கிறார்கள். நிர்வாகமும் அதனை ஒடுக்க பல வேலைகளை செய்து வருகிறது. விடுப்பு எடுக்கக் கூடாது என்று எச்சரிக்கிறது. பார்க்கலாம்! எப்படி இருந்தாலும் வேலை நிறுத்தம் நடக்கும்.

ஒருவேளை இந்த முறையும் உங்கள் போராட்டம் தோல்வி அடைந்தால் என்ன செய்வீர்கள்?

தோல்வி அடைந்தால் எங்கள் போராட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதைத் தவிர வேறுவழி இல்லை. நிச்சயம் அதனை நோக்கி எங்கள் போராட்டம் நகரும். அதற்கான சூழலும் கனிந்து வருகிறது.

வினவு களச் செய்தியாளர் ஆம்..! துப்புரவு பணியாளர்கள் மீதான அடக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பணிப் பாதுகாப்பின்மை, ஒப்பந்த முறை, அற்பகூலிக்கு அவர்களின் உழைப்பை சுரண்டுவது. டெங்கு மற்றும் பேரிடர் காலங்களில் விடுப்பு இல்லாமல் 24 மணி நேரமும் வேலை செய்யச்சொல்லி அவர்களை துன்புறுத்துவது என்று அரசின் அடக்குமுறை ஒருபுறமென்றால், சிவில் சமூகத்தின் புறக்கணிப்பும் அவர்களை உளவியல் ரீதியாக தாக்குகிறது. இவர்களது போராட்டத்திற்கு ஆதரவளிப்பது நமது கடமை!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க