ஜா புயல் டெல்டா மாவட்டங்களில் நடத்திய கோரத்தாண்டவத்தில் பல இலட்சக்கணக்கான மரங்கள் வீழ்ந்துள்ளன, மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. இயல்பு வாழ்க்கை என்ற பேச்சுக்கே அங்கு இடமில்லை. இந்த நிலையில்  இவற்றுடன் பல ஆயிரம் டன் குப்பைகளும் குவிந்து கிடக்கின்றன. இவற்றையெல்லாம் சரி செய்ய பல நாட்களாகும்.

இந்நிலையில் அதிராம்பட்டினம் பகுதியில் தூய்மைப்பணிகளில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களை சந்தித்தோம் அவர்களிடம் பேசச்சென்றபோது அப்பணிகளை மேற்பார்வையிடும் செயல் அதிகாரி சார்லஸ் நம்மை அழைத்து நிலைமைகளை விளக்க ஆரம்பித்தார்.

“இங்கு தூய்மைப் பணிகளில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்கள் அனைவரும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து இங்கு வந்துள்ளனர். மொத்தம் 100 பேர். அவர்களில் ஐம்பது பேர் மட்டும் இங்கு வேலை செய்கின்றனர். மீதி ஐம்பதுபேர் தலைஞாயிறு பகுதியில் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சார்லஸ். (வலது ஓரத்தில்)

இப்பகுதியைப் பொருத்தவரை தூய்மைப் பணியானது மிகவும் சிரமமாக உள்ளது. எங்கள் பகுதியில் ஒக்கி புயலின் போது கூட இவ்வளவு சிரமம் இல்லை. இங்கு குப்பைகளை அகற்றுவது என்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது. அதிலும் குறிப்பாக மரங்களை அகற்றுவது பெரும்பாடாக உள்ளது. இருந்தாலும் தொழிலாளிகள் விருப்பப்பூர்வமாக வேலை செய்கின்றனர். தொழிலாளிகள் அனைவரும் இங்கு அருகில் உள்ள மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது. ” எனக் கூறினார்.

இந்த பணிகளுக்காக தொழிலாளிகளுக்கு ஏதேனும் சிறப்பு ஊதியம் வழங்கப்படுகிறதா?

“வழக்கமான சம்பளம் தான் சிறப்பு ஊதியம் எதுவும் கிடையாது. தொழிலாளிகள் தன்னார்வமாக ஒரு சேவை மனப்பான்மையாகத்தான் செய்து வருகின்றனர்.”

இங்கு தூய்மைப் பணிகள் எப்படி நடக்கிறது. இதில் நீங்கள் மட்டும் தான் ஈடுபட்டிருக்கிறீர்களா?

“வேலைகள் பொருத்தவரை நான்கு நான்கு நபர்களாக வேலை செய்கின்றனர். இரண்டு தொழிலாளிகளிடம் மரம் அறுக்கும் எந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மற்றவர்கள் வருவதற்கு முன்னரே போய் அங்குள்ள மரங்களை வெட்டி விட்டு அடுத்த இடத்திற்கு சென்று அங்கு மீண்டும் மரங்களை அறுக்கும் பணிகளைத் தொடர்வார்கள். எங்களுடன் ஜமாத்தில் இருந்து வரும் தன்னார்வலர்களும் கலந்து கொண்டு வேலைகளைச் செய்கின்றனர்.”

அதே போல திருத்துறைப்பூண்டி செல்லக்கூடிய வழியில் உள்ள நாச்சிகுளம் ஊர் தொடங்கும் பகுதியில் குமாரிடம் பேசினோம்.

“நாங்க கன்னியாகுமரி மாவட்டம் கடையம் பேரூராட்சியில் இருந்து இங்க வேலைக்காக வந்திருக்கோம். எங்க டிஸ்ட்ரிக்ல இருந்து ஒவ்வொரு பேரூராட்சி ஊராட்சியில இருந்து ரெண்டு பேருன்னு வந்திருக்கோம். இத ஒரு சேவை மாதிரிதான் இங்க வந்து வேலை பாக்குறோம். எங்க ஊர்ல ஒக்கி புயல் வந்தபோது பல ஊர்கள்ல இருந்து ஜனங்க வந்து எங்களுக்கு உதவி பண்ணாங்க அதுமாதிரிதான் இதுவும். இங்க வேலைகள் ரொம்ப இருக்குங்க. ரொம்ப கஷ்டமாவும் இருக்கு ஒக்கி புயல் அடிச்சபோது செஞ்சதவிடவும் இங்க வேலை அதிகம்.”

குமார்.

உங்களுக்கு சாப்பாடு, சம்பளம் இதெல்லாம்…

அதெல்லாம் ஒண்ணும் பிரச்சின இல்ல.. சம்பளம் ஒரு நாளைக்கு 360/- ரூபா.. எப்பவும் போல தான். இங்க வந்து வேலை பாக்குறதுக்கு எதுவும் தனியா எதுவும் கிடையாது. வேலை பொருத்தவரைக்கும் எட்டுமணி நேரம் தான் ஆனா நாங்க இங்க நேரம் பாக்குறது இல்ல காலைல இருந்து நைட்டு வரை வேலை பாக்குறோம். தினம் ஒரு பண்ணிரெண்டு மணிநேரம் செய்யுறோம்”

இப்ப மரங்கள் வெட்டுறது. மின்கம்பங்கள் நடுவது போன்ற வேலைகள் மக்கள் சேர்ந்து செய்யுறாங்களே அது போல உங்க கூட தூய்மைப் பணிகள சேர்ந்து பாக்குறாங்களா..?

”இல்ல அப்படி யாரும் கூட வந்து செய்யுறது இல்ல.. அதான் சொன்னேன் நாங்க யார் உதவியும் எதிர்பாக்குறது இல்ல. நம்ம வேலையா நாம சரியா செய்யனும் அதுக்குதானே வந்து இருக்கோம்”

ஏன்..?

“இத தாழ்ந்த வேலையா பாப்பாங்க இல்லையா.. மத்த வேலை எல்லாம் ஒன்னும் பிரச்சனை கிடையாது. இது குனிஞ்சா அடுத்தவங்க யாரையும் பாக்க முடியாது வேலை இருந்துகிட்டே இருக்கும் அதனாலதான்.

படிக்க:
சென்னை மாநகராட்சி : சுடுகாடு முதல் சுகாதாரம் வரை தனியார்மயம் !
மோடியின் தூய்மை இந்தியாவில் துப்புரவுப் பணியாளர்கள் கொல்லப்பட்டதற்கே கணக்கில்லை !

இப்ப பல இடங்கள்ல இந்த வேலை வேகமா நடந்துகிட்டு இருக்கு. அதுக்கு காரணம் ஊருல இருந்து வந்திருக்குற நாங்க எல்லாம் சேந்து வேலை பாக்குறதால தான்” என தங்களின் கூட்டு உழைப்பை பெருமையாய் சொன்னார் குமார்.

வினவு களச் செய்தியாளர் எடப்பாடியோ, ஆளுநரோ நிவாரணப் பணிகளை பார்வையிட வரும் போது ஹெலிகாப்டர் முதல் சிவப்புக் கம்பளம் வரை ஏற்பாடுகள் பயங்கரமாக இருக்கும். சென்னைப் பெருவெள்ளமாகட்டும் அதற்கடுத்துவந்த பேரிடர்களாகட்டும் அனைத்திலும் தூய்மை பணியாளர்களின் பங்கு மகத்தானது. உண்மையைச் சொல்லப் போனால் மக்களின் வாழ்வை மீட்டெடுக்கும் பணிகளை தூய்மைத் தொழிலாளர்கள், மின் வாரிய ஊழியர்கள், மருத்துவ சேவை ஊழியர்கள் போன்ற உழைப்பாளிகள்தான் செய்கின்றனர். இவர்களுக்கு கூடுதல் ஊதியமோ, வேறு சிறப்பு ஏற்பாடுகளோ கிடையாது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க