நிவார் புயல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களையும் டெல்டா பகுதியையும் தாக்கக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். நிவார் புயலின் வேகம் 118 கிலோ மீட்டர் வரை இருக்கும் என்று கணித்துள்ளார்கள்.
பேரிடர் மீட்பு படை தயாராக இருப்பதாகவும் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மும்முரமாக இருப்பதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.
இரவு நேரத்தில் ஏரியை திறந்து விட்டு சென்னை பெரு வெள்ளத்தினை உருவாக்கிய அரசால் அன்று ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. வர்தா புயலின் போது செயலிழந்து போய் கிடந்தது அரசு. ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்களையும் புரட்டிப்போட்ட கஜா புயலின் போது அரசின் செயல்பாடு என்னவாக இருந்தது? மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர்கள் தன்னார்வலராக நூற்றுக்கணக்கில் வேலை செய்ததன் விளைவாகத்தான் மக்களுக்கு ஏற்பட்ட அந்த பாதிப்பிலிருந்து கொஞ்சமாவது அவர்களை மீட்க முடிந்தது.
உலகிலேயே மிகப் பெரிய கடற்படை என்று பீற்றிக் கொள்ளப்பட்ட பெருமை எல்லாம் ஓக்கிப் புயலில் சாயம் வெளுத்தது.
புதிய தாராளவாத கொள்கைகளுக்காக மொத்த நாட்டையே கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்கக்கூடிய அரசு, இந்த நிவார் புயலில் இருந்து காப்பதாக கூறக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மக்களுக்கு முழுமையான தீர்வை தரப்போவதில்லை.
சென்னைப் பெருவெள்ளம், வர்தா புயல், கஜா புயல், ஒக்கிப் புயல் போன்ற பேரிடர் காலங்களில் தன்னார்வலர்கள் மக்களுடன் இணைந்து எப்படி எதிர்கொண்டார்களோ அதைப் போன்ற ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மக்களாகிய நாம் மேற்கொள்ள வேண்டும் .
அதே நேரத்தில் பேரிடர் கால நடவடிக்கைகளில் அரசு எந்திரத்தை ஈடுபடுத்துவதற்கான போராட்டங்களை மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்
தோழர் வெற்றிவேல் செழியன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
99623 66321