கள நிலவரம் : அதிமுக வாக்கு வங்கியை ஆட்டம் காண வைத்திருக்கும் கஜா புயல்

கடந்த நவம்பர் மாதம், தமிழகத்தை தாக்கிய கஜா புயல், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்டது. இந்தப் புயலுக்கு 65 பேர் பலியானதோடு, 1.17 இலட்சம் வீடுகளையும் அழித்துவிட்டுப் போனது. ஒரு கோடிக்கும் அதிகமான தென்னை மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன. 1.34 இலட்சம் மின்கம்பங்கள் சாய்ந்தன. 3.78 இலட்சம் மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். செயல்படாத எடப்பாடி அரசு, புயலின்போதும் தூங்கி வழிந்துகொண்டிருந்தது.

மக்களவைத் தேர்தல் வந்ததைத் தொடர்ந்து மக்களின் இழப்பை, துயரத்தைக் கேட்க வராத ஆளும் அரசு ஓட்டு கேட்டு அலைந்துகொண்டிருக்கிறது. ஆனால், மக்கள் எதையும் மறக்கவில்லை. அதிமுக வாக்கு வங்கி கஜா புயல் தாக்கிய பகுதிகளில் ஆட்டம் கண்டிருக்கிறது என்பதை அம்மக்களின் தீரா கோபத்திலிருந்து அறிய முடிகிறது.

நாகப்பட்டினம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தாழை எம். சரவணனுக்கு வாக்கு கேட்டு வேதாரண்யம் பகுதியில் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், ‘எங்களை வந்து பார்க்க இத்தனை நீண்ட காலம் காத்திருக்க வேண்டுமா?’ என வினவ நினைக்கிறார் ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த தென்னரசு.

ஆறுகாட்டுத்துறையில் 500 ஃபைபர் படகுகள் கஜா புயலில் சேதமடைந்தன. 10 படகுகளை புயல் அடித்துக்கொண்டு போனது. 700 குடிசைகள் முற்றிலுமாக அழிந்துபோயின. 1900 வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன. கடல் தண்ணீர் அனைத்து வீடுகளிலும் உட்புகுந்தது.

முதலமைச்சரைப் பார்த்து தென்னரசு மட்டும் இந்தக் கேள்வியைக் கேட்க விரும்பவில்லை. கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமத்தினரும் இதே கேள்வியைக் கேட்கின்றனர்.

வேதாரண்யத்தில் பேசிய முதலமைச்சர் கஜா புயல் தாக்கிய உடனே மக்களுக்குத் தேவையான உதவிகளை தனது அரசு செய்ததாக கூறினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்து பொருட்கள் மற்றும் தேவையான நிவாரண உதவிகளை வழங்கியதாகவும் கூறினார். ஆனால், தென்னரசு அதை ஏற்கவில்லை.

2004-ம் ஆண்டு சுனாமி இந்தப் பகுதியை தாக்கியபோது, அதற்கு அடுத்த நாளே, அப்போதைய முதலைமைச்சர் ஜெயலலிதா, ஹெலிகாப்டரில் வந்து பார்வையிட்டதாக சொல்கிறார் தென்னரசு. “அவர் உயிரோடு இருந்திருந்தால், தக்க நேரத்தில் எங்களுக்கு நிவாரணம் கிடைக்கச் செய்திருப்பார்” என்கிறார் இவர்.

தங்களுக்கு எந்தவித அரசு உதவியோ நிவாரணமோ கிடைக்காத கோபத்தில் இருந்த கன்னித்தோப்பு கிராம மக்கள், காலம் தாழ்த்தி வந்த நிவாரணம் தர வந்த அமைச்சர் ஓ. எஸ். மணியனை அடித்து விரட்டியிருக்கின்றனர்.

தென்னரசு தன் மனைவியுடன்…

தென்னரசுவும் அவருடைய சகாக்களும் பணிக்குத் திரும்ப நான்கு மாதங்கள் ஆகியிருக்கிறது. பெரும்பாலான மீனவர்களிடம் புயலால் சேதமடைந்த தங்களுடைய படகுகளை சரிசெய்ய பணம் கையில் இல்லை. ஃபைபர் படகை வைத்திருந்த சக்திவேலன், தனக்கு பிப்ரவரி மாதம்தான் தன்னுடைய கணக்கில் ரூ. 1.5 இலட்சம் நிவாரணத் தொகை வந்து சேர்ந்ததாக சொல்கிறார். அதற்காக இவர்கள் இரண்டு மாதங்கள் போராட்டத்தில் நடத்தியிருக்கின்றனர்.

1972-ம் ஆண்டும் எம்.ஜி.ஆர். அதிமுக-வை தொடங்கிய காலத்திலிருந்தே இந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவ மக்கள் இந்தக் கட்சிக்குத்தான் வாக்களித்துள்ளனர்.  கஜா புயலுக்குப் பிறகு மாநில அரசு எந்தவித நிவாரணமோ மீளமைப்பு பணிகளைகளோ செய்யாததைக் கண்டு, அவர்கள் அதிமுக மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர்.

தென்னரசு வழக்கமாக ஒரு நாளில்  ரூ. 100 முதல் ரூ. 500 வரை வருமானம் ஈட்டுவார். 130 படகுகள் இந்த கிராமத்தில் மட்டும் சேதம்டைந்த நிலையில் அவருக்கு  போதிய பணி கிடைப்பதில்லை.

இ. பார்வதி…

“புயல் தாக்கிய பிறகு, இரண்டு மாதங்கள் மின்சாரம் இல்லை. தெரிந்தவர்கள் அரிசி, காய்கறிகளை கொடுத்தார்கள். பெரும்பாலும் கஞ்சியைக் குடித்தோம். உதவிக்காக இரண்டு மாதங்கள் காத்திருந்தோம்” என்கிறார் ராணி.

இந்த கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் அரசு நிவாரணம் அளிக்க வராததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர். நாகப்பட்டினம் ஆட்சியரை பார்த்து மனு கொடுத்தனர். இந்தப் பகுதியைச் சேர்ந்த ஜவுளி துறை அமைச்சர் மணியனை சந்தித்தும் மனு கொடுத்தனர்.

போராட்டத்துக்குப் பிறகு தென்னரசுக்கு இரண்டு தவணைகளில் ரூ. 10,000 தரப்பட்டது. சேதமடைந்த சிறிய ஃபைபர் படகுகளுக்கு ரூ. 1.5 இலட்சமும் பெரிய படகுகளுக்கு ரூ. 5 முதல் 10 இலட்சமும் நிவாரணமாக அளிக்கப்பட்டது.

இந்தப் பேரிடருக்குப் பின்,  தமிழக அரசு ரூ. 1000 கோடி உடனடி நிதியை விடுவித்தது. மாநில அரசு ரூ. 15,000 கோடியை நிவாரண நிதியாக கேட்டிருந்த நிலையில், ரூ.1,142.12 கோடியை மட்டுமே மத்திய அரசு கொடுத்தது.

ஆனால், இந்த நிவாரணத் தொகையிலும் தேவைப்பட்டவருக்கு நிவாரணம் போய்ச் சேரவில்லை என குற்றம்சாட்டுகிறார் தென்னரசு.  சுனாமியின் போது தங்களுக்கு பல தொண்டு நிறுவனங்கள் நிவாரணத்தை வாரி வழங்கின. அப்போது கிடைத்த ஃபைபர் படகு 10 ஆண்டுகள் வரை வந்தது. ஆனால், மோடியால் அதுவும் கிடைக்கவில்லை என்கிறார் அவர்.

படிக்க:
கஜா புயல் : நின்று கொல்கிறது அரசு ! புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு
தேர்தல் ஆணையமே … நடையைக் கட்டு !

கட்டுமரம் போன்ற சிறிய படகை வைத்துக்கொண்டு மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு எந்தவித உதவியும் கிடைக்கவில்லை. கோடியக்கரை கிராமத்தைச் சேர்ந்த ஐம்பது மீனவர்கள் தாங்கள் பாதிக்கப்பட்டதை நிரூபிக்க எந்தவித ஆதாரமும் காட்டமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவிக்கிறார்கள். வழக்கமாக, இவர்கள் நாள் ஒன்றுக்கு ரூ. 500 முதல் ரூ. 1000 வரை வருமானம் ஈட்டியிருக்கிறார்கள். இப்போது, கிடைக்கிற வேலைக்குப் போகிற நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

48 வயதான மாரியப்பன், கிழிந்துபோன வலைகளை தைக்கும் வேலையை செய்துகொண்டிருப்பதாக கூறுகிறார். “வேலை இருக்கும் நாளில் ரூ. 400 வரைக்கும் சம்பாதிப்போம். வாரத்துக்கு மூன்று நாட்கள் வேலை கிடைக்கும். படகு உரிமையாளர்களிடம் பணம் இல்லாவிட்டால், எங்கள் வேலையும் நின்றுவிடும்” என்கிற அவர், “அமைச்சர் ஓ. எஸ். மணியன் எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்தான், ஆனால், எங்களுக்கு எதுவும் செய்யவில்லை. பிறகு எதற்காக அதிமுகவுக்கு ஓட்டு போட வேண்டும்?” எனக் கேட்கிறார்.  வரவிருக்கிற தேர்தல் முடிவுகள் எங்களுடைய மனநிலையை எதிரொலிக்கும் என்கிறார் ராமநாதபுரம் மீனவர் சங்கத் தலைவர் பால்சாமி.

அனிதா
கட்டுரையாளர் : செந்தளிர்
தமிழாக்கம் : அனிதா
நன்றி : ஸ்க்ரால்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க