பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
கடந்த ஜனவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.
கேள்வி: மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்திய மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டுள்ளார். இதனை எப்படிப் பார்ப்பது?
இஸ்லாமிய மக்களுக்கு எதிராக வெறுப்பு அரசியலைத் தூண்டி, அவர்களைப் படுகொலை செய்து, அவர்களது இரத்தத்தில் பாசிசத்தை அரங்கேற்றிவரும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் அடிமையான அ.தி.மு.க.வை எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரிப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி முறிவு தேர்தல் நாடகம் என்பது பாமர மக்களும் அறிந்த ஒன்று. பா.ஜ.க-தான் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மீது அடக்குமுறையை ஏவியது; அக்கட்சியை தடைசெய்வதற்கான முயற்சியிலும் இறங்கியது. இப்படிப்பட்ட பாசிச பா.ஜ.க-வை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தி, இஸ்லாமிய மக்களை ஜனநாயகப் பூர்வமாகவும் பாசிசத்திற்கு எதிராகவும் அணிதிரட்ட வேண்டியது எஸ்.டி.பி.ஐ-யின் கடமையாகும்.
பல இஸ்லாமிய அமைப்புகள் தி.மு.க. கூட்டணியில் உள்ளன அல்லது தி.மு.க.வை ஆதரிக்கின்றன. எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் இஸ்லாமிய சிறைவாசிகளை தி.மு.க. அரசு விடுதலை செய்யவில்லை என்று அ.தி.மு.க.வை ஆதரிப்பதாக கூறுகின்றனர். ஆனால், அதற்காக அப்பாவி இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து அவர்கள் சிறைக்குச் செல்வதற்கு காரணமான பா.ஜ.க.விற்கு அடிமையாக இருக்கும் அ.தி.மு.க.வை ஆதரிப்பது எந்தவகையில் சரி என்பதை அக்கட்சியில் இருக்கும் இஸ்லாமியர்கள்தான் கூற வேண்டும்.
இன்றைய எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்ல, ஜெயலலிதா ஆட்சி காலம் முதல் இஸ்லாமிய மக்கள் மீதான அடக்குமுறைகள் எத்தனை எத்தனை? தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டுவந்து இலட்சக்கணக்கான இஸ்லாமிய மக்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் பா.ஜ.க.வின் சதித்திட்டத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்ததைப் பற்றி எஸ்.டி.பி.ஐ.யினர் ஏன் பேசுவதில்லை என்பதை சிந்திக்க வேண்டும்.
ஆகையால், பாசிசம் அரங்கேறி வருகின்ற சூழலில், பாசிச எதிர்ப்பு சக்திகளைப் பிளவுப்படுத்தி, பா.ஜ.க.வின் ‘பி டீம்’-ஆக வடக்கே ஓவைசி போல தமிழ்நாட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சி செயல்படுவதை இஸ்லாமிய மக்கள் புரிந்து கொண்டு அ.தி.மு.க.-எஸ்.டி.பி.ஐ. கும்பலைப் புறக்கணிக்க வேண்டும்.
பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube