”பண்ணையடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டத்தில் பி.எஸ்.தனுஷ்கோடி” என்கிற தலைப்பில்1993-ல் வெளியான இந்நூல், ”ஒரு பண்ணை அடிமையின் விடுதலைப் போராட்டம்” என்ற தலைப்பில் நான்காம் பதிப்பாக கடந்த டிசம்பர் 2010-ல்  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தென்சென்னையுடன் இணைந்து சவுத்விஷன் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

”… அன்றைய ஆரம்ப நாட்களில் சாட்டையடி பெற்று சாணிப்பால் குடிக்கும் கொடுமைகளையே வாழ்வாய்ச் சுவீகரித்துக் கொண்டிருந்த தஞ்சை மாவட்ட மக்களுக்கு ஒளிக்கீற்றாய் – உற்றத் துணைவனாய் – நின்று வழிகாட்டி உடன் நடந்த செங்கொடி இயக்கத்தின் சரிதம்தான் அந்த இயக்கத்தின் ஊனோடும் உயிரோடும் கலந்து நின்ற தோழர் பி.எஸ். தனுஷ்கோடியின் வாழ்க்கைச் சரிதமாகும். ஆகவே தனுஷ்கோடி அவர்களை அறிந்து கொள்வதற்கு மட்டுமின்றி அன்றைய தஞ்சை மாவட்ட மக்கள் வாழ்வையும் – செங்கொடி இயக்கத்தின் அந்த ஆரம்ப நாட்களையும் அறிந்து கொள்ள வகை செய்கிறது.

குறிப்பாக பொருளாதார ரீதியாக மட்டுமின்றி சமூக ரீதியாகவும் கடுமையான ஒடுக்குமுறைக்கு ஆளான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க தமிழகத்தில் பற்பல இயக்கங்களால் நடத்தப்பட்ட போராட்ட வரலாற்றில் செங்கொடி இயக்கம் வகித்திட்ட பங்கு எவ்வளவு மகத்தானது என்பதை அறிந்துகொள்ள இந்த நூல் பேருதவியாய் அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக அன்றைய போராட்ட அனுபவங்கள் – இன்னும் தொடரும் இன்றைய கொடுமைகளை எதிர்த்திடும் போராட்டத்திற்கு உரமூட்டட்டும்.” (நூலின் அறிமுக உரையில் கி.வரதராசன்)

பண்ணையடிமை முறையானது எத்தகைய கொடூரத்தன்மை வாய்ந்தது என்பதை விளக்க வேண்டுமானால் அந்த அடிமைகளுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை முறைகளை ஆராய்வதே போதுமானதாகவிருக்கும்.

தினமும் இரவில், நிலப்பிரபுவிடம் அன்றைய தினம் பகலில் நடைபெற்ற வேலைகள் விவரிக்கப்படும். அத்துடன் யார் வேலைக்கு தாமதமாக வந்தார்கள், யார் எதிர்த்துப் பேசினார்கள், யார் வேகமாக வேலை செய்யாததால் தாமதம் ஏற்பட்டது போன்றவைகளும் சொல்லப்படும். சம்பந்தப்பட்ட ஆளை – அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி – அடுத்த நாள் பண்ணை வீட்டுக்கு கொண்டு வரும்படி நிலப்பிரபு உத்தரவிடுவான்.

அடுத்த நாள் தலையாரி போய் சம்பந்தப்பட்டவரை பண்ணை வீட்டிற்கு கொண்டு வருவார். அந்த நபர் பறையராக இருந்தால் பள்ளரைக் கூப்பிட்டு மாட்டுக் கொட்டடித்தூணில் கட்டச் சொல்லுவார்கள். பள்ளராகவிருந்தால் பறையரைக் கொண்டு கட்டச் சொல்லுவார்கள். அவர் படையாச்சி அல்லது தேவராக இருந்தால் பள்ளரையும், பறையரையும் விட்டு கட்டச் சொல்லி புளிய விளாரால், சாட்டையால் அடிப்பார்கள். சாட்டைக்கு ஐந்து பிரிசாட்டை என்று பெயர். ஐந்து பிரியை முறுக்கேற்றி வைத்திருப்பார்கள். சாட்டை முனையில் அந்தப் பிரியை விலக்கி விட்டு கூரான கூழாங்கல்லைச் சொருகி வைத்திருப்பார்கள்.

சம்பந்தப்பட்ட நபரை சாட்டையால் அடித்து இழுக்கும் பொழுது அது ரம்பம் போல் கரகரவென்று அடித்து தோலை இழுத்து வரும். ரத்தம் பீறிட்டோடும். அடிப்பவன் கை சோர்ந்து போகும் வரை அடிப்பான். பின் தலையாரி அடிப்பான். தலையாரி சரியாக அடிக்காவிட்டால், நிலப்பிரபு அந்தச் சாட்டையை வாங்கி தலையாரியை அடிப்பான். அதன் பின் அடிவாங்கி ரத்தம் சிந்திக் கொண்டிருக்கும் தொழிலாளியை மிருகம் போல் அடிப்பான்,

அடி வாங்குபவன் அந்த வேதனை பொறுக்க மாட்டாமல் தன் முகத்தில் துப்பிவிடக்கூடாது என்பதாலும், உணர்ச்சி வசப்பட்டு “என்னை சாகடி” என்று எதிர்த்துப் பேசிவிடுவான் என்பதாலும் துணியை அவன் வாயில் அடைத்து வைத்து கட்டியிருப்பார்கள். வெறிதீர அடித்து முடித்த பின் அடிபட்டவனை சாக்கு, வைக்கோலில் போட்டு படுக்க வைப்பார்கள். பண்ணை வீட்டு ரசம் சோறு போடுவார்கள். அடிபட்டவன் தன் ரத்தக் காயத்துக்கு மருந்தாக சாணி உருண்டையை வைக்கோல் தீயில் போட்டு ஒத்தடம் கொடுத்துக் கொள்ள வேண்டும். யாரும் உதவி செய்ய இருக்கக்கூடாது. வீட்டிலிருந்து சோறு கொடுக்கக்கூடாது. ஆனால் அடிபட்டுக் கிடக்கும் நாளுக்கு வேலை செய்ததாக கணக்குப் போடப்பட்டு கூலி கொடுக்கப்படும்.

படிக்க:
குஜராத் : இந்து ராஷ்டிரத்தின் வகைமாதிரி !
இந்திரா ஜெய்சிங்கை தண்டிக்க மத்திய அரசு முயற்சி : ஓய்வு பெற்ற ஆட்சிப் பணி அதிகாரிகள் அறிக்கை !

வேலைக்கு தாமதமாக வரும் பெண்கள் பழைய சாக்கையோ அல்லது கிழிந்த துணியையோ தொடையைச் சுற்றி கட்டியிருப்பார்கள். பண்ணை வீட்டிற்கு கொண்டுவரப்படும் அந்தப் பெண்ணை அடிக்க தலையாரி கையில் புளிய விளார் கொடுக்கப்படும். புளிய விளார் முதல் நாளே மரத்திலிருந்து பறிக்கப்பட்டு நெருப்பில் வாட்டப்பட்டு சாட்டையாக இருக்கும்.

‘சுளீர்,’ ‘சுளீர் என்று சாட்டையடி விழுந்து அந்தப் பெண் கதறுவாள். ஆனால் தலையாரி அடிப்பதை நிறுத்தக் கூடாது. இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால் அந்தத் தலையாரி என்பவன் அந்தப் பெண்ணின் அப்பனாகவோ, அண்ணனாகவோ, சிற்றப்பனாகவோ, மாமனாகவோ, உறவினனாகவோ இருக்கலாம். ஆனால் அவன் தன் வேதனையை வெளிப்படுத்தக்கூடாது. சரியாக அடிக்கவில்லையென்றால் அவனுக்கும் அதே அடி கிடைக்கும்.

அந்தப் பெண்ணின் உடலிலிருந்து ரத்தம் கொட்டும்வரை அடித்த பின்புதான் அது நிறுத்தப்படும். ரத்தம் சொட்டச் சொட்ட அந்தப் பெண் அழுது கொண்டே நடக்க வேண்டும். அந்தப் பெண்ணுக்கு காயம் இருக்கும்வரை பண்ணை வீட்டில் ரசம் சோறு கிடைக்கும். வீட்டிற்கும் துணியில் கட்டிக் கொண்டு போகலாம்.

ஆணோ, பெண்ணோ அடிபடும்பொழுது யாராவது அவர்களுக்கு பரிந்து பேசினாலோ, அடிக்கவேண்டாம் என்று கெஞ்சினாலோ அவர்களும் ஈவிரக்கமின்றி சாட்டையால் அடிக்கப்படுவார்கள்.

பண்ணைவேலையில் ஏற்படும் ‘தவறுகளுக்கு மட்டும் இந்தத் தண்டனை என்பதல்ல, கிராமத்திற்குள் ஒருவருக்கொருவர் ஏற்படும் சச்சரவுகளும் நிலப்பிரபுவிடம் கொண்டுவரப்பட்டு அதற்கும் இத்தகைய தண்டனை உண்டு.

பண்ணையடிமைகளுக்கு உலகில் வேறெந்தப் பகுதியிலும் தரப்படாத ஒரு ஈனத்தனமான தண்டனை தஞ்சை மாவட்டத்தில் அன்று தரப்பட்டது. அதுதான் சாணிப்பால் குடிக்க வேண்டும் என்ற தண்டனையாகும். மாட்டுச் சாணத்தை மண்குடத்திலிட்டு தண்ணீரை ஊற்றி கரைப்பார்கள். பின்பு அதை துணியால் வடிகட்டி, வடிகட்டப்பட்ட நீரை, தண்டனை விதிக்கப்பட்ட பண்ணயடிமை குடித்தே தீர வேண்டுமென்று நிலப்பிரபு உத்தரவிடுவார். அது மனிதன் செய்யக் கூடிய காரியமா? பண்ணையடிமை தயங்குவான். ஈவிரக்கமின்றி சவுக்கடி அவன் உடல் மீது விழும் வேதனை பொறுக்கமாட்டாமல் சாணிப்பால் என்றழைக்கப்பட்ட அந்த சாணிக்கரைசலை முழுங்குவான். அதன் விளைவு பல நாட்களுக்கு அவனை பாதித்துவிடும், பல சமயங்களில் சவுக்கடி தண்டனையும் சாணிப்பால் தண்டனையும் ஒரு சேர கொடுக்கப்படும். (நூலிலிருந்து பக்.31-33)

நூல் : ஒரு பண்ணை அடிமையின் விடுதலைப் போராட்டம்
ஆசிரியர் : என்.ராமகிருஷ்ணன்.

வெளியீடு : தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தென்சென்னையுடன் இணைந்து சவுத்விஷன்.
132, (புதிய எண் 251), அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை – 600 086.
மின்னஞ்சல் : southvisionbalaji@gmail.com

பக்கங்கள்: 96
விலை: ரூ 30.00

இணையத்தில் வாங்க : marinabooks

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க