நெருங்கி வரும் இந்துராஷ்டிரா :

குஜராத்தில் 10 சதவீத மக்கள்தொகை கொண்ட முஸ்லீம்களில் இருந்து ஒருவர் கூட மக்களவை உறுப்பினராக இத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. “இந்து ராஷ்டிரம் எப்படி உருவாக்கப்படுகிறது என்பதற்கு குஜராத் ஒரு உதாரணம்” என்கிற விஷயத்தை இது நமக்கு உணர்த்துகிறது.

“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பிரச்சினையில்லை. அவர்கள் உருவாக்கிருக்கும் மனநிலைதான் பிரச்சினை. கடந்த 17 வருடங்களில் மக்களின் சிந்திக்கும் முறையை முற்றிலும் மாற்றியிருக்கிறார்கள். இதன் விளைவுதான் பா.ஜ.க-வின் வெற்றி” என்கிறார் 2002 குஜராத் கலவரத்தில் தப்பிப் பிழைத்தவர்களில் ஒருவரான ஷாரிஃப் மாலிக்.

குஜராத்தி மொழியில் உள்ள பலகை கூறுவதாவது:- “ஹல்வத் நகரின் இந்துராஷ்ட்ரம் வரவேற்கிறது – விஷ்வ இந்து பரிஷத் – பஜ்ரங் தள். (புகைப்படம் – நன்றி : அல்ப் சன்க்கிய அதிகர் மன்ச்)

நரோதா காம் வழக்கில் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கும் குழுவில் இருக்கும் மாலிக்,  “காங்கிரஸ் ஒரு சில இடங்களைக் கைப்பற்றும் என நம்பிக்கொண்டிருந்த எங்களுக்கு இத்தேர்தல் முடிவுகள் பெரும் அதிர்ச்சியளித்தது. வேறு வழி இல்லாமல் இந்த நிலைமையை எதிர்கொள்கிறோம். இந்த புதிய இந்தியாவில் எங்கள் வாழ்க்கையைக் கடத்த ஏதேனும் வழிகள் உள்ளதா என கண்டுபிடிக்க வேண்டும்” என்றார். சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்கும் ஒன்பது குஜராத் கலவர வழக்குகளில் நரோதா காம் வழக்கும் ஒன்று. இவ்வழக்கின் தீர்ப்பு இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்த நாடே மோடியின் இரண்டாவது வெற்றியை கொண்டாடும் போது, தொடர்ச்சியான இன்னல்களை அனுபவித்து வரும் குஜராத்  முஸ்லீம்களின் நிலை நம்மை எச்சரிக்கிறது. 2002-ல் நடந்த கலவரத்தைத் தொடர்ந்து, முஸ்லீம்கள் தொடர்ச்சியான தாக்குதல்களை சந்தித்தது மட்டுமல்லாமல் அந்த தாக்குதல்கள் இந்துத்துவ முனைவாக்கத்தின் பகுதியாவும் இருந்தது. இப்போது அந்த முனைவாக்கம் கிட்டத்தட்ட முழுமையடைந்து இருக்கிறது.

இந்துத்துவத் திட்டத்தின் வெற்றிக்கு குஜராத் ஒரு உதாரணம் என அவர்கள் கருதுகின்றனர். சாதிரீதியான, மதரீதியான பாகுபாடுகள் இனி இருக்காது என மோடி கூறினாலும் குஜராத் முஸ்லீம்களிடம் அது செல்லுபடியாகவில்லை. “எங்களுக்கு என்ன நிகழ்கிறதோ அதுவே இந்நாடு முழுக்க நிகழலாம்” என்கிறார் மாலிக்.

படிக்க:
அபாயமான காலத்தில் வாழ்கிறோம் | பேரா. ஆனந்த் தெல்தும்டே உரை | காணொளி
♦ நரோடா பாட்டியா கலவரம் : முன்நின்று நடத்திய பாபு பஜ்ரங்கி பிணையில் விடுதலை !

மோடியும்  புதிதாக பதவியேற்றுள்ள அமித்ஷாவும் 2002 கலவரத்திற்கு உடந்தையாக இருந்துள்ளனர் என குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தனர். இவர்களின் கண்காணிப்பில் குஜராத் முழுவதும் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதலில் 1043 பேர் இறந்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்தனர்; நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டனர்; இன்றுவரை பலபேரைக் காணவில்லை.

17 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இத்தகைய அரசியல் பிரச்சாரத்திற்கு பயனாக, இன்று அந்த இரட்டையர்கள் நாட்டின் சக்திவாய்ந்த பதவிகளை வகிக்கின்றனர். கொடூரமான படுகொலைகளை இந்த இருவர் கூட்டணி நினைவூட்டுவது மட்டுமல்லாமல், குஜராத்தை முழுக்கக் காவிமயமாக்கும் அவர்களின் நிகழ்ச்சிநிரலும் நிறைவேறியுள்ளது. மேலும், இந்த இனப் படுகொலையை அம்மாநில வரலாற்றின் மீதான ஒரு சிறிய களங்கமாக பார்க்கும்படி செய்துள்ளனர். காலபோக்கில் அதுவும் கண்ணுக்கு தெரியாமல் மறைந்துவிடும்.

“இந்த திட்டமானது நாடு முழுக்க விரிவடையாதா? மக்கள் அது குறித்து பயப்படவில்லையா?” எனக் கேட்கிறார் இம்தியாஸ் குரேஷி. இவர் நரோதா காம் கலவரத்தில் தப்பிப்பிழைத்தவர்களில் ஒருவர். “2002-ல் நடந்ததை இந்நாடு மறந்துவிட்டதா? இந்த அரசியல்போக்கு மேலும் தொடர்ந்தால், இது எங்கு வேண்டுமானாலும் நிகழலாம். மேற்கு வங்கத்தில் இது ஏற்கெனவே நிகழத் தொடங்கிவிட்டது. நான் கூறுவதை எழுதிவைத்துக் கொள்ளுங்கள், இந்துராஷ்டிரம் எப்படி உருவாக்கப்பட்டது என்பதற்கு குஜராத் ஒரு உதாரணம். ஆபத்து இன்னும் சூழ்ந்துள்ளது. அவர்கள் எங்களை கொடுமைப்படுத்த பலவழிகளைக் கண்டுபிடித்துள்ளனர்” என்கிறார்.

முஸ்லீம் பிரதிநிதிகள் யாருமில்லை

குஜராத்தில் பா.ஜ.க. அனைத்து 26 இடங்களையும் கைப்பற்றிய பின்னர், கலவரத்தில் பிழைத்தவர்கள் சிலரிடமும் நீதிக்காக தைரியமாக போராடி வரும் செயல்பாட்டாளர்கள் சிலரிடமும் பிரண்ட்லைன் பத்திரிகை பேசியது.

“பா.ஜ.க. எங்களை தேவையற்றவர்களாக ஆக்கியபோது, காங்கிரஸ் மிகவும் பலவீனமான எதிர்ப்பையே காட்டியது. அதன் மூலம் முஸ்லீம்களை மட்டுமல்ல எல்லா சிறுபான்மையினரையும் கைவிட்டது. எங்களுக்கு ஒரு அரசியல் பிரதிநிதிகூட இல்லை. இது முஸ்லீம்களை மேலும் ஒடுக்கும்” என்கிறார் குரேஷி. காங்கிரஸ் இத்தேர்தலில் ஒரேயொரு முஸ்லீமுக்கு மட்டுமே சீட்டு வழங்கியது. அக்கட்சியின் முஸ்லீம்கள் மீதான அர்ப்பணிப்பு குறைந்து வருவதையே இது காட்டுவதாக குரேஷி கூறுகிறார்.

ஷாரிப் மாலெக், நரோதா காம் வழக்கில் நீதிக்காக போராடும் செயல்பாட்டாளர். நரோதா காமில் குடியிருப்பவர், 2002 கலவரத்தில் பாதிக்கப்பட்டவர். புகைப்படம் – அனுபமா கடகம்.

வரலாற்றுரீதியாகவே, குஜராத் இரு கட்சிகளின் மாநிலமாகவே இருந்துள்ளது. பா.ஜ.கவும், காங்கிரஸும் எல்லா தேர்தல்களிலும் மோதிக்கொள்ளும். ஆனால் 2000-த்தின் ஆரம்பத்தில் இருந்து மாநில அளவிலும் தேசிய அளவிலும் காங்கிரஸ் தனது தடத்தை இழந்து வருவதோடல்லாமல், அந்த தோல்வியில் இருந்து இன்னும் மீளவுமில்லை. சிறந்த தலைவர்களின் போதாமை, உட்கட்சிப் பூசல், சிறுபான்மை தலைவர்களை ஒடுக்குவது, கட்சியினர் பா.ஜ.க-வில் இணைவது போன்றவை இப்பழம் பெரும் கட்சியை மோசமான சீர்கேட்டுக்கு இட்டுச் சென்றுள்ளது. 2017 மாநிலங்கவை தேர்தலில் காங்கிரஸ் 182-ல் 77 இடங்களில் வெற்றி பெற்றப்போது நம்பிக்கையின் கீற்று தெரிந்தது. ஆனால் இப்போது காங்கிரஸ் அடைந்த படுதோல்வியால் தேசிய மற்றும் மாநிலங்களின் நலன்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன.

ஆச்சிரியப்படும் வகையில், 42 முஸ்லீம்கள் குஜராத் மக்களவை தேர்தலில் போட்டியிட்டனர். பா.ஜ.க எந்த முஸ்லீம்க்கும் சீட்டு வழங்கவில்லை. சிறு அரசியல் கட்சிகள் சார்பாக 8 முஸ்லீம்களும், 34 பேர் சுயேட்சையாகவும் போட்டியிட்டனர். மோடி ‘அலை’யின் தாக்கத்தால் ஃபாருச் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ஒரேயொரு முஸ்லிமான ஷேர்கான் பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டார். ஃபாருச் தொகுதிதான் மாநிலத்திலேயே அதிக முஸ்லீம் ஓட்டுகள் உள்ள தொகுதியாகும் (அந்த தொகுதியின் மக்கள்தொகையில் 22 சதவீதம் முஸ்லீம் மக்கள் உள்ளனர்). 1984-ல் ஃபாருச் தொகுதியில் வெற்றி பெற்ற மூத்த காங்கிரஸ் தலைவரான அகமது படேல்-தான் குஜராத்திலிருந்து பாராளுமன்றம் சென்ற கடைசி முஸ்லீம் ஆவார்.

“முதல் படி ஏறும்பொழுது அவர்கள் எங்களை எறும்புகளை போல் நசுக்கினர். இப்பொழுது அவர்கள் உச்சியில் உள்ளனர், நாங்கள் அவர்களுக்கு தேவையற்றவர்களாக இருக்கலாம். இனிமேல் வன்முறையை தூண்டிவிடமாட்டார்கள் என நம்புகிறேன். மற்ற பிரச்சினைகளை நாங்கள் சமாளித்துக் கொள்வோம்” என்கிறார் குரேஷி.

படிக்க:
பாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை !
♦ குஜராத் நரோடா பாட்டியா படுகொலை வழக்கு : மாயா கோட்னானி விடுதலை !

2002-ல் நடந்ததுபோல், சிறுபான்மையின மக்களுக்கெதிரான வெளிப்படையான வன்முறை குஜராத்தில் நடக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், முஸ்லீம்களுக்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு ஆதாரம் உள்ளது. அல்ப் சன்க்கிய அதிகார் மன்ச் என்ற மனித உரிமை அமைப்பும் , புனியாத் என்ற சிறுபான்மையினர் முன்னேற்றத்திற்கு செயல்படும் லாப நோக்கற்ற அமைப்பும் திரட்டிய தரவுகள் மற்றும் அளித்த அறிக்கை குஜராத் மாநிலத்தின் மதரீதியான முனைவாக்கம் பற்றி கவலைப்படக் கூடிய விவரங்களை வெளிப்படுத்துகிறது.

தேசிய ஊடகங்களின் கவனிப்புக்கு கீழ் வராதபடி சிறு சிறு தாக்குதலை தொடுப்பதே அவர்களின் திட்டம் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. பிரிவினையும் பாகுபாடும் மாநிலத்தின் சமூக – பொருளாதாரத்தின் அங்கமாகவே மாறிவிட்டது. பல சமயங்களில் அவை கவனிக்கப்படுவதும் இல்லை என்றும் கூறுகிறது. அறிக்கையின்படி சிறு சிறு கலகங்களின் தாக்கம் வீரியமிக்கதாக உள்ளதாகும்; அது மதரீதியாக சமூகத்தை முனைவாக்கம் செய்வதிலும் சகிப்பின்மையை அதிகரிப்பதிலும் சாதித்துள்ளது; குஜராத்தில் மதக் கலவரங்களே நடைபெறுவதில்லை என்கிற பிம்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உ.பி.யை சேர்ந்த தகவல் அறியும் உரிமை செயல்பாட்டாளரான ஷாம்ஸ் தப்ரெஃஸ் திரட்டிய தகவல்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து குஜராத்தில் நடந்த கலவரங்கள் குறித்து அவர் திரட்டிய தகவல்கள் கீழ்வருமாறு :-

ஆண்டு குஜராத்தில் நடந்த மதக் கலவரங்கள் உயிரிழந்தோர் காயமடைந்தோர்
2008 79 5 228
2011 47 3 144
2014 74 7 215
2015 55 8 163

 

கூடுதலாக, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) மற்றும் ஃபேக்ட் செக்கர் (Fact Checker) என்னும் ஆய்வு நிறுவனத்தின் தரவுகளையும் அந்த அறிக்கை அளிக்கிறது. குஜராத்தில் 1998 முதல் 2016 வரை 35,568 கலவரங்கள் நடந்திருப்பதாகக் கூறுகின்றன அத்தரவுகள்; 2014 -க்கும் 2016 -க்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும் குஜராத்தில் 164 கலவரங்கள் நடந்துள்ளதாகவும் அதனால் 305 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது.

“தாக்குதல் நடைபெற்ற பெரும்பாலான இடங்கள் 2002-ல் நடந்த கலவரத்தால் பாதிக்கப்படாத பகுதியாகும் என்பது முக்கியமாக குறித்துக்கொள்ள வேண்டியது. மதரீதியில் வெறுப்பை பரப்புவதற்கு சமூக(வலைதள)ஊடங்களான பேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர் போன்றவை கருவியாக பயன்படுத்தப்படுள்ளன. மதச்சடங்குகள், திருவிழாக்கள், ஊர்வலங்கள், கலப்புத் திருமணங்கள், பெண்களை கேலி செய்தல், தரக்குறைவான பாடல்கள், வெறுப்புப் பேச்சுகள் ஆகியவை மதக் கலவரங்களை தூண்டிவிடும் புள்ளிகளாக இருந்துள்ளன என்பது மேம்போக்கான பார்வையிலேயே தெரிகிறது. மதம் தாண்டிய உறவுகளைக் காரணம் காட்டி எழுப்பப்படும் மோதல்களும் வேகமாக வளர்ந்து வருகின்றன” என்கிறது அல்ப் சன்க்கிய அதிகார் மன்ச் / புனியாத்-ன் அறிக்கை.

உதாரணத்திற்கு, ஏப்ரல் 2017 -ல், ஒரு கும்பல் படன் மாவட்டத்தை சேர்ந்த வாதவலி கிராமத்தில் உள்ள முஸ்லீம் குடியிருப்பை சூறையாடிய பிறகு எரித்தது. நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வீடற்றவர்களாக்கப்பட்டனர். அரசு இத்தாக்குதலை பதிவு செய்ய முன்வரவுமில்லை பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலமும் அளிக்கவில்லை. வக்கீல் ஷம்சத் பதான், மாலெக் போன்ற செயல்பாட்டாளர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முயற்சித்தனர். ஆனால் ஒரு பயனும் இல்லை. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கே பெரும்பாடாகிவிட்டது.

முனைவாக்கத்தின் வடிவம் / மாதிரி

வெற்றிகரமான முனைவாக்க செயலுத்திக்கான உதாரணமாக அகமதாபாத் இருக்கிறது. ஒரு காலத்தில், அந்த நகரம் முழுவதும் முஸ்லீம்கள் பரவியிருந்தனர். இப்பொழுதோ  தனித்தொதுக்கப்பட்ட, குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வாழ்கின்றனர். நாகரீகமான சுற்றுப்புறங்களில் வாழ பணக்கார முஸ்லீம்களால் கூட முடியவில்லை. முஸ்லீம்கள் அனைவரும் அகமதாபாத்தின் புறநகர் பகுதிகளான ஜுஹபுரா போன்ற சேரிகளில் வாழ நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடுகளை செயல்படுத்த மோடி அரசு எப்படி நயவஞ்சகமான வழிமுறைகளைக் கண்டுபிடித்துள்ளது என்பதற்கு இங்கு சில உதாரணங்கள் உள்ளன. பிற மதத்தினரிடமிருந்து சொத்துகளை வாங்கவோ விற்கவோ மாவட்ட ஆட்சியினரின் அனுமதி தேவைப்படும். இந்தியாவின் ஒரே மாநிலம் குஜராத்தான். 2012-ல் மோடி முதலமைச்சராக இருந்தபோது, முஸ்லீம்களை பாதுகாப்பதற்காகவும் தனிச்சேரிகளை தடுப்பதற்காகவும், அசையா சொத்துகளின் பரிவர்த்தனையை தடுத்தல் மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியேறிய குடியிருந்தவர்களை பாதுகாக்கும் சட்டம், 1991 (Gujarat Prohibition of Transfer of Immovable Property and Provisions for Protection of Tenants from Eviction from Premises in Disturbed Areas Act, 1991) சட்டத்தில் மேம்போக்கான திருத்தம் கொண்டுவரப்பட்டது. எனினும், ஒரு மதத்தினரின் சொத்தை மற்ற மதத்தினர் வாங்கவோ விற்கவோ முடியாது என்பதுதான் இறுதி விளைவாக ஆகியது.

இச்சட்டம் கலவரங்கள் நடந்த இடத்திற்கு பொருந்துவதால், மற்ற மதத்தினர் பலர் இவ்விடங்களில் உள்ள சொத்துக்களை வாங்க முன்வருவதில்லை. யாரும் இங்கு சொத்துக்களை வாங்க விரும்புவதில்லை. ஆதலால் நாங்கள் வாங்குபவரை தேடி அலைவதை கைவிட்டுவிட்டோம். கலவரங்களுக்கு பின், பல குடும்பங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எண்ணுவதால் ஜுஹபுரா போன்ற சேரிகளில் தங்குகின்றனர்” என்கிறார் ஷாஹின் ஹுசைன். 2002, பிப் 28 -ல் நரோதா பாட்டியாவில் உள்ள தன் வீட்டை சூறையாடலுக்கும் நெருப்புக்கும் பலி கொடுத்தவர்.

படிக்க:
♦ இறுதித் தீர்ப்பு : 2002 குஜராத் இனப்படுகொலை ஆவணப்படம்
♦ யார் பயங்கரவாதிகள்? முசுலீம்களா, ஆர்.எஸ்.எஸ் இயக்கமா?

குடியிருப்பு, கல்வி, வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் சிறுபான்மைக்கு எதிரான பாகுபாடு துலக்கமாகத் தெரிகிறது. 2012 – 2013-ம் ஆண்டில் சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மாநில அரசு பயன்படுத்துவதில்லை என முடிவெடுத்தது. இதற்குக் காரணமாக கூறப்பட்ட வாதம் என்னவென்றால், இது பாகுபாட்டை மேலும் உருவாக்கும், அந்த நிதியைப் பெற தகுதி இல்லாதவர்கள் மத்தியில் மனப் புகைச்சலை உருவாக்கும் என்பதாகும். முஸ்லீம்களுக்கு எதிராக விஷத்தைக் கக்குவது தன்னுடைய தேசிய அரசியல் கனவை அருகில் கொண்டுவரவில்லை என்பதை மோடி உணர்ந்த நேரத்தில்தான் இப்படிப்பட்ட நயவஞ்சக முறைகள் முஸ்லீம்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டன.

2010-ல் சிட்டிசன் நகருக்கு சென்றேன், அவ்விடம் அகமதாபாத்தின் புறநகரில் உள்ள குப்பை கிடங்குக்கு அருகில் உள்ளது. நிவாரண முகாம்களில் வசித்து வந்த, கலவரத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு நிரந்தர அடைக்கலம் அளிக்க அக்குடியிருப்புகள் அவசரமாக அமைக்கப்பட்டு இருந்தன. ஆனால் பரிதாபமாக அக்குடியிருப்புகள் குடிசைகளாகவும், குப்பைக்கிடங்கிற்கு அருகிலும் இருந்தன. திறந்தவெளி கால்வாய்கள், சகதியான சாலைகள், தெரு விளக்கு இல்லாதது, தண்ணீர் பற்றாக்குறை நிறைந்த அப்பகுதியில் ஒரு மனிதன் வாழ முடியுமா என ஐயம் ஏற்படுகிறது.

சிட்டிசன் நகரில் வாழ்பவர்கள். அவர்களின் குடியிருப்பு அகமதாபாத்தின் குப்பை கிடங்கிற்கு அருகில் அமைந்துள்ளது. புகைப்படம் – அனுபமா கடகம்.

மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியான நரோதா பாட்டியா கலவரத்தில் தப்பிப் பிழைத்தவரான கத்தூனப்பா, சிட்டிசன் நகரின் ஒரு மூலையில் உள்ள வீட்டில் வசிக்கிறார். ஒன்பது ஆண்டுகளுக்கு முன் சிறிய குப்பைக் கூளங்களாக இருந்தவை இப்போது பெரிய மலை போல் காட்சி அளிக்கிறது. அங்கே அடிக்கும் துர்நாற்றம் தங்கள் மீதும் ஊடுருவியுள்ளதாக அவர் கூறுகிறார். நீர் முழுக்க அசுத்தப்பட்டுள்ளது, பல பேர் நுரையீரல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குடிவந்த 14 வருடத்தில் சிறிய அளவிலான மாற்றம் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்கிறார்.

“அவர்கள் (மோடி, அமித்ஷா) முன் என்னை நிறுத்துங்கள். அவர்களுடைய தேர்தல்கள் பற்றி நான் கூறுகிவேன். என்னுடைய புகைப்படம், முகவரியை வெளியிடுங்கள். தோட்டாக்களைக் கண்டு நான் அஞ்சவில்லை” என்று வெளிப்படையான கோபத்துடன் கூறுகிறார்.

“மிருகங்கள் கூட வாழ தகுதியற்ற சூழலில் எங்களை வாழ நிர்பந்தித்துள்ளனர். நாங்கள் குறைந்தபட்சம் சாகடிக்கப்படாமல் இருக்கிறோம். எங்கள் மீதான இந்த வெறுப்பும், கோபமும் ஏன் என்று புரிந்துகொள்ள முடியவில்லை. நாங்கள் அவர்களுக்கு என்ன செய்தோம்?” என கேட்கிறார் அப்பெண்.

“எங்களை வெறுப்பதற்கு முகலாயர்கள் நம் நாட்டை கொள்ளை அடித்ததையும், கோவில்களை அழித்ததையும் பற்றி அவர்கள் பேசுகிறார்கள். இந்த ஒரு காரணத்திற்காக தான் அவர்கள் எங்களை வெறுக்கிறார்கள். அவர்களுக்கு (காவிப்படை) நினைவூட்டுகிறேன். அவர்களுடைய வரலாறும் ஒரு நாள் எழுதப்படும். அந்த வரலாறும், முகாலயர்கள் பற்றி வரலாற்றாளர்கள் எழுதியதிலிருந்து வேறுபட்டதாக இருக்காது” என்கிறார் குரேஷி


கட்டுரையாளர் : அனுபமா கடகம்
தமிழாக்கம் : 
– தருண்
நன்றி : ஃப்ரண்ட் லைன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க