ஞசை, திருவாரூர் மாவட்டங்களில் வாழ்ந்த விவசாயிகளின் விடிவெள்ளியாக திகழ்ந்த தியாகி களப்பால் குப்புசாமியின் வரலாறு, அப்பகுதியின் செங்கொடி வரலாற்றோடு இணைந்தது. நிலப்பிரபுத்துவக் கோட்டையாக திகழ்ந்த தென்பறை, களப்பால் பகுதிகளில் வாழ்ந்து வந்த விவசாயக் கூலிகளை இணைத்து சங்கம் அமைக்கவும், கொடூரமும், வக்கிரமும் நிறைந்த பண்ணையார்களுக்கு எதிராக போராடவும் பெரிதும் காரணமாக இருந்தவர் களப்பால் குப்பு.

சமூக நீதிக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் போராடும் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய போராளி தோழர் களப்பால் குப்பு.

களப்பாலை சேர்ந்த அருணாசலம்-சமுத்திரத்தம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் குப்புசாமி. களப்பால் கிராமத்தின் தலையாரியாகவும் இருந்த அருணாசலத்திற்கு தமது மகனை படிக்க வைக்க ஆசை. ஆனால் விவசாய கூலிகளின் குழந்தைகளுக்கு பள்ளியில் இடம் கிடையாது. பண்ணையாளுக்கு குழந்தை பிறந்தவுடன் பண்ணை முதலாளிக்கு தெரிவிக்க வேண்டும். அக்குழந்தை, ஆறு வயதில் மாடு மேய்க்கவும், பத்து வயதில் சாணம் அள்ளவும், பதினைந்து வயதில் வண்டி ஓட்டவும் வேண்டும்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : வாட்டாக்குடி இரணியன் || சுபாஷ் சந்திரபோஸ் || சு. கருப்பையா
♦ நூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்

அதனால் தனக்கு மகன் பிறந்ததையே மறைத்து விடுகிறார். தலையாரியின் மகன் என்பதால் குப்புசாமியை பள்ளியில் சேர்த்துக் கொள்கிறார் வாத்தியார். ஆனால் இவன் வாத்தியாரையோ, மற்ற உயர் சாதி குழந்தைகளையோ தொட்டுவிடக்கூடாது என்பதால் திண்ணையில் நின்று தான் படிக்க வேண்டும். சிறிய தவறு தெரிந்தாலும் பிரம்படிதான். எப்படியோ ஆறாம் வகுப்பு வரை படித்து விடுகிறான் குப்பு. அதன் பின்பு பண்ணையார் தொப்பையா முதலியாரின் தலையீட்டால் படிப்பை தொடரமுடியாத நிலை ஏற்படுகிறது. அவர் வீட்டில் பண்ணையாளாகி விடுகிறான்.

ஏழை சூத்திர கூலிகளுக்கு முதலாளி பண்ணை மானியம் போல்ட் ஐயரால் ஏற்படும் தொல்லைகள் சொல்லி மாளாது. ஒரு நாள் அந்தக் கொடுமைகளைக் கண்டு கொதித்து எழும் குப்பு , தன்னை அடிக்க வரும் பண்ணை ஆள் காதர் பாட்சாவின் சாட்டையை பிடுங்கி அவரை வெளுத்து வாங்குகிறான். ஆடிப்போய் விடுகிறது பண்ணை. அதனால் பண்ணையாரின் பிடியிலிருந்து தப்பிக்க குப்பு களப்பாலை விட்டு வெளியேறுகிறான்.

களப்பால் குப்புவின் குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை, அவர் முதலில் ஓவரூரை சேர்ந்த குப்பம்மாளை திருமணம் செய்கிறார்; ஆனால், சிறிது காலத்திற்கு பிறகு அவர் குப்புவைவிட்டு பிரிந்து சென்று விடுகிறார். அதன் பின்பு தலை ஞாயிறுவை சேர்ந்த வாஞ்சாலையை திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு சோலையம்மாள் என்ற மகளும், கணேசன், பக்கிரிசாமி மற்றும் சிவஞானம் என்ற மகன்களும் பிறக்கிறார்கள்.

அந்தக் காலகட்டத்தில், அதாவது, 1943-ம் ஆண்டில் தான் விவசாயிகள் சங்கம் தஞ்சைப் பகுதிகளில் வேரூன்றத் தொடங்கியது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள்; வேதபுரம் ரெங்கசாமி, நரசிங்கபுரம் கொள்கை வீரர் பி.வெங்கடேச சோழகர் ஆவார்கள். அதன் பின்பு, தோழர் பி.சீனிவாசராவின் வருகை விவசாயிகளின் போராட்டத்தை எழுச்சியுடன் வழிநடத்தியது. அவ்வாறு தென்பறையில் துவக்கப்பட்ட விவசாயிகள் சங்கத்தில் சேர்ந்து தமது சமூகப் பணியைத் துவக்கினார் களப்பால் குப்பு.

விவசாயச் சங்கத்தின் வீரம்செறிந்த போராட்டத்தினால் விவசாயக் கூலிகளின் மீது தொடுக்கப்பட்ட சவுக்கடி, சாணிப்பால் திணிப்பு ஒழிந்தது. அதனால், தஞ்சை மாவட்டத்தில் இருந்த கூலி உழவர்கள், பண்ணையாட்கள், குத்தகையாளர்கள், வார சாகுபடியாளர்கள், சிறுசிறு விவசாயிகள் ஆகியோர்களுக்கு தாரக மந்திரமாக “விவசாயச் சங்கம்” இருந்தது. களப்பால் குப்புவின் பங்களிப்பு சங்கத்திற்கு மிகப்பெரிய வலிமையைச் சேர்த்தது.

தோழர் பி.சீனிவாச ராவ் கலந்து கொண்ட விவசாய சங்க கூட்டங்களில் தேன் கூட்டில் மொய்க்கும் தேனீக்களை போல் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடினார்கள். அவரின் ஒவ்வொரு வார்த்தைகளும் மக்களுக்கு புத்துணர்ச்சியை அளித்தது. “சாட்டையால் அடிக்காதே! சாணிப்பாலை நிறுத்து ! அடித்தால் திருப்பி அடிப்போம்! “வாடி போடி” என்றால் “வாடா போடா” என்போம் என்ற வார்த்தைகள் பண்ணையார்களின் மனதில் பயத்தை உருவாக்கின.

களப்பால் குப்பு , சீனிவாசராவை வைத்து பல்வேறு கூட்டங்களை நடத்தி வைத்தார். அதனால் அப்பகுதியில் எப்போதும் பதட்டம் நிலவியது. பிரச்சினையை முடிவிற்கு கொண்டுவர களப்பால் குப்புவை கொலை செய்ய திட்டமிட்டு பண்ணையார்கள் கூலிப்படையை நியமித்தனர். ஆனால், ஒவ்வொரு முறையும் தமது வீரத்தால் தப்புகிறார் குப்பு. ஒரு முறை இவரை கொலை செய்ய வந்த நான்கு கூலிப்படையினருடன் பேசி, அவர்களை மனம் மாற செய்வதும், அவர்கள் குப்புவை பாதுகாப்பாக வீட்டில் விட்டு செல்வதும் களப்பால் குப்புவின் விவேகத்திற்கு அடையாளமாக இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து களப்பாலில் பிரமாண்டமான ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார் குப்பு. அதனை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், குப்புவிற்கு தணடனை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிந்தித்த பண்ணையார்கள் கூலிப்படையை ஏவி குப்புவின் மூத்த மகன் கணேசனின் கையில் வெட்டி விடுகிறார்கள் (இவர் பிற்காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினராக பணியாற்றி இருக்கிறார்). செய்தி கேள்விப்பட்ட குப்புவின் மனைவி அதிர்ச்சியிலும், ஏற்கனவே இருந்த பெரியம்மை பாதிப்பினாலும் இறந்து விடுகிறார்.

தகவல் அறிந்த குப்புசாமி மிகவும் துயரமடைந்தார்; ஆனாலும் ஒரேயடியாக குலைந்து போகவில்லை. “அவள் இறந்து விட்டாளா?” நொடி நேரம் அவர் அமைதியாக நின்றார்; பிறகு தெளிவாகவும் உறுதியாகவும் சொன்னார்: ” நான் வந்து என்ன செய்யப் போகிறேன்? நீங்களே அவளை அடக்கம் செய்யுங்கள்!” என்றார். அப்படிப்பட்ட மாவீரத்தையும், மன எழுச்சியையும் ஒரு பண்ணைத் தொழிலாளியின் மகனுக்கு செங்கொடிச் சங்கம் கொடுத்திருந்தது. இத்தகைய நெஞ்சுரம் கொண்ட இடதுசாரி தோழன் களப்பால் குப்பு.

இறுதியாக குன்னியூர் கிராமத்தில் சேரிவாசிகள் பண்ணையாட்களின் தாக்குதலுக்கு உள்ளாகி வீடுகளை இழந்தார்கள்; பெண்கள் கேவலப்படுத்தப்பட்டார்கள். பொறுமை கடந்த சேரி மக்கள் வெகுண்டெழுந்தனர்; குண்டர்களை எதிர்த்து மோதினர். அந்தக் கைகலப்பில் கூலிப்படையினர் இருவர் இறந்தனர். ஆனால் கொலைப்பழி களப்பால் குப்புவின் மீது விழுந்தது. தஞ்சை அமர்வு நீதிமன்றம் அவருக்கு “தூக்குத் தண்டனை” விதித்தது.

படிக்க :
♦ சங்க பரிவாரத்தின் வரலாற்றுப் புரட்டுகளை தோலுறித்த வரலாற்றாசிரியர் டி.என்.ஜா மறைந்தார் !

♦ பட்ஜெட் 2021 : விவசாயத்திற்கு ‘பெப்பே’ காட்டிய மோடி அரசு !

களப்பால் குப்பு திருச்சி சிறையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கான “கண்டம்” எனப்படும் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுதலை செய்ய கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. சிறையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

அந்தச் சூழ்நிலையிலும் குப்புவை கொல்லத் திட்டமிட்ட பண்ணை முதலாளிகள் மற்றும் போலீசின் கூட்டுச் சதியால, அவருக்கு மருந்து கொடுக்கும் சாக்கில் விஷமுள்ள மாத்திரைகள் இராமன் என்ற கைதியால் கொடுக்கப்பட்டது. அதனால் 18/04/1948-ஆம் தேதி இரத்தவாந்தி எடுத்து களப்பால் குப்பு இறந்தார்; அந்த எரிமலையின் வாழ்வு சிறைச்சாலை கொட்டடி மரணத்தில் முடிந்தது.

கி.பி.1911-ஆம் ஆண்டு பிறந்த களப்பால் குப்பு, இந்த மண்ணில் 37 ஆண்டுகளே வாழ்ந்தார். அவரின் வாழ்வும், தியாகமும் வருங்கால சந்ததிகளுக்கு பாடமாகவே இருக்கிறது. களப்பால் குப்புவின் வாழ்க்கை கிராமப்புறங்களில் மட்டுமல்லாமல் நகரங்களிலும் பேசப்பட வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பண்ணை முதலாளிகளுக்கு எதிரானப் போராட்டங்கள் தேவை இல்லைதான்.

ஆனால் சாதியமும், ஆணவக் கொலைகளும், மதவாதமும் மீண்டெழுந்துள்ள இத்தருணத்தில் ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களைப் பாதுகாக்க களப்பால் குப்புசாமி போன்ற தோழர்கள் நம் நாட்டிற்கு அதிகம் தேவைப்படுகிறார்கள்.

தமிழ் மண்ணின் ஆகச் சிறந்த ஒரு போராளியை அடையாளம் காட்டிய எழுத்தாளர் வாய்மைநாதனுக்கும், நூலை வெளியிட்ட NCBH நிறுவனத்திற்கும் நன்றி!.

தியாகி களப்பால் குப்பு
பிறப்பு : 1911;
இறப்பு: 18/04/1948

நூல் : தியாகி களப்பால் குப்பு
நூல்ஆசிரியர் : வாய்மைநாதன்
வெளியீடு : NCBH
பக்கங்கள் :147
விலை : ரூ 100/-

நூல் அறிமுகம் : சு. கருப்பையா


disclaimer