பார்ப்பனிய சனாதனத்தையும் சங்க பரிவாரங்களின் பொய் புரட்டுகளையும்  அம்பலப்படுத்திய பேராசிரியர் டி.என்.ஜா கடந்த 04-02-2021 அன்று தனது 81-வது வயதில் இயற்கை எய்தினார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வாதத்தால் செவித்திறனை  பெருமளவில் இழந்திருந்தாலும், தனது மூச்சு வரை சங்க பரிவாரங்களின் வரலாற்றுத் திரிபுகளுக்கு எதிரான போராட்டத்தை நடத்தி வந்தார்.

பீகாரில் பிறந்த டி.என். ஜா, தனது உயர்கல்வியை கல்கத்தா பல்கலைக்கழகத்தில் படித்து முடித்துவிட்டு, டெல்லி பல்கலையில் வரலாற்றுப் பேராசிரியராக பணிக்குச் சேர்ந்தார்.

படிக்க :
♦ யாருக்கான பட்ஜெட் : உரம், உணவு, பெட்ரோலிய மானியங்களில் வெட்டு !
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் !

வரலாறு குறித்த ஆய்வை தேசியவாதத்தின் பிடியிலும், இந்துத்துவத்தின் பிடியிலும் இருந்து விடுவித்தவர்களில்  டி.என். ஜா முக்கியமானவர். பிரபல வரலாற்றாசிரியர் ஆர்.எஸ். சர்மாவிடம் பயிற்சி பெற்ற இவர், இந்தியாவின் பண்டைய வரலாறு குறித்த ஆய்வை வெறுமனே மன்னர்கள் மற்றும் போர்களின் வரலாறாக  இருந்ததில் இருந்து விடுவித்து அதனை மக்களின் சமூகப் பொருளாதார வாழ்வியலின் வரலாறாக வெளியுலகிற்குக் கொண்டுவந்தவர்.

இளம்பருவத்தில் கிடைக்கப் பெற்ற மார்க்சியப் பார்வையின் காரணமாக,  பண்டைய இந்திய சமூகத்தை வரலாற்றுப் பொருள்முதல்வாதப் பார்வையில் பகுத்தாய்ந்து அதனடிப்படையில் தனது வரலாற்றுப் படைப்புகளை தந்தவர் டி.என்.ஜா. இன்றளவுக்கும் இவரது பண்டைய இந்தியா குறித்த ஆய்வு நூல்கள் பண்டைய இந்தியா குறித்து வெளிவந்த ஆய்வு நூல்களில் தவிர்க்க முடியாதவையாகவே இருக்கின்றன.

சங்க பரிவாரங்கள் பசுவை புனிதமாக்கி, தலித் மற்றும் முசுலீம் மக்களை இந்து விரோதிகளாகச் சித்தரித்து வந்த நிலையில், பண்டைய இந்தியாவில் பசுவின் பாத்திரத்தை மறுக்க முடியாத வரலாற்று மற்றும் தொல்லியல் தரவுகளில் இருந்து எடுத்தியம்பி இவர் எழுதிய “பசுவின் புனிதம்”  (The Myth of Holy Cow) எனும் நூல் இன்றளவும் பலராலும் போற்றப்படும் நூலாகும்.

பாபர் மசூதி இருந்த இடத்தில் எந்த ஒரு கோவிலும் இருந்ததற்கான ஆதாரமும் இல்லை என்பதை ஆதாரப்பூர்வமாக ஆய்வு செய்து எடுத்துக் கூறியதில் இவரது பங்கு முக்கியமானது.

“ராமஜென்மபூமி – பாபர் மசூதி : தேசத்திற்கான ஒரு வரலாற்றாளனின் அறிக்கை”  என்ற ஆய்வறிக்கையை பிரபல வரலாற்றாய்வாளர்களான சூரஜ் பன், அதர் அலி, ஆர்.எஸ். சர்மா ஆகியோருடன் இணைந்து எழுதி வெளியிட்டார். அனைத்து தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில் இந்த ஆய்வை மேற்கொண்டு ஆய்வறிக்கை வெளியிட்டனர்.

டி.என்.ஜா.

அயோத்தியில் முதன் முதலில் அகழ்வாய்வு செய்தவரான முன்னாள் தொல்லியல் ஆய்வுத்துறைத் தலைவர் பி.பி.லால், அந்த அகழ்வாய்வு குறித்த தனது நிலைப்பாட்டை, 1990-ம் ஆண்டு சங்க பரிவாரக் கும்பல் ராமர் கோவில் பிரச்சினையை பூதாகரமாகக் கிளப்பத் துவங்கிய சமயத்தில் மாற்றிக் கொண்டு, பாபர் மசூதி இடத்தில் கோவில் இருந்ததற்கான வாய்ப்புகள் இருந்ததாகக் கூறியதை தனது இறுதி நாள் வரை வன்மையாகக் கண்டித்து விமர்சனம் செய்தார் டி.என்.ஜா.

தனது வாழ்நாளில் இந்துத்துவ வலதுசாரி கும்பலை கடுமையாக எதிர்த்தவர். இக்கும்பலின் கையில் இந்தியா சிக்கினால், இவர்கள் இந்தியாவை வெகுகாலத்திற்குப் பின்னோக்கி இழுத்துச் சென்று விடுவார்கள் என்பதில் உறுதியாக இருந்தார் டி.என்.ஜா.

சங்க பரிவாரத்தின் வரலாற்றுத் திரிபுகளை அம்பலப்படுத்திய வரலாற்றாசிரியர்களில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெற்றவர் டி.என்.ஜா. சங்க பரிவாரத்தின் எந்த வித மிரட்டல்களுக்கும் அடிபணியாமல் இறுதிவரை தாம் எடுத்துக் கொண்ட வரலாற்று ஆய்வுத்துறைக்கும் மக்களுக்கும் நேர்மையாக இருந்த பேராசிரியர் டி.என்.ஜா-வின் இழப்பு இந்திய உழைக்கும் மக்களுக்கான பேரிழப்பே ஆகும் !

தொடர்புடைய பதிவுகள் :

♦ நூல் அறிமுகம் : பசுவின் புனிதம்
♦ பாபர் மசூதி விவகாரம் : வரலாற்றாசிரியர் டி. என். ஜா | நேர்காணல்
பாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்!
சகிப்பின்மையே பண்டைய பார்ப்பனிய இந்தியாவின் வரலாறு ! நூலறிமுகம்


கர்ணன்
செய்தி ஆதாரம்
: The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க