தூப்புக்காரி என்ற இந்த நாவல், ஒரு துப்புரவுத் தொழிலாளியின் துயரம் நிறைந்த கதையைச் சொல்கிறது. ‘தூப்புக்காரி’யான கனகத்தின் மகள் பூவரசியும், சூழ்நிலை நிர்பந்தத்தின் காரணமாக ‘தூப்புக்காரி’யாகவே வாழ வேண்டிய சூழலை இந்தச்சமூகம் அவளுக்கு கொடுக்கிறது என்பதை இந்த நாவலில் மிகவும் எதார்த்தமாக சொல்லியிருக்கிறார் நாவலாசிரியர் மலர்வதி.

கனகம், பூவரசி, ரோஸ்லின் மற்றும் மாரி ஆகிய பாத்திரப் படைப்புகளின் மூலம் துப்புரவுத் தொழிலாளிகளின் துயர வாழ்க்கையை நம் மூளைக்குள் செலுத்தி விடுகிறார் மலர்வதி. குறிப்பாக, மாரி மலக்குழிகளுக்குள் இறங்கும் போதும், கழிவறைகளில் மலத்தை சுத்தப்படுத்தும் போதும் ஏற்படும் நாற்றம் நமது நாசித்துவாரத்திற்குள் நுழைந்து விடுகிறது. மலர்வதியின் வார்த்தைகளில் உயிர் இருப்பதை நாவலை வாசிக்கையில் உணரமுடியும்.

நாடார் சாதியைச் சேர்ந்த கனகம், தனது கணவனின் மருத்துவச் செலவிற்காக ஏற்பட்ட கடனை அடைப்பதற்காக அந்த மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளியாக சேருவதும், அவளுடைய மருத்துவச் செலவினை அடைக்க பூவரசியும் துப்புரவுத் தொழிலாளியாக மாறுவதும் விளிம்புநிலை மக்களின் துயரத்தை வெளிப்படுத்துகிறது. சக்கிலிய சமூகத்தில் பிறந்த மாரி, தன் பெண்ணைக் கேட்டதற்காக வருந்தும் கனகம், பிறகு தங்களுக்கு அவனே துணை என்று புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ளும்போது உயர்ந்து நிற்கிறாள்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : தியாகி களப்பால் குப்பு || வாய்மைநாதன் || சு.கருப்பையா
♦ நூல் அறிமுகம் : வாட்டாக்குடி இரணியன் || சுபாஷ் சந்திரபோஸ் || சு. கருப்பையா

மனோவிற்கும், பூவரசிக்குமான காதல் இயல்பாக வந்து, அவர்கள் இணைந்து, பின்பு உதிர்ந்து விடுகிறது. அழகான மனோவின் மீது ஏற்பட்ட காதலால் பூவரசிக்கு அழுக்கானவனாகத் தெரியும் மாரி, மனோ அவளைக் கைவிட்ட பின்னரும் அவளை ஏற்றுக்கொள்ளும் போது மனதிலும் செயலிலும் பேரழகனாக உயர்ந்து நிற்கிறான்.

இந்த நாவலுக்கு மாரியே உயிர் கொடுக்கிறான்.

காதலனால் கைவிடப்பட்டு கர்ப்பவதியாகி கலங்கி நிற்கும் பூவரசியின் குழந்தைக்கு தந்தையாகி, அவளை ஏற்றுக் கொள்ளும்போது நாம் நெகிழ்ந்து விடுகிறோம். அந்தக் குழந்தையை, நன்றாக படிக்க வைத்து கழிவுகளை நீக்கும் இயந்திரம் கண்டுபிடிக்க வைத்து, தம் போன்ற துப்புரவுத் தொழிலாளிகளின் இழிந்த வாழ்க்கையை போக்குவோம் என்று வைராக்கியம் கொள்வது அவனின் அழகான கனவு. ஆனால், கனவு நிறைவேறாமலே மரித்துப் போகிறான் மாரி.

மாரியின் இறப்பு பூவரசிக்கு துன்பத்தைத் தந்தாலும், அவனது தன்னம்பிக்கை தரும் வார்த்தைகளின் மூலம் அவள் வாழ்கிறாள்; அவனது கனவை நினைவாக்கும் விதமாக தமது மகளை வளர்க்க வேண்டும் என்று உறுதி கொள்கிறாள்.

இந்த நாவல் என்னுள் மறைந்திருந்த பல நினைவுகளைக் கிளறிவிட்டு வேதனையை உருவாக்கிவிட்டது. 1985-ம் ஆண்டில், நான் பணிபுரிந்த ஒரு நடுத்தரமான கிராமத்தில் நவீன கழிப்பறைகள் கிடையாது; மலத்தை கையில் எடுத்து சுத்தப்படுத்தும் கழிப்பறைகளே இருந்தது. தினமும், காலை வேளையில், துப்புரவுப் பணியாளர்கள் வீட்டின் பின்புறமாக வந்து, “ஐயா, தோட்டி வந்திருக்கிறேன்” என்று சத்தம் கொடுத்து மலத்தைக் கூடைகளில் அள்ளிக் கொண்டு செல்வதும், சாப்பிட ஏதாவது கொடுங்கள் என்று கூக்குரலிட்டதும் ஞாபகம் வந்து என காதுகளுக்குள் இப்போது வலிகளைத் தருகிறது. அந்த குரல்கள் கனகத்தின் குரலாகவே எனக்குத் தெரிகிறது.

மனித மலத்தை கைகளால் அள்ளும் அவலம் இந்தக் கேடுகெட்ட சமூகத்தில் இன்றும் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது

இது ஒரு “காத்திரமான தலித் நாவல்” என்று எழுத்தாளர் பொன்னீலன் தனது முன்னுரையில் கூறியிருக்கிறார். இதை கடுமையாக மறுக்கிறேன். எழுத்தில், தலித் இலக்கியம், தலித் எழுத்தாளர்கள் என்றெல்லாம் எதுவுமில்லை. அப்படி அழைப்பது அவர்களை தலித் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று சுட்டிக் காட்டுவதாகவே கருதுகிறேன்.

அப்படியென்றால், எழுத்தாளர்களின் சாதியை அடையாளப்படுத்தும் விதமாக இது பிராமணிய இலக்கியம்; இது முதலியார் இலக்கியம்; இது வேளாளர் இலக்கியம்; பிள்ளைமார் இலக்கியம் மற்றும் நாயக்கர் இலக்கியம் என்று பெயரிட்டு அளிப்பதில்லையே ஏன்?. தலித் இலக்கியம் என்று அழைப்பதும், ஒரு வகையில் சாதியத்தின் வெளிப்பாடுதான் என்று நம்புகிறேன்.

மலர்வதி, இந்த நாவலின் மூலம் “துப்புரவுத் தொழிலாளிகள்” என்ற விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை மிகச் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார் என்று உறுதியாக கூறலாம். மனித மலத்தை மனிதனே அள்ளும் இந்தத் துயர் துடைக்க மலம் அள்ளும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதன் அவசியத்தை மாரியின் மூலம் நேர்மறையாக பேசுகிறார் நாவலாசிரியர்.

அறிவியல் வளர்ச்சியடைந்துள்ள இந்த காலகட்டத்திலும் கழிவறையை சுத்தம் செய்வதற்கும் , மலக்குழியை அள்ளுவதற்கும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்படாமலும், நடைமுறைக்குக் கொண்டுவரப்படாமலும், நம் சகமனிதனின் உயிரை பணயம் வைப்பதற்குள் சாதீயம் ஒளிந்திருக்கிறது. தமது இழிநிலையைச் சுமந்து கொண்டும், உயிரைப் பணயம் வைத்தும் இத்தொழிலில் ஈடுபடும் சக மனிதர்களை பலரும் மதிப்பது கூட இல்லை.

மலர்வதியின் வார்த்தையிலிருந்து சொல்வதென்றால், “இந்த ஒலகத்தைச் சுத்தப்படுத்துறதுனாலே தானே நீ அழுக்காகி போகிற. சாக்கடையில எறங்கி, எறங்கி நாத்தம் பிடிச்சி போறியே, ஓங்காலில் யாரங்கிலும் இன்னிக்கும் வரைக்கும் விழுந்துருப்பாங்களா மாரி. மதிப்புமிக்க ஒன் பாதங்களை யாராவது தொட்டாங்களா. இந்த ஒட்டு மொத்த ஒலகம் சார்பா ஓங்காலில் நான் விழுறேன்னு நினைச்சுக்க. ஒதுக்கி ஒதுக்கி அழுக்கன் அழுக்கன் என புறந்தள்ளி போட்டிருக்கே முழு உலகம் சார்பா ஒங்காலிலே விழுறேன்னு நினைச்சிக்க ..” என்று குறிப்பிடுகிறார். அவரின் வார்த்தைகளில் வசீகரம் இருக்கிறது; கவித்துவம் இருக்கிறது; போலித்தனம் இல்லை, சொல்வதை தெளிவாகச் சொல்கிறார். அதனால், தமிழ் இலக்கிய உலகில் இவருக்கான தனித்த இடம் காத்திருக்கிறது.

துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையை பேசிய தகழியின் “தோட்டியின் மகன்”, அறிவழகனின் “கழிசடை” ஆகிய நாவல்களின் தொடர்ச்சியாகவே இந்த நாவலைப் பார்க்கிறேன். ஆனால், அந்த நாவல்கள் சொல்லாத பெண் மனதின் வலியை இந்த நாவல் சொல்கிறது. நேசித்தவனை கரம்பிடிக்க முடியாமலும், அரவணைத்தவனை இழந்தும் வலிகளைச் சுமந்த பூவரசி, ஒரு வலிமையான பெண்ணாக உருமாறுகிறாள்.

தூப்புக்காரி.. உங்களை அழவைக்கிறாள்; சிந்திக்க வைக்கிறாள்; மனதை பக்குவப்படுத்துகிறாள்.

சாகித்திய அகாடமியின் யுவபுரஷ்ஹார் விருது பெற்ற நாவல்

நூல் : தூப்புக்காரி
நூல்ஆசிரியர் : மலர்வதி
வெளியீடு : மதி வெளியீடு
பக்கங்கள் :147
விலை : ரூ 120/-

நூல் அறிமுகம் : சு. கருப்பையா 

 

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க