வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கை தண்டிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது : ஓய்வுபெற்ற ஆட்சிப் பணி அதிகாரிகள் கூட்டறிக்கை !

ந்துத்துவ அமைப்புகள் மற்றும் அமித் ஷா தொடர்பான பல வழக்குகளில் அவர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங் மற்றும் ஆனந்த் குரோவர் ஆஜராகி வழக்காடி வருகின்றனர்.

இவர்கள் நடத்தும் Lawyers Collective என்ற அமைப்பும் பல்வேறு மனித உரிமை தொடர்பான வழக்குகளை நடத்தி வருகிறது. இந்திரா ஜெய்சிங், ஆனந்த் குரோவர் மற்றும் அவர்களுடைய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பை முடக்கும் விதமாக மோடி அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

ஏற்கனவே வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், அண்மையில் சிபிஐ சோதனையை நடத்தியது. இதைக் கண்டிக்கும் விதமாக ஓய்வுபெற்ற ஆட்சிப்பணி அதிகாரிகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அரசுடன் கருத்து வேறுபடுகிறார்கள் என்பதற்காக மனித உரிமை பாதுகாவலர்களை ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய நபர்கள் ‘அர்பன் நக்ஸல்’ என முத்திரை குத்துவதாகவும் கூட்டறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்,

“அனைத்து இந்திய மற்றும் மத்திய ஆட்சிப் பணி ஓய்வு பெற்ற பணியாளர்களான நாங்கள் எந்த அரசியல் கட்சியையும் சேராதவர்கள்; இந்திய அரசியலமைப்பின் மீது உறுதியான நம்பிக்கை உள்ளவர்கள். மனித உரிமை பாதுகாவலர்களையும் அரசின் கொள்கைகளை எதிர்ப்பவர்களையும் தண்டிக்கும், அச்சுற்றுத்தும் வகையில் சமீபத்தில் ஆளும் அரசின் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதை நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம்.

இந்திரா ஜெய்சிங் மற்றும் ஆனந்த் குரோவர்.

அதன் ஒருபகுதியாக மனித உரிமைகள் வழக்கறிஞர்களும் மூத்த வழக்கறிஞர்களுமான இந்திரா ஜெய்சிங் மற்றும் ஆனந்த் குரோவர் ஆகியோரின் அலுவலகங்களிலும் வீடுகளிலும் ஜூலை 11, 20019 அன்று சிபிஐ சோதனை நடத்தியிருக்கிறது.

வழக்கறிஞர்கள் கூட்டமைப்பும் அதன் அதை நிறுவிய அறங்காவலர்களுமான இந்திரா ஜெய்சிங் மற்றும் ஆனந்த் குரோவர் பெண்களின் உரிமைகள், பாலின சமத்துவம், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஆகியவற்றை முன்னெடுக்கக்கூடியவர்கள். சட்டத்தின் ஆட்சிக்காக பல தசாப்தங்களாக உறுதியுடன் போராடி வருகிறார்கள்.

இந்திரா ஜெய்சிங், மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞராக இருந்தவர். குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தை நிறைவேற்றியதிலும் நடைபாதை குடியிருப்பாளர்களின் தங்குமிட உரிமைக்கான அங்கீகாரம் பெற்றதிலும், தெருவியாபாரிகளின் உரிமை உள்ளிட்ட பல்வேறு சமூக நீதி தொடர்பான விசயங்களில் முன்னோடியாக இருந்தவர்.

ஆனந்த் குரோவர், உடல்நலம் மற்றும் மலிவு விலை மருந்துகளை அனைவரும் பெறுவதற்கான வாழ்நாள் பணிகளைச் செய்துள்ளார். இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377-ஐ நீக்குவதற்கான வழக்கை வழிநடத்தியும் வழக்காடியும் உள்ளார். ஆகஸ்டு 2008 முதல் ஜூலை 2014 வரை சுகாதார உரிமம் குறித்த ஐ.நா. -வின் சிறப்பு அறிக்கையாளர் என்கிற மதிப்புமிக்க பதவியையும் இவர் வகித்துள்ளார்.

படிக்க:
♦ வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் குரோவரை பழிவாங்கும் மோடி அரசு !
♦ நாட்டின் சக்திவாய்ந்த நபருக்கு எதிராக நின்றதுதான் சஞ்சீவ் பட் செய்த ஒரே குற்றம் !

ஜெய்சிங், குரோவர் ஆகிய இருவரும் முக்கியமான அரசியல் விசயங்களிலும், குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டப்பட்டிருந்த சொராபுதீன் கொலைவழக்கில் வாதாடியவர்.

இத்தகைய பின்னணியில், இவர்களுடைய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் அலுவலகத்திலும், அவர்களுடைய வீடுகளிலும் சிபிஐ சோதனை நடத்தியிருப்பது பழிவாங்கும் நடவடிக்கையாக, மனித உரிமை பாதுகாவலர்கள் மீது ஏவப்பட்டிருக்கும் அதிகார துஷ்பிரயோகமாகும். இதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்.

வழக்கறிஞர் கூட்டமைப்பின் மீது நிதி சட்டங்களை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் தற்போது நடந்து வருகிறது. ஊடகங்களில் வந்த செய்தியின் படி மும்பை உயர்நீதிமன்றம் ஜனவரி 2017-ஆம் ஆண்டு, உள்நாட்டு மற்றும் ஃபெரா அல்லாத வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதை நீக்குவதாக ஆணையிட்டது.

மேலும் அது வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம், தனிநபர்கள் அல்லது அமைப்புகளின் செயல்பாட்டைக் கட்டுபடுத்த ஒரு அரசுக்கு அதிகாரம் வழங்காது எனவும் சொன்னது. ஆனால், அதற்கு பதிலாக தொடர்புடையவர்களை மவுனிக்க வைக்கும் வகையில் அரசு புதிய தாக்குதலைத் தொடுத்திருக்கிறது.

மேற்கண்ட சோதனைகள், கண்டுகொள்ளப்படாமல் விடக்கூடிய சம்பவங்கள் அல்ல. கடந்த ஓரிரு மாதங்களாக, தற்போதைய அரசின் கொள்கைகளை எதிர்ப்பவர்கள் மீது இதுபோன்ற தொடர்ச்சியான தாக்குதல்கள் தொடுக்கப்படுவதைப் பார்க்கிறோம்.

ஆளும் அரசுடன் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ்.இன் அதிகம் தெரியாத துணை அமைப்பு ஒன்று, இந்தியாவின் மதிப்பிற்குரிய சில சமூக இயக்கங்களைச் சேர்ந்த அருணா ராய், நிகில் டே, சங்கர் சிங் போன்றோரை ‘அர்பன் நக்ஸல்’ என சான்றிதழ் அளிக்கிறது. எளிய மனிதர்களுக்காக உழைப்பதில் தங்கள் வாழ்நாளை கொடுத்த மரியாதைக்குரிய நபர்கள் அவர்கள்.

பீமா கொரேகான் சம்பவத்துக்குப் பிறகு ‘அர்பன் நக்ஸல்’ வழக்கில் பத்து மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு, ஒரு வருடத்துக்கும் மேலாக, பிணை வழங்கப்படாமல் சிறையில் உள்ளனர். இந்த குற்றச்சாட்டுக்கு அடிப்படையாக அமைந்த குறிப்பிட்ட அந்தக் கடிதங்களின் நகல்களைக்கூட அவர்களுக்கு வழக்கவில்லை. சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் மதிப்பு மிக்க அடிப்படை அல்லவா?

மிக சமீபத்தில் அசாம் நிர்வாகத்தால், 10 மூத்த மற்றும் இளம் பெங்காலி மொழி பேசும் முசுலீம் கவிஞர்கள் கவிதை எழுதி தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்ததற்காக கிரிமினல் குற்றச்சாட்டாக்கு ஆளாகியுள்ளனர். கருப்பின, தலித், மூன்றாம் பாலின கவிதைகள் போல, தேசிய குடிமக்கள் பதிவேடு காரணமாக இன்னலுறும் மக்களின் துயரங்களை சொல்வதற்காக இவர்கள் தங்களுடைய போராட்ட கவிதைகளுக்கு ‘மியா கவிதைகள்’ என பெயரிட்டுள்ளனர். வெறுப்புணர்வை துண்டுவதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு, பல ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டியிருக்கும் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

மனித உரிமை பாதுகாவலர்கள், எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துகிறவர்கள், கவிஞர்கள் மீதான தாக்குதலை நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம். எதிர்ப்புணர்வும் கருத்துரிமையும் எந்தவொரு ஜனநாயகத்தின் ரத்த நாளங்களாகும். அரசு அதிகாரத்தின் நிறுவனங்களைப் பயன்படுத்தி இத்தகைய குரல்களை மவுனமாக்கும் விதமாக சுறுசுறுப்பாக நடக்கும் முயற்சிகள் குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம்.

இது பயம் மற்றும் மிரட்சியால் ஆள நினைக்கு முயற்சியாகத் தெரிகிறது. இது ரவீந்திரநாத் தாகூரின் ‘எங்கே பயமில்லாத மனம் இருக்கிறதோ, அங்கே தலை நிமிர்ந்திருக்கும்’ என்கிற கனவை பின்னோக்கி இழுப்பதாக உள்ளது.

படிக்க:
♦ தொழிலாளர் வாழ்க்கை : அமேசான் தொழிலாளர் வேலை நிறுத்தம் !
♦ பாசிசத்தின் நெருக்கடிகளும் உட்கட்சிப் போராட்டங்களும் !

தங்கள் மனசாட்சியின் குரல்களை பின்பற்றும் அனைவருடனும் தங்களுடைய வழியில் உண்மையைப் பேசுபவர்களுடனும் நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம். அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர்களின் கருத்து வேறுபாட்டிற்கான இடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் கோருகின்றோம்.” என தெரிவித்துள்ளனர்.

இந்த கூட்டறிக்கையில், 56 முன்னாள் ஆட்சிப் பணி அதிகாரிகள் கையெழுத்துட்டனர். கையெழுத்திட்டுள்ளவர்களின் விவரங்கள் இங்கே…


அனிதா
நன்றி : த வயர். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க