பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 4 | பாகம் – 26

பால்மிரோ டோக்ளியாட்டி
டோக்ளியாட்டி

பாசிச நிறுவனங்கள் சம்பந்தமான நமது கொள்கை குறித்த ஒரு பிரச்சினையை இப்போது ஆராய்வோம்.

பாசிசத்தில் எழுந்துள்ள நெருக்கடிகளையும், அவற்றின் அம்சங்களையும், இதனால் நாம் பணியாற்றுவதற்குக் கிட்டக்கூடிய வாய்ப்புகளையும் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறோம். பாசிஸ்டுக் கட்சி இன்னமும் சர்வாதிபத்தியக் கட்சியாக ஆவதற்கு முன்னர் இந்த நெருக்கடிகள் குறிப்பிட்ட சில அம்சங்களைக் கொண்டிருந்தன. பாசிஸ்டுக் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதும், அது கடைப்பிடித்த மூர்க்கத்தனமான முதலாளித்துவக் கொள்கையை எதிர்த்து குட்டி பூர்ஷுவா மற்றும் மத்தியதரப் பூர்ஷுவாக்கள் போராடினர். ஆனால் இந்தச் சக்திகள் மக்களது நலன்களை முன்னிட்டு இவ்வாறு செய்ததாகக் கருதிவிடக் கூடாது. கட்சிக்குத் தலைமை ஏற்பதில் பேரார்வம் கொண்ட குட்டி பூர்ஷுவா, மத்தியதர பூர்ஷுவா வர்க்கங்களைச் சேர்ந்த அணியினரின் அதிருப்தியை போர்னியும் பதோவனியும் 4 பிரதிபலித்து வந்தனர்.

இந்தப் போராட்டம் ஸ்தாபனத்துக்கு எதிர் அணியில் அவர்களைக் கொண்டு வந்து நிறுத்திற்று; அரசுடனும் மோதலை ஏற்படுத்திற்று. எனினும் பாட்டாளி வர்க்கம் ஆதிக்க நிலையில் இல்லாத, குட்டி பூர்ஷுவாக்களும் மத்தியதரப் பூர்ஷுவாக்களும் பரந்த அளவில் உள்ள அரசியல் மேடைகளில் அல்லாமல் ஒரு தலைவரை உச்சிமீது தூக்கி வைத்துக் கொண்டாடும் ஸ்தாபன ரீதியில் ஒழுங்கமைக்கப்படாத பாட்டாளி வர்க்கம் நிரம்பியுள்ள நேப்பள்ஸ் போன்ற சில இடங்களில் அந்தப் பகுதிகளிலுள்ள குறிப்பிட்ட நிலைமைகளுக்கு ஏற்ப இவர்கள் பேசி வந்தார்கள். இத்தகைய அம்சம் சில சமயங்களில் இதர இடங்களிலும் காணப்பட்டது. மிலானில் தலைதூக்கிய, கியாம்பயோலிசத்தை 5 இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

கியாம்பயோலியின் எதிர்ப்பு இயக்கம் அரை – குற்றவாளிகளையும், ஸ்தாபனரீதியில் அணி திரட்டப்படாத பாட்டாளி வர்க்கத்தையும், படை அணிகளில் இருந்த பழைய ஸ்குவாட்ரிஸ்டிகளையும் அடிப்படையாகக் கொண்டது. தங்கள் சொந்த நலன்களைப் பூர்த்தி செய்து கொள்ள பழைய பாணியில் அமைந்த பயிற்சிப் படை வீரர்களது நடவடிக்கைகளுக்குத் திரும்ப வேண்டும் என்று இவர்கள் விரும்பினர். ஆனால் மிலானில் தொழில்துறைப் பாட்டாளி வர்க்கத்தினர் ஏராளமானோர் இருந்தனர். இதனை மனத்திற்வைத்து கியாம்பயோலி தொழிலாளர்கள் பெரிதும் அக்கறை கொண்ட பிரச்சினைகளையும் எழுப்பினர்; தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்றும் கோரினார். ஆரம்பத்தில் நேபள்ஸில் காணப்பட்டது போன்ற சில அம்சங்களைக் கொண்டிருந்த இந்த எதிர்ப்பு இயக்கம் பெரிய தொழில்துறை நகரத்தில் மாறுபட்டதொரு இயல்பைப் பெற்றது. கியாம்பயோலியின் எதிர்ப்பு இயக்கம் தொழிற்சங்கத் தன்மையைக் கொண்டிருந்தது என்பது தெள்ளத் தெளிவு.

ஆனால் பாசிஸ்டுக் கட்சிக்குள் ஏற்பட்ட இந்த எதிர்ப்பு, இந்த நெருக்கடிகள் ஆகியவற்றின் இயல்பு பாசிஸ்டுக் கட்சி ஏக சர்வாதிபத்தியக் கட்சியின் தன்மையைப் பெற்றபோது மாற்றமடைந்தது. அப்போது வெகுஜனங்களை ஸ்தாபனரீதியில் ஒருங்கு திரட்டவும், ஓரளவு பாசிச சார்புள்ள துணைப் படைகளையும் ராணுவ, பிரசார எந்திரத்தையும், தொழிற்சங்கங்களையும் தோற்றுவிக்கவும் பெருமுயற்சி எடுத்துக் கொள்ளப்பட்டது.

படிக்க:
என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது !
பாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி குண்டர்கள் ரகளை !

நெருக்கடிகளைத் தோற்றுவிக்கும் நிகழ்ச்சிகள் இப்போது வேறுபட்ட இயல்புகளைக் கொண்டவையாக மாறிவருவதைப் பார்க்கிறோம். 1930-ம் ஆண்டிலிருந்து தொழிலாளி வர்க்கத்துடன் இணைந்த சக்திகள் பல கிளர்ச்சிகளை நடத்தி வந்திருக்கின்றன. படை வீரர்கள் வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். முதலாளிகளை எதிர்த்துப் பாசிஸ்டுகள் பகிரங்க ஆர்ப்பாட்டங்கள் செய்திருக்கின்றனர்; தொழிற்சாலைகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியிருக்கின்றனர். 1930-ல் மிலானில் முதலாளிகளுக்கு எதிராக நடைபெற்ற கிளர்ச்சிகள் பாசிஸ்டுகள் ஆரம்பித்தவையே ஆகும்.

பதோவனி (Aurelio_Padovani)

இதுதான் இன்று காணப்படும் அம்சம்; நமக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கட்சியைவிட மக்கள் படையில் (மக்கள் படை எண்ணிக்கையில் அதிகமில்லை என்றாலும் மிகுந்த முக்கியத்துவம் கொண்டது). குறிப்பாக இளம் பாசிஸ்டுகளிடையே இந்த அம்சம் வலுவானதாக இருப்பதைக் காணலாம். இளம் பாசிஸ்டுகளிடையே ஏற்பட்ட எதிர்ப்புகளும், கிளர்ச்சிகளும் கடந்த ஆண்டுகளில் இடையறாது வளர்ந்து வந்திருக்கின்றன. இது இந்த அமைப்பின் இயல்பிலிருந்து நேரடியாகத் தோன்றும் விளைவாகும்; இந்த இயல்பு ஏற்கெனவே கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. வெகுஜனங்கள் அவர்களது சொந்த உடனடி நலன்கள் பொருட்டு எளிதாக அணிதிரட்டப்படுகின்றனர்; ஸ்தாபனத்தின் ஒடுக்குமுறையை எதிர்த்து அவர்கள் கிளர்ச்சி செய்கின்றனர். இளைஞர் நிறுவனங்களுக்குள் நடைபெறும் இந்தக் கிளர்ச்சிகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை; முக்கியமாக நாம் செயலாற்றுவதற்கான ஒரு பரந்த களத்தை அவை அளிக்கின்றன.

இன்று நடைபெறும் கிளர்ச்சிகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் கடந்த காலத்தில் நடைபெற்றவற்றுக்கும் இடையே ஒரு வேறுபாடு இருக்கிறது. இந்த வேறுபாட்டைத் தெரிந்து கொள்வதற்கு முன்னர் இந்த நெருக்கடிகளின் தன்மை பற்றி ஓர் ஆழமான ஆய்வு தேவை; குட்டி பூர்ஷுவா சக்திகள் செயல்படுவதை வெளிப்படையாகக் காணுவது எப்போதுமே சிரமம். ஆனால் இன்று இந்த இயக்கங்களின் இயல்பை மிக எளிதாக உய்த்துணர முடிகிறது.

உதாரணமாக, இங்கு ஜெர்மனியுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். இரண்டு வகையான சர்வாதிகாரங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளையும், ஒற்றுமைகளையும் இந்த ஒப்பீடு மிகத் தெளிவாகக் காட்டுகிறது. இரண்டு பாசிசங்களையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது என்று எப்போதுமே நான் வலியுறுத்தி வந்திருக்கிறேன். ஜெர்மன் பாசிசம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பே ஒரு விரிந்து பரந்த வெகுஜன இயக்கமாக வெற்றி கண்டுவிட்டது என்பது இதிலுள்ள அடிப்படையான வேறுபாடாகும். ஜனநாயகரீதியில் தேர்தல்கள் மூலம் அது அதிகாரத்தை வென்றது. இந்த ஜனநாயகம் வரையறைக்குட்பட்ட ஜனநாயகம் என்பதிலும், வன்முறைகளால் அதன் எல்லைகள் மேலும் குறுக்கப்பட்டன என்பதிலும் ஐயமில்லை; இவ்விதமெல்லாம் இருப்பினும் ஜெர்மன் பாசிசம் நாற்பது சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகளைப் பெற்றது என்பதை மறுக்க முடியாது. இது முதல் வேறுபாட்டு அம்சமாகும்.

போர்னி (cesare-forni).

அடுத்து இரண்டாவது அம்சத்தைப் பார்ப்போம். ஜெர்மன் பாசிசம் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர் குட்டி பூர்ஷுவா, மத்திய தர பூர்ஷுவா வர்க்கத்தையும், விவசாயத் தொழிலாளர்களையும் மட்டுமன்றி வேலையில்லாதோர் ஏராளமானோரையும் தன் அணிகளில் கொண்டிருந்தது; அவர்கள் மூலம் சில தொழிலாளர் பிரிவினரிடமும் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகளிடமும் தனது செல்வாக்கை பரப்பியிருந்தது.

இதனால்தான் ஜெர்மன் பாசிசத்தின் நெருக்கடிகளும் உட்கட்சிப் போராட்டங்களும் உடனடியாக இதர இயல்புகளைப் பிரதிபலிக்கின்றன. பெரிய பூர்ஷுவாக்களின் சர்வாதிகாரத்தை எதிர்த்து குட்டி பூர்ஷுவாக்களும் மத்தியதர பூர்ஷுவாக்களும் கிளர்ந்தெழுவது சாதாரணமாக பாசிசத்தில் காணப்படும் அம்சமாகும். ஆனால் ஜெர்மனியில் இந்தக் கிளர்ச்சிகள் மிக வலுவாக உள்ளன. அவை ஆலைத் தொழிலாளர்கள், வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்கி அவதிப்படுபவர்கள், விவசாயிகள் போன்றோரின் அதிருப்தியை வெளியிடுகின்றன. இவர்கள் எல்லோரும் பாசிசம் ஏராளமான பிரச்சினைகளுக்கு, முக்கியமாக பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் என்று நம்பி அதன்பால் ஈர்க்கப்பட்டவர்கள். ஆனால் பாசிசத்தால் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க இயலவில்லை என்பதை இப்போது அவர்கள் காணுகின்றனர்.

இந்த நிகழ்வுப் போக்கு இத்தாலியில் ஒரு வரையறைக்குட்பட்ட அளவிலேயே காணப்படுகிறது. பாசிச அமைப்புகளில் தொழிலாளர்கள், விவசாயிகளின் அதிருப்தி சமீப காலமாகத்தான் வெளிப்பட்டு வருகிறது.  கடந்த காலத்தில் வெகுஜனங்கள் பழைய ஸ்தாபன அமைப்புகளின் கட்டுக்கோப்புக்குள் இருந்து வந்தனர். ஆனால் இன்று பாசிஸ்டுக் கட்சியின் சர்வாதிபத்திய அமைப்புக்குள்ளும் அதன் இதர இணை அமைப்புக்குள்ளும் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதே இதற்குக் காரணம்.

(தொடரும்)

(முகப்புப்படம் : நேபள்ஸில் முசோலினியுடன் அயுரிலியோ பதோவனி.)

அடிக்குறிப்புகள் :

4. நேபள்ஸிலும் கம்பானியாவிலும் பாசிஸ்டுக் கட்சியின், பாசிஸ்டு மக்கள் படையின் யாவரும் ஒப்புக் கொள்ளத்தக்க தலைவராக அயுரிலியோ பதோவனி இருந்தார். “சகஜமாக்கப்பட வேண்டுமென்பவர்களுக்கும்”, “இணக்கத்தை விரும்பாதவர்களுக்கும்” ஏற்பட்ட மோதலில் அவர் வீழ்ச்சியடைந்தார். தேசியவாதிகளோடு இணைவது என்பது பாசிசத்தின் “புரட்சிகரத்” தன்மைக்கு துரோகம் செய்வதாகும் என்று பதோவனி நம்பினார். அவருடைய மன்னராட்சிக்கு எதிரான, பூர்ஷுவாக்களுக்கு எதிரான அறிவிப்புகள் புதிய ஆட்சிக்கு அவரைப் பாதகமானவராக்கியது. மாட்டியோட்டி நெருக்கடியின் போது, பி.என்.எப்பில் மீண்டும் சேரும்படி பதோவனியை பரினாஸ்ஸி கேட்டுக் கொண்டார், பதோவனி மறுத்துவிட்டார்.

5. 1919-ல் பாஸ்சி இட்டாலியானி கம்பாட்டிமென்டோவின் ஸ்தாபகர்களில் ஒருவரும் மிலான் மாநில பி.என்.எப்பின் தலைவருமான மரியோ கியாம்பயோலியின் ஆசை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களை கட்சிக்குள் கொண்டு வருவதற்காக தொழிற்சாலைகளில் கட்சிக் குழுக்கள் அமைக்க வேண்டுமென்பதாகும்.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க