விஞ்ஞான சோசலிசத்துக்கான மையத்தின் (Centre of Scientific Socialism) இயக்குநர் என்.அஞ்சையா கடந்த ஞாயிற்றுக் கிழமை (14 அக்டோபர் 2018) ஆந்திராவின் குண்டூரில் உள்ள ஆச்சார்ய நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார். ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கு ஒரு பொதுச் சந்தையை உருவாக்கி அதை வளர்ப்பதற்கான திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்து மதத்தை பிரிட்டிஷ் காலனியவாதிகள் கட்டமைத்தனர் என்று தனது உரையில் அஞ்சையா குறிப்பிட்டுள்ளார்.  இந்து என்கிற வார்த்தை கல்ஹானாவின் ராஜதரங்கினி போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அந்த வார்த்தை ஒரு மதத்தைக் குறிப்பதாக இருக்கவில்லை என்கிறார் அஞ்சையா.

என்.அஞ்சையா.

ஹைதரபாத் – கர்நாடகா வணிகம் மற்றும் தொழில்துறை மையத்தின் (Hyderabad Karnataka Chamber of Commerce and Industry ) உள்ளரங்கில் மார்க்சிய தத்துவஞானி தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் 100-வது பிறந்தநாள் விழாவின் துவக்க உரையை அஞ்சையா வழங்கினார்.

“இசுலாமியர்கள் போன்ற பிற மதக் குழுக்களின் அடையாளம் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், இசுலாம் போன்ற பிற மதங்களைப் பின்பற்றாத மக்களை இந்துக்கள் என பிரிட்டிஷார் வரையறுத்தனர். இந்தியாவின் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடந்த 1872-ம் ஆண்டில் இருந்தே இம்மக்களை இந்துக்கள் என அதிகாரப்பூர்வ ஆவணங்களில் குறிப்பிடத் துவங்கினர். இங்குள்ள மக்கள் பெரும்பான்மையாக இந்துக்கள் என்றும், இந்த நிலம் இந்துஸ்தானம் என்றும், இவர்களின் மொழி இந்தி என்றும் முன்னிறுத்தி அதனடிப்படையில் ஒரு சந்தையை உருவாக்கி வளர்ப்பதே இம்முயற்சிகளின் தெளிவான நோக்கம்.

இது எந்தளவுக்குச் சென்றதென்றால், அரசியல் சாசனம் கூட காலனிய வழக்கத்தை அடியொற்றி வேறுபட்ட சமூக, கலாச்சார மற்றும் மதப் பாரம்பரியம் கொண்ட மக்கள் தொகுதியை இந்துக்கள் என அழைக்கலாயிற்று. இந்த காலனிய கட்டமைப்பை ஏற்றுக் கொள்ளாதவர்கள் தேச விரோதிகள் என்று தூற்றப்படும் ஒரு நிலைக்கு இப்போது வந்து சேர்ந்துள்ளோம்” என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

படிக்க:
இந்தியா ஒரு கார்பரேட், இந்து அரசு ! – அருந்ததிராய், கரண் தபார் நேருக்குநேர் !
போர் வரி, மீசை வரி, முலை வரி – திருவிதாங்கூர் பார்ப்பனியம்

ஆய்வறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டி தற்போது இந்திய மக்கள் தொகையில் இந்துக்கள் எனக் குறிக்கப்பட்டிருக்கும் 85 விழுக்காடு மக்களில் சுமார் 61 விழுக்காட்டிற்கும் மேலானவர்கள் குடும்ப தெய்வங்களையும் சுமார் 31 விழுக்காட்டிற்கும் மேலானோர் குல தெய்வங்களையும் பின்பற்றுவோர் எனக் குறிப்பிட்ட அஞ்சையா, இவர்களுக்கும் பார்ப்பனிய இந்து மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.

தேவிபிரசாத் சட்டோபாத்யா.

சமீபத்தில் லிங்காயத்துகளுக்கு தனி மதம் என்கிற அந்தஸ்து கோரி மேற்கொள்ளப்பட்ட இயக்கங்களைக் குறிப்பிட்டுப் பேசிய அஞ்சையா, பார்ப்பனிய இந்து மதத்திற்கு எதிரான போராட்டத்தில் சுதந்திர மதமாக உதித்த அதன் வரலாறு காலனிய ஆட்சிக் காலத்தில் மொத்தமாக அழிக்கப்பட்டது என்கிறார்.

மேலும் இந்தியாவின் வரலாற்றை பண்டைய இந்து இந்தியா, மத்தியகால இசுலாமிய இந்தியா, நவீன பிரிடிஷ் இந்தியா என மூன்றாகப் பாகுபடுத்திப் பார்க்கும் கீழைத்தேய (Oriental) கண்ணோட்டமே கூட சந்தை சார்ந்த காலனிய சிந்தனை முறையின் கட்டமைவுதான் எனக் குறிப்பிட்டார் அஞ்சையா. ”நீங்கள் கவனித்துப் பார்த்தால் முதல் இரண்டு பகுதிகளை மத அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது; அதே நேரம் மூன்றாவது வகையை கிறிஸ்தவ இந்தியா என்றழைக்காமல் நவீன பிரிடிஷ் இந்தியா என்றே அழைக்கின்றனர்” எனப் பேசினார்.

தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் எழுத்துக்களை தத்துவார்த்த முறையில் மீள்வாசிப்பு செய்வதும், அதை விமர்சனப்பூர்வமாக அணுகி இன்றைய காலகட்டத்திற்கு பொருத்திப் புரிந்து கொள்வதும் அவசியமானது எனக் குறிப்பிட்ட அஞ்சையா, காலனிய கருத்தமைவுகளை கட்டுடைக்க இது முக்கியமான கருவியாக இருக்கும் எனக் குறிப்பிட்டார்.

செய்தி ஆதாரம்: ‘Hinduism was a colonial construction to create common market for capitalism’

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க