ந்தியாவில் மதம் குறித்த புதிய அக்கறைகள் காலனிய ஆட்சிக்காலத்திலிருந்து தீவிரப்பட்டன. மதம் குறித்த அந்தப் புதிய அக்கறைகள் உண்மையில் இந்தியர்களால் உருவாக்கப்பட்டவை அல்ல. இந்திய மக்கள் அப்படியொன்றும் மதம் சம்பந்தமாக குறிப்பான அக்கறைகள் கொண்டவர்கள் அல்ல. இந்தியர்களில் 70 – 80 சதவீதத்திற்கு மேலான மக்கள் மிக எளிய, சாதாரணமான மத நம்பிக்கைகளைக் கொண்டவர்கள். அந்த நம்பிக்கைகளும் ஊருக்கு ஊர், இடத்துக்கு இடம், கூட்டத்துக்கு கூட்டம் வேறுபடக்கூடியவை. ஒரு சிறு குத்துக்கல், ஆண்டுக்கு ஒருமுறை பந்தல் போட்டு, ஆடு கோழி பலியிட்டு அல்லது பொங்கல் வைத்து, ஏதோ ஒரு பழைய நம்பிக்கையோடு, இரண்டு நாட்கள் கூடி இருந்து திருவிழா கொண்டாடிவிட்டு, அதோடு அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டு போகவேண்டியது, இப்படித்தான் இந்தியர்களின் மத நம்பிக்கைகள் காலம் காலமாக இருந்து வந்துள்ளன. இப்படிப்பட்ட நம்பிக்கைகளுக்கு பத்து ஊர் சனங்களைக் கூட்டி அல்லது தமிழ்நாட்டு அளவில், இந்திய அளவில் ஒரு பெயர்வைக்கவேண்டும் என்று கூட யாரும் நினைத்தது கிடையாது.

மாறாக, நம்மை ஆளவந்த ஆங்கிலேயர்களுக்கு இந்தியர்களின் மதம் குறித்து பல கேள்விகள் எழுந்தன. இந்தியர்களின் மதம் யாது? அவர்களின் புனித நூல் எது? பாவம், புண்ணியம் பற்றிய அவர்களின் கருத்துக்கள் என்ன? இந்திய மக்களின் கடவுளர்கள் யாவர்? இந்த மக்களின் வழிபாட்டு முறை யாது? அதன் இறையியல் யாது? போன்ற கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அவர்களுக்கு உடனடியாகப் பதில் கிடைக்கவில்லை. காரணம் அவர்கள் கேட்ட கேள்விகளெல்லாம் அவர்களின் சொந்த மதம் குறித்தவை. காலனிய ஆட்சியாளர்கள் பெரும்பாலும் கிறித்தவ மதத்தைச் சார்ந்தவர்கள். ஐரோப்பாவில் குறிப்பிட்ட அக்காலத்தில் கத்தோலிக்கம் ஓரம் கட்டப்பட்டு, புரோட்டஸ்டன்ட் கிறித்தவம் நிலைகொண்டிருந்தது. அவர்களுக்குக் கிறித்தவ மதத்தைப் பற்றி நன்கு தெரியும். பிரச்சினை இங்குதான் ஆரம்பிக்கிறது. காலனிய ஆட்சிக்காலத்தில் இந்தியர்களின் மதம் பற்றி ஐரோப்பியர்கள் குறிப்பிட்ட சில கேள்விகளை எழுப்பினார்கள், ஆனால் அந்தக் கேள்விகளே ஐரோப்பியக் கேள்விகளாக இருந்தன. அல்லது அந்தக் கேள்விகள் கிறித்தவக் கேள்விகளாக இருந்தன.

இந்தியர்களின் தன்னிச்சையான மதநம்பிக்கைகளும் பல்வேறுவிதமான வழிபாட்டு முறைகளும் அந்த ஐரோப்பியக் கேள்விகளுக்குள், கிறித்தவ கேள்விகளுக்குள் அடங்க மறுத்தன. அடங்க மறுத்தால் விட்டு விடுவதா, என்ன? இந்தியர்களின் மதநம்பிக்கைகள் குறித்த தகவல்களையெல்லாம் திரட்டி அவற்றை ஐரோப்பியர்கள் ”ஒழுங்குபடுத்த ஆரம்பித்தனர். யாரிடமிருந்து தகவல்களைத் திரட்டினார்கள்? எந்தத் தகவல்களைச் சேகரித்தார்கள்? எப்படி ஒழுங்குபடுத்தினார்கள்? தகவல்களை ஒழுங்குபடுத்துதல் என்றால் என்ன? பிரச்சினை இப்போது பெரிதாகி விட்டது.

கடந்த 20-30 ஆண்டுகளாக இந்து மத உருவாக்கம் குறித்த மறுபரிசீலனைகள் தீவிரப்பட்டு வருகின்றன. காலனி ஆட்சிக் காலத்தில் காலனி ஆட்சியின் நிர்வாகத் தேவைகளுக்காக, ஐரோப்பியர்களால், கிறித்தவ மதத்தின் சாயையில் உருவாக்கப்பட்ட ஒரு மதமே இந்து மதம் என்ற கருத்து இப்போது வலுவடைந்து வருகிறது. அது புறத்தே இருந்து உட்செலுத்தப்பட்ட கருத்தாக்கமே தவிர சொந்த அடிப்படைகளிலிருந்தே சுயமாக உருவான பெயர் அல்ல என்று இப்போது எழுதுகிறார்கள். இந்து மதம் என்ற சொல், அதன் பயன்பாடு ஆய்வாளர்களிடம் மட்டுமே உள்ளது என்று சிலர் கருதுகிறார்கள்.  (நூலிலிருந்து பக்.4-5)

படிக்க :
நீரவ் மோடி – பஞ்சாப் தேசிய வங்கி மோசடியின் பரிமாணம் ரூ. 25,000 கோடி !
குஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை !

… இந்து மதம் குறித்த மேற்குறித்த விவாதங்கள் மிக இயல்பாகவே இந்து மதம் குறித்த சில புதிய புரிதல்களுக்கு இட்டுச் செல்கின்றன. இந்து மதம் என்பது ஒரு காலனியக் கட்டுமானம் என்ற கருத்து வலுப்பட்டு வருகிறது. காலனிய காலத்துக்கு முன்னால் இத்தனை ஒருங்கிணைந்த வடிவில், தத்துவார்த்த ‘பந்தா’க்களோடு இந்து மதம் எப்போதுமே அதன் வரலாற்றில் வழக்கில் இருந்தது கிடையாது என்பதை இப்போது ஆய்வாளர்கள் ஒத்துக்கொண்டு வருகிறார்கள். இன்றைய இந்து மதத்திற்கு முந்தியகால வரலாற்றோடு தொடர்புகள் இல்லாமலில்லை. ஆயின் அவை ஒற்றைப்படையானவை அல்ல, அவை பலதரப்பட்டவை. அது வேதங்களோடும் வேதாந்தத்தோடும் மட்டும் தொடர்பு கொண்டதல்ல. அது சிந்து வெளியோடும் தொடர்பு கொண்டது ; அது பக்தியோடும் புராணங்களோடும் தொடர்பு கொண்டது; அது தாந்திரிகத்தோடும் தொடர்பு கொண்டது.

இன்றைய இந்து மதம் என்ற கட்டுமானம் காலனிய மற்றும் இந்திய தேசிய அரசியல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் தெளிவாகிவருகிறது. இந்து மதம் என்ற காலனிய ஒற்றை வடிவத்தில் மத அடிப்படைகளை விட அரசியல் அதிகார அடிப்படைகளே அதிகமாக அமைந்துள்ளன என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. மட்டுமின்றி, நாட்டு விடுதலைக்குப் பிறகு, சமீபகாலங்களில் அது மிகவும் பிற்போக்குத்தன்மை கொண்ட பாசிச வடிவத்தை ஈட்டிவருகிறது என்பதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.  (நூலிலிருந்து பக்.12-13)

இந்த நாட்டின் வரலாற்றில் உருவாகி வந்துள்ள எல்லா ஏற்றத்தாழ்வுகளும், குறிப்பாக சாதி அமைப்பும் ஆண்/ பெண் ஏற்றத்தாழ்வுகளும், இந்து மதத்தினுள் கலந்து புரண்டு கிடக்கின்றன. அந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு அது அங்கீகாரம் வழங்குகிறது, இன்னொரு புறம் அவற்றுக்கு எதிரான எதிர்ப்புகளையும் பதிவு செய்கிறது. பெருவிரல் துண்டிக்கப்பட்ட ஏகலைவன், ராமனால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்புகன், அரக்கு மாளிகையில் எரித்துக் கொல்லப்பட்ட பழங்குடிப் பெண்ணும் அவளது ஐந்து பிள்ளைகளும் என்பது போன்ற பல கதைகள் அதன் புராணங்களில் புதைந்து கிடக்கின்றன. பிராமணர்களுக்கு அது முதன்மையான இடம் வழங்குகிறது என்பது ஒருபக்கத்தில் உண்மைதான், ஆனால் பிரம்மனுக்கு இந்தியாவில் கோயில் கிடையாது, பிராமணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் பலரைப் பீடித்திருக்கிறது, சிவன், ராமன், பரசுராமன், இந்திரன், இன்னும் பலருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டு. பெண்களின் மீது விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகள் பற்றி இந்து மத நூல்களில் ஏராளமாக வாசிக்கலாம், உண்மைதான். ஆயின் சத்யவதி, அம்பா, அம்பிகா, அம்பாலிகா, குந்தி, மாதுரி போன்ற பல பெண்களை அங்கு சந்திக்கவும் முடியும். இந்து மதத்தை நான் தலித்துகள், பழங்குடிகள், பெண்கள் ஆகியோரின் நோக்கிலிருந்து வாசித்து ஒரு மாற்றுவரலாற்றை எழுதுவேன் என்கிறார் வெண்டி டொனிகர். (நூலிலிருந்து பக்.14)

நூல் : இந்து மத உருவாக்கம் (காலனியமும் தேசியவாதமும்)
ஆசிரியர் : ந.முத்துமோகன்

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி எண் : 044 – 2624 1288 | 2625 1968 | 2625 8410
மின்னஞ்சல் : info@ncbh.in

பக்கங்கள்: 16
விலை: ரூ 10.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : noolulagam

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க