privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாகுஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி - நானாவதி கமிஷன் அறிக்கை !

குஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை !

2002 குஜராத் கலவரம் குறித்து, 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான நானாவதி ஆணைய அறிக்கையானது, மோடி - அமித் ஷாவை ‘பரிசுத்தவான்கள்’ என அறிவித்துள்ளது.

-

2002-ம் ஆண்டில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முசுலீம்கள் கொல்லப்பட்ட குஜராத் படுகொலை சம்பவம் குறித்து அமைக்கப்பட்ட நானாவதி ஆணையம் ஐந்தாண்டு விசாரணைக்குப் பிறகு தனது அறிக்கையை அப்போதைய அரசாங்கத்திடம் சமர்பித்திருந்தது. படுகொலை நடந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு, குஜராத் உள்துறை அமைச்சர் பிரதீப்சிங் ஜடேஜா, அம்மாநில  சட்டசபையில் “நானாவதி அறிக்கையை” புதன்கிழமை தாக்கல் செய்தார்.

சில இடங்களில் காவல்துறையினர் கும்பலைக் கட்டுப்படுத்துவதில் செயலற்று இருந்ததாகவும், அவர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை அல்லது அவர்களிடம் சரியாக ஆயுதம் இல்லை எனவும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜி.டி. நானாவதியும், குஜராத் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அக்‌ஷய் மேத்தா ஆகியோர் தங்களுடைய அறிக்கையில் கவனப்படுத்தியுள்ளனர்.

மேலும் அந்த அறிக்கையில், “இந்தத் தாக்குதல்கள் எந்தவொரு மாநில அமைச்சராலும் தூண்டப்பட்டவை அல்லது அவர்களது ஆதிக்கத்தால் நடத்தப்பட்டவை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என்றும் ஆணையம் தனது மிக நீண்ட அறிக்கையில் கூறியுள்ளது.

கோத்ரா ரயில் நிலையம் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகளில் தீ வைக்கப்பட்டதில் 59 கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். அதைக்காரணம் காட்டி முசுலீம்கள் மீது மிகக் கொடூர வன்முறைகள் காவிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டன. இந்தக் கலவரம் குறித்து விசாரிக்க 2002-ல் அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த மோடியால் இந்த ஆணையம் நியமிக்கப்பட்டது.

“முழு விசயத்தையும் ஒட்டுமொத்தமாகக் கருத்தில் கொண்டு, கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட வகுப்புவாத கலவரங்கள் உண்மையில் அந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக நிகழ்ந்தவை என்று ஆணையம் கண்டறிந்துள்ளது. கோத்ரா சம்பவத்தின் காரணமாகவே இந்து சமூகத்தின் பெரும் பகுதியினர் மிகவும் கோபமடைந்தனர், இறுதியில் முஸ்லிம்கள் மற்றும் அவர்களின் சொத்துக்கள் மீது வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டனர்” என்று அறிக்கை கூறியுள்ளது.

மேலும் இந்த ‘கலகம்’ தொடர்பாக ‘எந்தவொரு மத அல்லது அரசியல் கட்சி அல்லது அமைப்புகளுக்கும்’ எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் ஆணையம் காவிகளுக்கு ‘பரிசுத்த ஆவிகள்’ பட்டம் வழங்கியுள்ளது.

ஆனாலும், காவிகள் ஆடிய கோர தாண்டவம் ஊடகங்களில் ஆதாரங்களுடன் வெளியானது மறுக்க முடியாதல்லவா? ஆணையம் இதை வேறு வார்த்தைகளில் கூறுகிறது…

“ஆணைக்குழுவின் முன் வந்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில், உறுதியுடன் கூறக்கூடிய ஒரே விசயம், வி.எச்.பி மற்றும் பஜ்ரங் தளத்தின் உள்ளூர் உறுப்பினர்கள் தங்கள் வட்டாரங்களில் நடந்த சம்பவங்களில் பங்கேற்றனர்” என கூறுகிறது.

எனவே, கோத்ராவுக்கு பிந்தைய கலவரம் “முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி அல்லது திட்டமிடப்பட்ட வன்முறை அல்ல” என ஆணையம் கூறியுள்ளதோடு, கோத்ராவுக்குப் பிந்தைய கலவரங்களுக்கு கண்மூடித்தனமாக சொல்லப்படும் மாநில அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளில் எந்தப் பொருளும் இல்லை என்றும் அது கூறியுள்ளது.

கலவரத்தில் மாநில அரசுக்கு பங்கு இருப்பதாக குற்றம் சாட்டிய மூன்று முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரிகளான சஞ்சீவ் பட், ராகுல் சர்மா மற்றும் ஆர்.பி.ஸ்ரீகுமார் ஆகியோரின் நம்பகத்தன்மையையும் ஆணையம் கேள்வி எழுப்பியது. ஆதாரங்களை உன்னிப்பாக ஆராய்ந்த பின்னர், காவல்துறையின் தரப்பில் எந்தவிதமான அலட்சியமும் இருந்ததாகக் கூற முடியாது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படிக்க:
குஜராத் கலவரத்தில் மோடிதான் குற்றவாளி – விசாரணைக்கு வருகிறது வழக்கு !
♦ கோத்ரா ரயில் எரிப்பு வழக்கை விசாரித்த நீதிபதிக்கு ஓய்வு பெற்ற பிறகும் பதவி !

ஆகவே, இவ்வளவு பெரிய கொடூர படுகொலைகளுக்கு யாருமே காரணம் இல்லை என தெரிவித்திருக்கும் ஆணையம், ‘அமைதி’யை காக்கத் தவறிய போலீசுக்கு லேசாக சில அறிவுரைகளைக் கூறி முடித்திருக்கிறது. நரோடா பாட்டியா மற்றும் குல்பர்க் சொசைட்டி பகுதிகளில் போலீசின் மேற்பார்வையில் நடந்த பச்சை படுகொலைகளுக்கு ஆதாரம் இல்லை என ஆணையம் கண்களை மூடிக்கொண்டது அறிக்கையில் தெரிகிறது.

கமிஷன் அறிக்கையின் முதல் பகுதி செப்டம்பர் 25, 2009 அன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. குழு இறுதி அறிக்கையை 2014 நவம்பர் 18 அன்று அப்போதைய முதலமைச்சர் ஆனந்திபென் படேலிடம் சமர்ப்பித்தது, ஆனால் அது பின்னர் நிறுத்தப்பட்டது.

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஸ்ரீகுமார் தாக்கல் செய்த பொதுநல மனுவிற்கு இந்த ஆண்டு செப்டம்பரில் பாஜக தலைமையிலான மாநில அரசு குஜராத் உயர்நீதிமன்றத்தில் இந்த அறிக்கையை அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் முன்வைப்பதாகக் கூறியது.

2002, பிப்ரவரியில், கோத்ரா ரயில் படுகொலைக்கான காரணம் மற்றும் மாநிலத்தில் ஏற்பட்ட இனவாத வன்முறைகள் குறித்து விசாரிக்க ஒரு உறுப்பினர் ஆணையத்தை முதல்வர் மோடி அறிவித்தார். அரசாங்கம் பின்னர் ஆணையத்தை மறுசீரமைத்தது; நீதிபதி நானாவதி அதன் தலைவராகவும், குஜராத் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.ஜி. ஷா உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டனர். நீதிபதி ஷா இறந்த பிறகு, நீதிபதி மேத்தா அவருடைய இடத்தில் நியமிக்கப்பட்டார். அத்துடன் முதலமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகளையும் விசாரிக்கலாம் என்பதும் ஆணைய விதிகளில் சேர்க்கப்பட்டது.

சர்வதேச சமூகத்தின் அழுத்ததின் பேரில், மோடி அரசாங்கமே அமைத்த ஆணையத்தின் அறிக்கை, மோடி – ஷா கூட்டணி இந்துராஷ்டிரத் திட்டத்தை நாடு முழுவதும் அமலாக்கிக் கொண்டிருக்கும் ‘தக்க நேரத்தில்’ வெளி வந்துள்ளது. இதன் மூலம் அவர்களை ‘பரிசுத்தமான ஆவிகளாக’ அறிவித்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழங்கியுள்ள ஆணையம், நீதி, நேர்மை, ஜனநாயகம் ஆகியவற்றை சிலுவையில் அறைந்துள்ளது !


கலைமதி
நன்றி : டெலிகிராப் இந்தியா.

  1. ஆக மொத்தம் வினவு கூட்டங்கள் மோடிக்கு எதிராக பொய்களையும் அவதூறுகளையும் தான் இவ்வுளவு நாள் பரப்பி வந்து இருக்கிறது.

    இப்படி கூச்சமே இல்லாமல் பொய்களை அவதூறுகளை பரப்பியதாக வினவு கூட்டங்கள் வெட்கி தலைகுனிய வேண்டும் ஆனால் இவர்கள் சாதாரண மனிதர்கள் அல்லவே அதனால் இந்த கமிஷன் மீதே அவதூறுகளை பரப்புவார்கள்.

  2. மீடியா சொல்வது எல்லாம் உண்மை என்று எப்படி ஏற்க முடியும், நீங்களே பல விஷயங்களில் கொஞ்சம் கூட கூச்சமோ அல்லது மனசாட்சி உறுத்தலோ இல்லாமல் பொய்களை எழுதி இருக்கிறீர்கள். உங்களின் நம்பக தன்மையே கேவலமாக இருக்கிறது, மற்ற கம்யூனிச மீடியாக்களும் இதேபோல் தானே பொய்களை எழுதி இருப்பார்கள்.

    ஒன்று மீடியா அவர்களின் செய்திகள் உண்மை என்பதற்கு ஆதாரங்களை நீதிமன்றத்தில் கொடுத்து நிரூபித்து இருக்க வேண்டும் அல்லது மோடிக்கு எதிராக நாங்கள் சொன்னது எல்லாம் வெறும் பொய்கள் தான் என்று பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க