குஜராத்தில் முசுலீம் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலைக்கு காரணமாக கூறப்பட்டது, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம். அயோத்தி சென்று திரும்பிக் கொண்டிருந்த விசுவ இந்து பரிஷத் அமைப்பினரை உயிரோடு எரித்து கொன்றதாக முசுலீம்கள் மீது பழி சுமத்தப்பட்டது. முசுலீம்களை இனபடுகொலை செய்வதற்கென்றே இந்துத்துவ காவிகளால் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்ட அந்த சம்பவத்தில் 59 பேர் உடல் கருகி உயிரிழந்தார்கள். அதன் பின், சங்கிகளால் குஜராத் பற்றி எரிந்தது.

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் அப்பாவி முசுலீம்கள் 11 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது. தெஹல்கா நாளிதழ் இந்துத்துவ காவிகளால் கலவரத்தை தூண்டுவதற்கென்றே உருவாக்கப்பட்டதே ரயில் எரிப்பு சம்பவம் என ஆதாரங்களை வெளியிட்டது. ஆனால், சிறப்பு நீதிமன்றம் அந்த ஆதாரங்களை எதுவும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனையை அறிவித்தார் நீதிபதி பி.ஆர். பட்டேல்.  பிறகு, இந்த வழக்கில் மேல் முறையீடு செய்யப்பட்டு தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

நீதிபதி ஆர்.ஆர். பட்டேல்.

சாட்சிகளை, ஆதாரங்களை புறம் தள்ளி, இந்துத்துவ காவி கும்பலுக்கு துணைபோன நீதிபதி பி. ஆர். பட்டேல் தனது ‘கர’சேவையை சிறப்பாக முடித்து கடந்த டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார். தன்னுடைய காவி பயங்கரவாதத்துக்கு துணை போன ஐபிஎஸ் அதிகாரிகள், நீதிபதிகளுக்கு பதவி கொடுத்து அழகு பார்க்கும் மத்தியில் இருக்கும் மோடி அரசும் மாநிலத்தில் இருக்கும் பாஜக அரசும் ரயில் எரிப்பு வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய பி. ஆர். பட்டேலுக்கு ஓய்வு பெற்ற அன்றே புதிய பதவியைக் கொடுத்தது.

குஜராத் உயர்நீதிமன்றத்தின் பதிவாளராக இருந்து ஜூன் 2017ல் ஓய்வுபெற்ற பி. ஆர். பட்டேல், இருமுறை இந்தப் பதவியில் நீட்டிக்கப்பட்டார். டிசம்பர் 2018-ல் ஓய்வு பெற்ற பிறகும், மாநில அரசின் வழக்குகளை கண்காணிக்கும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பி. சதாசிவத்துக்கும் ஆளுநர் பதவி வழங்கியது மோடி அரசு. சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் தொடர்புடைய மற்றொரு வழக்கான அவரது உதவியாளர் துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கில் அமித் ஷா முக்கிய குற்றவாளி.  2013-ஆம் ஆண்டு அமித் ஷாவை ‘தூயவராக’ சான்றிதழ் கொடுத்து வழக்கிலிருந்து விடுவித்தார் அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம்.

படிக்க:
கோத்ரா தீர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் சதிக்கு வக்காலத்து! அப்பாவி முஸ்லீம்களுக்குத் தூக்கு!!
சொராபுதீன் போலி மோதல் கொலை: விடையளிக்கப்படாத கேள்விகள் !

அதன்பின், நீதிமன்றம் அளித்த சான்றிதழ்களால் இந்தியாவை காப்பாற்ற வந்த தூதுவர்களாக, தூய வெள்ளை ஆடையோடு நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கி வெற்றி கண்டது மோடி-அமித் ஷா கும்பல். பெரும்பான்மையோடு ஆட்சியமைந்த பிறகு, காவிகளுடைய குற்றங்களில் பங்காற்றிய ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவருக்கும் புதிய பதவிகள், அதிகார பொறுப்புக்கள் தரப்பட்டன.

மோடியின் குஜராத் : காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள் !அமித் ஷாவை விடுவித்த சதாசிவம் ஓய்வுபெற்ற பின், இந்திய வரலாற்றில் இல்லாத வகையில் கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன், “இந்த நியமனம் மிகவும் தவறானது, துரதிருஷ்டவசமானது.  நீதிபதிகள் பணியையோ அல்லது நாடாளுமன்றத்தில்  இருக்கையோ எதிர்பார்ப்பது, நீதித்துறையின் சுதந்திரத்தை கடுமையாக பாதிக்கும்” என கடுமையாக விமர்சித்தார். பல தரப்பிலிருந்தும் இத்தகைய விமர்சனங்கள் வந்த பிறகும்கூட  கூச்சநாச்சம் இல்லாமல் அமித் ஷா மகன் திருமணத்துக்கு சென்று வந்தார் சதாசிவம்.

மோடி-அமித் ஷா கும்பலின் குற்றங்களில் பங்கேற்றவர்கள் பதவிகளை ருசிக்கும் வேளையில், இந்த கும்பலின் படுகொலைகளுக்கு சாட்சியங்கள் அளித்த சஞ்சீவ் பட் போன்ற அரசு அதிகாரிகள் அலைகழிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் காவி கும்பலுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க மறுத்த நீதிபதி லோயா அசாதாரண முறையில் கொல்லப்பட்டார்.  ஜனநாயகத்தின்படி பதவியில் அமர்ந்திருக்கும் இந்த இந்துத்துவ காவி சர்வாதிகாரிகள் தங்களுக்கு பணிந்து போகாதவர்களை ‘கொல் அல்லது சிறையில் அடை’ என்பதையே வழக்கமாக வைத்திருக்கிறது.

வினவு செய்திப் பிரிவு
அனிதா
செய்தி ஆதாரங்கள்:

Judging the judges
Judge in Godhra train attack case is now Gujarat law officer

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க