சொராபுதீன் போலி மோதல் கொலை வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அண்மையில் அனைவரையும் விடுவித்தது. ஓய்வு பெறும் முன் அவசர அவசரமாக சட்ட புத்தகத்தில் தனது முத்திரையை பதிக்கும் வகையில் தீர்ப்பெழுதி நீதிபதி அனைவரையும் விடுவித்தார்.  அதோடு விட்டாரா? தானாக முன்வந்து விடுவிக்கப்பட்ட தனிநபர்களுக்கும் (இந்த வழக்கில் 2014-ம் ஆண்டு விடுவிக்கப்பட்ட பா.ஜ.க. தலைவர் அமித் ஷா)  இந்த வழக்குக்கும் தொடர்பே இல்லை என்றார்.

நீதிமன்ற சட்டத்தின் முன் போதுமான ஆதாரங்கள் இல்லையென கூறி விடுவிக்கப்பட்டாலும் இந்தக் கொலைகள் ஏன் நடத்தப்பட்டன? யாருக்காக நடத்தப்பட்டன? என்கிற கேள்விகள் இயற்கையாக எழ வேண்டும்.

ஆனால், இது எளிதானது அல்ல. இரு தரப்பிலிருந்து அரசியல் சேறு வாரியிறைக்கப்படும்போது, உண்மை அங்கே பாதிப்புக்குள்ளாகிறது. எனினும், வழக்கறிஞராக இருந்து நிதியமைச்சரான அருண் ஜெட்லி தனது முகநூல் பதிவுக்கு “சொராபுதீன் விசாரணையை கொன்றது யார்?” என தலைப்பிட்டிருப்பது வரவேற்கத்தக்கது!

வழக்கு விசாரணை கொல்லப்பட்டிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வதோடு, சொராபுதீன், கவுசர் பி, துளசிராம் பிராஜபதி, ஹரேன் பாண்டியா ஆகியோரது மரணத்துக்கு நீதி கிடைக்கவில்லை என்பதையும் பா.ஜ.க. அமைச்சர் இறுதியாக ஒப்புக்கொள்கிறார்.

கவுசர் பீ மற்றும் சொராபுதீன்.

சொராபுதீன் வழக்கில் இந்த முடிவுக்கு வர 13 ஆண்டுகள் இரண்டு மாதங்களும் ஹரேன் பாண்டியா வழக்கில் 15 ஆண்டுகள் ஒன்பது மாதங்களும் ஆகியிருக்கின்றன.  ஒருவர் உள்ளூர் ரவுடி, மற்றவர் முன்னாள் உள்துறை அமைச்சர். நீதியின் முன் அவர்கள் இருவரும் சமமானவர்களே.  அவர்கள் புறக்கணிப்புக்கும் நீதி மறுப்புக்கும் சமமாகவே ஆளாகினர்.

இதை ஏற்றுக்கொண்ட ஜெட்லி,  தன்னிச்சையாக கருத்து சொல்வதன் மூலம் 15 ஆண்டுகால வழக்கு வரலாற்றின் தருணங்களை நினைவூட்டுகிறார்.  நீதிபதி அனைவரையும் அவசர கதியில் விடுவித்ததாக காங்கிரசும் பா.ஜ.க.வும் சொல்கின்றன. அனைவரும் இறுதியாக வழக்கு விசாரணை முழுமையானதாக இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.

குற்றம்சாட்டப்பட்டரே குற்றத்தை ஒப்புக்கொள்கிறார்!

முக்கியமாக, குறைந்தபட்சம் சொராபுதீன் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரே தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொள்கிறார்.

குற்றம் சாட்டப்பட்டர்களின் பட்டியலில் முதலில் இருந்த, அப்போதைய தீவிரவாத தடுப்பு படையின் டி.ஐ.ஜி.-யான டி.ஜி. வன்சாரா தனது ட்விட்டில், “எங்களுடைய திட்டமிட்ட எண்கவுண்டர்” என உலகத்துக்கு தனது குற்றத்தை அறிவிக்கிறார்.

டி.ஜி.வன்சாரா.

அதில் அவர் சொல்கிறார், “சொராபுதீன் வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் 22 போலீசு அதிகாரிகளையும் விடுவித்திருக்கிறது. எங்களுடைய என்கவுண்டர் அனைத்தும் உண்மையானவை என்ற எனது முடிவை கோடிட்டு காட்டுகிறது. எங்களுடைய பணியை செய்ததற்காக நாங்கள் தவறாக குற்றம்சாட்டப்பட்டோம்.  டெல்லிக்கும் காந்தி நகருக்கும் இடையே  நடந்த அரசியல் போரில்  நாங்கள் பலியாக்கப்பட்டோம்.”

மற்றொரு ட்விட்டில், “அரசியல் தலைவர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, பெசண்ட் சிங், பெனாசீர் புட்டோ, பிரேமதாசா போன்றோரை தீவிரவாதிகள் வெற்றிகரமாக படுகொலை செய்தார்கள். கோத்ரா சம்பவத்துக்கு பின் தடுப்பு நடவடிக்கையாக குஜராத் போலீசு என்கவுண்டர்களை செய்திருக்காவிட்டால், நரேந்திர மோடிக்கும் அது நடந்திருக்கும். நாங்கள் ஒரு மீட்பரை காப்பாற்றினோம்” என்கிறார்.

உண்மையில் தெளிவாகத் தெரிவது என்னவென்றால், இது ஒரு போலி மோதல் கொலை என்பதில் எப்போதும் சந்தேகம் இருந்ததில்லை. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு முன்பு மார்ச் 2007-ம் ஆண்டு குஜராத் அரசு வழக்கறிஞர் கே.டி.எஸ். துளசி, உச்சநீதிமன்றத்தில் சொராபுதீன் போலி மோதலில் கொல்லப்பட்டார் என தெரிவித்தார்.

ஒரு மாதத்துக்குப் பின், கவுசர் பி கொல்லப்பட்டு,  துண்டுத்துண்டாக வெட்டப்பட்டு, எரிக்கப்பட்டது என அவரே நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அனைவரும் உண்மையின் அடிப்படையில் ஒத்துக்கொண்ட கொலைக்கு – ரத்த வெறிகொண்ட போலீசின் கொலைக்கு உதாரணம்தான் இந்த வழக்கும். ஆனால், நீதி இன்னும் கிடைக்கவில்லை.

இரண்டு முக்கியமான கேள்விகளை குற்றம்சாட்டப்பட்டவராகவும் அரசு தரப்பாகவும் உள்ள குஜராத் அரசு கேட்டு அதற்கு பதிலும் சொன்னது.

கேள்வி 1: சொராபுதீன் கொலை ஒரு போலி மோதல் கொலையா?
பதில்: ஆமாம்.
கேள்வி 2: கவுசர் பி, கொல்லப்பட்டு, எரிக்கப்பட்டாரா?

பதில்: ஆமாம்.

இப்போது அமைச்சர் ஜெட்லி கேட்கும் அதே கேள்வியை நாமும் கேட்போம், “ஏன் எதற்கும் நீதி கிடைக்கவில்லை?”

அடிப்படையிலிருந்து ஆரம்பிப்போம்!

2013-ம் ஆண்டும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஜெட்லி எழுதிய கடிதத்தில் எழுப்பிய குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதியும் சொல்கிறார். அரசியல் ஒரு பகுதியாக இருந்தாலும்  வெளிப்படையாக சிலவற்றை பேசியே ஆக வேண்டும்.

கேள்வி 3: ஐ.எஸ்.ஐ. அல்லது லஷ்கர் இ தொய்பா அனுப்பிய நபரா சொராபுதீன்?
சொராபுதீனை ‘திட்டமிட்டு’ கொன்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு கவுசர் பி கொல்லப்பட ஒரு பண்ணைவீட்டில் காத்திருக்கும் நேரத்தில், டி. ஜி. வன்சாரா, நிருபர்களிடம் ’சொராபுதீன் ஒரு லஷ்கர் தீவிரவாதி என சொன்னார்.

ஆனால், குஜராத் சட்டப்பேரவை எழுத்துப்பூர்வமாக தெரிவித்த பதிலில் (மார்ச் 20, 2006) அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி, சொராபுதீன் ஒரு கொலை வழக்கில் தேடப்படுபவர் என்றும், தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கில் தேடப்பட்டவர் என்றும் சொன்னார்.  அப்போதைக்கு கிடைத்த தகவல்படி எனவும் அந்த பதிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது டி.ஜி.வன்சாரா, இந்த வழக்கில் அதிகப்பிரசங்கித்தனமாக பேசியிருக்கிறார்.

அமைச்சர் ஜெட்லி, சொராபுதீனை இப்படிச் சொல்கிறார், “குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் தேடப்பட்டுவந்த ஒரு மாஃபியா. பல்வேறு மாநிலங்களில் தேடப்பட்டு வந்தவர்” என 2013-ல் எழுதிய கடிதத்தில் சொல்கிறார். ஜெட்லியின் கடிதம்கூட, வன்சாராவின் கூற்றை ஆதரிக்கவில்லை.

ஆனால், சொராபுதீனின் கிரிமினல் பின்னணி குறித்து ஜெட்லி அறிந்து வைத்திருந்தார். ஜிர்னியா வழக்கிலிருந்து சொராபுதீன் விடுதலையான பிறகு, அவர் பிழைப்புக்காக என்ன செய்தார்? மூன்று மாநிலங்களிலும் தப்பித்து அவர் எப்படி வாழமுடிந்தது?

1998-ம் ஆண்டிலிருந்து குஜராத்தை ஆள்கிறது பா.ஜ.க. மத்திய பிரதேசத்தில் 2003 டிசம்பரிலிருந்து ஆண்டுகொண்டிருக்கிறது. 1993 – 2008-க்கு இடைப்பட்ட காலத்தில் பா.ஜ.க. இராஜஸ்தானில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறது.  இந்த காலத்தில்தான் சொராபுதீனும் செயல்பட்டார்.

நுண்ணறிவு பிரிவைச் சேர்ந்த ஒரு ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி. சொல்கிறார்: “இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இது மாஃபியா அரசாங்கத்தை இயக்குவது அல்ல. அரசாங்கம் மாஃபியாவை இயக்குகிறது. மாஃபியாக்கள் மதிப்பிழக்கும்போது, அரசாங்கம் அவர்களை தூக்கியடித்தது”

படிக்க:
சொராபுதீன் கொலை வழக்கையே கொன்ற அமித் ஷா- மோடி கும்பல்
பிரஜாபதி போலி மோதல் கொலையில் முதன்மை சதிகாரர் அமித்ஷா – சிபிஐ அதிகாரி கோர்ட்டில் சாட்சி

எனவே, சொராபுதீன் மூன்று மாநிலங்களிலும் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பாதுகாப்பு அளித்தது யார்? ஏன்?  இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க ஜெட்லியும் அவருடைய மூன்று மாநில அரசின் சகாக்களும் பொருத்தமானவர்கள்.


கட்டுரையாளர்: சரிதா ராணி
தமிழாக்கம்: அனிதா
நன்றி: த வயர்

2 மறுமொழிகள்

  1. நாம் இங்கு மாபியா சோராபுதினுக்கு ஆதரவாக பேச வேண்டிய காரணம் என்ன?

  2. விவாதிக்கக் காரணம்;
    பத்திரிகா தர்மம் வினவிற்கு இல்லாமலிருப்பதால்;
    இறந்தோரின் பெற்றோர் மனிதராய் இருப்பதால்;
    கொடூரமாய் கொல்லப்பட்ட மாபியாவின் மனைவி செய்த தவறென்ன என்பதைத் தெரிந்துகொள்ள;
    சங்கிகளுடன் நீதிமான்களும் இணைந்துள்ளதைத் தெரிந்துகொள்ள;
    சட்டமெல்லாம் நம்மைப் போன்ற சாமானியருக்குத்தான் என்பதைத் தெரிந்துகொள்ள;
    கொட்டடி மோதல் கொலைகள் சட்டத்தின் ஆட்சி இல்லை என்பதை உணர்த்த வில்லையா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க