குஜராத் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட சொராபுதீனின் கூட்டாளி பிரஜாபதியும் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாதான் முக்கிய சதிகாரர் என சிபிஐ அதிகாரி சந்தீப் தம்காட்ஜ் சாட்சியம் அளித்துள்ளார். சொராபுதீன், அவருடைய மனைவி கவுசர் பீ, பிரஜாபதி ஆகியோர் கொல்லப்பட்டதில் அமித் ஷா, ஐபிஎஸ் அதிகாரி டி. ஜி. வன்சாரா, தினேஷ் எம். என்., ராஜ்குமார் பாண்டியன் ஆகியோர்தான் முதன்மை சதிகாரர்கள் என அவர் சாட்சியம் அளித்துள்ளார்.

துளசிராம் பிரஜாபதி (கோப்புப் படம்)

சிபிஐ அறிக்கையின்படி, நவம்பர் 23, 2005-ம் ஆண்டு ஒன்றாக பயணித்த சொராபுதீனும் அவருடைய மனைவி மற்றும் துள்சிராம் பிரஜாபதி ஆகியோர் குஜராத் போலீசால் கடத்தப்பட்டனர். நவம்பர் 26 அன்று நடந்த போலி என்கவுண்டரில் சொராபுதீன் கொல்லப்பட்டார். கவுசர் பீ-யின் உடல் கைப்பற்றப்படவில்லை எனினும் சிபிஐ குற்றப்பத்திரிகை அவர் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டதாகவே சொன்னது. பிரஜாபதி கைது செய்யப்பட்டு உதய்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் பிரஜாபதி தப்பிக்க முயற்சித்ததாகக் கூறி போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.

2010 முதல் 2012 வரை இந்த வழக்கை அமிதாப் தாக்கூர் தலைமையிலான சிபிஐ குழு சொராபுதீன் போலி மோதல் கொலையை விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 2012-ல் இந்த வழக்கை கூடுதலாக விசாரிக்கும் பொறுப்பேற்ற சந்தீப், துணை குற்றப்பத்திரிகை ஒன்றையும் தாக்கல் செய்தார். அப்போது சொராபுதீன் போலி மோதல் வழக்கும் பிரஜாபதி வழக்கும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டது. பின்பு இந்தக் கொலைகளின் பின்னணியில் ‘பெரிய அளவிலான சதி’ இருப்பதாகக் கூறி சிபிஐ நீதிமன்றம் வழக்குகளை ஒன்றாக இணைத்தது.

சந்தீப் தம்காட்ஜ்

குற்றப் பத்திரிகையில்  அரசியல்வாதிகள் போலீஸ் கூட்டாக சேர்ந்து இந்த போலி மோதல்களுக்கு திட்டமிட்டு, அதனால் பயன்பெற்றதாக சொல்லப்பட்டிருக்கிறது. இதில் அமித் ஷா உள்பட 35 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த மூத்த சிபிஐ அதிகாரி அமிதாப் தாக்கூர் உள்பட பல சிபிஐ அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான சாட்சியங்களை நீதிமன்றத்தில் அளிக்கத் தவறியதன் விளைவாக 13 பெரிய தலைகள் இந்த வழக்கிலிருந்து 2014-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர். இதில் அமித் ஷா, ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கட்டாரியா, வன்சாரா, பாண்டியன், தினேஷ் ஆகியோர் அடக்கும். மீதி 22 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. தாக்கூரின் குற்றப்பத்திரிகையில் அமித் ஷாவின் பெயர் இருந்தது. அதன்பின் விசாரித்த சந்தீப் அமித் ஷா-வை கைதும் செய்தார். இருந்தபோதும் சிபிஐ நீதிமன்றம் அவரை விடுவித்தது. சிபிஐ இதில் மேல் முறையீடு செய்யவும் மறுத்துவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் மும்பை நீதிமன்றத்தில் புதன்கிழமை(21-11-2018) சாட்சியளித்த சந்தீப் தம்காட்ஜ்,  பதிவு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்புகளில் அமித் ஷா, வன்சாரா, பாண்டியன், தினேஷ் ஆகியோரிடையே நடைபெற்ற உரையாடல்களில் என்கவுண்டர் சதித்திட்டம் தீட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

படிக்க:
♦ கொலைகார அமித் ஷா விடுதலை !
♦ சொராபுதீன் கொலை வழக்கையே கொன்ற அமித் ஷா- மோடி கும்பல்

குற்றப்பத்திரிகையில் சொன்னதை விரிவாக்கி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த சந்தீப், பிரஜாபதி போலி என்கவுண்டரை செயல்படுத்தியதாக எஸ்.பி.-யாக இருந்த தினேஷ் மீது குற்றம்சாட்டினார். சினிமா பாணியில் போலி மோதல் கொலையை ஜோடித்ததையும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

குஜராத் படுகொலைகளில் மோடிக்கு இருந்த பங்கை நீதிமன்றத்தில் சொன்ன குற்றத்துக்காக ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் வேட்டையாடப்பட்டதைப் போல, சந்தீப் தம்காட்ஜ் மீதும் இந்துத்துவ கும்பல் வன்மத்தோடு அலைந்து கொண்டிருக்கிறது. 2014-ல் மோடி பிரதமராக பதவி ஏற்றபின், இவர் தலைமை வகித்த குஜராத் படுகொலை வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டார். 2015-ம் ஆண்டு லஞ்சம் வாங்கியதாக பொய் வழக்கு புனைந்து வழக்கு தொடுக்கப் பார்த்தது சிபிஐ. இவருக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பும் விலக்கிக்கொள்ளப்பட்டது. மீண்டும் தன்னுடைய மாநிலமான நாகாலாந்துக்கு பணிக்கு அனுப்பப்பட்டார்.

பிரஜாபதி போலி என்கவுண்டரை முன் நின்று திட்டம் தீட்டிய குலாப்சந்த் கட்டாரியா மற்றும் அமித்ஷா

இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்டர் வழக்கு விசாரணையையும் மேற்பார்வையிட்டார். இவருடைய விசாரணைக்குப் பிறகு, மோடி – அமித் ஷா கும்பலுக்கு நெருக்கமான ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றது.

சந்தீப் தம்காட்ஜ் புதன்கிழமை அளித்த சாட்சியத்தில், ‘கிரிமினல்-அரசியல்வாதி-போலீசு’ கூட்டாளிகளில் அமித் ஷாவும் ஒருவராக இருந்ததாகவும் அவர்கள் செய்த சதி செயலே பிரஜாபதி, சொராபுதீன், கவுசர் பீ ஆகியோர் போலி மோதல் கொலைகள் எனவும் கூறியுள்ளார். இதில் ஆதாயம் பெற்ற அரசியல்வாதிகளாக அமித் ஷாவையும், ராஜஸ்தான் பாஜக அமைச்சரையும் குறிப்பிடுகிறார்.

வினவு செய்திப் பிரிவு படுகொலைகளைக் காட்டி ஆட்சியைப் பிடித்தவர்களுக்கு, படுகொலை வழக்குகள் எம்மாத்திரம்? இந்த போலி ஜனநாயகத்தில் படுகொலையாளர்களுக்கு பிரதமர் பதவியும் அமைச்சர் பதவியும் கிடைப்பது  ஒன்று அதிசயமில்லையே !

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க