privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்சொராபுதீன் கொலை வழக்கையே கொன்ற அமித் ஷா- மோடி கும்பல்

சொராபுதீன் கொலை வழக்கையே கொன்ற அமித் ஷா- மோடி கும்பல்

-

அமித் ஷா தலையை காக்கும் ஆர்.எஸ்.எஸ் தம்பிரான் கோசாவி

பிரதமர் மோடியின் கார்ப்பரேட் நலன் சார்ந்த செயல்பாடுகள், மத்திய அமைச்சர்களின் வெறியூட்டும் பேச்சுக்கள் மற்றும் சங் பரிவாரங்கள் துணிகரமாக ஈடுபடுகின்ற இந்துத்துவ நடவடிக்கைகள் ஓரளவுக்கு ஊடக கவனத்தை பெற்றுள்ளன. இந்து மதவெறியர்கள் கடந்த காலங்களில் இழைத்த குற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் நடந்து வரும் வழக்குகளிலிருந்து தப்புவிக்க செய்யப்படுகின்ற முயற்சிகள் உரிய முக்கியத்துவமின்றி ஊடகங்களில் பகிரப்பட்டு மறக்கடிக்கப்படுகின்றன.

அமித் ஷா கொலைகள்
இந்து மதவெறியர்கள் கடந்த காலங்களில் இழைத்த குற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் நடந்து வரும் வழக்குகளிலிருந்து தப்புவிக்க செய்யப்படுகின்ற முயற்சிகள் உரிய முக்கியத்துவமின்றி ஊடகங்களில் பகிரப்பட்டு மறக்கடிக்கப்படுகின்றன.

பா.ஜ.க.வின் அகில இந்திய தலைவர் அமித் ஷா, குஜராத் மாநில உள்துறை மந்திரியாக செயல்பட்ட போது புரிந்த போலி மோதல் கொலைகள் தொடர்பான முக்கியமான ஒரு வழக்கிலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டிருக்கிறார். சொராபுதீன் சேக், அவரது மனைவி கவுசர் பீ ஆகியோர் 2005-ம் வருடம் அமித் ஷாவின் ஆணையின் பேரில் கடத்தப்பட்டு, பின்னர் கொலை செய்யபட்டனர் என்பது குற்றச்சாட்டு. இந்த கொலை வழக்கின் முக்கிய சாட்சியான துளசிராம் பிரஜாபதி 2006-ம் வருடம் கொல்லபட்டார்.

இந்த வழக்கு முதலில் குஜராத் மாநிலத்தில் நடந்து கொண்டிருந்தது. சொராபுதீன் ஒரு லஷ்கர் இயக்கத் தீவிரவாதி என்ற கருத்து அப்போது மக்கள் மனதில் ஆழப்பதிந்து இருந்தது. ஜூலியஸ் சீசரை பொய்ப்பழி சுமத்தி கொன்ற புரூட்டஸ் ‘நீதி’ கேட்டது போல, மோடி பொதுக்கூட்டங்களில் மக்களை பார்த்து, ‘சொராபுதீன் போன்ற தீவிரவாதியை என்ன செய்ய சொல்கிறீர்கள்?’ என்று கேட்டார்.  ‘கொல்லுங்கள், கொல்லுங்கள்’ என்று விடை பகர்ந்தனர் மக்கள். ‘மோடியை கொல்ல சூரத்திலிருந்து அகமதாபாத் பயணித்து கொண்டிருந்த ‘பயங்கரவாதி’ சொராபுதீன் சேக்கை சரணடைய கோரிய போது, மறுத்து துப்பாக்கியால் சுட்டதால், போலீசு எதிர்வினையாற்ற நேர்ந்ததில் கொல்லப்பட்டார்’ என்று வழக்கை முடித்தது குஜராத் போலீஸ்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் 2007-ம் வருடம் வந்தது. மறுவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அமித் ஷாவை பாதுகாக்க விசாரணையின் போக்கை திசை திருப்பி நாடகமாடியது குஜராத் மோடி அரசாங்கம்.  ‘பேர், புகழ் மற்றும் பதவி உயர்வுக்காக குஜராத் மாநில போலீஸ் அதிகாரிகள் சிலரே சொராபுதீன் சேக்கை சுட்டுக் கொன்றனர்’ என்றும், ‘சொராபுதீன் சேக் லஷ்கர் தீவிரவாதியல்ல’ என்றும் குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்தது. ஷெர்லாக் ஹோம்ஸ் புலனாய்வு கோணத்துக்கு உகந்ததாக மூன்றாவது ஒரு தகவலும் அதில் இருந்தது. சொராபுதீன் கொல்லப்பட்ட போது ஆந்திராவிலிருந்து மகாராஷ்டிராவின் சாங்க்லிக்கு ஒரு பேருந்தில் பயணித்து கொண்டிருந்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மோடி - அமித் ஷா - டி.ஜி. வன்சாரா
அமித் ஷாவை பாதுகாக்க விசாரணையின் போக்கை திசை திருப்பி நாடகமாடியது குஜராத் மோடி அரசாங்கம். (மோடி – அமித் ஷா – டி.ஜி. வன்சாரா)

இந்த மூன்றாவது தகவல் உச்சநீதிமன்றத்தில் வழக்கை கண்காணித்து வந்த நீதிபதியை ஆச்சரியப்படுத்தியது. பதவிக்கும், புகழுக்கும் ஆசைபட்டு ஒருவரை கொல்ல போலீஸ் அதிகாரிகள் ஆந்திரா வரை புறப்பட்டு சென்றனர் என்ற தகவல் துணுக்குற செய்தது. இரண்டு புள்ளிகளும் இணைய மறுப்பதை கண்டனர். வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு 2010-ம் வருடம் மாற்றப்பட்டது. சொராபுதீன் மற்றும் அவரது மனைவி பயணித்த பேருந்தில் சென்ற துளசிராம் பிரஜாபதி இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தார். அவர் 2006-ம் வருடம் கொல்லப்பட்ட தகவலையும் வெளிக்கொணர்ந்தது சி.பி.ஐ. விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து பல்வேறு தடைகளை குஜராத் அரசாங்கம் ஏற்படுத்தியது. விசாரணை காலம் முடியும் வரை அமித் ஷா குஜராத்தில் நுழைய தடை விதித்தது உச்சநீதிமன்றம். சி.பி.ஐ-ன் கோரிக்கையை ஏற்று வழக்கை 2012-ம் வருடம் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு மாற்றியது உச்சநீதிமன்றம்.

இந்த வழக்கை தனியாக விசாரணை நடத்தி முடிவை பெற மகாராஷ்டிராவில் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் ஒன்றையும் ஏற்படுத்தியது உச்சநீதிமன்றம். அப்போது முக்கியமான ஒரு நிபந்தனையை விதித்தது. வழக்கை விசாரிக்கும் விசாரணை நீதிபதி நடுவில் மாற்றப்படக்கூடாது என்று கூறியது. விசாரணை நீதிபதியாக உத்பத் என்பவர் நியமிக்கப்பட்டார். விசாரணையின் போது நேரில் ஆஜராகாத அமித் ஷா மீது கண்டிப்புடன் நடந்து கொண்டார்.

இந்த நிலையில் பிரதமராக மோடி பொறுப்பேற்றார். பல்வேறு மாநில ஆளுநர்கள் அவமானப்பட்டு வெளியேறியது போல, சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி உத்பத் ‘தானாகவே’ வெளியேறி வழி விட்டார். 2014 மே மாதம் மோடி பிரதமராக பொறுப்பேற்றார். ஜூன் மாதத்தில் உத்பத் ராஜிநாமா செய்தார். அமித் ஷாவை காப்பாற்ற மோடி எவ்வளவு துரிதகதியில் செயல்பட்டுள்ளார் என்பது இதில் தெரிகிறது.

ஹர் கர் மோடி
ஹர கர மோடி, வீட்டுக்கு வீடு மோடி (மோடிக்காக அமித் ஷா நடத்திய ஒட்டுக் கேட்பு குறித்து)

உத்பத் ராஜிநாமா செய்த பிறகு இந்த பொறுப்புக்கு வந்தவர் பிரிஜ்மோகன் லோயா. மர்மமான முறையில் அவர் தங்கியிருந்த நாக்பூர் அரசு விருந்தினர் மாளிகையில் நவம்பர் மாதம் 30-ம் தேதி இறந்து கிடந்தார். மாரடைப்பு என்று சொல்லப்பட்டாலும், அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதியது. அமித் ஷாவுக்கு அனுசரணையாக நடந்து கொள்வதை போல முதலில் தோன்றினார், பிரிஜ்மோகன் லோயா. உத்பத் மாதிரி இல்லாமல், நேரில் ஆஜராவதிலிருந்து அமித் ஷாவுக்கு விலக்கு அளித்து வந்தார். பின்னர் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் இந்தச் சலுகை ‘அமித் ஷாவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை பதிவாகும் வரை மட்டுமே’ என்றார்.

அமித் ஷாவுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து விடுவிக்க வேண்டும் என்பதே அமித் ஷா தரப்பின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பாக இருந்தது. சி.பி.ஐ சிறப்பு நீதிபதியின் அறிவிப்பு அமித் ஷாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதிகாரத்தின் உச்சியில் ராஜாளி பறவையின் இறுமாப்புடன் தான் வீற்றிருக்க, கூட்டுக் களவாணியான பழைய நண்பனின் துயரைக் காண சகிக்காதிருந்தார் மோடி. மேலும் ஜெயலலிதா சசிகலாவின் துணையை நாடுவது போல அமித் ஷாவின் அருகாமையை மிகவும் விரும்பினார். 52 வயதான நீதிபதி லோயா மோடியின் நன்னூலில் இடம்பெற மறுத்ததால் அதற்குரிய வெகுமானத்தை பெற்றார். லோயா அகற்றப்பட்டு அவருக்குப் பிறகு சி.பி.ஐ. சிறப்பு நீதிபதியாக கோசாவி 2014-ம் வருடம் டிசம்பர் 4-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

குஜராத் போலீசின் இரட்டைத் துப்பாக்கி - மோடி, அமித் ஷா
குஜராத் போலீசின் இரட்டைத் துப்பாக்கி – மோடி, அமித் ஷா

அமித் ஷாவின் எதிர்பார்ப்பில் எந்த குறையையும் வைக்கவில்லை, கோசாவி. தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற அமித் ஷாவின் கோரிக்கை மனுவை முதலில் எடுத்துக் கொண்டார், கோசாவி. டிசம்பர் மாதம் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் வாதங்களை கேட்டறிந்து, டிசம்பர் மாதம் 30-ம் தேதி தீர்ப்பை வழங்கினார். அமித் ஷாவுக்கு எதிரான எல்லா குற்றச்சாட்டுகளிருந்தும் அவரை விடுவித்து தனது ‘கடமையை’ செவ்வனே நிறைவேற்றினார். ‘அரசியல் காரணங்களுக்காக புனையப்பட்ட வழக்கு’ என்று பா.ஜ.க.வின் ஊடகப் புளுகர்கள் கூறி வந்ததையே தனது தீர்ப்பாக எழுதினார் கோசாவி. வேகமான பந்துவீச்சுக்கு சோயப் அக்தரை ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைப்பது போல, அமித் ஷாவுக்கு எதிரான வழக்கை அதிவேகமாக முடித்து வைத்த சி.பி.ஐ சிறப்பு நீதிபதி கோசாவியை நாம் ‘நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். எக்ஸ்பிரஸ்’ என்று தான் அழைக்க வேண்டும்.

‘இந்த வழக்கு சிக்கலான முடிச்சுகளை கொண்டது; ஆழமான சதிவலை பின்னப்பட்டது; அதிகார பலமுள்ளவர்கள் சம்பந்தப்பட்டது’ என்பதால் தான் வழக்கை தீர விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை குஜராத்துக்கு வெளியே அமைத்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். ஆனால், உச்சநீதிமன்றத்தின் நோக்கத்தை நிறைவேற்றாமல், பாதிக்கப்பட்ட தரப்பின் கோரிக்கையையும் புறந்தள்ளி, வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற அமித் ஷாவின் கோரிக்கை மனுவை முதலில் பரிசீலனைக்கு எடுத்து அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய நீதி தேவன் கோசாவி ஒரு ஆர்.எஸ்.எஸ் தம்பிரான் என்பதில் சந்தேகம் உண்டா?

உள்துறை மந்திரியாக இருப்பவர் டி.ஜி.பி., உள்துறை செயலர் ஆகியோருடன் முறையான தொடர்பில் இருப்பதை புரிந்து கொள்ளலாம். குஜராத்தின் உள்துறை மந்திரியாக இருந்த அமித் ஷா, எஸ்.பி. மற்றும் உதவி எஸ்.பி நிலையில் இருந்த டி.ஜி. வன்சாரா மற்றும் ராஜ்குமார் பாண்டியன் ஆகியோரை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். சொராபுதீன் கொல்லப்பட்ட நாளில் இவர்களுடன் மிக அதிகமாக பேசிய தொலைபேசி நேரக் கணக்கு மற்றும் தடயவியல் சோதனை அறிக்கை என்று எந்த ஆதாரத்தையும் கோசாவி கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

இது மட்டுமல்லாமல் தஸ்ரத் பட்டேல் மற்றும் ராமன் பட்டேல் ஆகிய இரு சகோதரர்களின் வாக்குமூலங்கள் முக்கியமானவை. கட்டிட ஒப்பந்ததாரர்களான இவர்களின் வாக்குமூலங்கள் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித் ஷா ஒரு பெரும் கொள்ளை கூட்டத்தின் தலைவன் என்பதை தெரிவிக்கிறது. தனது வசூல் வேட்டைக்கு சொராபுதீனின் அடியாட்களை அவர் பயன்படுத்தி வந்துள்ளார். 2004-ம் வருடம் ‘பாப்புலர் பில்டர்ஸ்’ என்ற தங்கள் நிறுவனத்தின் அலுவலகத்துக்கு தனது அடியாள் படையுடன் வந்த சொராபுதீன் அங்கு சிறு வன்முறையில் ஈடுபட்டுள்ளார். கூட்டத்திலிருந்து ஒருவர் துப்பாக்கியால் காற்றில் சுட்டுள்ளார். அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் சொராபுதீனுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் குஜராத் போலீஸ் எடுக்கவில்லை. காரணம், சொராபுதீன் முஸ்லிமாக இருந்தாலும், அமித் ஷாவின் பங்காளி.

பங்காளிகள் பகையாளிகளானது தான் அமித் ஷா – சொராபுதீன் கதையின் மையக்கரு எனலாம். கொள்ளையடிக்கும் பணத்தை பகிர்ந்து கொள்வதில் தோன்றிய முரண்பாடே சொராபுதீன் கொலைக்கான மூலக் காரணம். சொராபுதீன் அதிகமாக பணத்தை நிர்ப்பந்தித்து இருக்க வேண்டும் அல்லது உரிய பங்கை தரவில்லை என்றால் பங்காளிகளை அம்பலப்படுத்துவதாக மிரட்டியிருக்க வேண்டும். சில வழக்கறிஞர்கள் சந்தேகப்படுவது போல 2002-ம் வருடம் நடந்த முஸ்லிம் மக்கள் படுகொலையில் மோடிக்கு எதிராக ‘நீதிக்கான குடிமக்கள்’ ஆணையத்தில் சாட்சியமளித்த ஹரேன் பாண்டியா கொலையில் சம்பந்தபட்டவராகவும் கூட இருக்கலாம். ஆனால், இந்த உண்மையை வெளிப்படுத்த கவித்துவ நீதியின் மீது தணியாத தாகம் கொண்டவர்கள் பொறுப்புகளில் இருக்க வேண்டும்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். துளசிராம் பிரஜாபதியை கொன்ற வழக்கில் சம்பந்தப்பட்ட குஜராத் மாநில டிஜிபி பி.சி.பாண்டேவை பிப்ரவரி 4-ம் தேதி விடுதலை செய்து உத்தரவிட்டார் சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி கோசாவி. பிப்ரவரி 5-ம் தேதி கல்லூரி மாணவி இஷ்ரத் ஜகான் கொலை வழக்கிலிருந்து டி.ஜி. வன்சாரா மற்றும் இணை டி.ஜி.பி யாக இருந்த பி.பி. பாண்டே ஆகியோருக்கு பிணை கிடைத்தது. பிப்ரவரி மாதம் 18-ம் தேதி சொராபுதீன் கொலை வழக்கிலும் பிணை கிடைத்ததை அடுத்து டி.ஜி. வன்சாரா சிறை வாசத்தை முடித்து வெளி வந்துள்ளார்.

இவை ஒருபுறம் சத்தமின்றி நடந்து கொண்டிருக்க, குஜராத் 2002 முஸ்லிம் மக்கள் படுகொலையோடு தொடர்புடைய கொலை பாதகர்கள் தண்டிக்கப்பட காரணமாக இருந்த மனித உரிமை போராளி டீஸ்தா சேதல்வாத்தை கைது செய்ய முயன்று வருகிறது குஜராத் அரசாங்கம். உச்சநீதிமன்றம் டீஸ்தா சேதல்வாத் கைது செய்யப்படுவற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. குல்பர்க் சொசைட்டியில் கொல்லப்பட்ட மக்களுக்கு நினைவகம் அமைக்க வசூலிக்கபட்ட பணத்தை டீஸ்தா கையாடல் செய்தார் என்பது வழக்கு. இது பொய் குற்றச்சாட்டு என்பதை விளக்கும் விரிவான கட்டுரை ஏற்கனவே வினவில் வெளியானது.

சொராபுதீன் வழக்கை 2005-லிருந்து தொடர்ந்து நடத்தி வருபவர் சொராபுதீனின் தம்பி ரூபாபுதீன். தனது அண்ணனும், அண்ணியும் ஒருசேர கொல்லப்பட்டதற்கு நீதி வேண்டி நெடிய சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறார். தனது அண்ணி கவுசர் பீ களங்கமற்றவர் என்பது அவரது உறுதியான நம்பிக்கை. ருபாபுதீனுக்கு பல்வேறு போக்குகளை காட்டி விட்டு தற்போது குற்றவாளிகள் ஒன்றன் பின் ஒன்றாக விடுதலை செய்யப்படுவதை பார்த்து நிலைகுலைந்து போய் உள்ளார். அப்பாவி மக்களின் உயிரை குடித்த கொலையாளிகள் விடுதலையாவதும், நீதிக்கு போராடியவர்கள் சிறைக்கு செல்லவிருக்கும் நிலையையும் சற்று கற்பனை செய்யுங்கள். இந்துத்துவம் என்ற கொடுங்கனவில் வந்து போகும் மாய மோகினி தான் இந்திய நீதித்துறை என்பது விளங்கும்.

– சம்புகன்.

இது தொடர்பான செய்திகள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க