Saturday, May 25, 2024
முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்தீஸ்தா சேதல்வாத்தை முடக்க காவி பயங்கரவாதிகள் சதி

தீஸ்தா சேதல்வாத்தை முடக்க காவி பயங்கரவாதிகள் சதி

-

னித உரிமை ஆர்வலரும், 2002-ம் வருடம் குஜராத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின் நீதிக்காக இந்திய நீதிமன்றங்களில் தளராத போராட்டத்தை நடத்தி வருபவருமான தீஸ்தா சேதல்வாத் கைது செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அவரது செயல்பாட்டை மட்டுமல்ல, பார்ப்பனிய பாசிசத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும் எவரையும் முடக்கி விட முடியும் என்று மனப்பால் குடிக்கிறார்கள், படுகொலையின் முக்கிய குற்றவாளிகளான இந்து மதவெறியர்கள். 2000 பேர் கொன்றழிக்கப்பட்ட இனப்படுகொலை சம்பவத்தின் சான்றுகளையும், சாட்சியங்களையும் சேகரித்து தனித்தனி வழக்குகளாக நீதிமன்றங்களில் தொடுத்து நீதியை பெற்று தரும் முயற்சியில் ஓரளவாவது வெற்றி பெற்று வந்தார் தீஸ்தா சேதல்வாத். இது வரையிலும் 117 பேர் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர். 97 பேர் கொல்லப்பட்ட நரோடா பாட்டியா வழக்கில் மோடியின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்த சுகாதாரத்துறை அமைச்சர் மாயா கோட்னானி 28 வருடங்கள் சிறைவாசத்தை அனுபவிக்கிறார்.

தீஸ்தா சேதல்வாத்
தீஸ்தா சேதல்வாத்

அடுத்த சுருக்குக் கயிறு குல்பர்க் சொசைட்டி வழக்கில் மோடிக்கு காத்திருந்தது. இந்த வழக்கில் மோடியின் மேல் குறிப்பான குற்றச்சாட்டுக்கள் இருந்தும் முதல் தகவல் அறிக்கை பதிய குஜராத் காவல்துறை மறுத்தது. இந்த வழக்கின் பிடியிலிருந்து மோடியை காப்பாற்ற பகீரத பிரயத்தனத்தில் ஈடுபட்ட மோடி ஆதரவு வழக்கறிஞர்கள் சில தற்காலிக வெற்றிகளை ஈட்டினார்கள். இந்த ‘வெற்றிகளை’ ஊடகங்களில் எக்களித்து மோடியை பரிசுத்தவானாக காட்டியது மோடியின் ஊடகப் படை. குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வரும் இடைவெளியில் மோடி இந்தியாவின் பிரதமரும் ஆகிவிட்டார்.

குல்பர்க் சொசைட்டி வழக்கின் விபரத்தை முதலில் பார்ப்போம். குஜராத் தலைநகரம் அகமதாபாத்தின் சமன்புராவில் இருக்கிறது, முஸ்லிம் மக்கள் வாழும் குல்பர்க் சொசைட்டி. 29 பங்களாக்களையும், 10 அடுக்குமாடி குடியிருப்புகளையும் கொண்டது குல்பர்க் சொசைட்டி. உயர் மத்தியதர வர்க்க முஸ்லிம்கள் வாழ்ந்த பகுதி. குல்பர்க் சொசைட்டியை சுற்றிலும் இந்துக்கள் வாழ்ந்தனர். 2002 -ம் வருடம் பிப்ரவரி 28-ம் தேதி ஒரு கும்பல் குல்பர்க் குடியிருப்புகளை சூழ்ந்தது. கும்பலை கவனித்த முசுலீம் மக்கள் முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஷான் ஜாப்ரி வீட்டுக்குள் அடைக்கலம் தேடினர். இஷான் ஜாப்ரி போலீஸ் உயரதிகாரிகளிலிருந்து மோடி உட்பட அனைவருக்கும் போன் செய்து உதவிகள் கேட்டார்.

அப்போது மோடி தன்னால் உதவி செய்ய முடியாது என்று கடுமையான வார்த்தைகளால் இஷான் ஜாப்ரியை திட்டினார். இந்த தகவலை கொல்லப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கூடியிருந்த மக்களிடம் பகிர்ந்து விட்டு முன்னேறி வந்த கும்பலிடம் சமாதானம் பேச சென்றார், ஜாப்ரி. உடனே அவரை கண்டதுண்டமாக வெட்டி தீக்கிரையாக்கினார்கள், இந்துமதவெறியர்கள். பிறகு அவர் வீட்டில் குழுமியிருந்த முசுலீம் மக்களை வெட்டி சாய்த்து எரித்தார்கள். பெண்களில் சிலரை வன்புணர்ச்சி செய்து கொன்றார்கள். மொத்தம் 69 பேர் கொல்லப்பட்டார்கள். இந்த வழக்கின் வீச்சு மோடியை தொடுவதால், இதனை நடத்தி வரும் தீஸ்தா சேதல்வாத்திற்கு முதலிலிருந்தே தொல்லைகள் கொடுக்க ஆரம்பித்தார்கள், குஜராத் அரசை வைத்திருக்கும் பாஜக மதவெறியர்கள்.

நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பு குஜராத் படுகொலைகள் நடந்தேறிய 2002-ம் வருடம் ஏப்ரல் 1-ல் உருவாக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவிகள் வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டது. இந்த அறக்கட்டளையை தீஸ்தா சேதல்வாத் மற்றும் அவரது கணவர் ஜாவெத் ஆனந்த் ஆகியோர் இணைந்து நடத்தி வருகிறார்கள். இதே போன்று ‘சப்ரங்’ அமைப்பை மும்பை கலவரங்களுக்கு பின்பான நிலைமைகளில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் 1993-ல் தொடங்கினார்கள்.

இஷான் ஜாப்ரி
கொல்லப்பட்ட இஷான் ஜாப்ரி (இடது)

இந்த இரு அமைப்புகள் மீதும் 2008-ம் வருடம் ஜனவரி மாதம் ஒரு வழக்கை புனைந்தது குஜராத் போலீஸ். குல்பர்க் சொசைட்டியில் கொல்லப்பட்ட 69 பேரை நினைவுகூரும் அருங்காட்சியகம் ஒன்றை நிறுவுவதற்காக பாதிக்கப்பட்ட மக்களிடம் ‘சப்ரங்’ சார்பில் திரட்டப்பட்ட பணத்தை தீஸ்தா சேதல்வாத் மற்றும் அவரது கணவர் ஆகியோர் கையாடல் செய்தார்கள் என்பது புகார். இந்த புகாரை குல்பர்க் சொசைட்டியின் 10 உறுப்பினர்களிடமிருந்து பெற்று உள்ளது, காவல்துறை. இதனை அடுத்து இருவர் மீதும் குஜராத் காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிந்துள்ளது.

அகமதாபாத்தில் அமைந்திருக்கும் குல்பர்க் சொசைட்டியை சுற்றிலும் இந்துக்கள் வாழ்வதால் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் முஸ்லிம்கள் 2002 சம்பவத்துக்கு பிறகு வாழத் தயங்கினர். நன்கொடைகள் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு குல்பர்க் நிலப்பகுதிகளை சந்தை விலைக்கு வாங்கி ஒரு நினைவகம் எழுப்பலாம் என்று ‘சப்ரங்’ அறக்கட்டளை கருதியது. எனவே வேறு யாருக்கும் தங்கள் நிலங்களை விற்க வேண்டாம் என்று ‘சப்ரங்’ சார்பில் நில உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். ‘சப்ரங்’கால் போதுமான பணத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் வசூலிக்க இயலாமல் போனது.

நிலத்தை வாங்க 2012-ல் ‘சப்ரங்’ தயாரான போது அகமதாபாத் முழுவதுமே நிலத்தின் விலைகள் நான்கு மடங்கு உயர்ந்திருந்தது. எனவே கொல்லப்பட்ட மக்களுக்கு நினைவகம் எழுப்பும் திட்டத்தை கைவிட்டது ‘சப்ரங்’. எனவே குல்பர்க் அருங்காட்சியகத்துக்கு வசூலிக்கப்பட்ட ரூ 4.5 லட்சம் பணம் நீதிமன்றத் தேவைக்காக திருப்பப்பட்டது. இதற்கு நன்கொடையாளர்களிடம் ஒப்புதலை பெற்றது, ‘சப்ரங்’. தங்கள் திட்டம் கைவிடப்பட்டதால், குல்பர்க் சொசைட்டி மக்களிடம் தாங்கள் விருப்பப்பட்டவர்களுக்கு தங்கள் சொத்துக்களை விற்கலாம் என்று சொல்லப்பட்டது.

இந்த நிகழ்வுகளை கவனித்துக் கொண்டிருந்த மோடியின் குஜராத் அரசு குல்பர்க் மக்கள் தங்கள் நிலங்களை தங்கள் விருப்பப்படி விற்பதற்கு தடை விதித்தது. இதன் மூலம் வன்முறையால் ஏற்கனவே நொடிந்து போயிருந்த மக்களை மேலும் நெருக்கடிக்கு தள்ளியது. இதற்காக அகமதாபாத்தில் முன்பு நடைமுறையில் இருந்த ‘அசையா சொத்துக்களை விற்கத் தடை’ செய்யும் ஆணையை தூசி தட்டி கொண்டு வந்தது. (பெருநகரங்களில் மக்கள் மத வன்முறை வதந்திகளை நம்பி தங்கள் சொத்துக்களை விற்று விட்டு ஓடுவதை தடுக்கும் வண்ணம் 1986-ல் இயற்றப்பட்ட பழைய சட்டம் இது.) அப்படியும் மீறி விற்றால் தொகாடியா போன்ற இந்துமதவெறி பாசிஸ்டுகள் வீட்டருகே வந்து கூட பாகிஸ்தானுக்கு ஓடு என்று மிரட்டுவார்கள்.

ஜாகியா ஜாப்ரி
ஜாகியா ஜாப்ரி

சப்ரங் மூலம் அந்நிய நாடுகளிலிருந்து பணத்தை பெற்று முறைகேடு செய்தார் என்றொரு புகாரும் தீஸ்தா மீது சுமத்தப்பட்டிருக்கிறது. நிதி பெற்றதை தீஸ்தா மறுக்கவில்லை. எனினும் அந்த பணத்தை சொந்த நோக்கங்களுக்கு பயன்படுத்தவில்லை என்பது தீஸ்தாவின் வாதமாக உள்ளது. எனவே இந்திய குற்றவியல் சட்டத்தின் படி தண்டிக்க அவர் எந்த தவறையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குல்பர்க் அருங்காட்சியகத்துக்கு தன்னால் திரட்ட முடிந்த ரூ 4.5 லட்சம் தொகையில் ஐம்பதாயிரம் ரூபாய் மட்டுமே வெளிநாடுகளிலிருந்து நண்பர்கள் வழங்கினார்கள் என்பதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விளக்க மனுவில் குறிப்பிட்டுள்ளார், தீஸ்தா.

இந்த வழக்கு தீஸ்தா மீது புனையப்பட்ட காலநிலையை தெரிந்து கொள்வதும் அவசியமானது.

2006 -ம் ஆண்டு குல்பர்க் படுகொலை வழக்கில் மோடி உள்ளிட்டு குஜராத் அரசின் உயர் பொறுப்புகளில் இருந்த அனைவருக்கும் தொடர்பு இருப்பதை உச்சநீதிமன்றத்தில் 119 பக்க அறிக்கை ஒன்றில் ஆதாரங்களுடன் சமர்ப்பித்தார், தீஸ்தா. அறிக்கையை ஆராய்ந்த உச்சநீதிமன்றம் இரண்டு வருடங்கள் கழித்து சிறப்பு புலனாய்வு குழுவை ஏற்படுத்தியது. 2012-ம் வருடம் சிறப்பு புலனாய்வு குழு (SIT) தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது. சிறப்பு புலனாய்வுக் குழுவின்  அறிக்கை தன்னை நிரபராதி என்று அறிவித்ததாக மோடி கொண்டாடினார். (சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர் ராகவன் மோடியால் குளிப்பாட்டப்பட்ட செய்திகள் அப்போது ஊடகங்களில் வெளிவந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.)

சிறப்பு புலனாய்வுக் குழு கண்டறிந்த உண்மைகளுக்கும் ராகவனின் தர்க்க முடிவுக்கும் இருந்த வேறுபாட்டையும், முரண்பாட்டையும் கண்ட மனித உரிமை ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த கோரிக்கையை பரிசீலித்த உச்சநீதிமன்றம் மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரனை நீதி நடுநிலையாளராக (amaicus curiae) நியமித்து சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையை மீளாய்வு செய்ய கேட்டுக் கொண்டது. ராஜூ ராமச்சந்திரன் வழங்கிய குறிப்புரையில் சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைவர் மீதும் (மோடி உட்பட) குற்றத்துக்கு உட்படுத்தும் ஆதாரங்கள் இருப்பதை வெளிக்கொணர்ந்தார். இந்த காலத்தில் தான் 2013 மார்ச் மாதம் தீஸ்தாவுக்கு எதிராக குல்பர்க் நினைவகம் தொடர்பான வழக்கு தொடுக்கப்பட்டது.

மாயா கோத்னானி
மாயா கோத்னானி

எனினும் இந்த நிதிமுறைகேடு வழக்கு தீஸ்தா சந்திக்கும் முதல் வழக்கல்ல. குஜராத் 2002 படுகொலை குற்றவாளிகளை தண்டிக்க அவர் முனைப்பு காட்டியதிலிருந்து பல வழக்குகள் அவர் மீது புனையப்பட்டன. அவை சோடிக்கப்பட்ட பொய் குற்றச்சாட்டுக்கள் என்பதை நீதிமன்றம் கண்டறிந்து தள்ளுபடி செய்து வந்தது. உதாரணத்திற்கு, 14 பேர் எரித்துக் கொல்லப்பட்ட பெஸ்ட் பேக்கரி வழக்கில் முதலில் குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். முக்கிய சாட்சியான ஜகீரா ஷேக் தான் மிரட்டப்பட்ட உண்மையை தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் தெரிவித்ததை அடுத்து வழக்கை குஜராத்துக்கு வெளியே மராட்டியத்துக்கு மாற்றியது உச்சநீதிமன்றம். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கின் போக்கில் ஜகீரா ஷேக் திடீரென பல்டி அடித்தார். தீஸ்தா தன்னை கடத்தி வைத்திருப்பதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பொய் சாட்சியம் அளிக்க கட்டாயப்படுத்துவதாகவும் வதோதராவில் பத்திரிக்கையாளர்களை கூட்டி தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம் சென்ற தீஸ்தா, ஜகீராவின் புகாரை விசாரிக்க உயர்மட்ட விசாரணையை கோரினார். தனது விசாரணையில் ஜகீரா ஷேக்கின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என்று உணர்ந்தது, உச்சநீதிமன்றம். ஜகீராவுக்கு ஒரு வருட சிறை தண்டனையும், ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது. இதுபோக சாட்சிகள் சார்பாக போலி அறிக்கைகளை தீஸ்தா சேதல்வாத் தயாரிப்பதாக ரயீஸ்கான் என்பவர் ஒரு வழக்கை தொடர்ந்தார். இந்துமதவெறியர்களால் ஊக்குவிக்கப்பட்ட அந்த அவதூறு வழக்கும் எந்தவித முன்னேற்றம் இல்லாமல் தேங்கி நிற்கிறது.

பல்வேறு கொலை வழக்குகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்று தருவதில் அவரது பங்களிப்புகளை கவனித்தால் தீஸ்தா சேதல்வாத் மீது தொடுக்கப்படும் வழக்குகளின் நோக்கத்தை ஒருவர் எளிதில் அறியலாம். 33 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சர்தபுரா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 31 பேருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க காரணமாக இருந்தது, அவருடைய நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பு (CJP).

பாபு பஜ்ரங்கி
பாபு பஜ்ரங்கி

அனந்த் மாவட்டத்தின் ஓத் கிராமத்தில் 24 பேர் கூட்டமாக கொல்லப்பட்ட வழக்கில் 23 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 11 பேர் உயிருடன் எரிக்கப்பட்ட மேசானாவில் 22 பேர் ஆயுள் தண்டனை பெற்றார்கள். தாக்குதலை வழிநடத்திய பா.ஜ.க எம்.எல்.ஏ பிரகலாத் கோஸா சில பிறழ் சாட்சிகள் காரணமாக ஒரு வருடம் சிறை தண்டனை பெற்றார்.

நரோடா பாட்டியா வழக்கில் 97 பேர் கொல்லப்பட்டார்கள். 32 பேர் ஆயுள் தண்டனை பெற்றார்கள். மோடியின் மந்திரி மாயா கோட்னானிக்கு 28 வருட சிறை தண்டனை கிடைத்தது. விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னணி தலைவன் பாபு பஜ்ரங்கி தனது கொலை பாதக செயலுக்கு சாகும் வரை சிறைவாசம் அனுபவிக்க உத்தரவிட்டது நீதிமன்றம். 11 பேர் கொல்லப்பட்ட நரோடா காம் மற்றும் 69 பேர் கொல்லப்பட்ட குல்பர்க் சொசைட்டி வழக்குகள் விசாரணையில் இருக்கின்றன.

தீஸ்தா சேதல்வாத், விருந்தா க்ரோவர் மற்றும் மறைந்த முகுல் சின்கா போன்ற மனித உரிமை ஆர்வலர்ககளின் பெருமுயற்சியில் இனப்படுகொலையின் குற்றவாளிகள் சிறு எண்ணிக்கையில் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்.

முகுல் சின்கா
முகுல் சின்கா

மோடியை எந்த வழக்கும் தொட்டு விடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறது, இந்துத்துவத்தின் தலைமை பீடம். இதற்காக அருண் ஜெட்லி, ராம்ஜெத்மலானியின் மகன் மகேஷ் ஜெத்மலானி, மீனாட்சி லேகி, பிங்கி ஆனந்த் என்று ஒரு பெரிய வழக்கறிஞர் படை இரவு பகல் பாராது உழைக்கிறது. கிரேக்க தொன்மத்தில், மலை உச்சிக்கு பாறையை கொண்டு செல்லும் சிசிபஸின் முயற்சி ஒவ்வொரு முறையும் தட்டி விடப்படுவது போல மோடிக்கு எதிரான வழக்கு அதன் தர்க்கப்பூர்வ முடிவை எய்தும் நேரத்தில் இவர்கள் அதனை கலைத்து விடுகிறார்கள். உண்மையை அதிகாரத்தின் தந்திரங்கள் திசை திருப்புகின்றன.

இந்துமதவெறியர்களுக்கு எதிரான சமரசமற்ற உறுதியை காட்டும் இஷான் ஜாப்ரியின் துணைவியார் ஜாகியா ஜாப்ரி போன்றோருக்கு இன்றைய  குஜராத்தில் இருக்கும் ஒரு சில நம்பிக்கை கீற்றுகளில் தீஸ்தா சேதல்வாத்தும் ஒருவர். அதனால்தான் அவரை எப்படியாவது முறியடித்து விடவேண்டுமென்று ஆர்.எஸ்.எஸ் கூட்டம் துடிக்கிறது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அது இன்னும் கள்குடித்த குரங்கு போல அலைகிறது.

தீஸ்தா சேதல்வாத் வெளிநாடுகளிலிருந்து பண மோசடி செய்தார் என்று புனையப்பட்ட இந்த வழக்கில் அவரை எப்படியாவது கைது செய்து முடக்கிவிட வேண்டும் என்பதே பாசிச மோடி கும்பலின் நோக்கம். அந்த நோக்கம் நிறைவேறும் போது இந்துமதவெறியர்களுக்கு எதிரான குறைந்த பட்ச சட்டபூர்வ முயற்சிகளைக் கூட ஆழக்குழி தோண்டி புதைத்து விடலாம். இதுதான் இந்து மதவெறியர்களின் விருப்பம். எனில் அந்த விருப்பத்திற்கு சமாதி கட்ட வேண்டியது நமது கடமை. இல்லையென்றால் இந்த நாட்டில் இந்துமதவெறியர்களால் கொல்லப்படும் இசுலாமிய மக்களுக்கு எந்த நாதியும் இருக்காது. அப்படி ஒரு சூழ்நிலையை மாற்ற வேண்டியது நமது பொறுப்பில்லையா?

– சம்புகன்

  1. இந்து மத வெறியன் மோடியின் பாசிசக் கரங்கள் மக்கள் உரிமைகளுக்காகப் போராடும் ஜனநாயக அமைப்புகள் மீது விரைவாக நீளத் தொடங்கியுள்ளது.மோடியின் முகமூடியைக் கிழிப்பதற்கு முன்பாக அவர்களை ஒடுக்கிவிட வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்.ன் குலை நடுக்கம்.இந்து மத வெறியை எதிர்த்த,எதிர்க்கிற யாராக இருந்தாலும் அவர்களைப் பொருத்தவரை தீய சக்திகளே.கிராம மன்றம் தொடங்கி நீதிமன்றங்கள் வரை மோடி கும்பல் அவர்களுடைய வித்தைகளைத் தொடங்கி விட்டார்கள்.குஜராத்தில் படுகொலைகளை நடத்தி இசுலாமியர்களை ஒடுக்கியது போல் அனைத்து ஜன நாயக சக்திகளையும் ஒடுக்கிவிடலாம் என்று மனப்பால் குடிக்கிறது பார்ப்பனிய இந்து மத வெறி கும்பல்.அது ஒருபோதும் நடக்காது.ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டு போராட வேண்டிய தருணமிது.

  2. மோடி என்றால் இப்படி

    2012-ம் வருடம் சிறப்பு புலனாய்வு குழு (SIT) தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது. சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கை தன்னை நிரபராதி என்று அறிவித்ததாக மோடி கொண்டாடினார். (சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர் ராகவன் மோடியால் குளிப்பாட்டப்பட்ட செய்திகள் அப்போது ஊடகங்களில் வெளிவந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.)

    தீஸ்த்தா என்றால் இப்படி

    சப்ரங் மூலம் அந்நிய நாடுகளிலிருந்து பணத்தை பெற்று முறைகேடு செய்தார் என்றொரு புகாரும் தீஸ்தா மீது சுமத்தப்பட்டிருக்கிறது. நிதி பெற்றதை தீஸ்தா மறுக்கவில்லை. எனினும் அந்த பணத்தை சொந்த நோக்கங்களுக்கு பயன்படுத்தவில்லை என்பது தீஸ்தாவின் வாதமாக உள்ளது. எனவே இந்திய குற்றவியல் சட்டத்தின் படி தண்டிக்க அவர் எந்த தவறையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  3. ஐயா, டீஸ்தா மேல் வழக்கு போடப்பட்டதே இனப்படுகொலை குற்றங்களுக்கு மோடி தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் என்பதால் தான். பிறகு எப்படி இருவரும் சமம் ஆவார்கள்? அகவயவாதம் இல்லாத கட்டுரை இல்லை.

  4. ஒரு தமிழ் திரைப்படத்தில் சிரிப்புநடிகன் சோ கரைவேட்டி கட்டிய கழக உடன்பிறப்பு காவல்நிலையம் சென்று கிரிமினலை அடாவடியாக மீட்டு வருவதை கிண்டல் செய்திருப்பார்.இன்று உச்சநீதிமன்ற நீதிபதி நியமன விவகாரத்தில் காவி கிரிமினல்கள் தலையிடுவது இந்நாட்டின் நீதிநிர்வாக அமைப்பின் மீதான கொடிய தாக்குதலாகும்.போராட்ட குணம் கொண்ட வழக்கறிஞர்கள் இக்கொடுமையை எதிர்த்து போராட வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க