Monday, January 13, 2025
முகப்புசெய்திஇந்தியாநீரவ் மோடி – பஞ்சாப் தேசிய வங்கி மோசடியின் பரிமாணம் ரூ. 25,000 கோடி !

நீரவ் மோடி – பஞ்சாப் தேசிய வங்கி மோசடியின் பரிமாணம் ரூ. 25,000 கோடி !

நீரவ் மோடி வெளிநாட்டுக்குத் தப்பியோடிய நிலையில், வழக்கம் போல வழக்கு விசாரணை, கூட்டி வருவதற்கான முயற்சி என காலப் போக்கில் இந்த விவகாரம் மறக்கப்பட்டுவிட்டது.

-

ரண்டாண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த பஞ்சாப் தேசிய வங்கி மோசடியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. வைர வியாபாரி நீரவ் மோடி தனது நிறுவனம் மற்றும் துணை நிறுவனங்களின் மூலம் வங்கி அதிகாரிகளின் துணையோடு கோடிக்கணக்கில் முறைகேடு செய்தது அம்பலமானது.

நீரவ் மோடி

இந்தச் சம்பவம் அம்பலமான சமயத்தில் ‘வழக்கம் போல’ நீரவ் மோடி வெளிநாட்டுக்குத் தப்பியோடி இருந்தார். வழக்கம் போல வழக்கு விசாரணை, கூட்டி வருவதற்கான முயற்சி என காலப் போக்கில் இந்த விவகாரம் மறக்கப்பட்டுவிட்டது.

நீரவ் மோடி குழுமம் மற்றும் அதன் பிற ஏழு உபநிறுவனங்களின் மோசடியை தடய தணிக்கை செய்யும் வேலைக்கு பெல்ஜியத்தைச் சேர்ந்த பி.டி.ஓ (B.D.O.) என்ற நிறுவனத்தை கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பஞ்சாப் தேசிய வங்கி நியமித்தது. கடந்த 2018 ஜூன் வரை தங்களுக்குக் கிடைத்த தரவுகளில் இருந்து அந்நிறுவனம் நீரவ் மோடி குழுமம் செய்த முறைகேட்டின் பரிணாமத்தை விளக்கி ஒரு அறிக்கையை பஞ்சாப் தேசிய வங்கிக்கு கொடுத்துள்ளது.

இந்த அறிக்கை கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே பஞ்சாப் தேசிய வங்கியிடம் கொடுக்கப்பட்டது. இந்த அறிக்கையையோ அதன் கண்டுபிடிப்புகளையோ வெளியிடாமல் கமுக்கமாக பாதுகாத்து வைத்திருந்தது பஞ்சாப் தேசிய வங்கி.

இந்த பி.டி.ஓ நிறுவனம் அளித்த 329 பக்க தடய அறிக்கையை உள்ளிருந்து அம்பலப்படுத்துபவர் (Whistle blower) ஒருவர் சர்வதேச துப்பறியும் பத்திரிகையாளர் கூட்டமைப்பிடம் (ICIJ) அளித்துள்ளார். இந்தக் கூட்டமைப்பு இந்தியாவில் உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்துடன் கூட்டாக சேர்ந்து இந்த அறிக்கைகளை அளித்துள்ளது.

படிக்க:
ஏழைத்தாயின் மகன் # 2 – நீரவ் மோடியின் லண்டன் ‘அகதி’ வாழ்க்கை !
♦ LIC நிறுவனத்திற்கு 2000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய நீரவ் மோடி ! புதிய அதிர்ச்சி !

இந்த அறிக்கையின் மூலம் சுமார் 1561 பாத்தியச் சான்று (Letters of Undertaking) கடிதங்கள் வழியாக ரூ. 28,000 கோடி பஞ்சாப் தேசிய வங்கியால் நீரவ் மோடி குழுமத்திற்கு வழங்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இவற்றில் சுமார் 1,381 பாத்தியச் சான்று கடிதங்களின் மூலம் வழங்கப்பட்ட 25,000 கோடி ரூபாய் மோசடியான வழிமுறைகளில் கொடுக்கப்பட்டது என இத்தணிக்கை நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாத்தியச் சான்று கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள 23 ஏற்றுமதி நிறுவனங்களில் 21 நிறுவனங்கள் நீரவ் மோடியால் கட்டுப்படுத்தப்பட்டவை. இதில் 193 பாத்தியச் சான்றுக் கடிதங்களின் மூலம் ரூ. 6000 கோடியை வங்கிக்குப் பணம் செலுத்துவதற்காக தவறாக பயன்படுத்தியுள்ளனர்.

இந்த பாத்தியச்சான்றுகள் வழங்கப்பட்ட பயனாளி நிறுவனங்களில் 99.93% நிறுவனங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ நீரவ் மோடி குழுமத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன. மேலும் நீரவ் மோடியின் துணை நிறுவனமான ஃபைவ்ஸ்டார் இண்டெர்நேசனல் லிமிடெட்-ன் விற்பனையில் சுமார் 74% விற்பனை நீரவ் மோடி குழுமத்தால் கட்டுப்படுத்தப்பட்ட நிறுவனங்களுக்கே செய்யப்பட்டிருக்கின்றன. இந்த விவரங்களையும் அந்த தணிக்கை நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

பஞ்சாப் தேசிய வங்கியில் உள்ள அலுவலர்களின் துணையோடு மட்டுமே இந்த மோசடி சாத்தியமானது. நீரவ் மோடி குழுமத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ள பாத்தியச் சான்றுகளில் சுமார் 92% பாத்தியச் சான்றை அதாவது 1448 பாத்தியச் சான்றுகளை வெளிநாட்டு செலாவணிப் பிரிவின் துணை மேலாளராக அச்சமயத்தில் பணியாற்றிய கோகுல்நாத் ஷெட்டி என்பவர்தான் கொடுத்திருக்கிறார். 97% மோசடி பாத்தியச் சான்றுகள் அவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தன என்பதையும் அந்த அறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது.

இந்த மோசடியினைத் துப்பறியும் பணியில் மையப் புலனாய்வுத்துறை மற்றும் அமலாக்கத்துறை ஆகிய மத்திய அரசின் எடுபிடித் துறைகள் கண்டுபிடித்ததை விட மிகவும் முக்கியமான மற்றும் அதிகமான விவரங்களையும் இந்த மோசடியின் முழுப் பரிமாணத்தையும் வெளிக்கொண்டு வந்துள்ளது பி.டி.ஓ நிறுவனத்தின் இந்த தடய தணிக்கை அறிக்கை.

நீரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரின் பெயரிலும் உள்ள மொத்த சொத்துக்களையும் பட்டியலிட்டுள்ளது இந்த அறிக்கை. இதில்  எந்த வங்கிப் பரிமாற்றத்துக்கும் உத்தரவாத காப்பாகக் காட்டப்படாத, அக்குடும்பத்தினரின் 20 இந்திய சொத்துக்களைப் அட்டவணைப்படுத்தி உள்ளது பி.டி.ஓ. அறிக்கை.

இந்த மோசடிகள் அனைத்தும் பஞ்சாப் தேசிய வங்கியின் “அமைப்புமுறை ஓட்டைகளைப்” பயன்படுத்தியே நடத்தப்பட்டுள்ளன. ஒருங்கிணைத்தல், தணிக்கை, முன் எச்சரிக்கை மற்றும் தகவல் ஆய்வு போன்றவற்றில் இருக்கும் ஓட்டைகளே முக்கியக் காரணம் ஆகும் என்று தெரிவிக்கிறது இந்த அறிக்கை.

இந்த அறிக்கை பஞ்சாப் தேசிய வங்கியிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், இந்த மோசடியை விசாரித்துவரும் மத்திய அரசு நிறுவனங்களான அமலாக்கத்துறையோ, சி.பி.ஐ.-யோ யாரும் இது குறித்து ஏன் வாய்திறக்கவில்லை? வங்கிகள் செய்யும் மோசடிக்கு மோடி என்ன செய்வார் எனக் கேட்கும் ‘நடுநிலை சிகாமணிகள்’ இதற்குப் பதில் சொல்வார்களா ?


நந்தன்
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க