பாஜகவிற்கு நெருக்கமான ‘தொழிலதிபரான’ நீரவ் மோடி, கடந்த ஆண்டு நாட்டை விட்டு பாதுகாப்பாக தப்பியோடினார். குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரியான இவர், பல்வேறு முறைகேடுகளின் வழியாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடி கடனாகப் பெற்றார். அதை திரும்பச் செலுத்தாமல் மோடி அரசின் ஏகோபித்த ஆதரவோடு, இந்தியாவிலிருந்து தப்பியோடினார்.

தப்பியோடிய நீரவ் மோடியை எப்பாடு பட்டாவது திரும்ப அழைத்து வந்துவிடுவோம் என பாவ்லா காட்டிய மோடி அரசு, இண்டர்போல் வழியாக ரெட் நோட்டீஸ் கொடுத்தது. அப்படி கொடுத்துவிட்டால், எந்த நாட்டிலிருந்தாலும் அந்நாடு உரியவரை கைது செய்து அனுப்பிவிடுமாம்! பெட்டி திருடர்களுக்கு வேண்டுமானால் அது பொருந்திப்போகலாம். ஆனால், நீரவ் மோடி ‘தொழிலதிபர்’ ஆயிற்றே. லண்டன் வீதிகளில் சுதந்திரமாகத் திரிகிறார்.

நீரவ் மோடி

இங்கிலாந்தில் உள்ள தி டெய்லி டெலிகிராப் நாளிதழ், லண்டன் வீதியில் நடை பயிற்சி செய்துகொண்டிருந்த நீரவ் மோடியை வீடியோவில் பதிவு செய்திருக்கிறது. அந்நாளிதழின் நிருபர், நீரவ் மோடியிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்கிறார். அவை அனைத்துக்கும் பதிலாக, ‘நோ கமெண்ட்ஸ்’ என்பதை மட்டும் திரும்ப திரும்ப சொல்கிறார் நீரவ் மோடி.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அதுகுறித்து டிவிட் செய்த பாஜக “இந்தியாவை ஏமாற்றிய பலர் மறைந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்; அகதி வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்”.  என உச்சுக் கொட்டியுள்ளது.

டெய்லி டெலிகிராப்பின் வீடியோவில் ‘வாழ்ந்துகெட்ட’ வயதான மைனரைப் போல காட்சியளிக்கும் நீரவ் மோடி, உண்மையில் லண்டனில் அகதி வாழ்க்கைதான் வாழ்ந்துகொண்டிருக்கிறாரா?

சுருட்டிய 13 ஆயிரம் கோடியை வைத்து இப்போதும் ‘ராஜ வாழ்க்கை’யைத்தான் அவர் வாழ்ந்துவருகிறார் என்கிறது அந்நாளிதழ். மத்திய லண்டனில் பணக்கார பகுதியில் உள்ள அபார்ட்மெண்டில் வசிக்கிறார் நீரவ் மோடி. அந்த அபார்ட்மெண்டின் மதிப்பு ரூ. 74 கோடி.

படிக்க:
நீரவ் மோடி – வங்கி மோசடி – ஊழலின் ஊற்றுக்கண் எது ?
♦ மோடியின் டிஜிட்டல் இந்தியா : ஒராண்டில் சூறையாடப்பட்ட வங்கிப் பணம் 41,000 கோடி ரூபாய் !

மத்திய லண்டனுக்கு அருகே உள்ள சோஹோ என்ற பகுதியில் புதிய அலுவலகத்தை திறந்திருக்கிறார்.  உயர்தர ரெஸ்டாரெண்டுகளும், ஊடக அலுவலகங்களும் உள்ள அந்த இடத்தில் தனது புதிய வைர தொழிலை ஆரம்பித்திருக்கிறார்.

நீரவ் மோடிக்கு ‘ரெட் நோட்டீஸ்’ கொடுத்திருப்பதாக இந்தியா கூறிவரும் நிலையில், அவருக்கு தேசிய காப்பீட்டு எண்ணை ( National Insurance number) அளித்திருக்கிறது இங்கிலாந்து அரசு.  அதாவது சட்டப்படி அந்நாட்டில் நீரவ் மோடி வசிக்கவும் சலுகைகளைப் பெறவும் முடியும்.  இந்தியா அவரைத் தேடிக் கொண்டிருக்கும் வேளையில், இங்கிலாந்தில் புதிய வங்கிக் கணக்கை ஆரம்பித்து இயக்க முடியும்.  அதோடு, மேற்கு லண்டனில் உள்ள சொத்து மேலாண்மை நிறுவனம் ஒன்றையும் நாடியுள்ளார் மோடி.

வீடியோவில் நீரவ் மோடி அணிந்திருக்கும் ஆஸ்டிரிச் பறவை தோலிலிருந்து செய்யப்பட்ட ஜாக்கெட்டின் விலை ரூ. 9.2 லட்சம் எனவும் டெலிகிராப் நாளிதழ் தெரிவித்துள்ளது.

நீரவ் மோடி அகதி வாழ்க்கையை வாழ்வதாக பாஜக சொல்கிறது. ஆனால், லண்டனில் ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார் என்கிறது டெய்லி டெலிகிராப்.  “இங்கிலாந்தில் அவரைப் பார்த்தார்கள் என்பதாலேயே அவரை உடனே இந்தியாவுக்கு அழைத்து வந்துவிட முடியாது” என்கிறார் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார்.

ஆக மொத்தத்தில் மோடியின் ஆசிர்வாதத்துடன் ஏய்த்துவிட்டுப்போன ரூ. 13 ஆயிரம் கோடியுடன் நீரவ் மோடி லண்டனில் குறையில்லாத சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்.


கலைமதி
நன்றி:  டெலிகிராப் இந்தியா 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க