Saturday, August 20, 2022
முகப்பு செய்தி இந்தியா LIC நிறுவனத்திற்கு 2000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய நீரவ் மோடி ! புதிய அதிர்ச்சி...

LIC நிறுவனத்திற்கு 2000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய நீரவ் மோடி ! புதிய அதிர்ச்சி !

-

கார்ப்பரேட்டுகளது திருட்டுக்கு விலைகொடுக்கும் இந்தியர்கள்!

ஞ்சாப் தேசிய வங்கியின் மீது மோடி கும்பலால் நடத்தப்பட்ட திருட்டு ரூ 11,300 கோடியிலிருந்து ரூ 13,000 கோடியாக உயர்ந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. திருட்டை நடத்திய நீரவ் மோடி கும்பல், தங்கள் திருட்டு சொத்துக்களை பாதுகாக்க, அமெரிக்க நீதிமன்றத்தில் திவாலாகி விட்டதாக அறிவிக்க வைத்துள்ளது.  இந்தத் திருட்டு கும்பலிடமிருந்து இழந்த பணத்தை மீட்பது முடியாத காரியம் ஆகும்.வங்கிகளது வாராக்கடன்களில் இந்த திருட்டும் சேர்க்கப்படும்.

மனைவி சகிதமாக நீரவ் மோடி மற்றும் அவர் தம்பி நீஷல் மோடி

இந்த ஊழலால் நாட்டுக்கு ரூ 13,000 கோடி மட்டும்தான் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள்.

நீரவ் மோடியின் மாமாவும் கூட்டுத் திருடனும் ஆன மேகுல் சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருந்தது.  இந்நிறுவனத்தின் 11 கோடியே 85 லட்சம் பங்குகளில் 8 கோடியே 57 லட்சம் பங்குகள் நிதி நிறுவனங்களிடமும் சிறு முதலீட்டாளர்களிடமும் விற்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு விலை ஜனவரி அன்று ரூ 81 ஆக இருந்தது; மொத்த சந்தை மதிப்பு ரூ 700 கோடி

இந்த திருட்டு பற்றிய செய்தி வெளியான பிறகு இந்த ஒட்டு மொத்த மதிப்பும் துடைத்தெறியப்பட்டு விட்டது. அதில் நஷ்டமடைந்தவர்களில் பொதுத்துறையைச் சேர்ந்த காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி-யும் உள்ளது.

எல்.ஐ.சி கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தில் 3% பங்குகளை தன் வசம் வைத்திருந்தது. இந்த பங்குகள் அனைத்தும் இன்று செல்லா காகிதங்கள் (அல்லது எண்கள்) ஆகி விட்டன.

மேலும் நீரவ் மோடி மோசடியில் பாதிக்கப்பட்ட பஞ்சாப் தேசிய வங்கியில் 13.93% பங்குகளையும், யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவில் 13.24% பங்குகளையும், அலகாபாத் வங்கியில் 13.17 சதவீத பங்குகளையும் எல்.ஐ.சி கைவசம் வைத்திருக்கிறது. இந்த வங்கிகளின் பங்கு விலை, நீரவ் மோடி திருட்டு பற்றிய செய்தி வெளியான பிறகு சராசரியாக 40% வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், எல்.ஐ.சி-க்கு ரூ 2000 கோடி வரை இழப்பு என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இத்துடன் இதே வங்கிகளில் பங்குகளை வாங்கியிருந்த பிற பொதுத்துறை நிதி நிறுவனங்களும், சிறு முதலீட்டாளர்களும் சந்திக்கும் இழப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இது தற்செயலானதல்ல. தனியார்மய- தாராளமய-உலகமயக் கொள்கைகளின் கீழ் எல்.ஐ.சி., பி.எஃப் நிதி நிறுவனம், ஓய்வூதிய நிதி நிறுவனம் போன்றவை தாங்கள் திரட்டும் பொதுமக்களின் சேமிப்பு பணத்தை பங்குச் சந்தையில் போட்டு சூதாடி, வருமானத்தை பெருக்க வேண்டும் என்பது அரசின் உத்தரவு. நொடிக்கொருமுறை மாறிவருகின்ற  பங்குச்சந்தை சூதாட்டத்தில் இந்த நிறுவனங்கள் சந்திக்கும் இழப்புகள் அரசு மக்கள் தலையில்தான் விழுகிறது..

உதாரணமாக, நீரவ் மோடி ஊழல் வெளியான சில நாட்களில் இந்திய அரசு தொழிலாளர் வைத்து நிதிக்கான வட்டியை 8.65 சதவீதத்தில் இருந்து 8.55 சதவீதமாக குறைத்துள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் மிகக் குறைந்த வட்டி வீதமாகும். ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை குறைக்காத நிலையில் இவ்வாறு தொழிலாளர் வைப்பு நிதி மீதான வட்டி வீதத்தை குறைப்பது, பங்குச் சந்தை சூதாட்டத்தின் இழப்புகளை ஈடுகட்ட தொழிலாளர் மடியில் கைவைக்கும் காரியமே. எல்.ஐ.சி நிறுவனமோ தனது பாலிசிதாரர்களுக்கு வழங்கக்கூடிய வருடாந்திர போனசை குறைத்தாக வேண்டும்.

மேலும், பாரத ஸ்டேட் வங்கி உட்பட பொதுத்துறை வங்கிகள் கடன்கள் மீதான வட்டி வீதத்தை உயர்த்தியுள்ளன. அதாவது உழைக்கும் வர்க்கத்தை பொறுத்தவரை, நீரவ் மோடியின் திருட்டுக்கு  பரிகாரமாக சேமிக்கும் பணத்துக்கு குறைந்த வட்டி, வாங்கும் கடனுக்கு (கல்விக் கடன், வீட்டுக் கடன்) அதிக வட்டி செலுத்த வேண்டும். கணக்கில் குறைந்தபட்ச நிலுவைத் தொகை வைத்திருக்காத ஏழைகளிடமிருந்து அபராதத் தொகை வசூலிக்கின்றன.

இவ்வாறு நீரவ் மோடி வங்கி மோசடிக்கான விலையை உழைக்கும் இமக்கள் ஏற்கனவே கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த ஊழலின் இன்னொரு பெரும் சோகம், மார்ச் 2017-லும் அக்டோபர் 2017-லும் பஞ்சாப் தேசிய வங்கி சிறந்த பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவதாக விஜிலென்ஸ் (ஊழல் கண்காணிப்பு) துறையிடமிருந்து “Corporate Excellence Vigilance Award” விருது பெற்றுள்ளதுதான். இது போன்ற விருது பெற்ற வங்கியிலேயே ரூ 13,000 கோடி களவாடப்பட்டிருந்தால், மற்ற வங்கிகளில் என்னென்ன பூதங்கள் கிளம்பப் போகிறதோ என்ற பயம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் அல்லது சல்லடையில் ஓட்டையை அடைக்கும் விதமாக மோடி அரசு ரூ 50 கோடிக்கும மேல் கடன் பெற்ற அனைத்து நிறுவனங்களையும் விசாரிக்க வேண்டும் எனவும் கடனை சரியாக கட்டாதவர்களை விரைந்து தண்டிக்க வேண்டும் என்று சொல்லி வருகிறது. தனது குஜராத் கூட்டாளிகளின் திருட்டை மறைக்க இன்னும் பல முதலாளிகளை கையை பிடித்து இழுக்கிறது.

இந்த சந்தடி சாக்கில் மெத்தப் படித்த மேதாவி அறிவு ஜீவிகள் சிலர் வங்கித் துறையை தனியார் மயமாக்குவதே வங்கிகளை நஷ்டத்தில் இருந்து காக்கும் என்று கருத்து சொல்லி வருகின்றனர். தனியார் வங்கிகள் திவால் ஆன காரணத்தால் தான் 1969-ல் வங்கிகள் நாட்டுடமை ஆக்கப்பட்டன.1948 முதல் 1968 வரையிலான காலகட்டத்தில் 736 தனியார் வங்கிகள் திவாலயின.  வங்கிகள் நாட்டுடமை ஆக்கப்பட்ட பின்னர் 1969 முதல் 2008 வரை 39  தனியார் வங்கிகள் திவாலாகி பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்பட்டது. தற்போது பேசப்படுகின்ற வாராக்கடனில் கணிசமான தொகை தனியார் வங்கிகள் சந்தித்த இழப்புகள் இருக்கின்றன.

இது, “நாட்டில டிசிப்ளினே இல்ல சார், வெள்ளைக்காரன் ஆட்சியில எல்லாம் நல்லா இருந்துச்சி, சர்வாதிகாரம் வந்தாத்தான் சரியா வரும்” என்ற பெருசுகளின் புலம்பல் போன்றது. ஆனால், இந்த கருத்தை சொல்பவர்கள் எல்லாம் பொருளாதார நிபுணர்கள் என்று சொல்லப்படுபவர்கள்.இதே கண்ணோட்டத்தில் தான் எழுத்தர்கள் தொடர்ச்சியாக 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் வேலை செய்யக்கூடிய எழுத்தர்கள் ( கிளார்க்குகள்) அனைவரையும் இடமாற்றம் செய்யுமாறு மத்திய கண்காணிப்பு ஆணையர் உத்தரவிட்டார். ரூ.25,000/-க்கான காசோலைகளுக்கு ஒப்புதல் கொடுக்கின்ற அதிகாரம் தவிர வேறெந்த அதிகாரமும் இல்லாத எழுத்தர்களை கோடிக்கணக்கான் கடனுக்கு ஜவாப்தாரிகளாக்கி, அதிகார வர்க்கத்தை தப்பவிட்டுள்ளனர்.

ஆங்கிலேயர் வெளியேற்றத்துக்குப் பிறகு முதல் ராணுவ தளபதியை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டத்தில் முதல் பிரதமர் நேரு, “இந்திய அதிகாரிகளுக்கு ராணுவத்தை வழிநடத்தும் அனுபவம் இல்லை என்பதால் ஒரு பிரிட்டிஷ் அதிகாரியையே ராணுவ தளபதியாக நியமிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார். அப்போது ஜென் நாத்து சிங் ராத்தோர் என்ற ராணுவ அதிகாரி “ஐயா, நமது நாட்டை தலைமை தாங்குவதில் கூட நமக்கு எந்த அனுபவமும் இல்லை. பிறகு நாம் ஏன் ஒரு ஆங்கிலேயரையே நமது பிரதமராக தேர்ந்தெடுக்கக் கூடாது” என்று கேட்டார். அது போன்ற வாதம்தான் இந்த பொருளாதார நிபுணர்களின் பேச்சு.

இன்று பொதுத்துறை வங்கிகளில் தனியார் முதலாளிகள் மோசடி செய்வதற்கு தீர்வாக வங்கிகளை தனியார் முதலாளிகளிடமே ஒப்படைக்கும்படி சொல்லும் இந்த அறிஞர்கள் அடுத்து, ஊழல்கள், விவசாயிகள் தற்கொலை, நதி நீர் பங்கீடு அநீதிகள், சாதி மத கலவரம் போன்ற பிரச்சனைகளை தீர்க்க ஆட்சிப் பொறுப்பையும் கார்ப்பரேட்டுகளிடமே கொடுத்து விடலாம் என்று சொல்வார்கள்.

வங்கிகளை மோசடி செய்யும், மக்களின் சேமிப்பை திருடும் முதலாளி வர்க்கத்திற்கு சேவை செய்வதை குறைத்துக் கொண்டு, விவசாயிகளுக்கும், சிறு தொழில்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும் சேவை செய்யும் வகையில் வங்கிகள் செயல்படுவதே நாட்டு நலனுக்கு உகந்தது. ஊழல் முதலாளிகளை களை எடுத்து வங்கித் துறையை அரசு மீட்டெடுக்கும் என்று சராசரி இந்தியர்கள் கனவு காண்கிறார்கள். ஆனால், அத்தகைய ஒரு செயலை செய்து முடிக்கும் திட்டமும், திறமையும் ஒருவர் மீது ஒருவர் பழி போட்டுக் கொண்டே கார்ப்பரேட் சேவை செய்து கொண்டிருக்கும் காங்கிரஸ் – பா.ஜ.க முதலான கட்சிகளுக்கு இருக்கிறதா என்பதுதான் கேள்வி!

– சியாம் சுந்தர்,
தலைவர், பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு.
NDLF IT Employees Wing | IT Employees! Organize!

புதிய தொழிலாளி – மார்ச் 2018

 

  1. மோடியின் nov 2016 பண மதிபிழப்பு நடவடிக்கையின் போதே அப்போது இருந்தே சொல்லிக்கிட்டு தான் இருக்கேன்….. பொது துறை நிறுவனங்களில் ,வங்கிகளில் ,மக்கள் சேமிப்பது அபாயகரமானது என்று…பொது துறை வங்கிகளில் இருந்து கடன் வாங்குங்க அது தான் சரியான நிலைப்பாடு என்றும் சொல்லிக்கிட்டு இருக்கேன்… யார் கேட்டா? ஏற்கனவே LIC போன்ற காப்பீட்டு நிறுவங்களில் நாம் செலுத்தும் பணம் 4% to 6% அளவுக்கு தான் வட்டியுடன் கிடைகின்றது. இதுல இவிங்க-lic பங்கு சந்தையில் இழக்கும் பணம் வேற நம்ம சேமிப்பு வட்டிய இன்னும் குறைக்கும்…. எதுக்கு கடினபட்டு உழைத்து நாம எதிர் காலத்துக்கு சேமிக்க நினைக்கும் பணத்தை அரசாங்கத்திடம் கொடுக்கனும்…நிலம், அப்பர்த்மென்ட் என்று இன்வெஸ்ட் பண்ணுங்க… அதுக்கும் அரசு வங்கிகளிடம் பிக்ஸ்சட் ரேட்டுக்கு கடன் வாங்குங்க…. மோடி அரசுக்கு உங்க காச கண்ணில் காட்டறீங்க! அடுத்து வருவது பேர்பாக்ஸ் திருடன் கட்சியா இருந்தாலும் அதுக்கும் காச கண்ணில் காட்டாதீங்க… ஏமாறாதீங்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க