நூல் அறிமுகம் : ‘இந்து’ தேசியம் | தொ. பரமசிவன்

ஊர்ப் புறங்களை, நாட்டுப் புறங்களைப் பார்த்திருந்தாலும் அனைவர் பார்வையிலும் படாத மண்ணின் பண்பாட்டு அசைவுகள் தொ. பரமசிவன் கண்ணுக்கு மட்டும் தெரியும்.

பேராசிரியர் தொ.பரமசிவன் எழுதி ஏற்கெனவே வெளிவந்த ‘நான் இந்துவல்ல நீங்கள்?’, ‘இந்து தேசியம்’, ‘சங்கரமடம்; தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்’, ‘இதுதான் பார்ப்பனியம்’, ‘புனா ஒப்பந்தம்; ஒரு சோகக்கதை’ ஆகிய ஐந்து குறுநூல்களின் தொகுப்புதான் ”இந்து தேசியம்” என்ற இந்த நூல்.

தொ.ப-வை அறியாதவர் யாரும் இருக்க முடியாது. பலரது கண்களுக்கு எட்டாத தொலைவில் ஒதுங்கி வாழ்கிற ‘பாவப்பட்ட’ சிற்றூர்கள் அவர் கண்ணில் மட்டும் ‘பளிச்’ என்று புலப்படும். ஊர்ப் புறங்களை, நாட்டுப் புறங்களைப் பார்த்திருந்தாலும் அனைவர் பார்வையிலும் படாத மண்ணின் பண்பாட்டு அசைவுகள் அவர் கண்ணுக்கு மட்டும் தெரியும். அவற்றை அலசி ஆய்ந்து அவற்றில் பொதிந்துள்ள சிறப்புகளைத் தோண்டி எடுத்து நம் பார்வைக்கும் சிந்தனைக்கும் வைத்து திகைக்க வைப்பார். இயல்புப் போக்கு சிலரது சூழ்ச்சியால் முறைமாற்றி வைக்கப்பட்டிருக்கும் அநியாயப் போக்குகளை அம்பலப்படுத்துவார்.

முதல் கட்டுரையான ‘நான் இந்துவல்ல. நீங்கள்..?’ எனும் கட்டுரை ‘இந்து’ என்ற சொல்லுக்குப் பொருள் என்ன? என்ற கேள்வியோடு தொடங்குகிறது. செத்துப்போன சங்கராச்சாரி தனது நூலில் ‘வெள்ளைக்காரன் வந்து நமக்கு இந்து என்று பொதுப் பெயர் வைத்தானோ, இல்லையோ, நாம் பிழைத்தோம்” என்று கூறியுள்ளதை எடுத்துக் காட்டுவது முதலாக, இந்து மதத்தில் உள்ள அனைவரும் ஒன்றா? சமமானவர்களா? என்பது தொடங்கி, சங்கராச்சாரி ‘ஸ்மார்த்தர்’ என்பதால் கோவிலுக்குள் நுழையவோ, வழிபாடு செய்யவோ உரிமை இல்லை என்பதைச் சொல்லி, மதமாற்றம், இந்து மதத்தில் ‘தலித்’துகள் என பலநிலைகளை விரிவாக அலசுகிறார். (பக்.7)

படிக்க:
இந்து மதம், முசுலீம்கள் குறித்து அம்பேத்கர் எழுதிய நூல்கள்
இந்துத்துவத்தை அம்பலப்படுத்தும் 17 நூல்கள் – அறிமுகம்

இரண்டாவது கட்டுரையாக உள்ளது ‘சங்கரமடம்; தெரிந்து கொள்ளவேண்டிய உண்மைகள்” என்பதாகும். பெரும்பான்மையான மக்கள் பவுத்த, சமண சமயங்களை பின்பற்றி வந்த நிலையை மாற்ற உழைத்தவரே ஆதிசங்கரர். பிரம்ம சூத்திரத்துக்கு உரை எழுதிய பலருள் இவர் முதலானவர். ஒரே பிரம்ம சூத்திரத்துக்கு இந்த ஆதிசங்கரர் எழுதிய உரை அத்வைத மதப் பிரிவானது. மத்துவர் எழுதிய உரை த்வைதம் ஆனது. இராமானுஜர் எழுதிய உரை விசிஷ்டாத்வைதம் ஆனது. இப்படி சமஸ்கிருதம் என்ற குழப்ப மொழியில் எழுதப்பட்ட ஒரே நூலுக்கு மூவர் எழுதிய உரைகளும் மூன்று மதப் பிரிவாகவே ஆகிவிட்டது ஒரு வேடிக்கை தான்.

ஆதிசங்கரர் தன் ‘சவரக் கத்தி போன்ற கூர்மையான அறிவைப் பயன்படுத்தி, பவுத்த, சமண மதங்களை அழித்தொழித்து விட்டு உயிருக்கும் கடவுளுக்கும் வேறுபாடில்லை ; இருவரும் ஒன்றே எனும் அத்வைதக் கோட்பாட்டை வாயளவில் பேசிக்கொண்டும், சங்கரனுக்கு எதிரே வந்த தாழ்த்தப்பட்ட ஒருவரை ஒதுங்கச் சொன்னபோது அவர் எழுப்பிய கேள்வியால் மக்களின் சமத்துவத்தை ஏற்றுக்கொண்ட கதைகளை உலவவிட்ட அவர்தான், பார்ப்பன மேலாதிக்கத்தைப் பேணிக் காக்கும் சைவம், வைணவம், கெளமாரம், சாக்தம், காணபத்யம், சௌரம் என்ற ஆறு பிரிவுகளை ஒன்றிணைத்து ஒரே மதமாக நிறுவ முயற்சித்த ஷண்மத ஸ்தாபகர் (ஆறு மத ஒற்றுமையை நிறுவியவர்) என்று புகழப்பட்டவர்.

அவர் திசைக்கொன்றாக நான்கு மடங்களை (பத்ரிநாத், துவாரகை, பூரி, சிருங்கேரி) நிறுவியதாகவும் பதிவுகள் உண்டு. தான் பிறந்த கேரளாவின் காலாடியில் கூட ஒரு மடத்தை அவர் நிறுவிக் கொள்ளவில்லை. ஆனால் நமது காஞ்சிபுரத்து சங்கரர்கள் காஞ்சியில் – நிறுவியது தான் சங்கரரே நிறுவிய ஆதிமடம் என்றும், எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர் பெயரால் காஞ்சி மடத்தைப் பீற்றிக் கொள்ளும் இவர்கள் 2000 ஆண்டு வரலாறு கொண்டது காஞ்சி மடம் என்று புளுகுவது மற்றும் ஒரு அபத்தம் ஆகும். இம்மடத்தின் பொய்மைக் குமிழியை ஆதார ஊசியால் உடைத்துத் தள்ளுகிறார் தொ.ப.

படிக்க:
இராமன் தேசிய நாயகனா, தேசிய வில்லனா?
பார்ப்பனியம் – ஒரு விவாதம்!

அடுத்த கட்டுரை ‘இந்திய தேசியம்’ உருவாக்கத்தில் பார்ப்பனியத்தின் பங்கு என்பதாகும். இக்கட்டுரை நமக்குப் பல புதிய செய்திகளை அறியத் தருகிறது. நீதிக் கட்சி அரசாங்கம் 1924-ஆம் ஆண்டு கொண்டுவந்த அறநிலையப் பாதுகாப்பிற்கான சட்டவரைவில் இந்து என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருந்ததற்கு சைவர்கள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்பு வந்துள்ளது. மனுஸ்மிருதியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மோனியர் வில்லியம்ஸ், ஆல்காட், பிளாவட்ஸ்கி அம்மையார், தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களுக்கு மென்மேலும் மேலாதிக்கச் சிந்தனையை புகட்டிய சிவசங்கர பாந்தியா என்ற குஜராத்தி பார்ப்பனர். அனந்தாச்சார்லு எனும் தெலுங்குப் பார்ப்பனர் ஆகியோரின் பங்கு, திராவிடம் என்ற சொல்லை சமூக, அரசியல் தளத்தில் 1885 இல் முதன்முதலில் முன்வைத்த அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், வேதமல்லா மரபு சார்ந்த தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்து வெளியிட்ட கனகசபைப் பிள்ளை சி.வை.தாமோதரம்பிள்ளை, ஜி.யூ.போப், உ.வே.சாமிநாதையர் பற்றிய பல புதிய தரவுகள் விரவிக் கிடக்கின்றன.

இக்கட்டுரையில் ”இந்திய தேசியமும் திராவிட தேசியமும்” என் குணாவின் நூல் பற்றிய குறிப்பும், திராவிட இயக்க முன்னோடிகள் “திராவிட தேசியம்’ என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தனர் என்ற குறிப்பும் 1937 – 44 காலகட்டத்தை வீரம் மிகுந்த திராவிட தேசியம் உருவான காலம் என்று நம்பி ஆரூரான் கூறுவதாகவும் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் நம் அறிவுக்கு எட்டியவரை திராவிட இயக்க முன்னோடிகளுள் எவர் ஒருவரும் ‘திராவிட தேசியம்’ என்ற சொல்லைக் கையாண்டதாக எந்த ஒரு பதிவும் இல்லை. ஆனாலும் திராவிட தேசியம் பேசப்பட்டதாக தற்போது பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான விமரிசனத்தை தொடங்கி வைத்தவர்களில் முன்னோடியான குணா கூட தனது நூலில் எந்த ஆதாரக் குறிப்பும் இல்லாமலேயே ஒற்றை மேற்கோளுக்குள் ‘திராவிட தேசியம்’ என எச்சரிக்கையாகக் குறிப்பிட்டே தொடங்கி வைத்துள்ளார். (பக்.11-12)

படிக்க:
இந்துத்துவாவின் அறிவியல் வயிற்றெரிச்சல் – ஆய்வுக் கட்டுரை – அவசியம் படிக்க !
கல்புர்கி கொலை தொடங்கி அக்லக் கொலை வரை…இந்து ராஷ்டிரம்?

அடுத்து வரும் ‘ இதுதான் பார்ப்பனியம், எனும் கட்டுரை. இது முன்பு நூலாக வந்தபோது தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்றாகும். பார்ப்பனியத்தின் தன்மையை, ஆதிக்கத்தை, நிலைநிறுத்தச் சூழ்ச்சிகள், அதற்கு எதிராக எழுந்த எழுச்சியை என பல ஆழமான விவாதங்களை முன்வைக்கிறது. (பக்.13-14)

அடுத்துவரும் கட்டுரை ‘புனா ஒப்பந்தம் – ஒரு சோகக்கதை’ என்பதாகும், தாழ்த்தப்பட்ட மக்களின் சுயமரியாதைக்கும், வளர்ச்சிக்கும், பொது அவைகளில் தங்கள் கருத்தை எடுத்து வைப்பதற்குமான பல முயற்சிகள் பல காலமாக செய்யப்பட்டே வந்துள்ளன. அவற்றுள் சிறந்த ஒரு முயற்சியே இரட்டை வாக்குரிமை – தனித்தொகுதி கேட்டதாகும்…

படிக்க:
காந்தியம் என்பது என்ன ? பாபா சாகேப் அம்பேத்கர்
அரவிந்தன் நீலகண்டனுடன் ஒரு தலித் இளைஞர் – நேருக்கு நேர்

இக்கட்டுரை வட்டமேஜை மாநாட்டைத் தொடர்ந்து பிரிட்டிஷ் அரசு அறிவித்த இத்தனித் தொகுதி முறைக்கு எதிராக காந்தியார் நடந்துகொண்ட முறையையும் அவரது மாயவலையில் விழுந்த எம்.சி.ராஜா போன்ற தாழ்த்தபட்டோர் இயக்கத் தலைவர்கள் இக்கோரிக்கைக்கு எதிராக செயல்பட்ட அவலத்தையும் விரிவாக அலசுகிறார். அதுபோலவே தாழ்த்தப்பட்டோர் மட்டும் வாக்களித்து தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கருத்து ஜே.எஸ்.கண்ணப்பர் ஆசிரியராக இருந்த நீதிகட்சியின் ‘திராவிடன்’ இழில்தான் முதன்முதலில் முன்வைக்கப்பட்டது என்ற ஒரு தகவலையும் சுட்டிக்காட்டியுள்ளார் தொ.ப. (பக்.16)

(இந்நூலில் கொளத்தூர் தா.செ.மணி விரிவாக எழுதியுள்ள அணிந்துரையிலிருந்து)

நூல்: ‘இந்து’ தேசியம்
ஆசிரியர்: தொ.பரமசிவன்

வெளியீடு: கலப்பை பதிப்பகம்,
9/10, முதல் தளம், இரண்டாம் தெரு, திருநகர், வடபழனி, சென்னை – 600 026.
மின்னஞ்சல்: kalappai.in@gmail.com

பக்கங்கள்: 144
விலை: ரூ.130.00

இணையத்தில் வாங்க: டிஸ்கவரி புக் பேலஸ் | commonfolks.in

மின் நூல்கள் (e books)

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

1 மறுமொழி

  1. கிறிஸ்துவர்களின் மதவெறிக்கு எதிராக இந்து தேசியம் அவசியம் வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க