நாட்டின் பல மாநிலங்களில் சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி வாகன ஓட்டுநர்கள் வியாபாரிகள் விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களும் போராடிவரும் நிலையில் மோடி அரசானது தனக்கே உரிய பாசிசத் திமிருடன் சுங்கக் கட்டணக் கொள்ளையை மேலும் அதிகரிப்பதற்காகச் செயற்கைக்கோள் மூலம் பயணத் தூரத்தைக் கணக்கிட்டு சுங்கங் கட்டணங்களை வசூலிக்கும் முறையைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது. அதற்காக தேசிய நெடுஞ்சாலைக் கட்டணம் (விகிதங்கள் மற்றும் வசூல் நிர்ணயம்) விதிகள், 2008-இல் [National Highways Fee (Determination of Rates and Collection) Rules, 2008] திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக செப்டம்பர் 10 ஆம் தேதி, ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதைத் தவிர்க்கும் வகையில் செயற்கைக்கோள் மூலம் சுங்கக்கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்போதுள்ள பாஸ்டேக் (Fastag) முறைக்கு மாற்றாக, குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் (Global Navigation Satellite System) என்ற முறையில் வாகனங்களில் ஆன் – போர்டு யூனிட் (on-board unit) எனும் கருவி பொருத்தப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தமுறை முதலில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதிவிரைவுச் சாலைகளில் செயல்பாட்டுக்கு வர உள்ளது என்றும், சாலைகளில் வாகனங்கள் 20 கிலோமீட்டர் பயணம் செய்த பிறகே அந்த வாகனங்களின் பயணதூரம் செயற்கைக்கோள் மூலம் கணக்கிடப்படும் என்றும் அமைச்சகத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஆன் – போர்டு யூனிட் என்ற கருவி புதியதாக விற்பனை செய்யக்கூடிய வாகனங்களில் பொருத்தப்பட்ட பிறகே அந்த வாகனங்கள் விற்பனை செய்யப்படும் என்றும் இந்த புதிய கருவி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ளனவா என்பதைக் கண்காணிப்பதற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் என்.எச் -275 இன் பெங்களூரு-மைசூர் பிரிவு மற்றும் ஹரியானாவில் என்.எச் -709 இன் பானிபட்-ஹிசார் பிரிவு ஆகியவற்றில் ஜி.என்.எஸ்.எஸ் அடிப்படையிலான பயனர் கட்டண வசூல் முறை தொடர்பான சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.


படிக்க: மீண்டும் ஹிண்டன்பர்க் அறிக்கை: அதானியின் கைப்பாவையாக செபியின் தலைவர்


சுங்கச்சாவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவே செயற்கைக்கோள் மூலம் பயண தூரங்களைக் கணக்கிட்டு சுங்கக் கட்டணங்களை வசூலிக்கும் முறையை அறிமுகம் செய்வதாகக் கூறப்பட்டாலும் உண்மையான காரணம் அதுவல்ல. மாறாக, கார்ப்பரேட்டுகள் கட்டற்ற முறையில் மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பதற்காகச் சுங்கக் கட்டண வசூலிக்கும் முறையை மாற்றியமைக்க வேண்டும் என்பதே ஆகும்.

அந்த நோக்கத்திலிருந்துதான் இதற்கு முன்னரும் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதாகக் கூறி பாஸ்டேக் என்ற முறையை அமல்படுத்தி சுங்கச்சாவடிகளில் ரொக்கம், டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் சுங்கக் கட்டணங்களைச் செலுத்திக் கொண்டிருந்த மக்களை வங்கிக்கணக்கிலிருந்து சுங்கக்கட்டணம் பிடித்துக் கொள்ளப்படும் முறைக்குப் பழக்கப்படுத்தியது.

தற்போது அதன் அடுத்தகட்டமாகவே, வாகனங்கள் சுங்கச்சாவடிகளைக் கடந்தால் மக்களுடைய வங்கிக்கணக்கிலிருந்து சுங்கக்கட்டணம் பிடித்துக் கொள்ளப்படும் என்ற முறைக்கு மாற்றாக வாகனங்கள் சாலைகளில் பயணம் செய்யும் தூரத்தை செயற்கைக்கோள் மூலம் கணக்கிட்டு மக்களுடைய வங்கிக்கணக்கிலிருந்து சுங்கக்கட்டணங்களை பிடித்துக் கொள்ளும் வகையில் மோடி அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது.

பாஸ்டேக்கு பதிலாக இந்த புதிய முறையில் சுங்கக்கட்டணம் வசூலிப்பது நிலைநாட்டப்படும்போது, நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் சுங்கச்சாவடிகளைக் கடந்தால் சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டும் என்ற முறை ஒழித்துக்கட்டப்பட்டு, கிலோமீட்டர் அடிப்படையில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் முறை நிறுவப்படும். அதன் விளைவாக, தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவோர் செலுத்திவரும் சுங்கக்கட்டணம் பல மடங்கு அதிகரித்து விண்ணை முட்டும் அளவுக்கு உயரும் பேரபாயம் இதன் பின்னணியில் உள்ளது.

அதுமட்டுமல்லாமல், வாகனங்களின் ஒவ்வொரு அசைவையும் செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பதானது தனிநபரின் அந்தரங்க உரிமையை (Right to privacy) மீறுவதாகும். இதன் மூலம், எந்தவொரு தனிநபரையும் அரசு வேவு பார்க்க முடியும்.


படிக்க: மீண்டும் ஹிண்டன்பர்க் அறிக்கை: அதானியின் கைப்பாவையாக செபியின் தலைவர்


இந்த புதிய முறையில் சாலையில் வாகனங்கள் 20 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்த பிறகே அந்த வாகனங்களின் பயண தூரம் செயற்கைக்கோள் மூலம் கணக்கிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதும் சுங்கச்சாவடிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் தங்களுடைய அன்றாட தேவைகளுக்காகப் பயணங்களை மேற்கொள்ளும் போது கூட சுங்கக் கட்டணங்களைச் செலுத்த வேண்டியுள்ளது என்ற குறைபாட்டை நிவர்த்தி செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டாலும் இந்த அறிவிப்பின் நோக்கம் மக்களை இந்த புதிய முறைக்குள் கவர்ந்திழுப்பதே ஆகும். கார்ப்பரேட்டுகளின் கட்டற்ற சுங்கக்கட்டணக் கொள்ளையையே நோக்கமாகக் கொண்டிருக்கும் மோடி-அமித்ஷா கும்பல், இனிவருங்காலங்களில் இந்த ‘சலுகை’யையும் ரத்து செய்துவிடும்.

மேலும், வாகனங்களின் பயண தூரத்தைச் செயற்கைக்கோள் மூலம் கணக்கிட்டு சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறை நாட்டில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகள் மற்றும் அதிவிரைவுச் சாலைகளில் நிலைநாட்டப்படும் போது, அந்த சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அனைத்தும் முற்றிலுமாக அகற்றப்பட்டுவிடும். ஆகவே, அந்த சுங்கச்சாவடிகளில் அற்பக் கூலிக்கு வேலை செய்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்புகளும் பறிபோகும்.

ஒன்றிய அரசுடன் ஒப்பந்தமிட்டுக் கொண்டு தேசிய நெடுஞ்சாலைகளைக் கட்டியமைத்த கார்ப்பரேட்டு நிறுவனங்களே தற்போது சுங்கச்சாவடிகள் மூலம் கட்டணங்களை வசூலித்து வருகின்றன. ஏற்கெனவே அந்நிறுவனங்களின் கட்டற்ற கொள்ளைக்காக மோடி அரசானது, ஒப்பந்தமிட்டுக் கொண்டுள்ள ஆண்டுகளைக் கடந்தும் சுங்க வசூலில் ஈடுபடுவதற்கு அனுமதித்துள்ள போதிலும் ஆண்டுதோறும் சுங்கக் கட்டணங்களை உயர்த்தி வரும் போதிலும் அந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் சுங்கக்கட்டணக் கொள்ளையை மேலும் அதிகரிக்கும் விதமாகவே இந்த புதிய முறையைக் கொண்டுவந்துள்ளது.

மேலும், இந்த முறையினால் பலனடையப் போவது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் பிரதிநிதித்துவப்படுத்தும் அம்பானி-அதானி வகையறா கார்ப்பரேட் முதலாளிகளே ஆவர். மோடி-அமித்ஷா கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு ஒன்றிய அரசின் சார்பாகவும் பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகளின் சார்பாகவும் அமைக்கப்படும் நெடுஞ்சாலைகளுக்கான ஒப்பந்தங்கள் அம்பானி -அதானி வகையறா கார்ப்பரேட் முதலாளிகளுக்கே தரப்படுகின்றன.

ஆகவே, தமிழ்நாடு, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி போராட்டங்கள் எழுந்துவரும் நிலையில் அப்போராட்டங்கள் சுங்கக்கட்டணக் கொள்ளையால் பாதிக்கப்படும் பிற வர்க்கங்களுடன் இணைக்கப்பட்டு மோடி அரசைப் பணிய வைத்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான லாரி ஓட்டுநர்களின் போராட்டங்களைப் போன்று அம்பானி அதானிகளின் பொருளாதாரம் ஸ்தம்பிக்கும் வகையிலான போராட்டங்களைக் கட்டமைக்கும் போதே செயற்கைக்கோள் மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையைப் பின்வாங்க வைக்க முடியும்.


பிரவீன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க