Sunday, June 26, 2022
முகப்பு செய்தி இந்தியா சுங்கச்சாவடி கட்டண உயர்வு : அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் !

சுங்கச்சாவடி கட்டண உயர்வு : அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் !

ஏப்ரல்-20 முதல் நாடு முழுவதுமுள்ள சுங்கச்சாவடிகளை திறந்து கொள்ள அனுமதித்திருப்பதோடு, 5 முதல் 12 சதவீதம் வரையில் சுங்கக்கட்டணமும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

-

டந்த மார்ச் 25 இல் தொடங்கிய நாடுதழுவிய ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப் பட்டிருக்கிறது. சிறு, குறு, நடுத்தரத் தொழிலகங்களைச் சார்ந்திருந்த இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி வாடிவருகின்றனர். கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாராத் தொழிலாளர்கள் தொடங்கி விவசாயத் தொழிலாளர்கள் வரையில் பலரும் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனர்.

அன்றாடங்காய்ச்சிகளின் நிலைமையும், புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமையும் பெருந்துயராய் மாறியிருக்கிறது. ”அடுத்தவேளை சோற்றுக்கு என்ன வழி” என்ற கேள்வி நாடெங்கும் எதிரொலிக்கிறது.

ஐ.டி. நிறுவனங்கள் தொடங்கி திருப்பூர் பனியன் கம்பெனிவரையில் எத்தனை தொழிலாளர்களின் வேலையைப் பறிக்க காத்திருக்கின்றன என்ற அச்சம் நம்மையெல்லாம் வாட்டுகிறது. இவையெல்லாம் நாட்டுமக்களின் கவலை. மோடி அரசின் கவலையோ வேறொன்றாகயிருக்கிறது.

பட்டினியால் வாடும் மக்களின் பசிபோக்க, நாட்டின் தேவைக்கும் அதிகமான உணவு தானியங்களை இருப்பு வைத்திருக்கும் இந்திய உணவுக் கழகத்தின் சேமிப்புக்கிடங்குகளைத் திறந்துவிடு என்று நாடே கோரும் வேளையில், வெந்தப்புண்ணில் வேலைப்பாய்ச்சும் விதமாக, சுங்கச்சாவடிகளை கட்டண உயர்வுடன் திறந்து விட்டிருக்கிறது, மோடி அரசு.

ஏப்ரல்-20 முதல் நாடு முழுவதுமுள்ள சுங்கச்சாவடிகளை திறந்துகொள்ள அனுமதித்திருப்பதோடு, 5 முதல் 12 சதவீதம் வரையில் சுங்கக்கட்டணமும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

இதன்படி தமிழகத்திலுள்ள 48 தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சுங்கச்சாவடிகள் ஏப்ரல் 19 நள்ளிரவு முதல் திறக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள் 26 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வும் அமலுக்கு வந்துவிட்டன.

ஏப்ரல் 20 முதல் பாதிப்பின் தன்மைகளுக்கேற்ப அந்தந்த மாநிலங்கள் சில கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பினும், தமிழகத்தில் இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை. அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் பணிகளுக்கான வாகனப் போக்குவரத்து மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

”நாடுமுழுவதும் 60 இலட்சம் லாரிகளில் 15 சதவீதம் மட்டுமே இயங்கி வருகின்றன. தமிழகத்திலுள்ள 4.5 இலட்சம் லாரிகளில், அத்தியாவசிய சரக்கு போக்குவரத்துக்காக 50 ஆயிரம் லாரிகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் நாளொன்றுக்கு ரூ 3 கோடி வீதம் ஒரு மாதத்துக்கு 90 கோடி வருவாய் இழப்பை லாரி உரிமையாளர்கள் சந்தித்து வருகின்றனர்.” என்கிறார், அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நிர்வாகக் குழு உறுப்பினர் சென்னகேசவன்.

மேலும், ”இதுவரை நிறுத்தி வைக்கப்பட்ட லாரிகளை இயக்கி, பராமரிப்பு செய்தால் மட்டுமே பழுதின்றி தொடர்ந்து இயக்க முடியும். ஒருமாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் பேட்டரி குறைந்தும், இன்ஜின் காய்ந்து போய் பராமரிப்பு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு லாரி உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இவற்றுக்கு லாரி ஒன்றுக்கு ரூ 25,000 செலவிட்டால் மட்டுமே தொடர்ந்து இயக்க முடியும். 4 இலட்சம் லாரிகளுக்கு தலா ரூ.25,000 வீதம் ஆயிரம் கோடி ரூபாய் பராமரிப்பு செலவை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.” என்கிறார், அவர்.

படிக்க:
♦ லாக்டவுன் : தொழிலாளர்களின் ஊதியத்தை முழுங்கிய முதலாளிகள் !
♦ நமது இந்தியக் கல்வி முறையின் கோரமுகம் !

இந்த நிலைமைகளையெல்லாம் கருத்தில் கொண்டு குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு சுங்கக்கட்டண வசூலிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசிடம் முன்வைத்திருக்கிறது, அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ். குறைந்தபட்சம், ஊரடங்கு முடியும் வரையிலாவது கட்டணம் வசூலிப்பதை நிறுத்துங்கள் என்று அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்திருக்கின்றன.

இது லாரி உரிமையாளர்களை மட்டும் பாதிக்கக்கூடிய பிரச்சினை அல்ல. சங்கிலித்தொடர்போல, வாகனப் போக்குவரத்தைச் சார்ந்திருக்கும் சகல துறைகளையும் பாதிக்கக்கூடிய பிரச்சினை. இறுதியில், விலைவாசி உயர்வாக மக்களின் தலையில் விடியும் பிரச்சினை. இது ஒரு எளிய உண்மை.

சுங்கச்சாவடிகள் மூடப்படுவதால் யாருக்கும் நட்டமொன்றும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. சுங்கச்சாவடி என்பதே பகற்கொள்ளை என்பதும்; காண்டிராக்ட் நிறுவனங்கள் போட்ட பணத்தை சில ஆண்டுகளிலே இலாபத்துடன் திரும்ப எடுத்துவிட்ட பிறகும்கூட தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு கட்டண வசூலுக்கான அனுமதி வழங்கப்பட்டுவருவதென்பதும் ஏற்கெனவே அம்பலமான ஒன்றுதான்.

தற்போது, சுங்கச்சாவடிகளை காண்டிராக்ட் எடுத்திருக்கும் பெருமுதலாளிகளின் இலாப சதவீதம் குறைந்துவிடக் கூடாதென்பதற்காக, சட்டப்பூர்வமான வழிப்பறியைத் தொடர்வதற்கான அனுமதியை வழங்கியிருக்கிறது மோடி அரசு.

கொரோனா பரிசோதனைக்கான கருவிகளுக்கும், முகக்கவசங்களுக்கும்கூட ஜி.எஸ்.டி. வரியைப் போட்டு எரியும் வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என வழிப்பறியில் ஈடுபட்டுவரும் மோடி அரசிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

– செங்கதிர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க