நாம் பள்ளிகளில் பெறும் கல்வியானது நம்மை கட்டுப்படுத்துகின்றதா அல்லது விடுவிக்கின்றதா என்கிற கேள்வியை கேட்டுக் கொள்ள வேண்டிய முக்கியமான தருணம் இது. நாம் படைப்பூக்கமுள்ளவர்கள் ஆகிறோமா அல்லது நமது அழகியல், கலை ஆர்வம், மனிதத்தன்மை போன்றவற்றை இழக்கிறோமா?

ஒவ்வொரு நாளும் நமது கல்வி முறை நமக்கு துரோகமிழைக்கிறதா?

நான் முதலில் என் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தில் இருந்து துவங்குகிறேன். பத்தாம் வகுப்பு படிக்கும் ஒவ்வொரு மாணவனும் எதிர் கொள்ளும் தயக்கம், அடுத்து பதினோராம் வகுப்பில் எந்தப் பிரிவை தெரிவு செய்வது என்பது தான். பெரும்பாலும், இந்த முடிவை பெற்றோர் அல்லது குறிப்பிட்ட பாடப் பிரிவுக்கு சமூகம் அளித்துள்ள அந்தஸ்து ஆகியவை தான் தீர்மானிக்கிறது. என்னதான் குறிப்பிட்ட பாடப் பிரிவை மற்றவற்றை விட மேலாக கருதுவது தவறு என்கிற புரிதல் இருந்தாலும் இவ்வாறு தான் நடக்கிறது. சமூகம் வரிசைக்கிரமமான இந்த பாகுபாட்டின் அடிப்படையில் தான் செயல்படுகின்றது.

“எனது நெருங்கிய தோழி”

என்னுடைய நெருங்கிய தோழிக்கு வணிகவியல் பிரிவை தேர்ந்தெடுக்க விருப்பம்; ஆனால் அவளது பெற்றோர் அறிவியல் பிரிவை தெரிவு செய்ய வைத்தனர். “நமது மொத்த குடும்பமும் பள்ளியில் அறிவியல் பிரிவை எடுத்து தான் படித்துள்ளது – எனவே நீயும் அதைத் தான் தெரிவு செய்ய வேண்டும். அறிவியல் பிரிவை எடுத்துப் படித்தால் தான் உனக்கு நல்ல எதிர்காலம் அமையும்” என்பது அவளது தந்தையின் கருத்து. இத்தனைக்கும் அவர் ஒரு பொறியாளர்.

அவளுக்கு அறிவியலின் மேல் ஆர்வம் இல்லை என்பதால் பதினோராம் வகுப்பில் என்ன முயற்சித்தும் சரியாக படிக்க முடியவில்லை. நாட்கள் செல்லச் செல்ல ஆர்வமிழந்து தனிமைப்பட்டுப் போனாள். தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது அவளால் தன் பெற்றோரிடம் அது குறித்துப் பேச முடியவில்லை. இத்தனைக்கும் தன்னுடைய ஆசிரியரிடம் அவளால் தனது பிரச்சினைகளைக் குறித்து மனம் திறந்து பேச முடிந்தது.

இறுதியில் அந்த ஆசிரியர் அவளது பெற்றோரை அழைத்து விருப்பமில்லாத பாடப் பிரிவை திணிப்பதால் எந்த பயனும் இல்லை என்பதை எடுத்துச் சொல்லி அவள் விரும்பும் பாடப் பிரிவுக்கு மாற அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

அந்த தந்தையோ தன் மகளின் ‘தோல்வியை’ தனக்கு நேர்ந்த அவமதிப்பாகவும் இழிவாகவும் கருதினார். குடும்ப பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல தன் மகள் தவறி விட்டதாக கருதினார். அந்த சூழலிலும் அவரது கண்களுக்கு மகளின் “குறைந்த மதிப்பெண்களே” தெரிந்தன – அவளது கண்ணீர் தெரியவில்லை. ஓராண்டாக தன் மகள் அடைந்திருக்க கூடிய துயரங்கள் அவருக்குப் புரியவில்லை.

சிக்கலின் ஆழம் என்னவென்பதை தந்தையால் புரிந்து கொள்ள முடியவில்லை; அவளின் தாயோ அமைதியாக இருந்தார்.

எல்லா முடிவுகளையும் குடும்பத் தலைவரே எடுக்க வேண்டும் என்பது பரவலான நம்பிக்கை என்பதால் அவளது தந்தையே அவளின் தெரிவுகளையும் அவளைக் கேட்காமலேயே தீர்மானித்தார். “உன்னால் அறிவியலைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், நீ கலைத் துறையை எடுத்துப் படிக்கத் தான் லாயக்கு” என்றார்.

ஒவ்வொரு பாடப் பிரிவும் ஒரு ஏணிப்படி போல் அமைந்த வரிசைக் கிரமமான மதிப்பைப் பெற்றுள்ளது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இவ்வாறு பாடப் பிரிவுகளுக்கு இடையே கற்பிக்கப்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகள் எந்தளவுக்கு நமது சிந்தனையை மாசுபடுத்தியுள்ளது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

படிக்க:
♦ 5, 8 பொதுத்தேர்வு : குலக்கல்வியின் 21-ம் நூற்றாண்டு வெர்சன் !
♦ நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு பாதிக்கப்படும் தொழிலாளர்கள் !

“அந்நியமாதல்”

எனது தோழி அதன் பின் அனைத்திலிருந்தும் விலகிச் செல்ல ஆரம்பித்தாள். 12ம் வகுப்பு முழுவதும் அவளுக்கு கொடுமையான அனுபவமானது. அவள் பள்ளியையும், புத்தகங்களையும்.. ஏன், கல்வியையே கூட வெறுக்கத் துவங்கினாள். கழுத்தை நெறிக்கும் வகுப்புகளுக்கும், புத்தகங்களுக்கும் இடையில் அவள் தனது ஓவிய நோட்டிலும் பென்சிலிலும் ஆறுதல் தேடினாள். எனது தோழி மிகச் சிறந்த ஓவியர்; அவளுக்கு அபாரமான படைப்புத்திறன் இருந்தது. நோக்கமற்ற ஓவியங்களை வரைவதில் இருந்து துல்லியமான உருவப்படங்களை வரைவது வரை அவளது கரங்கள் அற்புதங்களை நிகழ்த்தின.

தனது ஆர்வம் எதில் உள்ளது என்பதை அவள் கண்டு கொண்டாள். 12ம் வகுப்புக்குப் பின் நுண்கலை படிக்க விரும்பினாள். எனினும் அந்தக் கனவை தன் தந்தையிடம் சொல்ல அஞ்சினாள். தனது ஓவியங்களை அவரிடம் காட்டக் கூட பயந்தாள். அவள் பொதுத் தேர்வின் இறுதியில் 75 சதவீத மதிப்பெண் எடுத்த போது அவளது தந்தையின் ஆங்காரம் அதிகரித்தது. தன் குடும்பத்தாரின் முந்தைய சாதனைகளோடு ஒப்பிட்டு இழிவு படுத்தும் போக்கு தொடரத் தொடர, அவள் தன்னையே இழக்கத் துவங்கினாள்.

மீண்டும் அவளது விருப்பத்தைக் கேட்காமலேயே தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பிரிவை எடுத்துப் படிக்க அவளது தந்தை வலியுறுத்தினார். பொதுவாக எல்லா மாணவர்களுக்கும் மகிழ்ச்சிகரமாக அமையும் கல்லூரி முதலாம் ஆண்டு அவளைப் பொருத்தவரை பெரும் சித்திரவதையாக அமைந்தது. அந்த சமயத்திலும் தொடர்ந்து வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கச் சொல்லி அவளை நெருக்கிக் கொண்டே இருந்தனர்.

முதலாம் ஆண்டின் இறுதியில் அவளது தந்தை சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுதச் சொல்லி வற்புறுத்த துவங்கினார். அந்த சமயம் ஒரு நாள் அவள் மிகுந்த கவலையுடன் என் வீட்டிற்கு வந்தது நினைவில் உள்ளது. வந்ததும் அழத் துவங்கினாள் – அந்தக் கண்ணீரே அனைத்தையும் சொன்னது. அவளது இருதயம் குத்திக் கிழிக்கப்பட்ட வலியை என்னால் உணர முடிந்தது. சிவில் சர்வீஸ் பரீட்சையில் முதல் முயற்சியிலேயே தேர்வாகாவிடில் தனக்கு திருமணம் முடித்து வைத்து விடுவதாக தன் தந்தை கூறியதை உடைந்த குரலில் சொன்னாள்.

பரீட்சைகளின் அழுத்தம், மதிப்பெண்கள், சிவில் சர்வீஸ் தேர்வு, உடைந்து நொறுங்கிப் போன கனவுகள், திருமண அச்சம், தோல்வி குறித்த அச்சம் என எல்லாமாகச் சேர்ந்து அவளது ஆன்மாவை கிழித்துப் போட்டது. ஒரே ஒரு முறையாவது உன் தந்தையிடம் பேசலாமே என்று அவளிடம் சொன்னேன். உன்னுடைய ஆர்வம் குறித்து அவருக்கு தெரியப்படுத்தலாமே என்றேன். தேவைப்பட்டால் உன் சார்பாக நான் அவரிடம் பேசட்டுமா என்று கேட்டேன். “அவர் புரிந்து கொள்ள மாட்டார். எப்போதும் புரிந்து கொள்ள மாட்டார்” என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தாள். நீ பேசினால் அதற்கும் என்னைத் தான் திட்டுவார் என்றாள். குடும்பத்துக்கு வெளியே இதையெல்லாம் பேசலாமா எனக் கேட்பார் என்றாள்.

சில மாதங்கள் கழிந்தது. ஒவ்வொரு நாளும் அவள் தத்தளித்துக் கொண்டிருந்தாள். அவள் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு படிக்க முயன்றாள். ஆனால், இந்த முறை அவளால் தன்னையே அதில் திணித்துக் கொள்ள முடியவில்லை. அச்சம் மெல்ல மெல்ல அவளை ஆட்கொண்டது. அவள் இயல்பாக மூச்சு விட முயற்சித்தாள். “இந்த கொந்தளிப்புகளில் இருந்து தப்பிக்க வேண்டும்” என அடிக்கடி என்னிடம் சொல்வாள்.

படிக்க:
♦ கொரோனா தடுப்பு நடவடிக்கையில் வடசென்னை மக்கள் உதவிக்குழு !
♦ நாமக்கல் பிராய்லர் பள்ளிகள்!

ஒரு அக்டோபர் மாத மத்தியில் அவள் தூக்கிட்டு செத்துப் போனாள். அவள் தற்கொலை செய்து கொண்டாள்.

அவள் ஒரு விதிவிலக்கு அல்ல. அவளது தற்கொலை அவளுடையது மட்டுமல்ல. அவளும் நம்மைப் போலவே இந்த விஷம் பரவிய, அடக்குமுறை கொண்ட, குறுகலான கல்வி முறையின் ஒரு விளை பொருள் தான். அவளது மரணம் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது. இந்தக் கொடூரமான அமைப்புமுறை அவளைத் திட்டமிட்டுக் கொன்றது. இந்த அமைப்பு முறையில் கிஞ்சிற்றும் மனித சாரம் கிடையாது; ‘வெற்றி’ ‘தரவரிசை’ மற்றும் ‘முதலிடம்’ போன்ற குறுகலான கண்ணோட்டத்தின் மூலம் அவளது பெற்றோரை குருடர்களாக்கியது இந்த அமைப்பு முறை.

அவளது மரணத்திற்குப் பின் நான்கு வருடம் கழித்து இன்று பத்தாம் வகுப்பு படிக்கும் அவளது இளைய சகோதரியும் அடுத்து 11ம் வகுப்பில் அறிவியல் பிரிவை எடுத்துப் படிக்க நிர்பந்திக்கப் படுகிறாள். கல்வி குறித்த தங்களது கண்ணோட்டம் ஏற்படுத்திய இழப்பை அவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. இந்தக் கல்வி முறை எப்படி தங்களை முற்றிலுமாக ஏமாற்றியது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

முற்றிலும் தனிப்பட்ட இந்த தகவல்களை நான் சொல்வதற்கு காரணம், தனிப்பட்ட ஒவ்வொன்றும் அரசியல்மயமானது என்பதற்காகத் தான். நமது தனிப்பட்ட அனுபவங்கள் ஒவ்வொன்றும் நம்மைச் சுற்றியுள்ள சமூக மற்றும் கலாச்சார நிறுவனங்களால் கட்டமைக்கப்பட்டவையே என்பதை நாம் புரிந்து கொள்ள மறுக்கிறோம்.

என் தோழியின் தற்கொலைக்குப் பின் நமது மொத்த கல்வி முறையும் எந்தளவுக்கு தவறானது என்பதை நான் புரிந்து கொண்டேன். நமக்குள் கருணையை உருவாக்க அது தவறி விட்டது. நமது உணர்வுகளை கூர்தீட்டுவதற்கு பதில் மழுங்கடித்து விட்டது. நம்மைச் சுற்றிலும் உள்ள மனிதர்களைக் குறித்து அக்கறை கொள்ள அது பயிற்றுவிக்கவில்லை. மேலும் இந்த கல்வி முறையானது பொறுப்பற்ற, போலியான, கற்பனையான ‘வெற்றி’ என்கிற கருத்தாக்கத்தைக் கொண்டு நம்மை மொத்தமும் குருடர்களாக்கி விட்டது.

‘தப்பிக்க ஏதும் வழியுண்டா?’

இது போன்ற நெருக்கடியான தருணங்களில் மாற்று கல்வி முறை குறித்து சிந்திப்பது அத்தனை சுலபமல்ல. எனினும் நாம் கல்வியின் இயங்கியல் (dynamics of Education) குறித்த தேடலைத் துவங்க வேண்டும். தனிநபர்களாக நாம் இதுவரை (இந்த கல்வி முறையில் இருந்து) கற்றுக் கொண்டதை மூளையில் இருந்து அழிப்பது அவசியம் என்பதை உணர வேண்டும்.

ஒருமைப்பாடு, அனுசரித்துப் போதல் போன்றவற்றின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு கல்வி முறை நமக்குத் தேவையில்லை. மாறாக நமக்குத் தேவையான கல்வி முறையானது பன்முகத்தன்மைக்கு இடமளிப்பதாகவும், படைப்பூக்கம் கொண்டதாகவும் இருக்க வேண்டும். ஓர்முனையிலான உரையாடும் சூழலில் சொல்லிக் கொடுக்கப்பட்டவைகளை தாண்டி ஒவ்வொன்றையும் படைப்பூக்கத்துடனும், விமர்சனப்பூர்வமாகவும் அணுகும் சிந்தனையை வளர்க்க கூடியதாக இருக்க வேண்டும். செயல்முறைக் கற்றலின் வழியே மாணவர்களுக்கு மத்தியில் பரஸ்பர அன்பும் கருத்துப் பரிமாற்றமும் நிகழ்வதை உறுதி செய்யும் விதமான கல்வி முறையே நமக்குத் தேவை – மாறாக, முதலாளித்துவ கல்வி முறையை போல் சந்தைப் போட்டிக்குள் நம்மை அள்ளித் திணிக்க கூடாது.

இது போன்ற ஒரு கல்வி முறைக்கு நாம் போராட வேண்டும், அதை நோக்கி வேலை செய்ய வேண்டும்.


கட்டுரையாளர் : Apoorva Pandey, a masters student at centre for the study of social systems,
Jawaharlal Nehru University.

தமிழாக்கம் :  தமிழண்ணல்
மூலக் கட்டுரை :  த வயர்.