பள்ளிப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் தினசரி செய்தித்தாள்களைக் கவனிக்கும் எவருமே ‘நாமக்கல் பள்ளிகளின்’ விளம்பரங்களை அடிக்கடி காணலாம். நாமக்கல் நகரப் பள்ளிகளின் சார்பாக வெளியாகும் அவ்விளம்பரங்களில் அந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்வுகளில் அவர்களிடம் படித்த மாணவர்கள் எத்தனை பேர் சாதனை படைத்துள்ளார்கள் என்கிற விவரங்கள், புகைப்படங்களோடு வெளிவந்திருக்கும். கூடவே அந்தப் பள்ளிகளின் இமாலய வசதிகள், மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களும் இடம் பெற்றிருக்கும்
அந்த விளம்பரங்களின் சாராம்சம், “எங்களிடம் படிக்கப் போகும் உங்கள் பிள்ளைகளுக்கு தேர்வுகளில் மாநில அளவில் முதலிடம் பெற்றுத்தருவது லட்சியம் – இல்லா விட்டால் நல்ல கல்லூரியில் இடம் கிடைப்பதாவது நிச்சயம்” என்பது தான். இந்த லட்சியத்தை எட்டுவதற்கான விலை சில லட்சங்களில் இருக்கும் – அது அந்தந்த பள்ளியின் முந்தைய சாதனைகளையும், பாரம்பரியத்தையும் பொறுத்து கொஞ்சம் கூடக்குறைய இருக்கலாம். இது போக பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் மாநில அளவில் சாதனை படைக்கும் மாணவர்களுக்கென தனிச் சலுகைகளும் உண்டு.
நாமக்கல் பள்ளிகள் நடுத்தர வர்க்கப் பெற்றோரின் கனவு. அவர்தம் வாழ்க்கை லட்சியங்களை எட்டுவதற்கான உத்திரவாதமான ஏணி. பல பெற்றோர்கள் இந்த விளம்பரங்களால் கவரப்பட்டு, இந்தப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள். இது போன்ற பள்ளிகள் மாணவர்களைத் தயாரிக்கும் விதம் தனிச்சிறப்பானது.
இம்மாணவர்கள் உள்ளூரிலேயே இருந்தாலும் பள்ளி விடுதிகளில்தான் தங்க வேண்டும். இவர்களின் ஒரு நாள் வாழ்க்கை அதிகாலையில் துவங்கி இரவு வரையில் நீளும். ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு மாதிரித் தேர்வுகள் இருக்கும். வகுப்பில் உடன்படிக்கும் மாணவர்களோடு பேசத் தடை; ஆசிரியர்களோடு மதிப்பெண் பெறுவதைத் தாண்டி பாட சம்பந்தமான வேறு சந்தேகங்களைக் கூட கேட்கத் தடை; விளையாடத் தடை, சிரிக்கத் தடை, அழத் தடை, டி.வி பார்க்கத் தடை; மாணவர்களைப் பெற்றோர்கள் சுதந்திரமாக வந்து சந்திக்கத் தடை, மதிப்பெண்களைத் தாண்டி வேறெதையும் சிந்திக்கவும் கூட தடை. சுருக்கமாகச் சொன்னால் நாமக்கல் பள்ளிகள் என்பது மதிப்பெண் இயந்திரங்களைத் தயாரிக்கும் கொத்தடிமைக் கூடங்கள்.
இங்கே நடத்தப்படும் மாதிரித் தேர்வின் வினாத்தாள்களைத் தயாரிப்பதும், விடைத்தாள்களைத் திருத்துவதும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள். பெரும்பாலும் அந்தந்த வட்டாரங்களில் இருக்கும் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளின் ஆசிரியர்கள், அரசாங்க சம்பளத்தையும் வாங்கி கொண்டு இது போன்ற பள்ளிகளிலும் பணிபுரிகிறார்கள். ஒரு சில தனியார் பள்ளிகளில் அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் மறைமுகமான பங்குதாரர்களாகவும் இருக்கிறார்கள். இது போன்ற ஆசிரியர்களைக் கொண்டே வகுப்புகளும் நடத்தப்படுகின்றது.
நாமக்கல் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கும் பெற்றோரின் ஒரே லட்சியம் – அதிக மதிப்பெண்கள். ஓரிரு ஆண்டுகள் நீடிக்கும் இந்தக் கொத்தடிமை வாழ்க்கையை எப்பாடுபட்டாவது தங்கள் பிள்ளைகள் சகித்துக் கொண்டால் அதன் பின் ஒளிமயமான ஒரு எதிர்காலம் உத்திரவாதம் என்கிறார்கள்.
இந்தக் கொத்தடிமை வாழ்வின் விதிகள் திணிக்கப்படும் மாணவர்களில் பெரும்பாலானோர் கடுமையான உளவியல் சிக்கல்களுக்கு உள்ளாகிறார்கள் என்றும், மாணவர்களின் விடலைப் பருவ வாழ்க்கை கெட்டுப் போகிறது என்றும், இவர்களெல்லாம் உலகமே அறியாத கிணற்றுத் தவளைகளாகவும், ப்ராய்லர் கோழிகளைப் போன்றும் உருவாகிறார்கள் என்றும் சில முதலாளித்துவ பத்திரிகைகளே எச்சரிக்கை செய்கின்றன.
ஆனால் இந்த எச்சரிக்கைகளையும், அதன் விளைவுகளையும் எல்லாம் பெற்றோர்கள் முழுமையாக அறியாதவர்கள் என்று சொல்லி விட முடியாது. ஒரு சிறப்பான எதிர்காலத்தை அடைவதற்கு இது போன்ற சின்னச் சின்ன தியாகங்களைப் பிள்ளைகள் சகித்துக் கொள்ளத் தான் வேண்டும் என்கிறார்கள் பெற்றோர்கள். மேலும், இப்போது சில லட்சங்களைச் செலவு செய்து விட்டால், பின்னால் மருத்துவமோ பொறியியலோ சேர்க்கும் போது ‘மெரிட்டில்’ சேர்த்து விட முடியும்; எப்படியாவது 90 சதவீதத்திற்கு மேல் தம் பிள்ளை மதிப்பெண்களை வாங்கிவிட்டால் மருத்துவம், பொறியியல் தவிர்த்த வேறு படிப்புகளில் சேர்க்கும் போது செலவு குறைவாக இருக்கும் என்கிறார்கள்.
கடும் உளவியல் சிக்கல்களுக்கு உள்ளாகும் மாணவர்கள் சிலர், அதன் பின் எதற்கும் பயன்படாத தக்கைகளாக சமூகத்தினுள் துப்பப்படுகிறார்கள். சிலர் தற்கொலை முடிவுகளைக் கூட நாடுகிறார்கள். இந்தப் பள்ளிகளின் கொடுமை தாளாத சில மாணவர்கள் லேசாகச் சுணங்கினாலும், அவனது பெற்றோரை வரவழைத்து ‘இது தேறாத கேசு’ என்கிற பாணியில் பள்ளிகள் அச்சுறுத்துகின்றன. லட்சங்களை அள்ளிக் கொடுத்து, இந்தக் கல்வி வியாபாரிகளின் கொழுப்பு கூட காரணமாய் இருக்கும் பெற்றோர்களோ, இது போன்ற பெற்றோர் – ஆசிரியர்கள் சந்திப்புகளில் பம்மிப் பதுங்கி, பிச்சைக்காரர்கள் போல் சுயமரியாதையற்று நிற்கிறார்கள் என்று இப்பள்ளிகளின் நடைமுறைகளை நன்கு அறிந்த நண்பர் ஒருவர் கூறினார்.
நாமக்கல் பள்ளிகள் என்று இங்கே நாம் குறிப்பிட்டாலும், இதே போல் மதிப்பெண்களைக் குறிவைத்து மாணவர்களைத் தயாரிக்கும் மதிப்பெண் தொழிற்சாலைகள் தற்போது தமிழகமெங்கும் பரவி வருகின்றன. விருத்தாச்சலத்தில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவன் தட்சிணாமூர்த்தியின் மரணமே அதற்கு சமீபத்திய உதாரணம்.
எனினும் நாமக்கல் பிராய்லர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவருமே இந்தப் பள்ளிகள் உத்திரவாதமளிப்பது போல் அதிக மதிப்பெண்களைப் பெறுவதில்லை என்பதே எதார்த்தம். குறிப்பிட்ட இரண்டாண்டுகளில் இம்மாணவர்கள் அனுபவிக்கும் சித்திரவதைகள் அவர்களை வேறொரு வகையில் உளவியல் ரீதியில் தயார் செய்கின்றது. அடிமைத்தனம், பந்தயத்தில் வெற்றி பெற்றேயாக வேண்டிய வெறி, காரியவாதம், சமூக உறவுகளின்மை என்று பலவற்றை அந்த மாணவர்கள் பெறுவதோடு, வாழ்க்கை முழுவதும் அப்படியே வாழவும் வேண்டியிருக்கிறது.
இலக்கைத் துரத்தும் இந்த ஓட்டம் பள்ளியோடு மட்டும் நின்று விடுவதில்லை. கல்லூரியில் அது இன்னும் மேம்படுத்தப்பட்டு மெருகூட்டப்படுகிறது. கேம்பஸ் தேர்வில் வெல்வது அங்கே குறிக்கோள். அதுவும் புகழ்பெற்ற பன்னாட்டுக் கம்பெனியின் தேர்வு என்றால் இன்னும் சிறப்புக் கவனம். கல்லூரியில் கேம்பஸ் தேர்வுக்கு மாணவரை அனுப்பும் அதிகாரம் கொண்ட பேராசிரியர்களிடம் (Placement officers) ‘வம்பு’ வைத்துக்கொள்ளக் கூடாது; கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்துப் பெயரைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது. மற்றபடி உரிமையைக் கேட்பதைப் பற்றியோ, அதற்காகப் போராடுவதைப் பற்றியோ கற்பனையாகக் கூட சிந்திக்க முடியாது – கூடாது.
இதையும் தாண்டி, இண்டர்னல் மதிப்பெண்கள், ரிக்கார்டு மதிப்பெண்கள், ப்ராஜக்ட் மதிப்பெண்கள் என்று ஒரு மாணவனை அச்சுறுத்தி, அடக்கி வைக்க வேறு பல்வேறு வழிமுறைகளும் கல்லூரிகளில் நடைமுறையில் உள்ளது. நாமக்கல் பள்ளிகளும் சரி, முன்னாள் சாராய ரவுடிகள் நடத்தும் கல்லூரிகளும் சரி, எல்லாமும் எல்லா வசதிகளையும் கொண்டிருப்பதில்லை. மாணவர்களிடம் வசூல் அதிகரிப்பதற்கேற்பவே அந்த வசதிகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டு வரப்படுகின்றன.
ஒன்பதாம் வகுப்பிலிருந்தே ஒரு மாணவனை இந்த மனப்பான்மைக்கு உளவியல் ரீதியில் தயாரிப்பதில் கல்வி நிறுவனங்கள் பிரதான பாத்திரம் வகிக்கின்றன. இதில் நாமக்கல் பள்ளிகள் ஒரு எடுப்பான உதாரணம் தான். மற்ற இடங்களில் வழிமுறைகள் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், நோக்கம் இது தான். பள்ளிகள் பயிற்றுவிக்கும் முறைகளால் உளவியல் ரீதியிலான தாக்குதல் ஒருபுறமென்றால் இதன் பின்னே செய்யப்படும் செலவுகளின் பொருளாதாரத் தாக்குதல் இன்னொரு புறம். பள்ளியில் சேர சில லட்சங்கள் மொய் வைக்கப்படுகிறது என்றால், மருத்துவம் போன்ற உயர் கல்விகளுக்காக பல லட்சங்களில் ஆரம்பித்து சில கோடிகள் வரை செலவு செய்யப்படுகிறது.
தற்போது மதிப்பெண் தொழிற்சாலைகள் வேகமாகப் பெருகி வருவதாலும், பல பெற்றோர்கள் தனிச்சிறப்பான கவனமெடுத்தும் செலவு செய்தும் மாணவர்களைத் தயாரிப்பதாலும் மருத்துவம் போன்ற உயர் படிப்பில் சேர்வதற்கான குறைந்தபட்ச (Cut&off) மதிப்பெண்களை எடுக்கும் மாணவர்களின் சதவீதம் கூடியிருக்கின்றது. 96 சதவீதம் எடுக்கும் மாணவன் கூட தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில் (management quota) தான் சேர முடிகின்றது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பலருக்கும் வங்கிகள் அளிக்கும் கல்விக்கடன்கள் தான் ஒரே வாய்ப்பு.
படித்து முடித்து விட்டு, சமூகத்தினுள் காலடியெடுத்து வைக்கும் போதே தலைக்கு மேல் லட்சக்கணக்கில் கடனை வைத்துக்கொண்டு ஒரு அழுத்தத்தோடு தான் நுழைகிறார்கள். ஒரு பக்கம் போட்ட காசை சீக்கிரத்தில் எடுத்து விட வேண்டும் என்கிற நெருக்கடி – இன்னொரு பக்கம் பள்ளி, கல்லூரிகளிலிருந்து கற்றுக்கொண்டு வந்துள்ள அடிமைப் புத்தி. இவையிரண்டும் ஒன்றை ஒன்று பரஸ்பரம் வளர்த்துக் கொண்டு,முடிவில் காரியவாதமாகவும், தனிநபர்வாதமாகவும் பரிணமிக்கிறது.
மிகச் சரியாக இது போன்ற ‘தயாரிப்புகளைத்’ தான் பன்னாட்டுக் கம்பெனிகள் விரும்புகின்றன. உலகமயமாக்கலின் விளைவாய் சந்தையும், உற்பத்தியும் கூட உலகமயமாகியுள்ளது. இந்தியாவின் பெங்களூருவிலோ சென்னையிலோ உள்ள பன்னாட்டுக் கம்பெனியின் கிளையில் இருந்து ஒரு பொருளின் அல்லது ஐ.டி சேவையின் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடும் ஊழியர், அதன் முழுமையான தொழில்நுட்பத்தை அறிந்திருக்க வேண்டியது அவசியமற்றதாகின்றது.
ஒரு பொருளின் உற்பத்தின் பல்வேறு கட்டங்கள் சின்னச் சின்ன கட்டங்களாகப் பிரித்து (smaller processes) வெவ்வேறு குழுக்களால் செய்யப்படுகிறது. அதன் உச்சபட்சமான தொழில்நுட்ப இரகசியம் அமெரிக்காவிலோ, வேறு ஐரோப்பிய நாட்டிலோ இருக்கும் தலைமையகத்தில் உள்ளவர்களுக்குத் தான் தெரிந்திருக்கும்.
இந்தச் சூழலில் இங்கே பணிபுரிவதற்காகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், எந்தக் கேள்வி முறையுமின்றி சொன்னதைச் செய்தாலே போதுமானது. சொந்தமான மூளையோ, சிந்திக்க வேண்டிய அவசியமோ தேவையில்லை. இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு (Target)நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதை வாராந்திரமாகவோ, தினசரியோ பரிசீலித்து ஊழியர்களை விரட்ட சில கங்காணிகள் இருப்பார்கள். இந்த உலகத்தின் விதிகள் மிகவும் எளிமையானது. சொன்னதைச் செய்ய வேண்டும் – அதில் இலக்கை எட்ட வேண்டும். குறுக்கே கேள்விகள் கேட்பதோ, உரிமைகள் பற்றிப் பேசுவதோ, அதற்காகப் போராடுவதோ கூடவே கூடாது. சுருங்கச் சொன்னால் பஞ்சு மூளைகள் கொண்ட தக்கை மனிதர்களே உலகமயமான உற்பத்தி நடவடிக்கைகளுக்குப் போதுமானவர்கள்.
தங்கள் நிலத்தை விற்று, நகை நட்டுகளை அடகு வைத்து, போதாததற்கு வங்கிகளிடம் கையேந்தி கல்விக் கடன் பெற்று, லட்சக்கணக்கில் செலவு செய்து, ’தங்கள் பிள்ளைகளுக்கு இருப்பதிலேயே ஆகச் ‘சிறந்ததைக்’ கொடுக்க வேண்டும்; தனது பிள்ளைகளுக்கு நல்ல அறிவாற்றல் கொண்ட மூளை வேண்டும்’ என்றெல்லாம் கனவு காணும் பெற்றோர்கள், அந்த சிறந்த உலகத்தில் அறிவாற்றலுக்கும், மூளைக்கும் வேலையே இல்லையென்பதை அறிந்திருப்பதில்லை. பன்னாட்டுக் கம்பெனிகளால் பொறுக்கியெடுக்கப்படும் தேர்ந்த மதிப்பெண் இயந்திரங்களின் வேலைக்கான உத்திரவாதமென்பது அவர்களது சொந்த உழைப்பினால் விளைந்த பலன் என்று அவர்களே நம்பிக் கொள்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல.
உலகமய பொருளாதாரத்தில் வேலைவாய்ப்புச் சந்தையும் உலகமயமாகியுள்ளது. உலகின் வேறெங்கோ நிகழும் ஏற்ற இறக்கங்கள் இங்கேயும் பாதிப்புகளை உண்டாக்குகிறது – அமெரிக்காவுக்கு காய்ச்சல் என்றால் இந்தியாவுக்கு நெறிக் கட்டுகிறது; ’சில்லறை வணிகத்தில் அந்நிய மூலதனத்தை அனுமதிக்கா விட்டால் இந்தியாவுக்கு நாங்கள் தரும் ஐ.டி சேவைத் துறை வேலைகளை நிறுத்துவோம்’ என்று மிரட்டுகிறார் ஒபாமா. ‘நாமக்கல்’ மூளைகளால் ஒபாமாவிடம் போய் ‘நான் மாநிலத்திலேயே முதலாவதாக வந்தவனாக்கும்’ என்றெல்லாம் காலர் தூக்கிவிட முடியாது.
மாதம் முழுவதும் ஓய்வொழிச்சலற்ற வேலை – இடையே கிடைக்கும் வார இறுதிகளில் ஆசுவாசப்படுத்திக் கொள்ள குடியும், கூத்தும் தான் இவர்களின் ஒட்டுமொத்த உலகம். இந்த மொன்னை ‘உழைப்பின்’ தகுதிக்கு மிஞ்சி இவர்களுக்கு வழங்கப்படும் ஐந்திலக்கச் சம்பளத்தை எப்படிச் செலவு செய்ய வேண்டுமென்பதையும் சந்தையை இயக்கும் நுகர்வுக் கலாச்சாரமே தீர்மானிக்கிறது. இவர்களின் அரசியல் கண்ணோட்டமோ இந்த வாழ்க்கை அளித்திருக்கும் சவுகரியங்களின் வரம்புகளுக்குட்பட்டு இன்பங்களை இழக்காத வகையிலேயே வெளிப்படுகிறது.
நாமக்கல் பள்ளிகளைப் போன்றே நடத்தப்படும் வேறு பல மதிப்பெண் தொழிற்சாலையிலிருந்தும் உற்பத்தி செய்யப்பட்டு சமூகத்தினுள் அறிமுகமாகும் ‘தயாரிப்புகள்’ பன்னாட்டு மூலதனத்துக்கு மட்டுமல்ல; அவர்களின் சேவகர்களான இந்திய ஆளும் வர்க்கத்துக்கும் மிக உவப்பான குடி மக்கள். இந்த அடிமை இயந்திரங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை இன்று பழைய சாராய முதலைகளும், திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளுமே பெரும்பாலும் நடத்தி வருகிறார்கள். நல்ல லாபம் கொழிக்கும் இந்தத் தொழிலில் நுழைவதற்குத் தயாராக பன்னாட்டுக் கல்வி நிறுவனங்களும் வரிசைகட்டி நிற்கின்றன.
இப்போது முடிவு செய்ய வேண்டியது நாம் தான். நமது பிள்ளைகள் அறிவு பெற கல்வியளிக்கிறோமா அல்லது அடிமையாவதற்காகக் கல்வியளிக்கிறோமா? அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குறைந்த பட்சமாகவாவது ஒரு சமூக அறிமுகம் கிடைக்கிறது. அவர்களுக்கு பல்வேறு வர்க்கத் தட்டைச் சேர்ந்தவர்களோடு பழகவும், அவர்களது வாழ்க்கையை அறிந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கிறது. பள்ளிக்குச் செல்வது மதிப்பெண்களைப் பெறுவதற்காக மட்டுமா அல்லது மனித ஆளுமையை உருவாக்கிக் கொள்வதற்கா? அதைச் சில முதலாளிகள் தீர்மானிப்பதா ? என்பதைப் பெற்றோர்கள் முடிவு செய்யட்டும்.
_________________________________________________
புதிய கலாச்சாரம், ஆகஸ்டு – 2012
_______________________________________________________
நீங்கள் அரசு பள்ளிகளை குறைத்து மதிப்பிட்டது போல தெரியுது, சமூக விழிப்புணர்வு அரசுப் பள்ளிகளில் நிறையவே கற்றுக் கொடுக்கப்படுகிறது. நாமக்கல் பண்ணையில் பிள்ளைகளை சேர்ப்பது அவர்களுக்கு சிறந்த கல்விச் சூழலை கொடுபதற்காக இல்லை, பணக்காரர்கள் தங்கள் பிள்ளைகள் லோக்கல் பசங்களோட சேர விரும்பவில்லை, மேலும் சமுதாயத்தில் தங்களுக்கு உள்ள மதிப்பினை தம்பட்டம் போட எப்படி பணக்காரர்கள் வெளிநாட்டு பொருள்களை வாங்குறாங்களோ, அதே மாதிரி பிள்ளைகளை ரெசிடென்சியல் பள்ளிகளில் சேர்த்து செல்வாக்கை காப்பாற்றுகிறார்கள்.
இப்போ மிடில் கிளாஸ் பெற்றோர் என்ன செய்வார்கள்? சம்பாதிக்குற பெரும் பங்கை பிள்ளையில் கல்விக்கு செலவு செய்து முட்டாள்தனமான கலாச்சாரத்தை வளர்க்கிறார்கள். ஏன்னா பணக்கார பிள்ளைகளோட நாம்பளும் போட்டி போடணும் இல்லையா? புழல் சிறைக்கும் புறநகர் ரெசிடென்சியல் பள்ளிக்கும் இடையில் ஆறு வித்தியாசங்களை சொல்ல கொஞ்சம் கஷ்டப்படத்தான் வேணும். அறிவை வளர்க்கவும் , சாதிக்கவும் உலகத்தில் ஷார்ட்கட் இல்லை என்பது ஏனோ இந்த மண்டைங்களுக்கு புரியவே மாட்டேங்குது.
மேலும் உற்று நோக்கினால், சில குறிப்பிட்ட பள்ளிகளே..சுழற்சி முறையில் தேர்வு முடிவுகளில் மாநிலப் பட்டியலில் மீண்டும் மீண்டும் முன்னிலை இடங்களைப் பெறுகின்றன..!
அதிலும் நன்றாக படிப்பவர்களை தனியே சில வகுப்புகளில் வைத்துக் கொண்டு” சிறப்புப் பயிற்சி” அளிக்கப்படுகிறது.மற்றவர்களை பாஸ் செய்யும் அளவிற்கு மட்டுமே கவனிக்கறார்கள்!
தேர்வு அலுவலர்களை/கண்காணிப்பாளர்களைக் கவர்’ந்து..தங்கள் பள்ளியின் மதிப்பைக் கூட்டிக் கொள்கின்றனர்! சென்ற வருடம் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் சிக்கிய பள்ளி..ஒரு சிறு சான்று மட்டுமே!
தேர்வுகளை அந்த அந்த பள்ளிகளில் நடத்தாமல்..அரசுப் பள்ளி/கல்லூரிகளில் நடத்தலாம்! அங்கு பல பள்ளிகளின் மாணவர்களை கலந்து அமர வைத்து..”சிறப்புகவனம்” ஏதும் கிடைக்காவண்ணம் தேர்வுகளை இயல்பாக நடத்தலாம்!
இந்த பண்ணைகளில் நடக்கும் அட்மிஷன் ஒரு அடிமை சாசனம், ஹாஸ்டல் ஒரு சிறைச்சாலை, ஆசிரியர்களோ இயந்திரங்கள், மாணவர்கள் அடிமைகள். நாமக்கலில் இருக்கும் ஒவ்வொரு கல்விப்பன்னையும் அந்த ஊரில் பெருவாரியாக இருக்கும் சாதிக்காரர்களால் நடத்தப்படுகிறது. பள்ளிகள் காட்டப்படும் இடம் என்பது அரசியல் செல்வாக்கால் அபகரித்தோ மிரட்டியோ பெறப்படுகின்றது என்பதும் நினைவில் கொள்ள வேண்டும்.
செம தலைப்பு.
//இப்போது முடிவு செய்ய வேண்டியது நாம் தான். நமது பிள்ளைகள் அறிவு பெற கல்வியளிக்கிறோமா அல்லது அடிமையாவதற்காகக் கல்வியளிக்கிறோமா? அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குறைந்த பட்சமாகவாவது ஒரு சமூக அறிமுகம் கிடைக்கிறது. அவர்களுக்கு பல்வேறு வர்க்கத் தட்டைச் சேர்ந்தவர்களோடு பழகவும்,//
நிஜம்.
உண்மைகளைப் புட்டுப்புட்டு வைத்து விட்டீர்கள்.
வேதனையான விசயம்தான்.. நான் பள்ளி படிக்கும்போது என் ஆசிரியர் கேள்வி கேள்.யோசி.கையைக் கட்டி அடிமை போல் கையைக் கட்டி நிற்காதே எனக் கூறுவது உண்டு… தற்போது எல்லாம் தலைகீழே. வேறென்ன எல்லாம் பெற்றோரின் ஆசைதான்..
எனவே பிள்ளைகளை ப்ராய்லர் சிறையில் அடைக்காதீர்கள் பெற்றோர்களே!
மிக சிறந்த கட்டுரை…ஆனால் புதிதாக ஒன்றும் இல்லை..நீயா நானா in writing.Recommend this article for hiring managers in IT
I like the first cartoon..but why no girl students…
that’s boys school..
சமூகம், உழைப்பு, ஏற்ற தாழ்வு, போராட்டம் (அரசியல் சார்பல்ல, தன்னம்பிக்கை போராட்டம் வாழ்வியல் அவலங்களை எதிர்த்து). சிந்திக்கும் திறன் இல்லாத குதிரைக்கு சேணம் போட்டார் போலே இருக்கும் இந்த அர்த்தமற்ற கல்வியினால் பெற்ற வேலையில் இருந்து தூக்கி எறியப்படும் பொழுது.. நிதர்சனம் மூஞ்சியில் அறையும் பொழுது.. துடித்து எழாமல் துடி துடித்து… கோழையான தற்கொலையை நோக்கி ஓடுகிறான்… அன்று அவனது பெற்றோர் அரற்று கின்றனர் சிறந்த கல்விகூடங்களில் பயிற்று வித்தேன் என்று…. பொருள் கொடுத்து பொருளற்ற கல்வியை தேடி கொடுத்தோம் என்பதனை மறந்து… (நானும் ஐடி துறையில் தான் உள்ளேன்.. ஆனால் போராடி வந்தவன்.. மீண்டும் என்னுடைய வாழ்கையை சுழியத்தில் இருந்து தொடங்கும் போர்க்குணமும் தன்னம்பிக்கையும் உண்டு.. அரசு பள்ளியிலேயே பயின்றேன்)
இந்த பட்டறைகளை தாண்டி சில பள்ளிகள் ஐ.ஐ.டி , ஐ.எம்.எஸ் குறிவைத்து நகர்ப்புறங்களில் நடக்கிறது. நடுத்தர மற்றும் ஏழை மாணவர்களுக்கு இவற்றில் படிக்க இயலாது.
IIT has announced now that only top 20% of any boards toppers can get through to IIT.
One more thing,you talk so much about education,this that.why dont u ask government teachers to attend school regularly and teach the kids.You blame the whole world except the responsible person.
creative cartoons!!!!!!!!!! another reason why IT companies expect students from these broiler kind of schools is that they will do whatever is required as slaves as they were in their previous machine life operated by the slaves of broiler owners..