ஓர் உண்மைக்கதையை சொல்லட்டுங்களா ?

டத்தில் குறிப்பிட்டுக் காண்பிக்கப்பட்டிருக்கும் குழந்தையோட பேரு மகேஸ்வரி. இந்த வருசம் எட்டாவது படிச்சிட்டிருந்தாங்க. அவங்க வீட்ல மொத்தம் நாலு புள்ளைக.

சிவக்குமாரும், இராஜேஸ்வரியும் இப்போ ஒன்பதாவது படிக்கிறாங்க Child Welfare Certificate மூலமா. மகேஸ்வரியும், இரஞ்சித்தும் நம்ம பள்ளியில படிச்சிட்டிருந்தாங்க. இரஞ்சித் நாலாம் வகுப்பு. பெயர் எழுதவே சிரமப்படுவாரு. எப்பவும் ஒருவிதத் தூக்கநிலையிலே இருப்பாரு. சிவக்குமார் ஆரம்பத்துல சுமாராதான் படிச்சாரு. ஆறாம் வகுப்புக்கு அப்புறம் தீயா படிக்க ஆரம்பிச்சாரு.

இராஜேஸ்வரி ஆரம்பத்துல தீயா படிச்சிட்டிருந்துச்சி; என்னமோ தெரியல எட்டாம் வகுப்புல கொஞ்சம் குறைஞ்சிடிச்சி. மகேஸ்வரி முடிஞ்சவரைக்கும் முயற்சி பண்ணிக்கிட்டே இருந்துச்சி படிக்க; ஆனால் அதால படிக்க முடியாமத் திணறிச்சி.

“பரவால்ல மகேஸ்… ஒருசிலக் குழந்தைக ஆறாம் வகுப்பிலிருந்துக்கூட படிக்க ஆரம்பிச்சிடுவாங்க; நீங்க பயப்படாம படிங்க; நான் இருக்கேன்”னு சொல்லித் தேத்தித் தேத்தி கொண்டாந்துட்டேன்.

ஆறாம் வகுப்பு வந்ததுக்கு அப்புறம்… எப்பவும் சொல்றமாதிரி “எனக்கு லவ் லெட்டர் எழுதுங்க இல்லேனா கதை எழுதுங்க, இல்லேனா படம் வரைங்க, இல்லேனா கவிதை எழுதுங்க”னு சொன்னேன். அவங்கவங்களுக்கு புடிச்சத அவங்கவங்க செஞ்சாங்க. வீட்டுக்குக் கிளம்பும்போது எல்லாத்தையும் எடுத்துட்டு வந்துக் கொடுத்தாங்க. மகேஸூம் எடுத்துட்டு வந்துக் கொடுத்துச்சி. “வீட்ல போய்தான் மிஸ் படிக்கணும்”னு சொல்லியே கொடுத்துச்சி.

படிக்க :
மனதைக் கலங்கச் செய்த மதிய உணவுப் பிரச்சினை !
♦ மூடப்படும் அரசுப் பள்ளிகள் – யார் காரணம் ?

வீட்டுக்கு வந்து எல்லாத்தையும் படிச்சுப் பார்த்தேன். மகேஸோடது வரும்போது கொஞ்சம் எக்ஸைட்டடாகவே இருந்துச்சி. ஏனா…மகேஸ் முதன்முதலா எழுதிக் கொடுத்திருக்கிறது அது.

முதல் வரியே…”அன்புள்ள மகாவுக்கு” என்று தொடங்கியிருந்தது. “உங்கள எனக்குப் புடிக்கும்; நீங்க எனக்கு அம்மா மாதிரி…ப்ளா ப்ளா” னு எழுதிய பின்னாடி உங்களுக்காக நான் ஒரு கதை எழுதறேன்”னு சொல்லி ஒரு சின்னக் கதை எழுதியிருந்துச்சி.

எனக்காக எழுதப்பட்டதும், கதையுமே முழுக்க எழுத்தப்பிழையோடதான் இருந்துச்சி; ஆனா என் குழந்தையோட முதல் எழுத்தை என்னால தப்பில்லாம வாசிக்க முடிஞ்சிச்சி. அத்துணை மகிழ்ச்சியாவும் இருந்துச்சி.

அடுத்தநாள் போய் பெருசா பாராட்டித் தீர்த்துட்டேன் மகேஸ. அதுக்கப்புறம் மகேஸ் அப்பப்போ கதை எழுதிக் கொடுக்கும். இப்படியே ஆறு முடிஞ்சி, ஏழு, எட்டாம் வகுப்புக்கு வந்தாச்சி. எட்டாம் வகுப்புல நாடகத்த கிரியேட் பண்ண ஆரம்பிச்சி, நடிக்கவும் செஞ்சிச்சி. மகேஸ எப்டியாவது நர்ஸ் படிக்க வச்சிடணும்னு எனக்குள்ளே சொல்லிக்கிட்டேன். ஏனா…மகேஸ் மத்தக் குழந்தைகள அவ்ளோ நல்லா பாத்துக்கும்.

காலாண்டு லீவு முடிஞ்சி வந்த கொஞ்ச நாள் கழிச்சி, மகேஸோட அம்மா(கீதா) வேகவேகமா வந்து… வாடி வூட்டுக்குப் போலாம்; நீ படிக்கவும் வேணாம் ; ஒன்னும் வேணாம்னு சொல்லி…

மகேஸையும், இரஞ்சித்தையும் கூட்டிட்டுக் கிளம்புச்சி. வேற க்ளாஸ்ல இருந்த நான் சத்தம் கேட்டு ஓடிவந்து.. என்ன ஏதுனு விசாரிச்சா… என் பொண்ண நீ எப்டி திருடினு சொல்லலாம்னு புது கதையா சொன்னிச்சி. ரொம்ப அதிர்ச்சியா போச்சி.. “நான் அப்டிலாம் சொல்லல கீதா” னு சொன்னாலும் அது காதுல வாங்காம மகேஸையும் இரஞ்சித்தையும் கூட்டிட்டுக் கிளம்புச்சி. சைல்டு லைனுக்கு(லோக்கல்)
கால் பண்ணிக் கொடுத்ததுக்கு,என் பொண்ணுக்குப் படிக்க விருப்பமில்லனு சொல்லிட்டுக் கிளம்பிட்டே இருந்துடிச்சி.

கோவம் குறைஞ்சி மறுபடியும் புள்ளைய கூட்டிட்டு வந்து விட்டுடும்னு பார்த்தேன்; இந்தநாள் வரைக்கும் வரல. ரெண்டு குழந்தைகளும் நின்னே போயிட்டாங்க.

garment workers model Picture
மாதிரிப் படம்

இப்போ மகேஸ்… திருப்பூர்ல இருக்கிற ஏதோ ஒரு பனியன் கம்பெனியில வேல செய்யுது. நிழல்லே இருக்கிறதால நிறம் கூடி இருக்கு போல. சம்பாதிச்சு கொடுக்குது. பொங்கல் லீவுக்கு இப்போ வீட்டுக்கு வந்திருக்கும் போல.

மகேஸோட இப்போதைய தோற்றத்தைப் பார்த்து நம்ம பள்ளியில ஏழாம் வகுப்புப் படிக்கிற சுகுணாவுக்கும் ஆச வந்து இப்போ பனியன் கம்பெனிக்குப் போறதுக்கு ரெடியாயிட்டாங்க. அதனால இந்தப் பொங்கல் லீவு முடிஞ்சி பள்ளிக்கூடத்துக்கு வரல. அவங்க தங்கச்சிக்கிட்ட கேட்டதுக்கு, காரணம் இதுதான்னு சொன்னாங்க. புள்ளைகள விட வந்த அந்த ஊர் அண்ணன் ஒருத்தர் கிட்ட விசயத்தைச் சொல்லி, “அண்ணா எப்டியாவது சுகுணா கிட்ட போய் ஃபோன் பண்ணிக் கொடுங்கணா”னு சொல்ல… டவரே கிடைக்காத அந்த ஊர்ல டவர் இருக்கிற இடத்தைத் தேடி அவரு அலைஞ்சி, ஒருவழியா சுகுணா கிட்ட பேசினா… “நான் படிக்க வரல மிஸ்”னு மூஞ்சியில அடிச்ச மாதிரி சொல்லிடிச்சி.

சைல்டு லைனுக்குக் கால் பண்ணணும்னு நெனச்சாலும், உங்க பள்ளிக்கூடம் திருவண்ணாமலை மாவட்டம்; நீங்க சொல்ற புள்ளைக வேலூர் மாவட்டம்னு சொல்லி ஆக்ஷன் எடுக்க மாட்டேன்றாங்க. ஏற்கனவே இவுகக்கிட்ட பட்டுட்டேன்.

மகேஸ்வரி என்மேல்பழிசுமத்தி பள்ளியைவிட்டு நிற்க என்ன காரணம்?

காலாண்டு பரீட்சை நேரத்துலதான் தமிழக அரசு 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என அறிவித்தது. அப்போதே எட்டாம் வகுப்பில் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் நேரடியாகச் சேர்க்கப்பட்ட மூன்று குழந்தைகளுடன் ஓரிரு குழந்தைகளும் பயப்படத்தொடங்கியிருந்தனர்.

படிக்க :
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு | வில்லவன் நேர்காணல்
♦ கடவுள் நம்பிக்கைக்கு விரோதமானதாக பார்க்கப்பட்ட தருக்கம் ! | பொ.வேல்சாமி

“அதெல்லாம் ஒன்னுமில்ல சாமி.. நீங்களாம் பாஸாயிடுவீங்க”னு சொன்னாலும் அவங்க பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்புப் புள்ளைக பரீட்சை எழுதற கணக்கா கம்பேர் பண்ணியிருந்தாங்க. இதுதான் மகேஸ்வரியை யோசிக்க வச்சி… பள்ளிக்கூடத்தை விட்டு விரட்டிச்சி. மகேஸ், இரஞ்சித், இப்போ சுகுணாவும் இடைநிற்றல் கணக்குல வராங்க. சுகுணா நல்லா படிச்சாலும் குழந்தைகளைத் திருப்பூர் பனியன் கம்பெனியும் கோவை பஞ்சாலையும் வேலைக்குச் சேர்த்துக்கொள்கிறது என்று புதிய நம்பிக்கைப் பிறந்து, அழகியல் கூடும் என்பதற்காகச் செல்லப்போகிறது.

குறிப்பு : இரண்டு மலைகள் தாண்டி 7-கிமீ தூரம் காட்டினூடே (நடந்து) பயணிக்கவேண்டுமென்பதால் செல்லமுடியாமல் தவிக்கிறேன். ஒற்றையடிப்பாதையில் வண்டியில் போகலாம்; ஆனால் கற்களின் மீது ஓட்டுமளவிற்கு எனக்குப் பயிற்சி போதவில்லை. பார்ப்போம்… சுகுணாவை அழைத்துவருகிறேனா இல்லை ஒரு குழந்தைத் தொழிலாளரை உருவாக்கி தமிழக அரசுக்குப் பெருமை சேர்க்கிறேனா என்று!

உங்களின் இந்தப் பொதுத் தேர்வு அரசாணைகள் எல்லாம் திருப்பூரின், கோவையின், ஈரோட்டின் பனியன் கம்பெனிகளுக்கும், பஞ்சாலைகளுக்கும் ஆட்களை அனுப்பும் புரோக்கர் தொழிலுக்குண்டான ஆணைகளாக இருக்கிறது. வாழ்த்துகள் தமிழக அரசே!

நன்றி : ஃபேஸ்புக்கில் மகாலெட்சுமி

3 மறுமொழிகள்

  1. சீக்கிரம் தமிழ்சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூக குழந்தைகள் தயாராகட்டும் குலத்தொழில் செய்து சனாதன மரபை காப்பாற்ற.

  2. தாழ்த்தப்பட்ட பிற்படுத்த மக்களுக்கு எந்த சூழலிலும் தரமான கல்வி கிடைக்க கூடாது, அவர்கள் வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் முன்னேறி விட கூடாது என்ற உங்களின் நோக்கம் புரிகிறது.

    தற்போது வினவு கூட்டங்கள் ஆதரிக்கும் கல்வி கொள்கையால் எத்தனை பேருக்கு கல்லூரி முடித்த உடனே வேலை கிடைக்கிறது ?

    • அதனால என்ன சொல்ல வர்ரீங்க? வினவு இந்தக் கல்விக் கொள்கையை ஆதரிக்கிதுன்னு ஒனக்கு யாரு சொன்னது? பிஜேபி, RSS கும்பல் கொண்டுவருகிற புதிய கல்விக் கொள்கை உழைக்கும் மக்களின் குழந்தைகளை கல்வியிலிருந்து விரட்டகிற ஒன்று என்பதால் இதை எதிர்க்கிறோம். எமது கல்விக் கொள்கை -ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை அனைவருக்கும் இலவசக் கல்வி. தாய் மொழிக் கல்வி. அனைவருக்கும் விஞ்ஞானப் பூர்வமான கல்வி, அனைவருக்கும் வேலை என்பதே. பற்றி வினவிலேயே பல கட்டுரைகள் போராட்டங்கள் பற்றி வந்துள்ளன. ஒழுங்கா தமிழ் படிக்கத் தெரியுமில்லேக,
      நேர்மையா, உண்மையா எழுது. தரங்கெட்ட, கோயபல்ஸ் பாணி பொய் மூட்டைகளை ..,.. நிறுத்து

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க