26.12.2024
ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு கட்டாய தேர்ச்சி ரத்து!
உழைக்கும் மக்களின் குழந்தைகள் மீதான மோடி அரசின் பாசிசத் தாக்குதல்!
கண்டன அறிக்கை
கல்வி உரிமைச் சட்டம் 2009-ஐ 2017-இல் திருத்திய மோடி அரசு, தற்போது அதை இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது. குறிப்பாக, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்குக் கட்டாயத் தேர்ச்சி முறை ரத்து செய்யப்படுவதாகவும், இம்மாணவர்கள் ஆண்டிறுதித் தேர்வுகளில் தோல்வி அடைந்தால், இரண்டு மாதம் கழித்து மறுதேர்வு நடத்தப்படும் என்றும் அதிலும் தேர்ச்சி அடையாவிட்டால் மீண்டும் அதே வகுப்புகளில் படிக்க வேண்டும் எனவும் திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளனர். மத்திய அரசு பள்ளிகளில் இதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென அறிவித்துள்ளது ஒன்றிய அரசு. கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால், மாநிலகளில் நடைமுறைப்படுத்துவது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது.
புதிய கல்விக் கொள்கையைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வரும் பாசிச மோடி அரசின் தொடர் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. ஏற்கெனவே, விஸ்வகர்மா திட்டம் என்ற பெயரில் குலத்தொழில்களை ஊக்குவிக்கும் விதமாக வங்கி கடன் வழங்கப்படும் என் அறிவித்தது மோடி அரசு. இப்போது அதற்குப் பொருத்தமாக குலக்கல்வியை நடைமுறைப்படுத்தும் நோக்கிலேயே இந்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. மோடி அரசின் இந்த அறிவிப்பை பல்வேறு ஜனநாயக சக்திகளும் கல்வியாளர்களும் கண்டித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை சரியென ஆதரித்து கிரிமினல் சாமியார் ஜக்கி வாசுதேவ் ஆதரித்து வெளியிட்டுள்ள அறிவிப்பிலிருந்தே, காவிகளின் நோக்கம் எதுவென புரிந்துகொள்ள முடியும்.
குலத்தொழிலை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஜக்கி “பள்ளிகளில் இருந்து குழந்தைகள் இடைநிற்றலை தவிர்க்கும் நல்ல நோக்கில், ‘ஆல் பாஸ்’ கொள்கை கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் கோடிக்கணக்கான பேர், உண்மையான கல்வி கற்காத நிலை ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டதால், பாரம்பரிய தொழில்களான வேளாண்மை, தச்சு வேலை, பட்டறை வேலை செய்ய முடியாத நிலையில் உள்ளனர்; படித்தவர்களுக்கான வேலைகளுக்கும் அவர்கள் தகுதி பெறவில்லை.
எனவே, நாட்டுக்கும், குழந்தைகளுக்கும் பயன் தரக்கூடிய வகையில், கட்டாயக் கல்வி என்ற சிந்தனையை மறு பரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது” என்று அதில் கூறியுள்ளார். இந்த அயோக்கிய ஆசாமிக்கு, பார்ப்பனக் கும்பல் 10 சதவீத இட ஒதுக்கீடு பெற்று, தம் சாதியில் மிச்ச மீதியிருக்கும் ஆட்களைக் கூட அரசு வேலைக்கு சேர்த்துக் கொண்டிருப்பது கண்ணை உறுத்தவில்லை. மணியடித்து, மடிசார் கட்டி பாரம்பரியத் தொழிலைக் காப்பாற்றுவதே இலட்சியம் என ஏன் வாழவில்லை என்று கேட்பதில்லை. ஆனால், உழைக்கும் வர்க்கத்துப் பிள்ளைகள் பள்ளிக்குப் போவதால், ஆடு மாடு மேய்ப்பதில்லை, சாணி அள்ளுவதில்லை என்று கவலைப்படுகிறார். இது தான் சனாதன – சாதிவெறி.
இதற்குப் பொருத்தமாக, மாணவர்களின் ‘தகுதி’யை உயர்த்தத் தான் இந்த அறிவிப்பு என பிஜேபியின் அண்ணாமலை இன்னொரு பக்கம் முட்டு கொடுக்கிறார்.
இந்தத் தேர்வுமுறையின் மூலமாக மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கும் என கொரோனா காலகட்டத்திற்கு பிறகான நிலைமைகளைக் கல்வியாளர்கள் மதிப்பிடுகிறார்கள். கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இன்று வரை பள்ளிக்கு வராத மாணவர்களைத் தேடித்தேடிச் சென்று பள்ளியில் சேர்க்கும் நிகழ்வு தான் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலைமையில் தேர்வில் தோல்வி என்றால் பள்ளிக்கு மாணவர்கள் வருவது வெகுவாகக் குறையும் என்கிறார்கள். கல்வியாளர்களோ, ஆசிரியர்களோ படிக்க விருப்பம் இல்லாத மாணவர்களைக் கூட குறைந்தபட்சம் கல்வி நிலையங்களில் இருக்க வைத்து, ஒழுங்குபடுத்தி அவர்களை முன்னேற்ற வேண்டும் என பேசுகிறார்கள். ஆனால் சங்கி கும்பலோ இதற்கு நேரெதிராக, படிக்க விருப்பம் இல்லாதவர்கள், தகுதியற்றவர்கள் எனவும் அவர்கள் குலத்தொழிலை செய்ய வேண்டும் எனவும் பகிரங்கமாகப் பேசி வருகிறது. குலக்கல்வி இந்தப் புதிய வடிவத்தை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இப்படித்தான், குழந்தைத் தொழிலாளர் முறை தவறு எனக் கூறும் சட்டங்களை நடைமுறையில் ஒழித்துக் கட்டுகிறார்கள். ஐந்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைந்த, 10 வயது மாணவர்களும் குலத்தொழிலில் ஈடுபடலாம் என்றால், இவர்கள் சொல்ல வருவது என்ன? குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு சட்டம் சொல்லும் 14 வயது என்னும் விதிமுறையை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பது தானே. இது குழந்தைகள் மீது தொடுக்கப்படும் வன்முறை அல்லவா? இதனால்தான் இதைப் பாசிசக் கல்விக் கொள்கை என்கிறோம். படிப்பில் ஆர்வம் கட்டாத மாணவர்களைக் கூட அவர்களுக்கு பிடித்த துறையில் வளர்ப்பதே கல்வியின் அடிப்படை நோக்கம். அவர்களை பள்ளிக்கல்வி என்ற இந்தக் கட்டமைப்பில் வைத்துத்தான் ஒழுங்குபடுத்த முடியும். ஆனால் அந்தக் கட்டமைப்பை விட்டே தூக்கி எறிகிறார்கள் என்பதில் தான் பாசிச நடவடிக்கை அடங்கி உள்ளது.
இன்று வரை 19 மாநிலங்களில் இந்தக் கட்டாயத் தேர்ச்சி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியிலும் கூட மோடி அரசின் அறிவிப்புக்கு அடிபணிந்து விட்டனர். இதன் மூலம், இவர்களெல்லாம் நேரடியாக பாசிசக் கும்பலின் நடவடிக்கைக்கு ஒத்தூதுகிறார்கள்.
2019-ல் தமிழக அரசும் கூட கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்வதாக அரசாணை வெளியிட்டது. கடுமையான எதிர்ப்புகளின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இதை செயல்படுத்த மாட்டோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தற்போது அறிவித்துள்ளார். எனினும், தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக புதிய கல்விக் கொள்கையின் பல்வேறு கூறுகளையும் நடைமுறைப்படுத்திக் கொண்டே வருகிறது என்ற அபாயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, ஒன்றிய அரசின் கட்டாயத் தேர்ச்சி ரத்து அறிவிப்பை எமது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. இதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும், இதற்கு அடிப்படையாக உள்ள புதிய கல்விக்கொள்கை ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஜனநாயக – முற்போக்கு சக்திகளும் கல்வியாளர்களும் களமிறங்க வேண்டுமென அறைகூவி அழைக்கிறோம்…
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
9444836642.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram