17.02.2025

புதிய கல்விக்கொள்கையை ஏற்கும் வரை நிதி தர முடியாது என மிரட்டும்
மோடி அரசைப் பணிய வைக்க போர்க்களம் புகுவோம்!

கண்டன அறிக்கை

மிழ்நாட்டில் புயல், வெள்ளம் வந்து பேரழிவு ஏற்பட்டால் ஒன்றிய அரசு நிவாரண நிதி வழங்குவதில்லை. ஒன்றிய நிதிநிலையறிக்கையிலும் கூட தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வருகிறது.

இப்போது, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2023-24 ஆம் ஆண்டிற்கான 4-வது தவணை நிதி ரூ.249 கோடியும், 2024–25 ஆம் ஆண்டிற்கான நிதி ரூ.2,152 கோடியும் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படவில்லை.

புதிய கல்விக்கொள்கை அடிப்படையிலான பி.எம் ஸ்ரீ பள்ளித் திட்டம், மும்மொழிக் கொள்கை ஆகியவற்றை நடைமுறைப்படுத்தும் வரை இந்த நிதியை ஒதுக்க முடியாது என்கிறார் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான். மேலும், இந்தப் பிரச்சினையில் தமிழ்நாடு அரசு அரசியல் செய்வதாகவும், இங்குள்ளோர் பிளவுவாதிகள் என்றும் திமிராகப் பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஒத்தூதிக் கொண்டிருக்கின்றனர் பா.ஜ.க-வின் அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்ட தமிழினத் துரோகிகள்.

மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை, அவசரநிலைக் காலத்தில் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு சென்றதன் நோக்கமே, படிப்படியாக மாநில உரிமைகளை நசுக்குவது தான். கல்வித்துறையில் இருவருக்கும் சம உரிமை உள்ளது என்று பேசுவதெல்லாம் காலாவதியாகிவிட்டது என்பதை ஒன்றிய அமைச்சரே வெளிப்படையாக ஒப்புக்கொண்டு விட்டார். மத்திய அரசு சட்டம் கொண்டு வரும்; சட்டத்தை மாநிலங்கள் ஏற்றே ஆக வேண்டும்; ஏற்க மறுப்பது சட்டவிரோதம் என பகிரங்கமாக அறிவிக்கிறார்.

அதாவது, மாநிலங்களுக்கான உரிமை என ஏதுமில்லை என்பதே இதன் சாராம்சம்.

அனைவருக்கும் கல்வித் திட்டம் (சர்வ சிக்‌ஷா அபியான்) என 2001 ஆம் ஆண்டில் துவங்கி, அதை ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் (சமக்ர சிக்‌ஷா அபியான்) என 2018 ஆம் ஆண்டு மாற்றியதே, பள்ளிக் கல்வி மீதான மாநில அரசின் உரிமைகளைப் படிப்படியாகப் பறிப்பதற்குத்தான் என இப்போது அம்பலமாகி விட்டது. இது மட்டுமின்றி, புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதாகக் கூறிக் கொண்டே, அதன் பல்வேறு அம்சங்களை சொந்தத் திட்டங்கள் போல அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு. இத்திட்டங்கள் எல்லாம் கல்வித்துறையில், கார்ப்பரேட்மயம் – டிஜிட்டல்மயம் ஆக்கிரமிக்கவே வழிவகுக்கும் என்பதைத் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகிறோம்.

எனவே, இத்தகைய திட்டங்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும். ஒன்றிய அரசு பங்களிப்பு என்று கூறிக்கொண்டு, புதிய கல்விக்கொள்கையைத் திணிக்கும் சமக்ர சிக்‌ஷா அபியான் உள்ளிட்ட அனைத்தையும் புறக்கணிக்க வேண்டும். மாநில உரிமையை நிலைநாட்ட, ஒத்த கண்ணோட்டம் கொண்ட பிற மாநில அரசுகளோடு இணைந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

இவ்வளவு காலமும் “மும்மொழிக் கொள்கை நல்லது, இந்தி படித்தால் என்ன பிரச்சினை?” என வாயாடிக் கொண்டிருந்த பாசிச சக்திகள், நிதியை ஒதுக்க முடியாது என்று மறுத்திருப்பதன் மூலம் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இனிமேலும், ஒன்றிய அரசிடம் மனு கொடுத்து, அறிக்கை விட்டு மட்டுமே இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியாது என்ற நிலை உருவாகி விட்டது. பதிலுக்குப் பதில் நடவடிக்கைகளில் இறங்குவதே பாசிச சக்திகளுக்குப் பாடம் புகட்டும்.

கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றும் வரை, புதிய கல்விக்கொள்கையை ரத்து செய்யும் வரை, ஒன்றிய அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் மின்சாரத்தைத் துண்டிப்பது, தண்ணீர் விநியோகத்தைத் தடுப்பதன் மூலம் ஒன்றிய அரசின் செயல்பாட்டை மாநிலங்கள் முடக்க வேண்டும்.

ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு ஆதரவாகவும், அந்தந்த மாநில மக்களின் உரிமைகளுக்கு எதிராகவும் பேசி வரும் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி கும்பலின் அலுவலகங்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட வேண்டும்.

புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கும், யூஜிசி வழியே மோடி கும்பல் நடத்தும் தாக்குதலை எதிர்க்கும் அனைத்து மாநில அரசுகளும், ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகளும், மாணவர்களும் – ஆசிரியர்கள் – பேராசிரியர்கள் – கல்வியாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து போராட்டக்களத்தில் இறங்க வேண்டும்.

இப்படிப்பட்ட உறுதியான போராட்டங்கள் மட்டுமே பாசிச கும்பலை பணிய வைக்கும்.

இப்போது இல்லாவிட்டால் எப்போது போராடுவது?

கல்வி உரிமை மீட்கக் களத்தில் இறங்குவோம்!

ஒன்றிய அரசின் மக்கள் விரோதத் திட்டங்களை முறியடிப்போம்!


மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
9444836642.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க