Sunday, September 25, 2022
முகப்பு செய்தி இந்தியா நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு பாதிக்கப்படும் தொழிலாளர்கள் !

நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு பாதிக்கப்படும் தொழிலாளர்கள் !

எந்த திட்டமிடலும் இன்றி திடீரென்று அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் விளைவாக கூலித் தொழிலாளர்கள் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

-

கொரானா வைரஸ் தொற்றில் இருந்து காத்துக் கொள்ள அரசு அறிவித்திருந்திருந்த முதற்கட்ட ஊரடங்கு (லாக் டவுன்) ஏப்ரல் 14ம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து அன்று காலை உரையாற்றிய பிரதமர் மோடி ஊரடங்கு நிலை மே மாதம் 3ம் தேதி வரை நீடிக்கும் என அறிவித்தார். நீட்டிப்புக்கான அறிவிப்பு கடைசி நாளன்று வெளியிடப்பட்டதால் அதைக் குறித்து ஏராளமான வதந்திகள் பரவ ஆரம்பித்திருந்தன. பலரும், ஓரிரு நாட்கள் இடைவெளி விட்ட பின்னரே மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என நம்பினர். குறிப்பாக இடம்பெயர் தொழிலாளர்கள் அவ்வாறு நம்பினர்.

இந்நிலையில், ஏப்ரல் 14ம் தேதி இரயில்கள் இயக்கப்படும் என பரவிய வதந்தியை நம்பிய வடமாநிலத் தொழிலாளர்கள் மும்பை பாந்த்ரா இரயில் நிலையத்தில் ஆயிரக் கணக்கில் குவிந்துள்ளனர். பாந்த்ரா இரயில் நிலையத்தை அடுத்துள்ள சேரிப் பகுதிகளில் தங்கியுள்ள பீகார், உத்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் மதியம் 3:45 மணி அளவில் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேறி இரயில் நிலையம் நோக்கி விரைந்துள்ளனர். நான்கு மணிக்குள் சுமார் 1500 பேர் கூடியுள்ளனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தி கலைத்துள்ளனர்.

ஊரே முடங்கிக் கிடக்கும் நிலையில் தங்களுக்கு கூலி வேலை கிடைக்க வழியில்லாததால், அன்றாட செலவுகள் மற்றும் வீட்டு வாடகை கொடுக்க முடியாத நிலை இருப்பதால், தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல அரசு அனுமதிக்க வேண்டும் என்பது தொழிலாளர்களின் கோரிக்கை. மும்பையின் சேரிப் பகுதிகளில் இது போன்ற இடம் பெயர் தொழிலாளர்கள் அப்பகுதிகளின் கட்டுப்பாட்டை “குத்தகைக்கு” எடுத்துள்ள உள்ளூர் தாதாக்கள் வாடகைக்கு விட்டுள்ள புறாக்கூண்டுகளை ஒத்த தகரக் கொட்டடிகளில் தான் தங்கி உள்ளனர். வாடகை கொடுக்க முடியாதவர்களை ரவுடிகள் கவனிக்கும் விதமே தனி என்பதால் தொழிலாளர்களின் அச்சத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

அதே நாளில் மும்ப்ராவில் உள்ள ரஷீத் காம்பவுண்ட் பகுதியில் சுமார் 300 இடம் பெயர் வடமாநிலத் தொழிலாளர்கள் கூடி தங்களுக்கு உணவும் அத்தியாவசியப் பொருட்களும் வழங்க வேண்டும் என போராடியுள்ளனர். கூட்டம் அதிகரிப்பதைக் கண்ட போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்துள்ளனர்.

கடந்த வாரம் குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள வாரச்சா பகுதியில் சுமார் 1000 வடமாநில தொழிலாளர்கள் உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளைக் கோரி போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டத்தின் போது மேட்டுக்குடியினர் வசிக்கும் பரோடா ப்ரெஸ்டீஜ் பகுதிக்குச் செல்லும் சாலைகளை மறித்துள்ளனர். அதே நகரின் பந்தேஸாரா மற்றும் லஸ்கானா பகுதிகளிலும் வடமாநிலத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இப்பகுதிகளில் போராட்டத்தை ஒடுக்கச் சென்ற போலிசார் மீது கல்வீச்சும் நடந்துள்ளன.

படிக்க:
♦ கொரோனா – கருத்துப்படங்கள் !
♦ தன்னார்வலர்களுக்கான தடையை உடனே நீக்கு ! தமிழக தலைமை செயலாளருக்கு PRPC யின் மனு !

ராஜஸ்தான் (ஜெய்சல்மீர்), ஆந்திரா (சிறீகாகுளம்) போன்ற பகுதிகளில் வடமாநிலத் தொழிலாளர்கள் உணவும் அத்தியாவசியப் பொருட்களையும் கேட்டு கிடைக்காத நிலையில் கால் நடையாகவே தங்கள் ஊர்களுக்கு செல்ல முயன்றுள்ளனர். இவர்களில் பலருக்கு ஊருக்குச் செல்லும் சாலைகள் பற்றியோ, கூகிள் மேப் போன்ற செயலிகளை பாவிக்கும் அளவுக்குப் படிப்பறிவோ இல்லாததால், எந்த இலக்கும் இன்றி வட திசை நோக்கிச் செல்லும் இரயில் தண்டவாளங்களில் நடந்து செல்ல முயன்றுள்ளனர். சில வடமாநிலத் தொழிலாளர்கள் தங்களிடம் உள்ள இருசக்கர வாகனத்திலோ சைக்கிளிலோ பயணித்து எப்படியாவது சொந்த ஊருக்குப் போய் விட முயன்று வருகின்றனர்.

எந்த திட்டமிடலும் இன்றி திடீரென்று அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் விளைவாக கூலித் தொழிலாளர்கள் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு துயரங்களை அனுபவித்து வருகின்றனர் – இதில் வடமாநிலங்களைச் சேர்ந்த இடம் பெயர் கூலித் தொழிலாளர்களின் நிலையோ எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு உள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல், இவர்களை போலீசு குண்டாந்தடிகளைக் காட்டி மிரட்டி அடக்க முடியாது – பசியின் வலிமைக்கு முன் குண்டாந்தடிகள் தாக்குப் பிடிக்க முடியாது. அந்த நிலையை நோக்கி மெல்ல மெல்ல நாடு நகர்ந்து வருவதையே மேற்கண்ட செய்திகள் அறிவிக்கின்றன.

வெளிநாட்டிலிருந்து மேட்டுக்குடியினரின் தயவால் இந்தியாவுக்கு இறக்குமதியான கொரோனா வைரசின் மூலம் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது உழைக்கும் மக்களும் சிறுபான்மையின மக்களும் தான். ஆனால் அந்த பாதிப்புக்கு இது வரை வைரஸ் தொற்று காரணமல்ல – அரசின் அலட்சியமும், ஏழை மக்களை கிள்ளுக்கீரையாக நினைக்கும் திமிரும் தான் காரணம்.


– தமிழண்ணல்
செய்தி ஆதாரம் :  டைம்ஸ் ஆஃப் இந்தியா, எக்கனாமிக் டைம்ஸ் . 

  1. வினவு இணையதளம் மீண்டும் இயங்கத் துவங்கியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தோழர்களே. முன்பு போல பட்டையை கிளப்புங்கள். ஒரு சின்ன வேண்டுகோள் முன்பெல்லாம் ஒரு கட்டுரையை எத்தனை நபர்கள் படிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்கான வசதி வினவில் இருந்தது. ஆனால் சமீபமாக அது ஏனோ காணவில்லை. எத்தனை லட்சம் பேருக்கு அந்த கட்டுரை பிரச்சாரமாக போய் சேர்ந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள அது தான் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தது. Anyway Good Come Back !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க