♦ தன்னார்வலர்களுக்கான தடையை உடனே நீக்கு!
♦ அடித்தட்டு மக்கள், கூலி தொழிலாளிகள், வெளி மாநில தொழிலாளிகளின் உயிரைக் காப்பாற்று!!
***
நான் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன். மேலும், மக்கள் கோரிக்கைகளுக்காக சட்டரீதியாக உதவி செய்யும், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் எனும் அமைப்பின் சென்னை கிளை செயலாளராகவும் செயல்பட்டு வருகின்றேன்.
தமிழக அரசு கடந்த 24.03.2020 முதல் 14.04.2020 வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து, தற்போது 30.04.2020 வரை நீட்டித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் ரூபாய்.1000 உதவித்தொகை, அம்மா உணவகங்கள், பொது உணவகங்கள் உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
ஆனால் அத்திட்டங்கள் குடும்ப அட்டை இல்லாதவர்கள், நடைபாதை வாசிகள், மாற்றுத்திறனாளிகள், வெளிமாநில தொழிலாளர்கள் (குறிப்பாக Migarant Workers Act -ன்படி பதிவு செய்யாதவர்கள்), ஆதரவற்றவர்கள், வயது முதிர்ந்தவர்கள் போன்ற பிரிவினருக்கு முறையாக சென்று சேருவதில்லை.
தமிழக அரசு (தமிழக சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம்) 24.03.2020 அன்று கொரோனா நோய்த்தடுப்பு மற்றும் உதவிப்பணிகளில் ஈடுபட தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனடிப்படையில் இன்றைய தேதிவரை தன்னார்வலர்கள் அரசு இணையதளத்தில் (stopcorona.tn.gov.in) பதிவுசெய்து வருகின்றனர். ஆனால், நாங்கள் அதற்கு முந்தைய நாளான 23.04.2020 அன்றே சென்னை மாநகராட்சிக்கு நேரில் சென்று அதிகாரிகளிடம் பேசி தன்னார்வலர்களாக எங்களை பதிவுசெய்திருந்தோம். மேலும் கூடுதலாக, சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசிடம் இணைய வழியாகவும் பதிவுசெய்திருந்தோம். ஆனால், இது நாள்வரை அரசிடமிருந்து எந்த ஒரு முறையான பதிலும் வரவில்லை. கட்டுப்பாட்டு அறைக்கும், மண்டல அதிகாரி திரு.காமராஜ் (மண்டலம் 4 – 9445190004) அவர்களிடம் நேரில் சென்றபோதும், தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோதும் முறையான பதில் இல்லை.
தன்னார்வலர்களாக பதிவு செய்பவர்களுக்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறதென்ற தகவலோ, அனுமதி வழங்கப்பட்ட தன்னார்வலர்கள் – அமைப்புகளின் பட்டியலோ இதுவரை குறிப்பிடப்படவில்லை.
இத்தகைய நிலைமையை கருத்தில்கொண்டு 27.03.2020 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நாங்கள் பொதுநல வழக்கு (W.P.No.7414/2020) தொடுத்திருந்தோம். அவ்வழக்கில் “தனியார் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அறிவியல் மாணவர்கள் கொண்ட தன்னார்வு குழுக்களை உருவாக்கி, பயிற்சியளித்து வீடு தோறும் COVID-19 தொற்றுநோய் தடுப்பு, மருத்துவ பரிசோதனை, உணவுப்பொருட்கள் வழங்கல் மற்றும் விழிப்புணர்வு போன்ற பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்” என்ற இடைமனுவினையும் தாக்கல் செய்திருந்தோம் (W.M.P.No. 8880/2020). இப்பணிகளை மேற்கொள்ள பேரிடர் மேலாண்மை சட்டம் – 2005 ன்படி மாவட்ட வாரியாக தன்னார்வலர்களை உள்ளடக்கிய சிறப்பு “செயல்பாட்டு குழுக்களை” அமைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தோம். நாங்கள் வைத்த கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று நடைமுறைப்படுத்த பரிந்துரைப்பதாக கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் திரு.அரவிந்த் பாண்டியன் அவர்கள் நீதிபதிகள் முன்பாக தெரிவித்திருந்தார்.
படிக்க:
♦ கொரொனா நிவாரணப் பொருட்கள் : ஆர்.எஸ்.எஸ்-க்கு அனுமதி மற்ற கட்சிகளுக்கு தடையா ?
♦ கொரொனா ஊரடங்கு : 1700 கி.மீ. சைக்கில் பயணம் மேற்கொண்ட ஒடிசா இளைஞர் !
27.03.2020 அன்று தன்னார்வலர்கள் – தொண்டு நிறுவனங்களின் நிவாரணப்பணிகளை ஒருங்கிணைக்க திரு.ச.கிருஷ்ணன் இ.ஆ.ப, டாக்டர். ஜெ.இரதாகிருஷ்ணன் இ.ஆ.ப, திரு.வே.விஷ்ணு இ.ஆ.ப ஆகியோர் அடங்கிய குழு (9 வது குழு – செய்தி அறிக்கை. 235) அமைக்கப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து 27.03.2020 அன்றைய அறிக்கையில் (செய்தி அறிக்கை. 234)” ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்ய விரும்பும் நபர்கள் சமைத்த உணவை விநியோகிக்க வேண்டாம். பொருட்களை சென்னையில் சென்னை மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர்களிடமும் வழங்கலாம். மாவட்ட நிர்வாகம், இவற்றுக்கென ஒரு தனிப்பிரிவை ஏற்படுத்தியுள்ளது. அந்தப்பிரிவை தொடர்பு கொண்டு பொருட்களை வழங்கலாம்” என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், அந்தந்த மாவட்ட நிர்வாக தனிப்பிரிவு தொடர்பு எண்கள் கொடுக்கப்படவில்லை. மேலும், உதவிப்பொருட்கள் கொண்டு சேர்க்கும் முறைகுறித்தும் தெளிவாக விளக்கப்படவில்லை.
உச்சநீதிமன்றமும் 31.03.2020 அன்று பிறப்பித்த உத்தரவில் தன்னார்வலர்களை உட்படுத்திட பரிந்துரைத்திருந்தது.
இந்தநிலையில் தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் அரசின் நலத்திட்டங்கள், செயல்பாடுகள் சென்றடையாத மக்கள் இருப்பதைக்கண்டு பல தன்னார்வ குழுக்கள் உரிய பாதுகாப்போடு உணவு பொருட்கள் மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்கும் பணிகளில் ஈடுபடத்துவங்கினர்.
அந்த வகையில் நாங்களும் எங்கள் நண்பர்களோடு ஒன்றிணைந்து சென்னை (காசிமேடு, வியாசர்பாடி, முகப்பேர், நொளம்பூர், ஓசாங்குளம்,
சேத்துப்பட்டு, முகப்பேர் கிழக்கு, முகப்பேர் மேற்கு), மதுரை, காஞ்சிபுரம், கடலூர், விருதாச்சலம், நாகை (சீர்காழி), புதுச்சேரி, திருச்சி, நெல்லை, திருப்பூர் (கரைப்புதூர் கிராமம்), தர்மபுரி என தமிழகம் முழுதும் பல்வேறு மாவட்டங்களில் முகக்கவசங்கள், கையுறைகள், Sanitizer போன்ற பாதுகாப்பு உபகரணங்களோடும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தும் நிவாரண பொருட்களை அர்ப்பணிப்போடு வழங்கி வருகிறோம். கூடுதலாக கையுறை, முககவசம், கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்களையும் வழங்கி வருகிறோம்.
அதிலும், நாங்கள் குறிப்பாக அரசின் பல அறிவிப்புகளில் புறக்கணிக்கப்பட்ட அல்லது அரசின் நடைமுறைப்படுத்துதலில் உள்ள குறைபாடுகளால் நிவாரணங்கள் சென்றடையாத சர்க்கஸ் தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், காவலாளிகள் (Wachman), ஆட்டோ ஓட்டுநர்கள், சொந்த ஊர் திரும்பமுடியாத தொழிலாளர்கள், பதிவுசெய்யப்படாத கட்டிடத்தொழிலாளர்கள் & வெளிமாநில தொழிலாளர்கள், நடைபாதையில் வசிப்பவர்கள் என்று பயனாளிகளை கண்டறிந்து கடந்த இருபதுநாட்களாக தமிழகம் முழுவதும் 3000 குடும்பங்களுக்குமேல் உணவுப்பொருட்கள் மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுவருகிறது. வடசென்னையில் (காசிமேடு, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, எர்ணாவூர்)மட்டும் இதுவரை 1000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
எங்களைபோன்றே தமிழகம் முழுதும் தன்னார்வலர்கள் – குழுக்கள், அரசு சென்றடையாத பல இடங்களிலுள்ள மக்களை கண்டறிந்து அவர்களது உணவுத்தேவையை பூர்த்தி செய்துவருகின்றனர். இத்தகைய தன்னார்வலர்களின் உன்னதமான செயல்பாடுகள்தான் இன்றளவும் பெரும் பாதிப்புகளிலிருந்து தமிழக மக்களை பாதுகாத்துவருகின்றது. ஆனால் இன்னுமும் எந்தவித உதவியும் சென்றடையாத மக்கள் வாழும் பகுதிகளும் இருக்கவேசெய்கிறது.
படிக்க:
♦ “கொரானா ஜிஹாத்” சங்கிகளின் பொய்ப் பிரச்சாரம் – பஞ்சாப் குஜ்ஜார் பழங்குடியின முசுலீம்கள் மீது தாக்குதல் !
♦ அமெரிக்கா : கொரோனாவுக்கு பலியாகும் கருப்பின ஏழை மக்கள் !
இந்நிலையில் (12.04.2020) தமிழக அரசு “சில நபர்களும், சில அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், ஊரடங்கு உத்தரவுக்கு புறம்பாக” செயல்படுவதாகவும் மேலும் அத்தகைய தன்னார்வலர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும் வெளியிட்டிருந்த அறிவிப்பானது (அரசு செய்தி அறிக்கை.265) தமிழக அளவில் பெரும் விவாதப்பொருளானது.
அதன்பிறகு, தமிழக அரசனாது (13.04.2020) “தன்னார்வலர்கள் உதவிசெய்ய தடை இல்லை எனவும், மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியோடு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஈடுபடலாம்” எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் “2500-க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களும், 58,000 -க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் பதிவு செய்துள்ளதாகவும், சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி செயல்படதான் அரசு கேட்டுக்கொண்டுள்ளதே தவிர, யாருக்கும் தடை விதிக்கவில்லை. மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து செயல்பட்டு, தேவைப்படும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான முறையில் நிவாரணம் சென்றடைவதை உறுதி செய்யதான் அரசு வலியுறுத்தியதே தவிர, தடை விதிக்கவில்லை.” எனவும் தனது அறிவிப்பில் (செய்தி அறிக்கை.266) தெரிவித்துள்ளது.
குறிப்பாக, தமிழக முதல்வரே பேரிடர் நிவாரணப்பணிகளில் தன்னார்வலர்களின் பங்கினை வெகுவாக பாராட்டியுள்ளார்.
காய்கறி கடைகள், மளிகை கடைகள் திறக்கவேண்டுமென்பது எவ்வளவு அவசியமானதோ அதேபோன்று தன்னார்வலர்களின் நிவாரணப்பணியும் அத்தியாவசியமானதாகும்.
இதனை உணர்ந்து தமிழக அரசானது தன்னார்வலர்கள் ஈடுபடுவதை தடைசெய்வதை கைவிட்டு, ஊக்கப்படுத்த வேண்டும். மேலும், எங்களது மேற்கண்ட வழக்கு (W.P.No.7414/2020) கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், நிவாரணப்பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு அரசு அதிகாரிகளை கொண்டு பயிற்சி வழங்க வேண்டும்.
கட்டுப்பாட்டு அறையினை உருவாக்கி, தன்னார்வலர்கள் தாங்கள் நிவாரணப்பணி செய்யவிருக்கும் இடம், நேரம், பொருட்கள் மற்றும் இதர அவசியமான முன் அறிவிப்பினை (அ) தகவலை வழங்குவதற்கு பொது தொலைபேசி எண்ணை வழங்கவேண்டும்.
நிவாரணப்பணிகள் நடக்கும் இடங்களை மேற்பார்வையிட்டு, பாதுகாப்பான முறையில் நலஉதவிகள் நிறைவேறுவதை உத்திரவாதப்படுத்த வார்டு அளவில் அதிகாரிகளை நியமிக்கவேண்டும்.
இவ்வாறு மக்களுக்கான நிவாரணப்பணியில் அரசு தன்னார்வலர்களை அங்கீகரித்து அவர்களையும் இணைத்து செயல்பட்டால்தான் இந்த பேரிடரிலிருந்து நாம் மீண்டுவர முடியுமென தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி,
வழக்கறிஞர் சு.ஜிம்ராஜ் மில்ட்டன்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
சென்னை கிளை செயலாளர்
தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தொடர்புக்கு : 99623 66320.