“எங்களை ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டோம். அதற்கு ஆவேசமாக திட்டித் தீர்த்தபடி அடித்துக் கொண்டே இருந்தார்கள்” என்கிறார் சுராஜுத்தீன். பஞ்சாப் – ஹிமாச்சல் எல்லைப் பகுதியில் உள்ள ஹோஷியார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த டல்வாரா பகுதியைச் சேர்ந்த சுராஜுத்தீன் குஜ்ஜார் பழங்குடியின முசுலீம். பாரம்பரியமாக மாடு மேய்ப்பது, பால் கறந்து விற்பது இவர்களின் தொழில். பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய பிரிவினரான இவர்கள் அதிக வெளியுலக தொடர்பு இல்லாதவர்கள். இவர்கள் கிராமத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இந்துக்களால் தாக்கக்கப்பட்டு பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் உள்ளிட்ட சுமார் 80 இசுலாமியர்கள் உயிருக்கு பயந்து தற்போது சுவான் நதியின் கரையில் மறைந்துள்ளனர்.

தில்லியில் நடந்த தப்லீகி ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கொரானா வைரஸ் தொற்று இருப்பது குறித்த செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் வாட்சப் பல்கலைக்கழகங்களை நடத்தி வரும் ஆர்.எஸ்.எஸ் சங்கிகள் கொரானா வைரசுக்கு குல்லா போட்டு சுன்னத் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் இசுலாமியர்கள் திட்டமிட்டு நோயைப் பரப்பிக் கொண்டிருப்பதாகவும், இது “கொரானா ஜிஹாத்” என்றும் பலவாறான அவதூறுகளை பரப்பிக் கொண்டுள்ளனர். படிப்பறிவில்லாத மாட்டுவளைய மாநிலங்களைச் சேர்ந்த ‘இந்துக்கள்’ இந்த பிரச்சாரத்திற்கு பலியானதன் விளைவாகத் தான் சுராஜுத்தீனும், அவருடன் சுவான் நதிக்கரையில் தஞ்சம் புகுந்துள்ள அப்பாவி இசுலாமியர்களும் தாக்கப்பட்டனர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

“எங்களில் யாரும் இது வரை தில்லியைப் பார்த்ததே கிடையாது. அது எப்படி இருக்கும் என்றும் தெரியாது. ஆனால், இங்கே இருப்பவர்கள் எங்களைக் கொல்லும் நோக்கத்தோடு அடித்து துன்புறுத்தினர். அரசு நிர்வாகத்திடமிருந்தும் போதிய உதவி கிடைக்கவில்லை” என்கிறார் ஷஃபி முகமது. தாக்குதலுக்கு பயந்து சுமார் 8 கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டவர்கள் சுமார் மூன்று நாட்களாக பசி பட்டினியோடும் அச்சத்தோடு மறைந்து வாழ்ந்துள்ளனர். சுராஜுத்தீனின் 80 வயது தாயாருக்கு மருந்து வாங்கச் சென்ற போது மருந்துக்கடையில் “நோயைப் பரப்ப வந்தீர்களா?” எனக் கேட்டு விரட்டியடித்துள்ளனர்.

படிக்க:
♦ ஏழை இஸ்லாமியர்கள் தட்டில் மண்ணை அள்ளி போடும் வதந்திகள் !
♦ கொரொனா நிவாரணப் பொருட்கள் : ஆர்.எஸ்.எஸ்-க்கு அனுமதி மற்ற கட்சிகளுக்கு தடையா ?

அந்தக் குழுவில் இருந்த இருவர் தங்கள் கைகளில் ஆதார் அட்டையை உயர்த்திக் காட்டி “இதை வைத்திருந்தும் கூட எந்த நன்மையும் விளையவில்லையே” என்று அப்பாவித்தனமாக கேட்கிறார்கள். சுராஜுக்கு சொந்தமான ஆறு பசுமாடுகள் செத்து விட்டன. “அதில் மூன்றை நேற்றே புதைத்து விட்டேன். இதோ இன்னும் மூன்று மாடுகள் என் முன்னே செத்துக் கிடக்கின்றன” என்கிறார் சுராஜ்.

குஜ்ஜார் பழங்குடியின முசுலீம்களின் ஒரே தொழில் மாடு மேய்ப்பதும், பால் கறந்து விற்பதும் தான். ஆனால், அக்கம் பக்கத்து கிராமங்களைச் சேர்ந்தவர்களோ இப்போது இவர்களிடம் பால் வாங்குவதை நிறுத்தி விட்டனர். தகவல் அறிந்து பத்திரிகையாளர்கள் ஹோஷியாபூர் போலீசு துணை கமிசனர் அப்னீத் ராவத்தை தொடர்பு கொண்ட போது, குஜ்ஜார் முசுலீம்கள் தாக்கப்படுவது குறித்து தனக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், மூன்று நாட்களாக பசி பட்டினியில் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களும் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி மளிகைப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதை பத்திரிகையாளர்கள் உறுதி செய்தனர்.

பத்திரிக்கையாளர்களின் முயற்சியால் கிடைக்கப்பெற்ற மளிகைப் பொருட்கள்.

எனினும், கிராமங்கள் மற்றும் உள்ளூர் அளவில் குஜ்ஜார் முசுலீம்கள் தாக்கப்படுவதும் விரட்டப்படுவதும் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. அவ்வாறான தாக்குதல்களுக்கு எதிராக உள்ளூர் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. குஜ்ஜார் முசுலீம்கள் தாக்கப்படுவது தனக்கு தெரியும் என்று மாவட்ட கமிஷனர் தெரிவித்தாலும், அந்த பகுதியின் போலீசு துணை சூப்பிரெண்டு கவுரவ் கார்க் தனக்கு அப்படி எந்த புகாரும் வரவில்லை என்கிறார்.

கவுரவ் கார்க்கிடம் குஜ்ஜார் முசுலீம்கள் பால் விற்பதை உள்ளூர்வாசிகள் தடுப்பது குறித்து கேட்ட போது, “மக்களுக்கு அவர்களிடம் பால் வாங்குவதில் ஏதாவது அச்சம் இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார். அது என்ன அச்சம் என்று கேட்டதற்கு “அதை நான் எப்படி சொல்ல முடியும்?” என அலட்சியமாக பதில் சொல்லி இருக்கிறார். மேலும் அத்தியாவசிய பொருளான பால் விற்பனையைத் தடுப்பவர்கள் மீது என்ன நடவடிக்கை என்று கேட்டதற்கும் அவரிடம் பதில் இல்லை.

இப்படி ஒரு புறம் அரசு இயந்திரத்தின் மௌன ஒப்புதலோடு இசுலாமியர்கள் தாக்கப்படும் நிலையில் – கீழ்மட்ட அளவில் நேரடியாகவே வெறுப்புப் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. ஹோஷியாபூரின் நௌஷேரா ஷிம்லி, கோட்டா, வாஸிரியா, சார்யானா, சிப்போ சாக் போன்ற பகுதிகளில் உள்ள கோவில் மற்றும் குருத்வாராக்களின் ஒலிபெருக்கிகளில் “இசுலாமியர்களால் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து” குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கிராமத்தின் சாலைகளில் தடுப்பரண் அமைத்து அப்பகுதி இளைஞர்கள் கைகளில் கட்டை கம்புகளுடன் ரோந்து சுற்றி வருகின்றனர். சந்தேகத்துக்கு இடமானவர்கள் மற்றும் முசுலீம்களை குறிவைத்து தாக்குகின்றனர்.

உலகெங்கும் கொரோனா வைரசை எதிர்த்து முறியடிக்க சுகாதாரப் பணியாளர்களும், செவிலியர்களும், மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் போராடிக் கொண்டிருக்கும் போது, இந்தியாவில் அதற்கு மதச் சாயம் பூசும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் சங்கிகள். தமிழகத்திலும் இவ்வாறான ஒரு நிலையைத் தோற்றுவிக்கும் முயற்சியில் வாட்சப் செயலியில் ஏராளமான வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த மாரிதாஸ் என்கிற பொறுக்கி யூட்யூப் இணையதளத்தில் இசுலாமியர்களுக்கு எதிராக விசத்தைக் கக்கி வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் – எனினும், இது வரை உறுதியான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

“நோய்க்கு மதம் கிடையாது”, “நெருக்கடியான தருணங்களில் அரசியல் பேசக் கூடாது” – இது போன்ற பிலாக்கணங்களில் ஏதாவது பொருள் உள்ளதா என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறோம்.

– தமிழண்ணல்


செய்தி ஆதாரம் : த வயர்.

1 மறுமொழி

  1. தமிழகமும் மாட்டு வலைய மாநிலத்திற்குள் வந்துவிட்டது போலத்தான் தோன்றுகிறது. காரணம் இங்குள்ள மிகச்சாதாரண மக்களைக்கூட, தமிழ்நாட்டில் கரோனா பரவலுக்கு இஸ்லாமியர்கள்தான் காரணம் என்று நம்ப வைக்கும் அளவுக்கு சங்கிகளின் பொய் பிரச்சாரம் தொடர்ந்து நடந்து வருகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க