போலிச் செய்திகளை வைத்து ஏழை இஸ்லாமியர்கள் தட்டில் மண்ணை அள்ளி போடாதீர்கள் !

சம்பவம் 1 – மூன்று முஸ்லிம் மீனவர்களை 10-15 பேர் கொண்ட குழு ஒன்று சூழ்ந்து கொண்டு முற்றுகை இடுகிறது. மூன்று மீனவர்களும் பயத்தோடு கைகூப்பி கெஞ்சுகிறார்கள். ‘இவர்களைத் தொடாதீர்கள்; இவர்கள்தான் கொரோனாவைப் பரப்புகிறார்கள்’ என்று சுற்றியிருக்கும் கும்பல் உள்ளூர் மொழியில் கூச்சலிடுகிறது. இந்த சம்பவத்தின் வீடியோவும் வெளிவந்துள்ளது, அதில் கிராமவாசிகளின் கைகளில் கம்புகளும், தடிகளும் உள்ளன. இந்த மீனவர்கள் கைகூப்பி மன்றாடி அழுவதை பார்க்க முடிகிறது. – இது கர்நாடகாவில் நடைபெற்ற சம்பவம்.

சம்பவம் 2 – ‘ஜாவேத் பாய், இங்கிருந்து கடையை எடுத்துவிடுங்கள். இங்கே கடை போட வேண்டாம். உங்களைப் போன்றவர்களிடமிருந்து இந்த நோய் பரவுகிறது. இங்கிருந்து உங்கள் கடையை எடுத்துவிடுங்கள்.’ – இது உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹல்த்வானியில் நடைபெற்ற சம்பவம்.

சம்பவம் 3 – பெங்களூருவின் அமருதாலியில் திங்கட்கிழமையன்று ஜரின் தாஜ், தனது மகன் தப்ரெஸுடன் குடியிருப்புப் பகுதிகளில் ரேஷன் பொருட்களை விநியோகித்துக் கொண்டிருந்தார். சிலர் அவர் விநியோகம் செய்வதை தடுத்தனர். “இந்துக்களுக்கு உணவு விநியோகிக்க வேண்டாம், உங்கள் மக்களுக்கு (முஸ்லிம்களுக்கு) மட்டும் கொடுங்கள் என்று சுமார் 20 பேர் எங்களிடம் சொன்னார்கள். நாங்கள் அவர்களுடன் வாக்குவாதம் செய்யவில்லை. அருகிலுள்ள வேறொரு காலனிக்குச் சென்றுவிட்டோம். இதற்குப் பிறகு, கூட்டம் வந்து எங்களைத் தாக்கியது” என்கிறார் தப்ரேஸ். அவரது வலது கையில் மூன்று தையல்கள் போடப்பட்டுள்ளன. தலையிலும் சில தையல்கள் போடப்பட்டுள்ளன.

தப்லிக் ஜமாத்தை சேர்ந்த சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக செய்திகள் வெளி வந்ததிலிருந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏழை முஸ்லிம்களை குறிவைத்து பல சம்பவங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன.

தில்லியின் தப்லிக் ஜமாத்தின் மார்க்கஸில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற 8,000 பேரால் இந்த வைரஸ் நிச்சயமாக பரவியுள்ளது. ஆனால், மார்கஸில் இருந்து வந்தவர்களையும் மற்ற கோடிக் கணக்கான முஸ்லிம்களையும், மக்கள் பிரித்துப் பார்ப்பதில்லை.

கோவிட் -19 என்பது எந்தவொரு மதம், பாலினம் மற்றும் இனம் ஆகியவற்றைத் தாண்டிய ஒரு தொற்றுநோய். தப்லிக் ஜமாத் கூட்டம் நடைபெற்ற பிறகு தான் கோவிட் -19 நோய்த்தொற்று நாட்டில் வேகமாக அதிகரித்தது என்பதும் உண்மைதான். ஆனால் இப்போது சாமானிய மக்களின் கோபமானது ஜமாத்துடன் எந்த தொடர்பும் இல்லாத இஸ்லாமிய மக்கள் மீதும் திரும்பியிருக்கிறது.

படிக்க:
♦ கொரோனா – கருத்துப்படங்கள் !
♦ கொரொனா நிவாரணப் பொருட்கள் : ஆர்.எஸ்.எஸ்-க்கு அனுமதி மற்ற கட்சிகளுக்கு தடையா ?

மதம் தொடர்பான ஒரு அமைப்பின் தவறின் காரணமாக கோவிட் -19 நோய்த்தொற்று பரவிய முதல் நாடு இந்தியா அல்ல. தென் கொரியாவின் டேகு நகரில் உள்ள சின்ஜியோன்ஜி தேவாலயத்தின் தலைவர் லீமைன், நான்காயிரம் பேருக்கு கொரோனா பரவுவதற்கு மூலக் காரணமாக இருந்துள்ளார். அதாவது தென் கொரியாவின் மொத்த கொரொனா பாதிப்பில் 60 சதவீதம் இது. ஆனால், அதை யாரும் மதத்தோடு தொடர்புபடுத்தவில்லை.

கொரோனாவை மதத்துடன் இணைக்கும் இதுபோன்ற செயல்கள் இயல்பாக இந்தியாவில் தொடங்கவில்லை. மிக நேர்த்தியாக திட்டமிடப்பட்ட முறையில் போலிதகவல்கள், வீடியோக்கள் பரப்பப்பட்டன. இதற்காக பல போலி மற்றும் தவறாக சித்தரிக்கப்படும் வீடியோக்கள் வைரலாக்கப்படுகின்றன. வேறு எப்போதோ ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை தற்போது கொரோனாவுடன் இணைத்து தவறான செய்திகளை பரப்புவதற்கு பயன்படுத்தி சித்தரிக்கப்படும் வீடியோக்கள் உருவாக்கப்படுகின்றன.

உதாரணமாக, ஏப்ரல் 2 ஆம் தேதி சோனம் மகாஜன் ஒரு வீடியோவை ட்வீட் செய்திருக்கிறார். 45 விநாடிகள் கொண்ட இந்த வீடியோவில், ஒரு முஸ்லிம் உணவு பொட்டலத்தின் மீது துப்புகிறார். ஆனால், இது ஒரு பழைய வீடியோ.

“இவை தற்செயலானவை அல்ல, யாரோ ஒருவர் அவற்றைத் தேடி எடுத்து தூசி தட்டி, தவறான செய்திகளுடன் வெளியிடுகிறார்கள். இதுபோன்ற செய்திகளைப் பரப்புவதற்காகவே ஒரு முழு நெட்வொர்க் இயங்குகிறது. சாமானிய மக்களுக்கு ஒரே மாதிரியான செய்திகள் தொடர்ந்து கிடைக்கும்போது, அவர்கள் அவற்றை சுலபமாக நம்பி விடுகின்றனர்.” என்கிரார் ஆல்ட் நியூஸின் பிரதீக் சின்ஹா.

இஸ்லாமியர்கள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பும் ஒவ்வொருவரும் ஏழை முஸ்லிம்களின் தட்டில் மண்ணள்ளிப் போடுகிறார்கள்.


இது தொடர்பான பிபிசியின் விரிவான கட்டுரை இணைப்பு கீழே.

கொரோனா வைரஸ் தொற்று : பரவும் போலி செய்திகளும், பாதிக்கப்படும் ஏழை முஸ்லிம்களும்

நன்றி : ஃபேஸ்புக்கில் முரளிதரன் காசி விஸ்வநாதன் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க