கொரோனா வைரஸ் தொற்று பரவுவதில் சீனா, இத்தாலி ஆகிய நாடுகளைத் தாண்டி அமெரிக்க முதலிடம் பெற்றுள்ளது. அமெரிக்க நாட்டின் சுகாதாரக் கொள்கையும் மருத்துவக் காப்பீட்டு திட்டங்களும் “கையில் காசு வாயில் தோசை” என்கிற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் ஏழை அமெரிக்கர்கள் கொரானா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக கருப்பின மக்கள் மிக அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருப்பின மக்கள் அடர்த்தியாக வாழும் நியூ ஆர்லியன்ஸ், டெட்ராய்ட், நியூயார்க் போன்ற நகரங்களில் கொரோனா வைரசால் மரணமடைவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இறந்தவர்கள் குறித்த இனவாரியான தகவல்களை இல்லினாய்ஸ், லூசியானா, மிச்சிகன் மற்றும் வட கரோலினா தவிர்த்த பிற மாகாண அரசுகள் வெளியிடவில்லை. அமெரிக்காவில் உள்ள “தொற்று நோய்களுக்கான தேசிய அமைப்பின்” ( National Institute of Allergy and Infectious Diseases) இயக்குநர் அந்தோனி ஃபாவ்சி ஆப்ரிக்க அமெரிக்கர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என செய்தியாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.

இது மிக மோசமான சவால் என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர், இதற்கான காரணம் என்னவென்பதை கண்டுபிடித்தாக வேண்டும் என்றார். “இப்போதைக்கு இதைக் குறித்து செய்வதற்கு ஒன்றுமில்லை. நாங்கள் (கருப்பினத்தவர் அதிகம் பாதிக்கப்படுவது குறித்து) மிகவும் கவலை கொள்கிறோம். இப்போதைக்கு அவர்களுக்கு போதிய கவனிப்பை உறுதி செய்தைத் தவிற வேறு வழியில்லை” என்கிறார் ஃபாவ்சி.

இனவாரியான தகவல்களை வெளியிட்டுள்ள மாகாணங்களின் தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது கருப்பினத்தவர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகிறது. இல்லியனாய்ஸ் மாகானத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள தொற்று உள்ளவர்களில் 28.4 சதவிதம் பேர் கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள். 10 சதவீதம் பேர் ஹிஸ்பேனிக் (ஸ்பானிய), 27.1 சதவீதம் பேர் காகாசிய இனத்தவர் (வெள்ளையினம்). இறந்தவர்களில் 42.9 சதவீதம் பேர் கருப்பினத்தவர். அந்த மாகாணத்தின் மொத்த மக்கள் தொகையில் கருப்பினத்தவரின் சதவீதம் 15 என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டால் பாதிக்கப்பட்டவர்களின் சதவீதத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இதன் பரிமாணம் புரியும்.

அதே போல் மிச்சிகனின் மக்கள் தொகையில் 14 சதவீதமாக கருப்பினத்தவர்கள் உள்ளனர் – ஆனால், பாதிக்கப்பட்டவர்களில் 33 சதவீதமும் இறந்தவர்களில் 40 சதவீதமாகவும் உள்ளனர். நியூயார்க் மக்கள் தொகையில் 22 சதவீதமாக கருப்பினத்தவர் உள்ளனர் – ஆனால், பாதிக்கப்பட்டவர்களில் 28 சதவீதமாக உள்ளனர்.. கொரோனா வைரசால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள லூசியானா மாகாணத்தில் இறந்தவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள் – ஆனால், அவர்களின் மக்கள் தொகை சதவீதமோ 32 சதவீதம் தான்.

படிக்க:
♦ கொரோனா – கருத்துப்படங்கள் !
♦ உத்திரப் பிரதேசம் : இந்து ராஷ்டிரத்தின் புதிய சோதனைச் சாலை !

லூசியானா மாகாண கவர்னர் எட்வர்ட்ஸ், “உண்மையில் இது மிகப் பெரிய அளவில் பாரபட்சமாக உள்ளது. இதை உடனடியாக நிவர்த்தி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்கிறார். கருப்பின மக்கள் பெரும்பாலும் ஏழைகளாகவும், சேரிகளில் அடர்த்தியாக வாழும் நிலையில் இருப்பது ஒருபுறம் என்றால் அவர்களில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் பலருக்கு ஏற்கனவே நீரிழிவும் ஆஸ்துமா போன்ற நிரையீரல் பாதிப்பும் உள்ளது.

லூசியானா மாகாண சுகாதாரத் துறையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் அலெக்ஸ் பில்லியோக்ஸ், “வருத்தத்திற்குரிய வகையில் இனரீதியிலான மிகப் பெரும் பாகுபாடு உள்ளது” என ஒப்புக் கொண்டுள்ளார். அமெரிக்க மருத்துவக் காப்பீடு பெரும் கார்ப்பரேட்டுகளின் நலனைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது நேரடியாக உழைக்கும் மக்களின் உயிர்களை பதம் பார்க்கும் வகையில் உள்ளது ஒரு எதார்த்தம். இதன் விளைவாக ஏழை கருப்பினத்தவர்கள் குணப்படுத்தி விடக்கூடிய சாதாரண நோய்களுக்கும் கூட பலியாகும் சூழல் நிலவுகின்றது.

“நமக்கெல்லாம் ஏற்கனவே தெரிந்த இந்த மொத்த கட்டமைப்பின் ஓட்டாண்டித்தனமும் இப்போது பளிச்சென்று அம்பலமாகி உள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்க அமெரிக்க சமூகத்தின் இடையே கொரோனா வைரஸ் என்கிற கிரியா ஊக்கி நுழையும் போது அது உண்டாக்கும் பாதிப்புகள் பன்மடங்காக உயருகின்றது” என்கிறார் National Association for the Advancement of Colored People என்கிற அமைப்பின் தலைவர் டெர்ரிக் ஜோன்சன்

நோய் யாரைக் கொல்கிறது என்பதை பொருளாதார சமத்துவமின்மையே தீர்மானிக்கின்றது என்பதை தற்போது வெளியாகி உள்ள தரவுகளே நிரூபிப்பதாக உள்ளது என்கிறார் நியூயார்க்கின் மேயர் டெ ப்ளாஸியோ. மேலும், “நாம் பல பத்தாண்டுகளாக பார்த்து வரும் சுகாதாரத் துறை கொள்கையின் பாகுபாடுகளின் விளைவுகளை இப்போது கொரோனா வைரசின் எதிர்மறையான தாக்கங்கள், அது உண்டாக்கும் மரணங்கள், மேலும் தெளிவாக உணர்த்தி உள்ளது” என்கிறார்.

சில மாகாணங்களைத் தவிர பெரும்பான்மையான மாகாணங்கள் பாதிப்புக்கு உள்ளானவர்கள் குறித்த இனவாரியான தரவுகளை வெளியிடாமல் இருப்பதை கண்டிக்கும் சமூக செயல்பாட்டாளர்கள், கருப்பினத்தவர்கள் தாங்கள் அதிகம் பாதிக்கப்பட்டது குறித்து அறிந்து கொள்ளாமல் அரசு தடுக்கப் பார்ப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

“வீட்டிலேயே முடங்கி இருங்கள்” என்கிற செய்தியைத் தாண்டி நாம் சிந்திக்க வேண்டிய தருணம் இது என்கிறார் ரோச்செஸ்டரின் மேயர் வாரன்.

அனைவருக்குமான இலவச பொது சுகாதார ஏற்பாடுகளைக் கொண்ட நாடுகளே கொரோனாவை எதிர்கொள்வதில் வெற்றி பெற்றுவருவதை நாம் பார்த்து வருகின்றோம். அவ்வாறான ஒரு ஏற்பாடு முதலாளித்துவத்தின் கல்லாவில் ஓட்டையைப் போட்டு விடும் என்பதால் முதலாளித்துவ உலகம் இப்போது கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது.

தங்களது பண்டங்களை விற்க சந்தை வேண்டும் – சந்தையில் பொருட்களை வாங்க மக்கள் வேண்டும் – மக்கள் உயிரோடு வாழ அனைவருக்குமான பொது சுகாதாரம் அவசியம் – ஆனால், முதலாளித்துவமோ “இலவசங்களுக்கு” கொள்கையளவிலேயே எதிரானது. அங்கே மருத்துவ சேவை என்பதும் கூட விற்பனைக்கான ஒரு பண்டம் தான். இதில் மாற்றத்தைக் கொண்டு வருவது அதன் உடலில் இருந்து ஆன்மாவைப் பிடுங்கி எரிவதற்கு ஒப்பானது.

இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை தான். முதலாளித்துவம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்ப்போம்.


– தமிழண்ணல்
செய்தி ஆதாரம் :  USA TODAY