ண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு கல்வி நிறுவனம் (Institutions of Eminence – IoE) என்ற சிறப்பு தகுதியைப் பெறுவதையொட்டி பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்திய உயர்கல்வி நிறுவனங்களை உலக தர பட்டியலில் இடம் பெற செய்யவேண்டுமென்ற இலக்கை அடிப்படையாகக் கொண்டு IoE என்ற திட்டத்தை 2016 ஆம் ஆண்டு மோடி அரசு அறிவித்தது. அத்திட்டத்தின் கீழ் அண்ணா பல்கலைக்கழகமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதி பெறுவதனால் இடஒதுக்கீடு, பல்கலைக்கழகத்தின் மீதான மாநில அரசின் கட்டுப்பாடு, நிதி ஒதுக்கீடு குறித்த பல சந்தேகங்களும் விவாதங்களும் நடந்து வருகின்றன. ஆனால் மாநில அரசோ இது குறித்த தெளிவானதொரு விளக்கம் தராமல் சிறப்புத் தகுதி பெறுவதற்கான வேலைகளை முடுக்கியுள்ளது.

IoE-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 உயர்கல்வி நிறுவனங்களையும் Empowered Expert Committee – EEC என்ற குழுவே நிர்வகிக்கும். இக்கல்வி நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு மாணவர் எண்ணிக்கையில் 30% வெளிநாட்டு மாணவர்களையும் பேராசிரியர் நியமனங்களில் 25% வரை வெளிநாட்டு பேராசிரியர்களையும் அனுமதித்துக் கொள்ளலாம்.

படிக்க:
♦ ரஜினிக்கு வருமான வரி விலக்கு – விவசாயிக்கு தூக்கு !
♦ ஜாமியா பல்கலை மாணவர்கள் மீது இந்துத்துவக் கிரிமினல் துப்பாக்கிச் சூடு ! ஒரு மாணவர் படுகாயம் !

மாணவர் சேர்க்கை முற்றிலும் திறமை அடிப்படையிலேயே (merit based system) இருக்க வேண்டும் அதற்கான முறையை பல்கலைக்கழகமே தீர்மானித்துக் கொள்ளலாம். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அக்கல்வி நிறுவனங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என விதிமுறையில், UGC (Institutions of Eminence Deemed to be Universities) Regulations, 2017, கூறப்பட்டுள்ளது.

  1. பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரால் பரிந்துரைக்கப்பட்டவர்களே Empowered Expert Committee -யின் உறுப்பினர்கள். இக்குழு மத்திய அரசிற்கு கட்டுப்பட்டது. இக்குழுவே அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 20 கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் அதிகாரம் கொண்டது. இதில் மாநில அரசுக்கோ பல்கலைக்கழக மானியக் குழுவிற்கோ எவ்வித அதிகாரமும் கிடையாது.
  2. மாணவர் சேர்க்கை மற்றும் ஆசிரியர் பணிநியமனங்களில் 69% இடஒதுக்கீடு தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. சிறப்புத் தகுதியின் காரணமாக பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளிலிருந்து மாணவர்கள், பேராசிரியர்களை அண்ணா பல்கலைக்கழகத்தில் அனுமதிப்பது கட்டாயம். எனவே 69% இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது கடினம்.
  3. அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. IoE விதிமுறையின் படி திறமை அடிப்படையிலே மாணவர் சேர்க்கை கட்டாயம் என்பதால் இந்திய அளவிலான நுழைவுத் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடக்க வாய்ப்புகள் அதிகம். மேலும் பொறியியல் படிப்புகளுக்கும் நீட் தேர்வை போல தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என மோடி அரசு கூறிவருவதை பொருத்திப் பார்க்க வேண்டும்.
  4. அண்ணா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொறியியல் படிப்புகளுக்கு வருடக் கட்டணம் 30,000 ரூபாயாகவும் முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான வருடக்கட்டணம் 50,000 ரூபாயாகவும் உள்ளது. சிறப்புத் தகுதி பெறும் கல்வி நிறுவனங்கள் கல்வி கட்டணத்தை தாங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். மேலும் இக்கல்வி நிறுவனங்களுக்கு நிதி தன்னாட்சியும் வழங்கப்படுவதினால் அக்கல்வி நிறுவனங்களே தங்களுக்கு தேவையான நிதியை உருவாக்கிக் கொள்ள வேண்டும். எனவே தற்போது 30,000 ரூபாயாக உள்ள கல்விக்கட்டணம் சில வருடங்களுக்குள் பல லட்சமாக உயரும். உதாரணமாக நிதி தன்னாட்சியின் காரணமாக கடந்த பத்து வருடங்களில் ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி. களில் B.Tech படிப்புகளுக்கான கல்விக்கட்டணம் 25,000 லிருந்து 2 லட்சமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப கல்லூரிகளில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டினுடைய சமூக – பொருளாதார வளர்ச்சியில் மேம்பாட்டில் முக்கிய பங்களிப்பு செய்துள்ளது. தற்போது சிறப்புத் தகுதியின் காரணமாக பொது நுழைவுதேர்வு, 69% இடஒதுக்கீடு நீக்கப்படுவது, அதீத கல்விக் கட்டணம், மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படுவது போன்ற பேராபத்துகளினால் கிராமப்புற சமுதாய-பொருளாதார நிலைகளில் பிந்தங்கிய சூழலிருந்து வரக்கூடிய தமிழ்நாட்டு மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு செல்வது தடுக்கப்படும்.

நீட் தேர்வு பற்றிய உண்மைகளை மறைத்ததைப் போல அண்ணா பல்கலைக்கழக விசயத்திலும் உண்மைகளை மறைத்து மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் பல்கலைக்கழகம் இருக்கும், இடஒதுக்கீடுக்கு பாதிப்பு வராது என்று மக்களிடம் பொய் சொல்லிவருகிறது.

மேலும் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று பலதரப்பினரும் எதிர்த்து வருகின்றனர். ஆனால் தமிழக அரசோ பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று கூறியதோடு அதற்கான வேலைகளையும் செய்துவருகிறது.

ஆசிரியர் பற்றாக்குறை, மூன்று பருவ பாடங்களின் சுமை, மாதிரி வினாத்தாள் வழங்குவதில் தாமதம் போன்ற காரணங்களினால் அரசுப் பள்ளியிலும் மாணவர்கள் மிகக்கடுமையாக பாதிப்புக்குள்ளாவார்கள். இத்தேர்வுகள் மாணவர்களுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்பொதுத் தேர்வு கிராமப்புற மாணவர்களை கல்வியிலிருந்து வெளியேற்றுவதற்கான திட்டமே என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கான சிறப்புத் தகுதியும் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வும் கிராமப்புற மற்றும் சமுக – பொருளாதார நிலைமைகளில் பின்தங்கிய சூழலில் இருந்து வரக்கூடிய தமிழ்நாட்டு மாணவர்களை பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியிலிருந்தே வெளியேற்றுவதற்கான சதித் திட்டமாகும். மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கக்கூடிய இவ்விரண்டு திட்டங்களையும் தமிழக அரசு கைவிடவேண்டும் என பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு கேட்டுக்கொள்கிறது.

இதனை வலியுறுத்தி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பேரா. வீ. அரசு, பேரா. கருணானந்தன், ஆசிரியர் சக்திவேல் ஆகிய கல்வியாளர்களும் மனநல மருத்துவர் ருத்ரன் அவர்களும் கலந்து கொண்டனர். மேலும் அண்ணா பல்கலைக்கழக சிறப்பு உயர் தகுதி குறித்த உண்மைகளை அம்பலப்படுத்தும் “அண்ணா பல்கலைக்கழகம்: உயர் சிறப்புத் தகுதியா? மாநில உரிமை பறிப்பா?” என்ற சிறு நூல் இக்கருத்தரங்கில் வெளிடப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – சென்னை,
தொடர்புக்கு : 94443 80211, 72993 61319.

குறிப்பு : கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பேராசிரியர்கள் மற்றும் மருத்துவரின் உரைகளின் காணொளிகள் விரைவில் வினவு  யூடியூப் சேனலிலும் வினவு இணையதளத்திலும் வெளியிடப்படும்.

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க