குழந்தைகள் கல்வியின் வரையறை எது???

ம் குழந்தைகளை அவர்கள் பெறும் மதிப்பெண்ணை வைத்து மதிப்பு தரும் பெற்றோராக நாம் இப்போது மாறினால் நம் குழந்தைகள் நாம் சம்பாதிக்கும் பணத்தை வைத்தும் நாம் அவர்களுக்கு சேர்த்து வைக்கும் சொத்துக்காக மட்டுமே நம்மை மதிக்கும் நிலை நாளை உருவாகும்.

கல்வி என்பது என்ன?

கல்வி என்பது பல நல்ல பழக்க வழக்கங்களை ஒருங்கே கற்பது. அதை குழந்தையின் மூளை வேகமாக உள்வாங்கி கொள்ளும் என்பதால் கல்வியை தொடக்கம் முதலே ஆரம்பிக்கிறோம்.

சப்பான், சீனா முதலிய நாடுகளில் ஆறு வயது வரை கூட தாத்தா பாட்டியிடம் கதை கேட்கட்டும் என்று விட்டு விடுகிறார்கள். தாத்தா பாட்டியிடம் ஒழுக்கங்கள்/ பழக்க வழக்கங்கள் / கதைகள் கேட்டு வரட்டும் என்று காத்திருக்கிறார்கள் .

நாம் மூன்று வயது முடியுமுன்னமே முந்தி அடித்து பள்ளிக்கூடத்தில் சேர்க்கிறோம்.

அங்கு குழந்தை எதை கற்கிறது ?

அதுவரை தாய் தந்தை தாத்தா பாட்டி என்ற குக்கூனுக்குள் இருந்து வெளியே வந்து தொடக்க கல்வி என்ற ப்யூப்பா கட்டத்திற்கு செல்கிறது. அங்கே தன் போன்ற சகல குழந்தைகளுடனும் விளையாடுகிறது .அங்கு பணிபுரியும் ஆசிரியைகள் தான் அவர்களுக்கு அப்போதைய தேவதைகள். தேவதைகள் செய்யும் அனைத்தையும் தானும் செய்து பார்க்கின்றன.

மனிதன் ஒரு சமூக மிருகம் என்கிறோம். சமூகத்துடன் தன்னை ஒருமித்துக்கொள்ளும் வித்தையை பள்ளிக்கூடங்கள் தான் ஆரம்பித்து வைக்கின்றன .

விட்டுக்கொடுத்தல்; தட்டிக்கொடுத்தல்; புறம்பேசுதல்; காட்டிக்கொடுத்தல்,
போன்ற பல மனித உணர்வுகள் ஊற்றெடுப்பது சமூகத்துடன் கலந்தவுடன் மட்டுமே … இவையனைத்தும் பள்ளிகளில் ஒருங்கே நிகழும்.

பிறகு பள்ளிகள் இந்த குணங்களில் எது அதிகம் தேவையோ அதை ஃபைன் ட்யூனிங் செய்து அதிகமாக்கும். எது தேவையில்லையோ அதை கொஞ்சம் கண்டிப்புடன் குறைத்து வைக்கும். ஆக பள்ளிக்கூடங்கள் என்பது மனிதனை மனிதனாக்கும் கூடங்கள்.

அல்லது, மனிதனை சமுதாயத்துக்கு தேவையுள்ளவனாக மாற்றும் கூடங்கள். பள்ளிக்கூடம் விட்டு வெளிவரும் ஒவ்வொருவரும் சமுதாயத்துக்கான தனது பணியை உணர்ந்தவர்களாக வெளிவருவது அந்த பள்ளியின் நோக்கமாக இருக்கிறது.

சரி .. இதனூடே பனிரெண்டாம் வகுப்பு எனும் மலை முகட்டில் ஏறி சிறகு விரித்து பறக்கத் தேவையான ஆயத்தப்பணிகளும் நடக்கும்.  ஆம்… பனிரெண்டாம் வகுப்புக்கு பிறகு ஒரு மாணவ மாணவியின் எதிர்கால தொழில் முடிவாகுவதால் அது ஒரு மலை முகட்டோடு ஒப்பிடப்படுகிறது.

சிலர் தாங்களாக சிறகு விரித்து பறக்கிறார்கள்… சிலருக்கு பெற்றோர் பணமெனும் காகிதத்தால் செயற்கை சிறகு செய்து பறக்க விடுகிறார்கள் … பலருக்கு அதற்கான எந்த பாக்கியமும் இல்லாமல் சிறகின்றி மலை முகட்டிலேயே நின்று அத்தனையையும் வேடிக்கை பார்க்கிறார்கள்.

இப்படி பனிரெண்டாம் வகுப்பின் மீது இத்தனை ப்ரஷர் ஏற்றப்பட்டு
காணும் பிள்ளைகளின் தாய் தந்தையர் அனைவருமே தன் பிள்ளைகளை டாக்டராகவும் இஞ்சினியராகவும் கனவு காண்கிறார்கள். பத்து லட்சம் பேர் தேர்வு எழுதும் இடத்தில் ஐயாயிரம் சீட்டுகள் மட்டுமே மருத்துவராக இருக்கிறது. அதே அளவுதான் சிறந்த இஞ்சினியரிங் கல்லூரிகளில் பயில இருக்கிறது.

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு அடிப்படை திறன் இருக்கிறது. இருக்கும்.
ஆனால், அந்த திறனை வெளிக்கொண்டு வரும் பெற்றோரும் கல்வி நிலையமும் சமுதாய சூழ்நிலையும் அமையாதிருப்பதே, பல துறை சார்ந்த மேதைகள் நம் நாட்டில் உருவாகாமல் இருப்பதற்கு காரணம் என்று நினைக்கிறேன்.

ஏ.ஆர்.ரஹ்மானின் தாய் அவரது மகனின் திறமையில் நம்பிக்கை வைக்காமல் அவரை அடித்து துன்புறுத்தி படிக்க அனுப்பியிருந்தால் அவர் இன்று ஏதோ ஒரு பெரிய ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து கொண்டிருப்பார்.

இருப்பினும் இந்த இடத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக காரணமானது
அவரது தந்தை ஒரு இசையமைப்பாளர்; தாய் அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கை.

கீபோர்டு கையில் எடுத்த அனைவரும் ஏ.ஆர்.ரஹ்மானாக முடியும் என்று நான் கூறவில்லை. ஆனாலும் நிச்சயம் பல ஏ.ஆர்.ரஹ்மான்கள் உருவாகாமல் இருப்பதற்கு நமது கல்வி அமைப்பே காரணமாகிறது என்று கூறுகிறேன்.

இப்போது கல்வி நிலையத்தில் தனித்திறமைகள் போற்றப்படுவது குறைந்து வருகிறது. தனித்திறமைகள் வைத்து சம்பாதிக்க முடியாது என்ற வாதம் தான் நம் அனைவரையும் அந்த மலை முகட்டை நோக்கி உந்தித்தள்ளுகிறது.

இன்றோ ஐந்தாம் வகுப்பு / எட்டாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு / பதினோறாம் வகுப்பு / பனிரெண்டாம் வகுப்பு என்று பல சிகரங்கள் உருவாகி
குழந்தைகளின் வாழ்வை போர் மயமாக்கி வைத்துள்ளன.

இந்த சிகரங்களை யாரெல்லாம் கடக்க வேண்டும்? யாரெல்லாம் பின் தங்க வேண்டும் ?  என்று சமூகம் முடிவு செய்கிறது.

சிலரை வாழை இலையில் உணவு உண்ண அழைக்கிறது. சிலரை எச்சில் இலையை பொறுக்க அழைக்கிறது.  சிலரை வீடு கட்டவும் , சிலரை வீட்டின் கழிவறையை சுத்தம் செய்யவும் மட்டுமே தயார் செய்கிறது.

சிலரை தகுதி இல்லாவிடினும் மருத்துவராக்குகிறது. பலருக்கு தகுதி இருந்தும் மருத்துவக்கனவு காணக்கூடாது என்கிறது.  இப்படியாக சமூகம் தான் பெற்றெடுத்த குழந்தைகளிடமே ஏற்றத்தாழ்வு கற்பிக்கிறது…

எல்.கே.ஜி. பயிலும் குழந்தைக்கு பரிட்சையின் போது காய்ச்சல் அடித்தாலும் லீவ் போடாமல் பரீட்சை எழுத வைக்கும் வேலையை பெற்றோர்கள் செய்கின்றனர்.  இது போன்ற பெற்றோர்களுக்கு நாளை தனிமைதான் பரிசாகக்கிடைக்கப் போகிறது என்பதை உணர்கிறார்கள் இல்லை.

இன்று காய்ச்சல் இருமலில் உழலும் உங்கள் குழந்தையை பள்ளிக்கு அனுப்பி அதை தனிமைபடுத்தும் ஒவ்வொரு பெற்றோருக்கும் நாளை முதியோர் இல்லமோ தனிமையான அப்பார்ட்மெண்ட் வாழ்க்கையோ காத்துக்கொண்டிருக்கிறது.

படிக்க:
விமானப் பயணத்தில் அர்னாப் கோஸ்வாமியை ‘வெச்சு செய்த’ குனால் காம்ரா !
எம்புள்ளைய விரட்டிட்டீங்களே | குழந்தைகளை விரட்டும் பொதுத்தேர்வு !

உண்மையில், சமுதாயத்துக்கு நன்மையை கற்றுத்தர வேண்டிய கல்வி முறையாக மாறாமல் சமுதாயத்தை இன்னும் சுயநலமிக்கதாக தான் மாற்றிக்கொண்டிருக்கிறது.

இந்த ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அனைத்தும் குலக்கல்வியின் இருபத்தி ஓராம் நூற்றாண்டு வெர்சன்களாகவே தெரிகின்றன. மேலும் பெண்கள் கல்வி கற்பதை தடுக்கும் ராஜாராம் மோகன் ராய் காலத்துக்கு முந்தைய சமுதாயத்துக்கு இழுத்துச் செல்லும் முயற்சியாகவே இருக்கிறது.

இந்த பாதைகளெல்லாம் எங்கு சென்று முடிகின்றனவோ .. அங்கு நம் குழந்தைகளின் குழந்தைத் தன்மைகளை சேட்டைகளை சுட்டிகளை குழிதோண்டி புதைக்கும் சுடுகாடு இருக்கிறது… ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் சமுதாய அடுக்கில் கீழே இருக்கும் மக்களை கல்வியை விட்டு இன்னும் தூரப்படுத்தும்.

எனவே, மத்திய-மாநில அரசுகளை உடனே இது குறித்து தாய்மை உள்ளம் கொண்டு ஆராய்ந்து இந்த பரீட்சைகளை கைவிடக் கோருகிறேன்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க