கொரானா நோய்த் தொற்றை முன்வைத்து மக்கள் எந்தவித முன் தயாரிப்பையும் செய்யவிடாமல் அரசு ஊரடங்கை அறிவித்துவிட்டது. பெரும்பான்மையான மக்கள் அன்றாட கூலிக்கு வேலை செய்து, அதுவே பற்றாக்குறையாக வாழ்ந்துகொண்டிருக்கும் பொழுது, இவர்களைப் பற்றிய கவலை இல்லாமல் அரசு ஊரடங்கை அமுல்படுத்துகிறது.

பகுதிகளில் இளைஞர்களிடம் மக்களின் நிலையை விசாரிக்கும் பொழுது, மக்கள் வருமானமில்லாமல் கடும் போராட்டத்துடன் தான் இருக்கிறார்கள் என தெரிவித்தார்கள். இதை நண்பர்களிடம் தெரிவித்த பொழுது, மக்களின் நிலை குறித்து நிறைய வருத்தம் இருந்தாலும், நோய்த் தொற்றும், ஊரடங்கு அமுலில் இருக்கும் பொழுது எப்படி செயல்படுவது என தயங்கினார்கள். இதே நண்பர்கள் தான் சென்னை மழை வெள்ளத்தின் பொழுது கழுத்தளவு தண்ணீரில் கடந்து போய் மக்களுக்கு பொருட்கள் விநியோகித்தவர்கள், கஜா புயலின் பொழுது மக்களிடம் இருந்து நன்கொடையாக பணத்தையும், பொருட்களையும் திரட்டி, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்தவர்கள்.

கொரானா காலத்தில் பெரும்பான்மையான மக்கள் நெருக்கடியில் வாழ்ந்துகொண்டிருக்கும் பொழுது, அதை எப்படி நம்மால் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கமுடியும்? இதே நெருக்கடி காலத்தில் தான், மருத்துவர்கள், மருத்துவ துறை ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் இயங்கிக்கொண்டுத்தான் இருக்கிறார்கள். ஆகையால் நம்மால் முடிந்ததை செய்வோம். அது நமது கடமை என பேசிய பொழுது ஏற்றுக்கொண்டார்கள். ஐந்து வழக்கறிஞர்கள், ஒரு எழுத்தாளர், சில சமூக ஆர்வலர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து வடசென்னை மக்கள் உதவிக்குழு என்ற பெயரில் வாட்சப் குழுவை ஆரம்பித்தோம். அவரவர் கையிலிருந்த பணத்தை முதலில் தந்தார்கள். பிறகு நண்பர்களுக்கு வாட்சப் மூலம் செய்தி அனுப்பினோம். நல்லதொரு செயலை முன்னெடுத்துள்ளீர்கள் என பாராட்டு தெரிவித்தார்கள். தங்களால் இயன்ற தொகையை தர துவங்கினார்கள். சிறுக சிறுக பணம் சேரத்துவங்கியது.

புதுவண்ணை பகுதியில் அன்னை இந்திரா நகர் பகுதியில் நம்முடன் ஏற்கனவே சமூக செயல்பாடுகளில் நம்மோடு வேலை செய்திருந்த சமூக அக்கறை கொண்ட இளைஞர்களை தொடர்பு கொண்டு பேசினோம். தங்கள் பகுதிகளில் மிகவும் சிரமப்படுகிறவர்களை கண்டறிந்து தெரிவியுங்கள் என்றோம். அவர்களும் பொறுப்பாக ஒரு பட்டியல் தயாரித்து அனுப்பினார்கள். சில மூட்டை அரிசியை வாங்கினோம். அதை ஐந்து கிலோ, ஐந்து கிலோவாக 100 பண்டல்களாக மாற்றினோம். பட்டியலில் உள்ளவர்களுக்கு இளைஞர்கள் மூலம் டோக்கன் வழங்கினோம். குழுவில் உள்ள வழக்கறிஞர்களின் அலுவலகத்திற்கு நேரம் சொல்லி ஐந்து ஐந்து பேர்களாக வரவழைத்தோம். சானிடைசர் வழங்கி, பொருட்களை வழங்கினோம்.

படிக்க:
♦ கொரோனா ஊரடங்கு : வழியும் களஞ்சியம் ! வறுமையில் மக்கள் !!
♦ கொரோனா நிவாரண நடவடிக்கையில் மக்கள் அதிகாரம் ! செய்திகள் படங்கள்

இப்படி நிவாரண உதவி வழங்கிய செய்திகளை வாட்சப்பில் மீண்டும் நண்பர்களிடம் தெரிவித்தோம். குழுவில் உள்ள எழுத்தாளர் திரைத்துறையில் சமூக அக்கறை கொண்ட படங்களை இயக்கும் ஒரு திரை இயக்குநரிடம் நன்கொடை கேட்டதற்கு, தன் பெயரை வெளியில் சொல்லவேண்டாம் என ரூ. 10000 தந்தார். நண்பர்களின் நண்பர்களும் உதவிகள் தந்தார்கள். கூகுள் பே மூலம் பணமும் அனுப்பிவைத்தார்கள்.

புதுவண்ணை சுனாமி குடியிருப்பு, சிவன் நகரில் வாழும் மக்களுக்கு இந்த முறை அரிசியோடு பருப்பும் வாங்கி 100 குடும்பங்களுக்கு கொடுத்தோம். அடுத்து, ராயபுரம், காசிமேடு பகுதிகளில் மிகவும் சிரமப்பட கூடிய மக்களை இளைஞர்கள் மூலம் கண்டறிந்து 100 குடும்பங்களுக்கு பொருட்கள் விநியோகித்தோம்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்தமுறை அரிசி, பருப்பும் கூடுதலாக சமைப்பதற்கு எண்ணெயும் வாங்கி திருவெற்றியூர் டோல்கேட் பகுதிகளில் வாழும் தூய்மை பணி (துப்புரவு வேலை) செய்பவர்களுக்கும், ஆட்டோ தொழிலாளிகளுக்கும், இன்னும் சில குடும்பங்களுக்கும் சேர்த்து மொத்தம் 100 குடும்பங்களுக்கு விநியோகித்தோம்.

ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து ஏப்ரல் 15 வரை வட சென்னை பகுதிகளில் வாழும் 400 குடும்பங்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை இந்த குழு மூலம் செய்திருக்கிறோம்.

வடசென்னை மக்கள் உதவிக்குழு வாட்சப் குழுவில் உள்ள நாங்கள் நேரில் சந்திக்காமல், அடிக்கடி போனில் பேசிக்கொள்கிறோம். ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பரிமாறிக்கொள்கிறோம். பேசி, முறையாக திட்டமிட்டுக்கொள்கிறோம். பொருட்களை வாங்குவதிலும், விநியோகிப்பதிலும் முறையாக செயல்படுகிறோம். தன்னார்வத்துடன் இளைஞர்களும் வேலைகளில் ஈடுபடுகிறார்கள். மக்கள் பணிகளில் தொடர்ந்து ஈடுபட ஈடுபட நமக்கு அனுபவமும், மக்களுடைய பணத்தை கையாள்வதால் பொறுப்பும் அதிகரிக்கிறது.

தொடர்ந்து மக்கள் பணி ஆற்றுவோம். கொரானாவிலிருந்து நம் மக்களை காப்போம்.

மக்கள் பணியில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்.

தொலைபேசி எண்கள்:

9941314359
8825643335
7397468117

இப்படிக்கு,
வடசென்னை மக்கள் உதவிக்குழு,
சென்னை.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க