மிழகத்தில் வாகன சோதனை என்ற பெயரில் போலிசின் வழிப்பறி கொள்ளை- கொலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  மதுரையில் 15.06.2019 சனிக்கிழமை இரவு 11:30 மணிக்கு “சாய் டயர்ஸ்”  என்ற பெயரில் டயர் வணிகம் செய்யும் விவேகானந்தகுமார் தனது கடையை மூடிவிட்டு பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பைக்கின் பின்பக்கம் சரவணக்குமார் என்பவர் (அந்த கடையில் வேலை செய்யும் உதவியாளர்) அமர்ந்துகொண்டிருந்தார்.

செல்லூர் பாலம் அருகே அண்ணாமலை திரையரங்கம் அருகில் சென்று கொண்டிருந்த பொழுது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தது “டெல்டா போர்ஸ்” என்ற சிறப்புப் பிரிவு போலிசு. இந்த “டெல்டா போர்ஸ்” போலிசு மதுரை நகரத்திற்குள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். வாகன சோதனையில் ஈடுபடலாம். சட்ட விரோதமாக மதுரை காவல் ஆணையரால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பிரிவு போலீசுக்கு அளவற்ற அதிகாரம் வழங்கியிருக்கிறது.

இந்த “சட்ட விரோதப் போலிசு” கும்பல் விவேகானந்தகுமார் மற்றும் சரவணக்குமார் வந்த வண்டியை மறித்திருக்கிறார்கள். அப்பொழுது கொஞ்சம் தள்ளி நிறுத்த முயற்சி செய்த விவேகானந்தகுமாரை சற்றுதள்ளி இருந்த போலீஸ் ஒருவர் லத்தியால் ஓங்கி அடிக்க, இன்னொரு போலீசு வண்டியின் சக்கரத்தில் லத்தியை விட்டிருக்கிறார்.

உயிரிழந்த விவேகானந்த்குமார்.

ஈவு இரக்கமற கொடுஞ்செயலால் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்து சரவணகுமாருக்கு நாடியில் பலத்த அடிபட்டு துடித்திருக்கிறார். விவேகானந்தனுக்கு மூக்கிலும் காதிலும் ரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது. மண்டையில் பலமான அடிபட்டு இருக்கிறது.

வலியால் துடித்துக்கொண்டிருந்த இருவரையும் காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது போலீசு கும்பல். அங்கிருந்த பொதுமக்கள் உதவி செய்ய முயற்சித்தபோதும் அவர்களை அங்கிருந்து விரட்டியிருக்கிறது போலீசு. இந்தச் சம்பவத்தில் விவேகானந்தனின் போனை ஒரு போலீஸ் எடுத்துக்கொண்டது. தட்டுத்தடுமாறி எழுந்த சரவணன் போனை கொடுங்கள் என்று கேட்க, முடியாது என்று திமிராக சொல்லியுள்ளது போலீசு.

வேறுவழியின்றி அங்கிருந்த ஒருவரின் செல்போனை வாங்கி செந்தில்குமார் என்ற தனது நண்பருக்கு தகவலை சொல்ல, அவர் ஆம்புலன்ஸ் அழைத்து வந்து இருவரையும் மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்.

இந்த சம்பவம் உறவினர்களுக்கு தெரிந்து மருத்துவமனைக்கு வந்துவிட்டார்கள். அடுத்த நாள் 16-ம் தேதி விவேகானந்தன் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். இந்த செய்தியை விவேகானந்தனின் நண்பர் ஒருவர் மதுரை மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்திற்கு தெரிவிக்க, உடனடியாக தோழர் வாஞ்சிநாதன் உட்பட ம.உ.பா.மைய தோழர்கள் அனைவரும் மருத்துவமனைக்குச் சென்றனர்.

படிக்க:
♦ போலீசால் கொல்லப்பட்ட திருச்சி உஷாவின் இறுதி ஊர்வலம்
♦ திருச்சி உஷா படுகொலை : போலீசை எதிர்த்து மக்கள் போர் – போராட்ட செய்தித் தொகுப்பு

அங்கிருந்தபடியே சரவணன் நடந்த சம்பவங்களை எழுதி ஆன்லைன் மூலமாக ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கிறார். அங்கு சென்ற மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் தோழர்கள் விவேகானந்தனின் உறவினர்களிடம் கலந்தாலோசித்து மூன்று கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார்கள்.

  • காவல் துறையின் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
  • 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
  • விதவை மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து சாலை மறியல் செய்தனர். மறுநாள் திங்கட்கிழமை கலெக்டரை சந்தித்து மனு கொடுப்பது என்ற அடிப்படையில் மறியலை கைவிட்டனர். இறந்த விவேகானந்தகுமாருக்கு மனைவி கஜபிரியா, ஒன்றரை வயதில் மகன் ஒருவர் இருக்கிறார்கள். இவர்கள் பெயரில் ஒரு மனுவை எழுதி மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சாந்தகுமாரிடம் மனு கொடுக்கிறார்கள்.

மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சாந்தகுமாரிடம் மனு கொடுக்கும் வழக்கறிஞர்கள் மற்றும் குடும்பத்தினர்.

கலெக்டர் அலுவலகத்தில் விவேகானந்தகுமாருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள், வியாபார சங்கத்தினர் அனைவரும் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். “அதில் எனது கணவரை  கொலை செய்த குற்றவாளிகள் தெரிய வேண்டும். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் பாடியை வாங்குவோம்” என்று கஜப்பிரியா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மதுரை தல்லாக்குளம் போக்குவரத்து போலீசு ஒரு பொய் வழக்கு பதிவு செய்தது. அதில் விவேகானந்தகுமார் குடித்துவிட்டு நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். அவரை போலீசு தாக்கவில்லை என்று ஒரு பொய்ச் செய்தியை பரப்பியது. ஆனால் சம்பவ இடத்தில் cctv காமிரா உள்ளது. அதேபோல் அவர்கள் சோதனைக்கு எடுத்து வந்த வாகனத்திலும் காமிரா உள்ளது. இந்த இரண்டு காமெராவிலும் நடந்த சம்பவங்கள் பதிவாகி உள்ளது. ஆனால் அந்த பதிவுகளை பார்ப்பதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை. மேலும் நடந்த சம்பவங்களை நேரில் பார்த்த சாட்சியங்களும் இருக்கின்றன. இருப்பினும் இப்படி ஒரு அப்பட்டமான பொய்யைச் சொல்லி வழக்கு பதிவு செய்திருக்கிறது.

கலெக்டர் அலுவலகத்தில் மாலைவரை போராட்டம் நடைபெற்றுக் கொண்டே இருந்ததால் வேறுவழியின்றி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலிசின் பெயர்களைச் சொன்னது. மேற்கணட சம்பவத்தால் மனமுடைந்த விவேகானந்தனின் மனைவி கஜப்பிரியா திங்கள் இரவு தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். அவரை உறவினர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். தற்போது அவர் நிலைமை சீரியஸாக இருக்கிறது. உயிர் பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள்

இந்நிலையில் ஏற்கெனவே பதியப்பட்ட வழக்கில் கொலைக்குற்றவாளியான சிறப்பு எஸ்.ஐ. ரத்தினவேலு, மதுரை சட்டம்- ஒழுங்கு பிரிவு காவலர்கள் HC-கிருஷ்னமூர்த்தி, HC-ரமேஷ்பாபு, HC-கந்தசாமி மற்றும் மதுரை AR-HC- பிரபு சீலன், மதுரை AR-PC-மணிகண்டன் ஆகியோரை வழக்கில் சேர்க்க வேண்டும் என்று இன்று செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனுவை கொடுத்திருக்கிறார்கள். மேலும் சட்டம் ஒழுங்கு டிஜிபி மற்றும் மதுரை காவல் ஆணையர் ஆகியோருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரோ போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் எஃப்.ஐ.ஆரை alternate பண்ண முடியும் என்கிறார். உடனடியாக பாடியை வாங்கிச் செல்லுங்கள் என்று சொல்லிவிட்டு எனக்கு வேலை இருக்கிறது என்று கிளம்பிவிட்டார். அவருக்குப் பதிலாக அசிஸ்டன்ட் கமிஷனரைக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

காவல்துறையின் அராஜகம் ஒட்டுமொத்த குடும்பத்தையுமே பாதித்து இருக்கிறது. இந்தக் கொடூர குற்றச் செயல்களுக்கெல்லாம் தாங்கள் எந்த விதத்திலும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்ற அதிகாரவர்க்கத் திமிர்த்தனத்தோடு இழுத்தடித்து வருகிறது என்பதற்கு இது ஒரு சாட்சி. அதிகார வர்க்கத்தின் இந்த திமிர்த்தனத்தை எதிர்த்து தற்பொழுது வரை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுவருகிறது.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை. தொடர்புக்கு : 73393 26807.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க