ஜார்க்கண்டில் இந்துத்துவ வெறியேற்றப்பட்ட கும்பலால் தப்ரேஸ் அன்சாரி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொல்கத்தாவில் மீண்டுமொரு முசுலீம் இளைஞர் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்.

கொல்கத்தாவின் ஹூக்ளியில் உள்ள மதராசாவில் அரபி ஆசிரியராக உள்ளார் 23 வயதான ஹபீஸ் முகமது ஷாருக் ஹால்தர். கானிங்-ல் உள்ள தனது வீட்டிலிருந்து ஹுக்ளிக்கு வழக்கமாக ரயிலில் சென்றுவந்து கொண்டிருக்கிறார். ஜூன் 20-ம் தேதி, பார்க் சர்க்கஸ் ரயில் நிலையத்தில் இந்து சம்ஹாதி என்ற அமைப்பைச் சேர்ந்த கும்பல் ஒன்று ஹபீஸை குறி வைத்திருக்கிறது.

தலையில் இசுலாமியர்களின் குல்லாவும் குர்தாவும் அணிந்திருந்த காரணத்துக்காக ஹபீஸை துன்புறுத்திய அந்தக் கும்பல், வலது கண்ணில் பலமாகத் தாக்கியுள்ளது. மட்டுமல்லாமல், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என முழக்கமிடவும் வற்புறுத்தியிருக்கிறது.

“எனக்கு இன்னமும் பயம் போகவில்லை. என்னைத் தாக்கிய இளைஞர்கள் இந்து சம்ஹாதி என எழுதப்பட்ட துணிகளை தங்கள் தலைகளில் சுற்றியிருந்தனர். என்னைத் திரும்பத் திரும்ப ஏன் குல்லா அணிந்திருக்கிறாய், ஏன் தாடி வைத்திருக்கிறாய், ஏன் குர்தா போட்டிருக்கிறாய் என கேட்டுக்கொண்டே இருந்தனர். ‘நீ இதையெல்லாம் அணிய முடியாது. ஜெய் ஸ்ரீ ராம் சொல்லு’ எனக் கட்டாயப்படுத்தினர்” என்கிற ஹபீஸ், சுமார் 20-25 பேர் அந்த ரயில் பெட்டியில் தன்னை சூழ்ந்து கொண்டதாகக் கூறுகிறார்.

சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தல் முதல் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற முழக்கத்தை நாடு முழுவதும் சிறுபான்மையினர் மற்றும் எதிர்ப்பு குரல் எழுப்புவோரை அச்சுறுத்தப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. ஜார்க்கண்டில் தாக்கப்பட்ட அன்சாரியையும் அவரைத் தாக்கிய கும்பல் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முழக்கம் எழுப்ப வற்புத்தியது வீடியோவாக வெளியானது.

இந்த நிலையில் ஹபீஸை தாக்கி, அவரை முழக்கமிட வற்புறுத்திய கும்பல், அவரை ரயிலிலிருந்து தள்ளி விட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வரும் ரயில்வே போலீசு, குற்ற எண்ணத்தோடு நடந்துகொள்ளுதல், வேண்டுமென்றே அடித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் ‘பெயர் தெரியாத’ நபர்கள் மீது வழக்குப் போட்டுள்ளது. இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

படிக்க:
இந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை !
♦ அசாம் : 51 பேரைக் காவு வாங்கிய தேசிய குடிமக்கள் பதிவு !

“நடந்த சம்பவம் குறித்து மட்டுமே எங்களுக்கு புகார் வந்துள்ளது. முழக்கம் எழுப்ப வலியுறுத்தியது குறித்து எதுவும் சொல்லப்படவில்லை” என்கிறார் ரயில்வே போலீசு அதிகாரி ஒருவர்.

போலீசு துப்பு துலக்காத நிலையில் இந்து சம்ஹாதி, தங்களுடைய அமைப்பைச் சேர்ந்தவர்கள் சம்பவம் நடந்தபோது அந்த ரயிலில் இருந்ததாக தெரிவிக்கின்றனர். ஹபீஸ், உள்ளூர் ரயிலில் கானிங் ரயில் நிலையத்திலிருந்து ஹூக்ளியில் உள்ள மதராசாவுக்கு செல்ல ஏறியதாகவும், அப்போது இந்து சம்ஹாதி என எழுதிய துணிகளை தலையில் அணிந்த பலர் வெவ்வேறு ரயில் நிலையங்களில் ஏறியதாகவும் தெரிவிக்கிறார்.

ரயில் பார்க் சர்க்கஸ் நிலையத்தை அடையும்போது, தன்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், திடீரென தன்னை ரயிலிலிருந்து தள்ளி விட்டதாகச் சொல்கிறார் ஹபீஸ். அப்போது எவரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் ஹபீஸ் வருத்தம் கொள்கிறார்.

“கீழே விழுந்த நான், அருகில் இருந்த காவல் நிலையத்துக்குச் சென்றேன். இது ரயில்வே போலீசின் கீழ் வருவதால் புகாரை எடுத்துக்கொள்ள முடியாது என தெரிவித்துவிட்டனர். ரயில்வே போலீசு வந்து என்னை மருத்துவமனை அழைத்துச் சென்றதோடு, என்னுடைய புகாரையும் பெற்றுக்கொண்டது.” அடுத்த நாள் வீட்டிற்குத் திரும்பிய அவர், கடந்த நான்கைந்து நாட்களாக வெளியே செல்ல பயந்துகொண்டு, வீட்டில் முடங்கியிருக்கிறார்.

இந்தமுறை அயோத்தியில் ராமர் கோயிலை எப்பாடு பட்டாவது கட்டியே தீருவோம் என்கிற வாக்குறுதியோடு தேர்தலில் வெற்றி கண்டுள்ளது காவி அரசு. தேர்தலின்போது எதிரொலித்த ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முழக்கம், ஒவ்வொரு முறையும் முசுலீம்களை தாக்கும் முன் சொல்லப்படும் பொது முழக்கமாகிவிட்டது. ‘ஜெய் ஹிந்த்’ என்பதற்கு பதிலாக ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்பது தேசிய முழக்கமாகிவருகிறது.


அனிதா
செய்தி ஆதாரம்: டெலிகிராப் இந்தியா. 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க