ந்துத்துவ பாசிசத்தின் நீண்ட நாள் குறிக்கோளான இந்து ராஷ்டிரத்தை அமைக்கும் பொருட்டு, முசுலீம்களை அழித்தொழிக்கும் வகையில் அசாமில் கொண்டு வரப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவு அமலாக்கத்தின் காரணமாக இதுவரை 51 பேர் மரணமடைந்திருக்கிறார்கள்.

கடந்த முப்பது ஆண்டுகளுக்குள் வங்காள தேசத்திலிருந்து அசாமில் குடியேறிய முசுலீம்களை அடையாளம் கண்டு ‘நாடு கடத்தும்’ பணியில் ஈடுபட்டிருக்கிறது இந்திய அரசு. அதை ‘தேசிய குடிமக்கள் பதிவு’ என்கிற நடைமுறையாக்களின் மூலம் செய்து வருகிறது. இந்த நடைமுறையின் மூலம் கண்டறியப்பட்ட சந்தேகத்துக்குரிய நபர்களை ‘தடுப்பு முகாம்’களுக்கு அனுப்பப்பட்டு. பிறகு, அவர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள். அல்லது அங்கேயே (தடுப்பு முகாம்களிலேயே) மடிந்து போவார்கள். முசுலீம்களுக்கு மட்டும்தான் இந்த ‘தண்டனை’ என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க:
இந்து என்றால் யார் ? இந்துஸ்தானம் என்பது எது ?
♦ கார்கில் போர் வீரரை சட்டவிரோதக் குடியேறியாக்கி கைது செய்த மோடி அரசு !

இந்தப் பாசிச சுத்திகரிப்பு நடைமுறைக்கு தலைமுறை, தலைமுறையாக இங்கே வாழ்ந்து வருபவர்கள், முப்பதாண்டுகளுக்கும் மேலாக இங்கே வசித்து, இதையே தம்முடைய சொந்த மண் என கருதுகிறவர்களும் பலியாகிவருகின்றனர்.

அசாமின் சிராங் மாவட்டத்தைச் சேர்ந்த ஹிமாத் அலி (55), தன்னுடைய மனைவி காத் பானு வெளிநாட்டவர் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்கொலை செய்துகொண்டார். வெளிநாட்டவர் என அறிவிக்கப்பட்டது முதல் காத் பானுவை காணவில்லை.

தினக் கூலித் தொழிலாளியான ஹிமாத் அலியின் மனைவி காத் பானுவின் தந்தையின் ஆவணங்களில் இருந்த சில குளறுபடிகள் காரணமாக வெளிநாட்டவர்களுக்கான தீப்பாயம், காத் பானுவை ‘வெளிநாட்டவர்’ என அறிவித்திருக்கிறது.

இதை எதிர்த்து, நீதி கிடைக்காது என்ற போதும் குவாஹாத்தி நீதிமன்றத்தில் அலி சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை (ஜூன் 19, 2019) தனது வீட்டில் தூக்கு மாட்டி இறந்துவிட்டார் அலி.

இதே போன்றதொரு துயரச் சம்பவம் துபூரி கிராமத்திலும் நடந்திருக்கிறது. சர்ஃபாத் அலி (74) வெளிநாட்டவருக்கான தீர்ப்பாயத்தால், மே 31 – 2019 அன்று வெளிநாட்டவர் என அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

இறந்து போன சர்ஃபாத் அலி.

ஜூன் 20-ம் தேதி, தீர்ப்பாயத்திற்கு வர வேண்டும் என அழைக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 19-ம் தேதி இறந்துவிட்டார். ஏழ்மை நிலையில் இருந்த அவர், ஐந்து நாட்களாக உண்பதை நிறுத்தி பட்டினி கிடந்து இறந்திருக்கிறார். தன்னிடம் குடியுரிமையை நிரூபிப்பதற்குரிய ஆவணங்கள் இருந்தும், இந்த வயதில் போராடி வெல்ல முடியாது என தீர்மானித்து அவர் இறந்திருக்கலாம்.

இதுவரை, தேசிய குடிமக்கள் பதிவு நடைமுறையாக்கலால் ‘வெளிநாட்டவர்’ என முத்திரை குத்தப்பட்ட 51 பேர் மரணமடைந்திருப்பதாக, இதுகுறித்து ஆவணங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சப்ரங் இணையதளம் கூறுகிறது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

93 வயதான முதியவர் முதல், ஓய்வுபெற்ற ஆசிரியர் வரை பலர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டவர்களும் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். பலர் ‘வெளிநாட்டவர்’ என்ற அறிவிப்பைக் கேட்டு, அதிர்ச்சியில் மாண்டிருக்கிறார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டதும் நடந்திருக்கிறது.

அப்பட்டமான மனித உரிமை மீறலுடன் முசுலீம்களின் மீதான தாக்குதலில் ஈடுபட்டுள்ள இந்து ராஷ்டிர கனவில் மிதக்கும் இந்திய அரசை கேள்வி கேட்க எந்த சர்வதேச அமைப்பும் முன்வரவில்லை. குஜராத்தில் தொடங்கிய இனப்படுகொலை, அசாமில் வேகமெடுத்துள்ளது.


கலைமதி
நன்றி : சப்ரங் இந்தியா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க