ந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் மாநிலத்தில் கடந்த ஜூலை 12 அன்று சட்டபேரவையில் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா புதிய கால்நடை பாதுகாப்பு மசோதா 2021-ஐ முன் மொழிந்தார்.

அந்த மசோதாவின் படி, அசாம் மாநிலத்தில் கால்நடைகள் விற்பனை மற்றும் இறைச்சி விற்பனை செய்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுள்ளன. மேலும், மாநிலத்தின் கால்நடைகள் மற்றும் கால்நடை இறைச்சிகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அண்டை மாநிலங்களில் இருந்து கால்நடைகள் மற்றும் இறைச்சியை உரிய ஆவணங்கள் இல்லாமல் அசாம் வழியாக எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. அசாம் மாநிலத்தின் மாவட்டங்களுக்கு இடையேயும் உரிய ஆவணங்களின்றி கால்நடைகள் மற்றும் இறைச்சி எடுத்து செல்வது தடைசெய்யப்படுகிறது.

படிக்க :
♦ பசுவைக் கொன்றால் நிலநடுக்கம் வரும் : ராஷ்டிரிய காமதேனு ஆயோக் !
♦ புனிதப் பசுவின் சாணத்தை பாஜக தலைவர் வீட்டு முன் கொட்டியதற்கு கொலை முயற்சி வழக்கு !

கால்நடைகளை மேய்ச்சலுக்காகவும், வளர்ப்பதற்காகவும் மற்றும் விவசாயத் தேவைகளுக்காகவும் விற்பனை செய்ய அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை.

கோயில்கள் அல்லது மடங்களை சுற்றியுள்ள 5 கிலோமீட்டர் சுற்றளவில் கால்நடை விற்பனை, கால்நடை வெட்டுவது தடைசெய்யப்படுவதாக குறிப்பிடுகிறது புதிய கால்நடை பாதுகாப்பு மசோதா.

மேலும், இந்து, சமணம், சீக்கியம் மற்றும் மாட்டுக்கறி உண்ண விரும்பாத சமூகத்தினர் இருக்கும் இடங்களில் கால்நடைகளை வெட்டுவதோ, இறைச்சிக்காக கால்நடைகளை விற்பனை செய்வதோ, இறைச்சியை விற்பனை செயவதோ தடை விதிக்கப்படுவதாக மசோதா கூறுகிறது.

முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா

கால்நடை விற்பனைக் கூடங்கள் மற்றும் கால்நடை அறுக்கும் கூடங்கள், இறைச்சிக் கூடங்கள் போன்றவை உரிய அனுமதி வாங்கி நடத்தப்பட வேண்டும். அப்படி அனுமதி இல்லாமல் செயல்படும் கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், மேற்சொன்ன கூடங்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டாலோ மற்றும் வாங்கி செல்வோர் விதிமுறைகளை மீறி செயல்பட்டாலோ உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட கூடம் தடைசெய்யப்படும் அல்லது சம்பந்தப்பட்ட நுகர்வோர் கூடத்திற்குள் வருவது தடைசெய்யப்படும் என்று மசோதா கூறுகிறது.

மத ரீதியாகவோ மற்றும் திருவிழாவில் கால்நடைகள் பலியிடும் வழக்கமான நிகழ்வுகளுக்கு அனுமதி வாங்குவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும், விலங்கு காட்சி சாலை போன்ற இடங்களுக்கு மிருகங்களின் உணவாக கால்நடை இறைச்சிகள் எடுத்து செல்வதற்கு அனுமதி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

கால்நடைகளை கடத்துவதாகவோ, கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டியதாக குற்றம் சாட்டப்படும் நபரின் வாகனங்கள் மற்றும் கொண்டு சென்று வைக்கப்பட்ட இடம், அங்குள்ள பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும். குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு 3 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுள்ளது. மேலும், இரண்டாவது முறையாக குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை இரட்டிப்பாக வழங்கப்படும். பறிமுதல் செய்யப்படும் கால்நடைகளை அரசின் கோசாலைகள் பராமரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

போலீசு உயர் அதிகாரிகள் (சப்-இன்ஸ்பெக்டர் வரை) மற்றும் கால்நடைக்காக அங்கிகரிக்கப்பட்ட அதிகாரிகள் தங்கள் எல்லைக்குட்பட்ட இடங்களில் சந்தேகம் இருப்பின் எந்த வளாகத்திற்குள்ளும் நுழைந்து சோதனையிடும் அதிகாரம் வழங்கப்படுகிறது. குற்றாவாளிகள் பிடிபடும் பட்சத்தில் தானே உரிய நடவடிக்கைகள் எடுக்கும் அதிகாரமும் வழங்கப்படுகிறது.

அசாம் மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் 31 சதவிதம் பேர் இருக்கிறார்கள். வடகிழக்கு மக்களில் பெரும்பாலானோரின் பிரதான உணவாக மாட்டுக்கறி இருக்கிறது. மாட்டுக்கறி விற்பனையை தடைசெய்வதன் மூலம், முஸ்லீம்கள் உள்ளிட்டு அசாம் மாநில மக்கள் எதை உண்ண வேண்டும் உண்ணக் கூடாது என்று கட்டளை இடுகிறது சங்கப்பரிவாரம். குறைவான விலையில் கிடைத்து வந்த மாட்டுக்கறியின் விலையும் இனி மிகவும் அதிகரிப்பதோடு, ஏழைகளுக்கு மலிவு விலையில் கிடைத்துவந்த ஊட்டச் சத்துள்ள உணவு இனி எட்டாக்கனியாக மாறும்.

மேலும் மாடு வெட்டும் தொழில் முதல், மாட்டிறைச்சி விற்பனை செய்பவர்கள் வரை அனைவரின் வாழ்வாதாரத்தையும் பறித்தெடுக்கும் விதமாகவும் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

“இந்த மசோதாவில் ஏராளமான சிக்கல் இருக்கிறது. 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கறி கடைகள் வைக்கக் கூடாது என்றால், புதிய கோவில்கள் கட்ட வாய்ப்பு அதிகம் இருக்கிறது. எனவே இது தெளிவற்றதாக உள்ளது. மேலும் இந்த மசோதா நிறைய வகுப்புவாத பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்”என்கிறார் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் டெபப்ரதா சங்கியா.

படிக்க :
♦ பாஜக மாநிலங்களில் அமல்படுத்தப்படும் பசுப் பாதுகாப்பு சட்டங்கள் !
♦ வளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா ? | காஞ்சா அய்லய்யா

இந்த புதிய கால்நடை பாதுகாப்பு மசோதா 2021 என்பது முஸ்லிம் மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல அசாம் மாநிலத்தின் பெரும்பான்மை மக்களுக்கும் எதிரானது. மாட்டு இறைச்சி தொடர்பான தொழிலில் ஈடுபடும் சிறுபான்மையினரின் மீதான சங்க பரிவாரத்தின் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதற்கான ஏற்பாடாகவே இந்த மசோதா விளங்குகிறது. இதற்கு உத்தரப் பிரதேசம், அரியானா ஆகிய மாநிலங்களே சாட்சி.

தேசிய இனங்களின் தனித்தன்மையை ஒழித்துக் கட்டி, அனைவரையும் இந்து, இந்தி, இந்தியா என்ற வரையறைக்குள் கொண்டுவந்து ஒடுக்கவே இத்தகைய சட்டங்களைக் கொண்டுவந்து சங்க பரிவாரத்தின் நிகழ்ச்சிநிரலுக்கு அடிகோலிடுகிறது அசாம் மாநில பாஜக அரசு !


சந்துரு
செய்தி ஆதாரம் : Indian Express

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க