‘‘கையில் தடியுடன் ஒரு போலீசையும் புகைப்படக்காரர் ஒருவரையும் துரத்திக் கொண்டு ஓடிவரும் 30 வயது மதிக்கத்தக்க இளைஞரை, அருகாமையில் வைத்து காலிலும் நெஞ்சிலும் சுட்டுக் கொல்கிறது போலீசுப் படை. அந்த இளைஞர் சுருண்டு கீழே விழுந்த பின்னரும் பத்து பதினைந்து போலீசு மிருகங்கள், தடிக் கம்புகளால் அவரை தாக்குகின்றன. பேச்சு மூச்சின்றி கிடக்கும் அந்த இளைஞரின் நெஞ்சின் மீது உடன்வந்த புகைப்படக்காரன், ஓடிவந்து ஏறி மிதிக்கிறான்.’’ நெஞ்சைப் பதைபதைக்கச் செய்யும் இந்தக் காணொலிக் காட்சி, கடந்த செப்டம்பர் மாதம் 23−ம் தேதி சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டது.
பாசிச பா.ஜ.க. கும்பல் ஆட்சி செய்யும் அசாம் மாநிலத்தில் ‘ஆக்கிரமிப்பு’ குடியிருப்புகளை அகற்றும்போது போலீசு நடத்திய படுகொலைக் காட்சிதான் அது. அசாம் மாநிலம், தர்ரங் மாவட்டத்தில் பிரம்மபுத்திரா நதிக்கரையிலுள்ள தௌல்பூர் என்ற கிராமத்தில் 1970−களிலிருந்து அங்கு வசித்துவரும் அடித்தட்டு முசுலீம் மக்களைத்தான் ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ என்றும், அவர்களது குடியிருப்புப் பகுதியை ‘ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி’ என்றும் கூறி அவர்களை வெளியேற்றும் நோக்கத்தோடு வன்முறையை ஏவியிருக்கிறது பா.ஜ.க. அரசு.
இந்த ‘‘ஆக்கிரமிப்பு’’ அகற்ற நடவடிக்கைக்கு, முந்தைய நாள் இரவுதான் அம்மக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மறுநாள் காலையில் அம்மக்கள் அமைதியான முறையில் தங்களது போராட்டத்தைத் துவங்கியதும் பேச்சுவார்த்தைக்கு வந்து, ‘‘மாற்று ஏற்பாடு செய்துவிட்டுதான் வெளியேற்றம் செய்வோம்’’ என்று கூறியது மாவட்ட நிர்வாகம். செயற்பாட்டாளர்கள் அங்கிருந்து போனதும் அதிரடியாக ஜே.சி.பி−கள், மற்றும் பெரும் போலீசு படையுடன் அதிகாரிகள் ஊருக்குள் நுழைந்து குடிசைகளை இடிக்கத் துவங்கினர்.
மாற்றுக் குடியிருப்பும் தராமல், இருந்த குடிசையையும் இடித்துத் தள்ளியதைக் கண்டித்து அம்மக்கள் ஜே.சி.பி.க்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், எதனையும் பொருட்படுத்தாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டது பா.ஜ.க. அரசு. மக்கள் எதிர்ப்பு வலுப்பெறவே துப்பாக்கிச் சூடு நடத்தி வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்துவிட்டது.
படிக்க :
அசாம் துப்பாக்கிச்சூடு : முஸ்லீம் மக்கள் மீதான காவி பயங்கரவாதம் !
அசாம் : புதிய கால்நடை பாதுகாப்பு மசோதா – 2021
போலீசு வெறியாட்டத்தின் காரணமாக, 12 வயது சிறுவன் ஒருவன் அநியாயமாகக் கொல்லப்பட்டான். மற்றொரு 14 வயது சிறுமியைக் கடுமையாகத் தாக்கிய போதுதான் போலீசையும் அவனுடன் இருந்த புகைப்படக்காரனையும் தடியை எடுத்துக் கொண்டு துரத்தியடித்திருக்கிறார், மொயினூல் ஹக் என்ற 30 வயது இளைஞர். அப்படி கையில் தடியோடு ஓடி வந்தவரைத்தான் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியது போலீசு. மேற்குறிப்பிட்ட காணொலியில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட நபர்தான் மொயினூல் ஹக்.
இக்காணொலி சமூக வலைத்தளங்களில் பரவி பலரும் அரசு பயங்கரவாதத்தைக் கண்டித்த பின்னர்தான், புகைப்படக்காரன் பிஜய் பனியாவை மட்டும் கைது செய்துவிட்டு, மொத்த அரசு நிர்வாகமும் நல்லவர்கள் ஆகிவிட்டது.
பா.ஜ.க. அரசின் இந்த ‘ஆக்கிரமிப்பு’ அகற்ற நடவடிக்கையின் மூலம் 800−க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிர்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இப்பகுதியில் வாழ்பவர்களில் மிகப் பெரும்பான்மையோர் வங்கமொழி பேசும் முஸ்லீம்கள் என்பதிலிருந்து இத்தகைய வன்முறையின் பின்னுள்ள காவிக் கும்பலின் வன்மத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
அசாமியர்களின் ‘அமைதி’ சொல்வது என்ன?
அசாமில் நடந்த இந்த ‘ஆக்கிரமிப்பு’ அகற்ற வன்முறையும், ஏழை முஸ்லீம்கள் இருவர் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டதும் நாடு முழுக்க அனைவரையுமே கொந்தளிக்கச் செய்த தருணத்தில்தான், ‘‘சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும். 4,500 பிகா (1,487 ஏக்கர்) நிலத்தை ஆக்கிரமித்திருந்த 800 குடியிருப்புகளையும் 4 சட்டவிரோத மதக் கட்டிடங்களையும் (மசூதிகளை) இடித்து அப்புறப்படுத்திய தர்ராங் மாவட்ட நிர்வாகம் மற்றும் அசாம் போலீசின் செயல்பாடுகள் மகிழ்ச்சியளிக்கிறது’’ என்று தனது டிவிட்டரில் வக்கிரமாக பதிவிட்டிருந்தார், பா.ஜ.க. முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா.
அசாம் சட்டமன்றத் தேர்தலில் கடந்த 2016−ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில் அமர்ந்த போது, ஹிமந்தா பிஸ்வா சர்மா கல்வித்துறை அமைச்சராக பதிவியேற்றிருந்தார். டிசம்பர் 2016−இல் மதரசா பள்ளிகளில், தொழுகை தினமான வெள்ளிக்கிழமை விடுமுறை என்ற நடைமுறையை அகற்றி, அனைத்து மதரசா பள்ளிகளும் ஞாயிறு மட்டும்தான் விடுமுறை விட வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் 2020−ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அரசு நடத்திவந்த 509 மதரசாக்களை இழுத்து மூடினார். இதிலிருந்து ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் மதவெறியைப் புரிந்துகொள்ளமுடியும். இத்தகைய நடவடிக்கைகள்தான் 2021−ம் ஆண்டு தேர்தலில் ஹிமந்தாவுக்கு முதலமைச்சர் பதவியை பாஜகவில் பெற்றுத் தந்தது.
தர்ரங் மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட மாவட்ட போலீசு கண்காணிப்பாளரான சுஷாந்த் பிஸ்வா சர்மா, முதலமைச்சரின் சகோதரர் ஆவார். இந்தப் பின்னணியில் இப்படுகொலைகளின் காரணத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
இவை ஒருபக்கம் இருந்தாலும், இந்தப் படுகொலைகளோ, ஹிமந்தாவின் வெறுப்பு பேச்சுக்களோ அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மற்ற பிரிவு மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்ன என்பதுதான் நாம் பரிசீலிக்க வேண்டிய விசயம்.
பா.ஜ.க.வின் இந்த முஸ்லீம் எதிர்ப்பு நடவடிக்கைகளை அசாமியர்கள் மவுனமாக ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைத்தான் அங்கு நிலவும் அமைதி காட்டுகிறது. ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. தனது இந்துராஷ்டிர திட்டத்தை அசாம் மக்களை ஏற்றுக்கொள்ள வைக்கும் திசையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்ற கசப்பான உண்மையையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
அசாமியர்களின் ‘அந்நியர்’ வெறுப்பு வரலாறு
‘ஆக்கிரமிப்பாளர்கள்’ என்ற பெயரில் ஏழை முஸ்லீம்கள் அடித்து விரட்டப்படுவதை அசாமியர்கள் இயல்பாக ஏற்றுக் கொள்கிறார்கள். ‘‘முஸ்லீம் வெறுப்பு’’ என்ற ஒரு கோணத்தில் மட்டுமல்ல, அவர்கள் வங்காள மொழி பேசும் மக்கள், இங்கு குடியேறிய ’அந்நியர்கள்’ என்ற அடிப்படையிலான வெறுப்பு காலங்காலமாகவே அசாமியர்களிடம் விதைக்கப்பட்டிருக்கிறது.
1970−களில் வங்கதேசத்தில் (அன்றைய கிழக்கு பாகிஸ்தானில்) நடந்த உள்நாட்டுப் போராலும், இந்தியா − பாகிஸ்தான் இடையில் நடந்த போராலும் பாதிக்கப்பட்ட ஒரு கோடிக்கும் அதிகமான அந்நாட்டு மக்கள் இந்தியாவின் மேற்கு வங்காளம், திரிபுரா, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் தஞ்சம் புகுந்தார்கள். அதில் பெரும்பாலானோர் அசாம் மாநிலத்தில் குடியேறினார்கள்.
‘அத்துமீறி நுழைந்தவர்களால்’ தான் அசாமியர்களுக்கு வேலைவாய்ப்புகளும், கல்வி வாய்ப்புகளும் பறிபோனதாக பரப்பப்பட்ட பிரச்சாரங்கள், வங்கதேச குடியேறிகள் மீதான வெறுப்பை அசாமியர்களிடம் வலுவாக வேரூன்றச் செய்தது. அச்சமயத்தில், ‘‘வங்கதேச குடியேறிகளை அசாமை விட்டு வெளியேற்ற வேண்டும்’’ என்று அசாம் கண பரிஷத், அனைத்து அசாம் மாணவர் சங்கம் போன்ற அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தன. இக்காலகட்டத்தில் பல இடங்களில் அசாமியர் அல்லாதவர்கள் அனைவரின் மீதும் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன.
1983−ஆம் ஆண்டு வங்கமொழி பேசும் மக்களுக்கும் தேர்தலில் வாக்குரிமை கொடுப்பதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அசாமியர்கள் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டங்களில் ஈடுபட்டனர். அது கலவரத்தில் சென்று முடிந்தது. ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். பத்துக்கும் அதிகமான கிராமங்கள் சூறையாடப்பட்டன. இவ்வாறு காலங்காலமாகவே அசாமில் ‘அந்நியர்கள்’ மீதான கொலைவெறித் தாக்குதல்கள் தொடர்கின்றன.
ஆர்.எஸ்.எஸ்.−இன் முஸ்லீம் எதிர்ப்பு முனைவாக்கம்
இங்கு ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ என அசாம் மக்கள் குறிப்பிடுவது அண்டை நாடுகளைச் சேர்ந்த இந்து, முஸ்லீம், கிறித்துவர்கள், சீக்கியர்கள் − என அனைத்து மதத்தையும் சார்ந்தவர்களைத்தான். ஆனால் அசாமின் இந்த ‘அந்நியர்’ எதிர்ப்பு மனநிலையை சங்க பரிவாரக் கும்பல்கள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. 2019−ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது ‘‘வங்கதேசக் கரையான்களை வெளியேற்றுவோம்’’ என்று பகிரங்கமாகவே மேடையில் பேசினார் அமித்ஷா. அசாம் மக்களின் நீண்டகால கோரிக்கையான தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) நடைமுறைப்படுத்தி அந்நியர்களை வெளியேற்றுவோம் என்று பாஜக−வினர் பிரச்சாரம் செய்தனர். இத்தகைய பிரச்சாரங்கள்தான் பா.ஜ.க.வை அசாமில் வெற்றிபெற வைத்தன.
அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா
ஆனால் வெற்றிபெற்ற பின்னர், அசாமியர் அல்லாதவர்களின் மீதான அசாமியர்களுடைய வெறுப்பை முஸ்லீம் எதிர்ப்பாக மட்டும் முனைவாக்கம் செய்யும் வேலையை ஆர்.எஸ்.எஸ். முன்னெடுத்து வருகிறது என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். இதற்காக பல்வேறு விசமத்தனமான பிரச்சாரங்களை இந்துத்துவக் கும்பல்கள் அசாமில் முன்னெடுத்து வருகின்றன. உதாரணத்திற்கு, 2001−இல் இருந்து 2011 வரை இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அது 2021−இல் 40 சதவீதத்துக்கும் அதிகமாக உயரும் என்ற ஒரு பொய்ப் பிரச்சாரத்தை பரப்பி வருகிறது காவிக் கும்பல்.
அசாமில் வங்கதேசத்தைச் சார்ந்த மக்களும் குறிப்பிட்ட வாக்கு வங்கியாக உள்ளதைப் புரிந்துகொண்ட பா.ஜ.க., அவர்களையும் தனது ஆதரவு சக்திகளாக மாற்றும் வேலையை திட்டமிட்டு முன்னெடுத்து வருகிறது. ஒருபக்கம் பூர்வகுடி அசாம் மக்களை தன் பக்கம் திரட்டுவதற்காக தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) அமல்படுத்திய பா.ஜ.க., அதனோடு கூடவே குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்து முஸ்லீம்களைத் தவிர்த்து மற்ற மதத்தவர்களான இந்து, கிறித்துவர், பௌத்தர், சீக்கியர் ஆகியோருக்கு மதச்சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் அவர்களது குடியுரிமையை அங்கீகரித்திருக்கிறது. தனது இந்துராஷ்டிர திட்டத்தை அசாமில் நிலைநாட்டுவதற்காக இத்தகைய இரட்டை அரசியலை முன்னெடுத்துவருகிறது பா.ஜ.க.
தர்ரங் மாவட்டத்தில் தற்போது நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களும் கூட வங்கமொழி பேசும் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் குடியிருப்புப் பகுதியில்தான் நடந்துள்ளது. இங்கு குடியேறிய வங்கதேச முசுலீம்களை எதிரியாகக் காட்டுவதற்கும், அதற்கு பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெறுவதற்கும் ஏற்றவகையில் தனது செயல்திட்டத்தை தந்திரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது பாஜக அரசு. தௌல்பூர் கிராமத்திலிருந்து அவர்களை அப்புறப்படுத்திவிட்டு, அந்நிலப்பகுதியைக் கொண்டு அசாமிலுள்ள படித்த வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு விவசாய வேலை வழங்கும் ‘‘கோருகுடி’’ (கூட்டுப் பண்ணை) என்ற திட்டத்தை அமல்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது பா.ஜ.க. அரசு.
தௌல்பூர் பகுதி என்பது பிரம்மபுத்ரா நதியின் கிளைகளுக்கு இடையில் அமைந்துள்ள சமவெளிப்பகுதி. மழைக்காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது இந்நிலப்பகுதி சுருங்கிவிடும், மற்ற சாதாரண காலங்களில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி, விரிந்து காணப்படும். இத்தகைய ஒரு பகுதியில் முறையாக வேளாண்மை செய்ய முடியுமா என்பதே கேள்விக்குறிதான். பெயரளவிற்குக்கூட மக்களின் பொருளாதார பிரச்சினைகளை தீர்த்துவைப்பது என்றுமே பாசிஸ்டுகளின் நோக்கமல்ல என்பதையும் முஸ்லீம் எதிர்ப்பே அதன் உண்மையான நோக்கம் என்பதையும் இதன் மூலம் புரிந்துகொள்ள முடியும்.
படிக்க :
அசாம் கலவரம்: ஆர்.எஸ்.எஸ் சொல்லும் வங்கதேச ஊடுருவல் உண்மையா?
அசாம் கலவரம்: ஆதாயம் தேட முயலும் காங்கிரசு பா.ஜ.க. நரித்தனங்கள்!
ஆனாலும், இத்திட்டத்தின் மூலம் முஸ்லீம் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்பது மட்டுமல்லாமல், அசாம் பூர்வகுடி இளைஞர்களுக்கு இத்திட்டம் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று பிரச்சாரம் செய்வதன் மூலம் பூர்வகுடி அசாமியர்களையும் தன்பக்கம் தொடர்ச்சியாக தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று கணக்குப் போடுகிறது.
தன்னுடைய இந்துராஷ்டிர நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக தீவிரமாக வேலை செய்துவரும் சங்க பரிவாரக் கும்பல், ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்றாற்போல தன்னுடைய நிகழ்ச்சி நிரலை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அசாமில் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்களுக்கு அடுத்தபடியாக, முஸ்லீம் எதிர்ப்பு நடவடிக்கையாக இத்தகைய ‘ஆக்கிரமிப்பு’ அகற்ற நடவடிக்கைகளையும், அசாமியர்களை குளிர்ச்சிப்படுத்தும் ‘கோருகுடி திட்டம்’ ஆகியவற்றையும் செயல்படுத்துகிறது பாஜக.
பெரும்பான்மை மக்களிடம், அவர்களின் ‘‘எதிரிகள்’’ என்று ஒருபிரிவு மக்களை முன்னிறுத்தி மோதவிடுவதுதான் பாசிஸ்டுகள் மக்களை வென்றெடுப்பதற்குக் கையாளும் வழிமுறை.
பாசிஸ்டுகளின் இந்த சூழ்ச்சிகளை அங்குள்ள புரட்சிகர − ஜனநாயக சக்திகள் அம்பலப்படுத்தி முறியடிக்காவிட்டால், குஜராத், உத்திரப் பிரதேசத்தைப் போல அசாமும் இந்து ராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக மாறும் அபாயத்தை தவிர்க்க முடியாது.

துலிபா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க