யூதர்களை ஒழிக்க ஹிட்லர் கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்து தடுப்பு முகாமில் வதைத்தது போல, இந்தியாவில் குடிமக்கள் பதிவேடு சட்டம் என்ற பெயரில் லட்சக்கணக்கானவர்கள் வதைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

எல்லை காவல்படையில் துணை சப் – இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் முகமது சமானுல்லா (57). இராணுவத்தில் லெப்டினெண்ட் ஆக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரை அசாமில் வசிக்கும் சந்தேகத்துக்குரிய குடிமக்கள் மற்றும் சட்டவிரோத குடியேறிகளை தடுப்பு காவல் முகாமுக்கு அனுப்பும் வெளிநாட்டவருக்கான  தீர்ப்பாயம்  கைது செய்துள்ளது.

முகமது சமானுல்லா

இவர் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் மார்ச் 24, 1971 -க்குப் பிறகு, அதாவது அசாம் குடியுரிமை பெறுவதற்கான இறுதி நாளாக அறிவிக்கப்பட்ட தேதிக்குப் பிறகு அசாமுக்கு சட்டவிரோதமாக வந்தவர் என்றும் காரணம் சொல்லியிருக்கிறது இத்தீர்ப்பாயம்.

இருபதாண்டுகளுக்கு முன் நடந்த கார்கில் போரில் சமானுல்லா பங்கேற்று, குடியரசுத் தலைவரிடம் விருது வாங்கியவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

“ஒரு முன்னாள் இராணுவ வீரர் இப்படி நடத்தப்படுவதைக் கண்டு இதயம் நொறுங்கிப்போனது. 30 ஆண்டுகள் நாட்டிற்காக உழைத்த இவருக்கு, கார்கில் போரில் பங்கேற்ற இவருக்கு கிடைக்கும் விருது இதுதானா?” எனக் கேட்கிறார் அவருடைய உறவினர் முகமது அஜ்மல்.

முகமது அஜ்மலும் இராணுவத்தில் பணியாற்றியவர். இவருக்கும் சமானுல்லாவுக்கு அனுப்பியதுபோல வெளிநாட்டவருக்கான தீர்ப்பாயம் ‘இந்திய பிரஜைதானா’ என்பதை விளக்க நோட்டீசு அனுப்பியிருந்தது. முகமது அஜ்மல் என்ற பெயரில் வேறு ஒரு நபருக்கு அனுப்ப வேண்டிய நோட்டீசை அனுப்பியதாக, பிறகு எல்லைக் காவல் படை அவரிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறது.

“அசாமில் பிறந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு, சமானுல்லா 1987-ம் ஆண்டு இராணுவத்தில் சேர்ந்தார். 2017-ம் ஆண்டு இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற அவர், எல்லை காவல்படையில் சேர்ந்தார். தவறுதலாக ஒரு விசாரணையின்போது 1978-ம் ஆண்டு இராணுவத்தில் சேர்ந்ததாக சொல்லிவிட்டார். இந்த தவறை வைத்துக்கொண்டு, 11 வயதில் எவரும் இராணுவத்தில் சேரமுடியாது என சொல்லி, தீர்ப்பாயம் அவரை வெளிநாட்டவர் என அறிவித்துவிட்டது.” என நடந்த விசயத்தை விளக்குகிறார் அஜ்மல்.

வாக்காளர் அட்டை, குடும்ப அட்டைகளில் உள்ள பிழைகளை பெரிதாக்கி புலனாய்வு அதிகாரிகள் தவறான அறிக்கையை சமர்பித்துவிட்டதாக தீர்ப்பாயத்தின் முன் சமானுல்லா விளக்கம் அளித்தும் பலனில்லை. எல்லைக் காவல் படையில் பணியாற்றும் தன்னை ‘தொழிலாளி’ என  எழுதியிருப்பதாகவும் தன்னுடைய மூன்று குழந்தைகளின் பெயர்களும் தவறாக எழுதப்பட்டுள்ளதாகவும் சமானுல்லா தெரிவித்திருக்கிறார். அதையும் தீர்ப்பாயம் நிராகரித்திருக்கிறது.

படிக்க:
மணிப்பூர் : ’பத்ம ஸ்ரீ’ யை தூக்கியெறிந்த சியாம் சர்மா | குடிமக்கள் மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு !
♦ தேசிய குடிமக்கள் பதிவேடு : பா.ஜ.க – வின் வதைமுகாம் திட்டம் !

கடந்த செவ்வாய்க்கிழமை அசாமில் குடியேறிய ‘சட்டவிரோத குடியேறிகளை’ அடைத்து வைத்திருக்கும் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார் சமானுல்லா.  கையறு நிலையில் இருக்கும் அவருடைய குடும்பம், சமானுல்லாவைக் காப்பாற்ற கவுஹாத்தி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.

இந்தியாவில் உள்ள இசுலாமியர்களை அழித்தொழிக்கும் வகையில், இந்துத்துவ அரசு முனைப்புடன் குடிமக்கள் சட்டத்தை அமலாக்கிக்கொண்டிருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன் குடியேறி, மக்களோடு மக்களாகிவிட்டவர்களை கொடூர சட்டத்தின் மூலம் தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்துள்ளது அரசு. ஆனால், இசுலாமியர் அல்லாத அயல்நாட்டைச் சேர்ந்த இந்து, புத்த மதத்தினர், சட்டவிரோதமாக குடியேறியிருந்தாலும் கூட இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என இதே அரசுதான் அறிவித்துள்ளது என்பது இங்கே நினைவுகூரத்தக்கது.


அனிதா

நன்றி: தி வயர்,  தி இந்து

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க